Thursday, August 14, 2014

சுதந்திரம் ??

லஞ்சலாவண்யம் முழுதுமாக ஒழிந்தாலே ஒழிய இந்திய சுதந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும்..
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட .. இந்த லஞ்சத்திலே, சுற்றுப்புற சுகாதாரத்தில் பின்தங்கி இருப்பதிலே, சொந்த நாட்டிற்குள்ளேயே நதிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சையிலே, மொழியை மையப் படுத்தி  அரசியல் நடத்துவதிலே, என்று இன்னும் இன்னும் குறைபாடுள்ள பட்டியல்கள் நீண்ட வண்ணமே உள்ள நமது நாட்டில் சுதந்திரக் கொண்டாட்டம் என்பது சும்மா பட்டம் விடுகிற விழா போன்று தான் மனசுக்குத் தோன்றுகிறது...
இன்னும் சில நற்பண்புகளை நம்வசப் படுத்திய பிற்பாடு சற்று தாமதமாகக் கூட சுதந்திரம் கிடைத்திருக்கலாமே என்று தோன்றுவது பலரது கண்டனத்துக்கு உரிய அனுமானம் எனிலும், உங்களுக்கே யோசித்துப் பார்க்கையில் அதன் நியாயம் புரிபடக் கூடும் என்பதே எமது அனுமானம்.. 

மழைச் சாரல் அடிக்கிறதோ என்று வானம் அண்ணாந்து பார்த்தால், வானம் தெளிவான நீலத்தில் தகதகக்கிறது.. 
சற்று கண்களை சுழற்றிப் பார்க்கையில் பேருந்துக்குள் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கிற ஒரு பனாதியோ, நமக்கு முன்னர் வண்டியில் கடந்து போகிற ஒரு பீடையோ உமிழ்ந்து சென்ற எச்சில் தான் அது என்று உணர வருகையில் ஒருவித அசூயையையும்  மீறி கோபம் கொப்புளிக்கிறது... 

எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் காரியுமிழவும் , வெற்றிலை சிகப்பு எச்சிலை "புளிச்" என்று வெள்ளையான ஒரு வீதி சுவற்றில் ஓவியம் போன்று வாயிலே அடித்து வரைந்து விட்டுப் போகவும், உச்சா வந்தால் அது என்ன சந்தடி நிறைந்த தெருவாயிருந்தாலும் பெண்கள் கடக்கிற பிரக்ஞையோ , அது குறித்த லஜ்ஜையோ அற்று சிறுநீர் கழிக்கிற இந்தியக் காளையர்கள்.. பள்ளி கோவில் சுற்று சுவர்கள் பின்புறம், நிறைந்திருக்கிற வறண்ட மலக்காடு... 

குழந்தைகளை பிச்சை எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது, எவரும் சொல்லாமலே சுயமாக குழந்தைகள் பிச்சை எடுக்க முனைவது.. 
குழந்தை கைகளில் இருந்தால், சுலபத்தில் மனமிறங்கி பிச்சை இடுவார்கள் என்று தோளிலே  தொட்டிலைக் கட்டி அதில் படுத்துறங்குகிற குழந்தைகளோடு பிச்சை எடுப்பது... 

இதெல்லாம் தான் சுதந்திரம் என்றால் இந்த சுதந்திரம் கிடைத்துத்தான் இருக்கவேண்டுமா? ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவே இருந்து நாளடைவில் நாமும் அவர்கள் போன்றே நடை உடை பாவனைகளில் சிறந்து விளங்கி அவர்களை அடிமைப் படுத்துகிற நபர்களாக மாறி இருக்க வாய்ப்பு இருந்திருந்தும் அதனைத் தவற விட்டு அவர்களிடம் தப்பிப்பதே தலையாய சுதந்திரமாகக் கருதி எல்லா வகைகளிலும் அசிங்கப்பட்டு இன்றைக்கு அவர்களிடமே பாடம் பயில்கிற அடிமைகளாக நாம் மாறி விட்டோமா என்று தோன்றுகிறது எனக்கு.. 

காந்தி நேரு பெரியார் காமராஜர் சந்திரபோஸ் லால்பஹதூர் சாஸ்திரி விவேகானந்தர் பாரதி .. இன்னும் பல மூதறிஞர்களின் அவர்களது சுதந்திரப் போராட்டங்களின் மீதெல்லாம் எனக்கு எவ்வகைக் கோபமும் இல்லை.. அந்தப் போராட்டங்கள் அன்று வெற்றி பெற்று இன்றது எந்த ஒழுக்கங்களையும் நமக்குப் பயிற்றுவிக்காமல் வெறுமே வரலாறுகளாக நமது பாடப் புத்தகங்களில் இடம் பெற்று மதிப்பெண்களாக உபயோகமாகிறதே அன்றி நம்முடைய மதிப்புகளுக்கு சான்றாய் விளங்குகின்றனவா என்றால் அது மிகவும் யோசித்து சொல்லவேண்டிய பதில் மட்டுமே.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...