Tuesday, August 26, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்.. ... [RADHAKRISHNAN.பார்த்திபன்]

எந்த ஸைடில் இருந்தும் பாஸிடிவாக ரிசல்ட் வரவில்லை என்பதால் அஞ்சான் படத்தை தவிர்த்து .... விகடனில் 45 மதிப்பெண் பெற்றதைக் கண்டு பார்த்திபன் படத்துக்கு சென்று வந்தேன்..

கிட்டத்தட்ட பாலச்சந்தரின் பட அமைப்போடு திரைக்கதை அமைத்து அதே வித காட்சி அமைப்புகளுக்கு ஜிகினா ஒட்டியது போன்று ஒரு தன்மையை இவரது இந்தப் படம் எனக்கு உணர்த்தியது.. இதே வகையறா உணர்வு வேறு எவருக்கேனும் வந்தால் எனக்கொரு கம்பெனி கிடைக்கும்.. ஆனால் அப்படி எவரும் அபிப்ராயப் பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

சரி அதை விடுங்கள்.. நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு R . பார்த்திபன் அப்பாவின் முழு ராதாக்ருஷ்ணன் என்கிற facebook பாணி பெயரை உடன் சேர்த்துக் கொண்டு தனது செண்டிமெண்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. அப்டியே இந்தப் படத்துக்கும் புத்துயிர் கொடுத்து தனது துவண்டு போன கரியரையும் சற்றே தூக்கி நிறுத்தி விட்டிருக்கிறார் இந்தப் படத்தின் மூலம்..

ஒரே ட்ராக்கில் ஒரு திரைக் கதை அமைத்து அதனூடே பயணிக்கிற படங்கள் கூட என்னென்னவோ குளறுபடிகளை சந்திக்க நேர்ந்த விபத்துக்களை நாம் கண்டிருக்கிறோம்.. ஆனால், பார்த்தி ... இத்தனை ட்ராக்கில் சம்பவங்களைக் கோர்த்து அதற்குள் காரெக்டர்களைப் புகுத்தி அவைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தேஜஸை கொடுத்திருப்பது, இவரது கால் நூற்றாண்டு கால சினிமா அனுபவத்தின் அடையாளம் என்பதில் ஐயம் என்ன இருக்கப் போகிறது??

தனது நக்கல் கற்பனை வசனங்களுக்கு இன்றைய புது சூழல்களையும் உள்வாங்கி  அதனூடே ஹாஸ்யம் செய்கிற இவரது அபார மூளை ஆச்சர்யப் படுத்தாமல் இல்லை. காமரசத்தை சொட்டச் சொட்டக் கொடுக்க வேண்டுமென்கிற  கமல்ஹாசனின் தாகம் இவருக்குள்ளும்  வெண்ணை போன்று திரண்டு  கிடக்கிறது.. ஆனால் குடும்பங்கள் கும்பலாக நெளியாமல் வந்து கவனிக்க  வேண்டுமானால் அவ்விதக் காட்சிகளை நாசுக்காக வேறு கையாள  வேண்டிய பெரும்பொறுப்பு இருக்கிறது..

நடிப்பவர்கள் எப்படி சொன்னாலும் நடித்து விடுவர்.. பார்த்திபனும் எப்படி எடுக்கவும்  துணிந்தவர் தான் என்ற போதிலும் .. இங்கிதம் கருதி இலைமறை காயாகத் தான்  இந்தக் காட்சிகளை நகர்த்த வேண்டியுள்ளது..

ஒரு பொண்டாட்டியைக் கூட கண்ணில் காண்பிக்காமல் ரெண்டு பொண்டாட்டிக் காராராக நடித்திருக்கும்  தம்பி ராமையா அபார நடிப்புத் திறன் கொண்டுள்ளவர்  என்பது இப்படத்தில் அதீதம் நிரூபணமாகிறது..

அந்த ஹீரோயினாக வரும் பெண்ணின் துடிப்பும் ஆற்றலும் ஜாஜ்வல்யமும் அந்த ஹீரோ பயலிடம்  ரொம்ப மிஸ்ஸிங்.

எல்லா துறைகளிலும் அததற்குரிய தாகங்களோடு பரிதவிக்கிற முயல்கிற நபர்கள் எங்கெங்கிலும் இருந்தவண்ணம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அதே போன்று இந்த சினிமா துறையிலும் ஜெயிக்க வேண்டுமென்று அரும்பாடு  படுகிற நபர்கள் பல்கிப் பெருகி விட்டனர் என்பதில்  சந்தேகமில்லை.. அப்படி ஒரு குழாமை வைத்தே ஒரு முழுநீளப் படத்தையும்  எடுத்து அப்ளாஸ் வாங்கி விட்டார் பார்த்திபன்..

திருவோண விருந்துகளில் மலையாளிகள் தங்களது விருந்தில் கொடுக்கிற உணவு முறைகள் ரெண்டு பக்கப் பட்டியல் கொண்டவை.. அதனைப் போன்றே  பார்த்திபனும் தனது படங்களில் அபரிமிதமான கதம்ப விஷயங்களை ஓயாமல் சளைக்காமல்  படைக்கிற ஆற்றல் கொண்டவர்.

அகோரப் பசியில் சென்றால் தான் யாவற்றையும் சுவைத்து மகிழ்ந்து பாராட்ட முடியும்.. பசியில்லாமலோ, அரைப் பசியிலோ சென்றால் அப்படியே இலையை மூடி விட்டு வரவேண்டும்..
ஆகவே ஒரு சினிமா பசியோடு அதாவது , நல்லதொரு மனநிலையில் சென்று இதனைப்  பாருங்கள்.. முழுதுமாக இல்லை என்றாலும் கூட பாதியாவது ரசிக்கிற வாய்ப்பு அமையலாம்..  நன்றி. 

Saturday, August 23, 2014

சும்மா ஜாலியா எழுதி இருக்கேன்.. நத்திங் சீரியஸ் மாமு...

எதாச்சும் பறவையோ மிருகமோ "மனுஷனா பொறந்திருந்தா பரவாயில்லே" என்று கவலைப் பட்டிருக்க வாய்ப்பே இருந்திருக்காது என்று ஒரு மனுஷனாக இருந்து ஊகிக்க முடிகிற என்னால், 'இந்த மானங்கெட்ட மனுஷப் பொறப்பே ஆகாதப்பா' என்கிற அனுமானத்தில் அன்றாடம் உழல்கிற பல மனிதர்கள் உண்டென்கிற விஷயம் எனக்கு மட்டுமல்ல, இந்த மனுஷனா பொறப்பெடுத்த 90 சதவிகித மனுஷங்களுக்கு வந்திருக்கும்னு சுலபமா நெனச்சுட முடியுது..

எது எப்டியோ பொறந்தாச்சு.. சாகற வரைக்கும் வாழ்ந்தாகணும் .. தற்கொலையே செஞ்சுக்க நெனச்சாலும் அதையும் கடந்து பொண்டாட்டி புருஷன் புள்ளைங்களுக்காக யாரா இருந்தாலும் பொழப்போட்டியாகணும் ..
இதையெல்லாம் தாண்டி "பொறந்தது எவ்ளோ நல்லதா போச்சுடா சாமி.. !" என்று புளகாங்கிதம் அடைகிற ஒரு தருவாய் வராமத் தான் போயிடுமா என்ன?

நம்மள நம்பி நாலு ஜீவன்கள்.. அத நம்பி நானு.. எங்கள நம்பி இன்னும் சிலபேரு, பலபேரு.. இப்டியே இம்சை இல்லாம பரமானந்தமா இந்த வாழ்க்கைய சாகாமலே ஒட்டிக்கிட்டே இருக்கணும் ங்கற வெறி ஒரு தருணத்துல பிச்சொதறாதா என்ன??

உடலுள மனசுல வியாதியோ கவலையோ இல்லாம எந்நேரம் பார்த்தாலும் கோவில் குளம் , கோவா , சிங்கப்பூர் மலேசியா ன்னு டூர் அடிச்சுட்டு , அடுத்ததா வேற எதாச்சும் புதுசா சந்தோஷமா அட்வெஞ்சரா யோசிச்சு,  முடிஞ்சா யாருக்கும் தெரியாம அந்த மேகங்களைக் கடந்து நீல வானத்தை வெரல் நகங்களால ஒரசிட்டு வந்து பெருமை பீத்திக்கலாமா ன்னு ஆச போட்டு மனசை அளப்பரை செய்யுது..

நம்ம சாதனைய சொல்ற போது எவனும் நம்பாம, அப்புறம் அதுக்குப் ப்ரூபா ஹய் டெபனிஷன் வீடியோவுல செஞ்ச பதிவைக் காட்டி அவன் நக்கல் செஞ்ச வாயை அடச்சு  "அடேங்கப்பா" ன்னு சொல்ல வைக்கிற ஒரு த்ரில் இந்த மனுஷப்  பொறவிக்கு மட்டும் தான்யா பாஸிபில் ..
"பூமிப் பரப்புல இருந்து 8வது கிலோமீட்டரில் வந்து பறக்கறேனாக்கும் " என்று எந்தக்  கழுகும் பெருமை பேசுவதில்லை..

இந்த மனுசப் பயலுக்கு மட்டும் தான் கான்ஸ்டிபேஷன் பிரச்சினை.. டயோரியா பிரச்சினை  .. ப்ரெஷர் பிரச்சினை .. சுகர் பிரச்சினை. வெய்ட் பிரச்சினை . இளைச்சு இருக்கறது பிரச்சினை.
உசிரோட இருந்தா பிரச்சினை. செத்தா பிர.. . யெஸ் .. செத்தா மட்டும் தான் பிரச்சினை இல்லை. அதாவது செத்தவனுக்கு.. இருக்கறவனுக்கு தான் கூட இருந்தவன்  செத்தாலும் பிரச்சினை.. சாகாம கூடவே இருந்தாலும் பிரச்சினை.. ஹிஹிஹி.. 

Thursday, August 21, 2014

கண்டனம்??

நமது பலவீனங்களையும் குற்ற உணர்வுகளையும் யதார்த்தமாக "இடுகையில்" இடுகையில் அவைகளை சிலர் ஹாஸ்யமாகவும் ஏளனமாகவும் உணர வாய்ப்பாகி விடுவதை நான் உணருகிறேன்.. 

சிலர் மட்டுமே அதன் வலிகளை , அந்த யதார்த்தங்களில் உள்ள சத்தியங்களை உணர்ந்து சிலிர்க்கிறார்களே அன்றி எல்லாரும் அல்ல.. 

எழுதுகிற எவரும் தனக்கு நேர்ந்த விஷயங்களை தன்னிலைப் படுத்தி எழுதினாலும் அது அவர்களுக்கு மாத்திரமே அன்று.. , எல்லாரையும் எல்லாரது உணர்வுகளையும் தன்னில் இழுத்துக் கொணர்ந்து சேர்த்து தனக்கே தனக்கு நேர்ந்த தொனியில் அபஸ்வரமாக முணகிப் பார்ப்பர் ... 

"என்னடா இவன் இவ்வளவு லஜ்ஜை இல்லாமல் பேடி போன்று இப்படி எல்லாம் பிதற்றுகிறானே !!" என்று அலட்டலாக வெறுப்பாக எரிச்சலாக உணர்வர்.. ஒருக்கால் அவர்களுக்கு அவ்வித அனுபவங்கள் இன்னும் வாழ்வில் நிகழாமல் இருந்திருக்கலாம்.. அல்லது, நிகழ்ந்தும் கூட அது தனக்கு சம்பந்தப் படாத தெனாவெட்டில் அந்தக் கருத்தினை ஆமோதிப்பதை கௌரவப் பிரச்சினை ஆக்கி பீலா விடலாம்.. 

ஆனால், அவ்விதம் நானிடுகிற சில இடுகைகள் சிலருக்குத் தொக்காக புரிபட்டுவிட்டதோ என்று தோன்றுமளவு நடக்க முனைவதாக எனக்குள் ஒரு அனுமானம்.. 

ஸ்வாமி கழுத்துக்குப் போகவேண்டுமென்று தான் பூமாலைகள் புனையப் படுகின்றன.. விதியின் நிமித்தமோ அல்லது சதியின் நிமித்தமோ சமயங்களில்  குரங்குகள் கைகளில் சிக்கி மாலைகள் பிய்த்தெரியப் படுவதைப் பார்க்கையில் சம்பந்தப் படாத பிறர்க்கு எவ்விதம் தோன்றுமோ  அறியேன்.., மாலையைப் புனைந்தவனுக்கு ஒருவித ஆற்றாமை அழுகை யாவும் தவிர்க்க சாத்யப் படாமல் போய் விடுகிறது.. 

Thursday, August 14, 2014

சுதந்திரம் ??

லஞ்சலாவண்யம் முழுதுமாக ஒழிந்தாலே ஒழிய இந்திய சுதந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும்..
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட .. இந்த லஞ்சத்திலே, சுற்றுப்புற சுகாதாரத்தில் பின்தங்கி இருப்பதிலே, சொந்த நாட்டிற்குள்ளேயே நதிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சையிலே, மொழியை மையப் படுத்தி  அரசியல் நடத்துவதிலே, என்று இன்னும் இன்னும் குறைபாடுள்ள பட்டியல்கள் நீண்ட வண்ணமே உள்ள நமது நாட்டில் சுதந்திரக் கொண்டாட்டம் என்பது சும்மா பட்டம் விடுகிற விழா போன்று தான் மனசுக்குத் தோன்றுகிறது...
இன்னும் சில நற்பண்புகளை நம்வசப் படுத்திய பிற்பாடு சற்று தாமதமாகக் கூட சுதந்திரம் கிடைத்திருக்கலாமே என்று தோன்றுவது பலரது கண்டனத்துக்கு உரிய அனுமானம் எனிலும், உங்களுக்கே யோசித்துப் பார்க்கையில் அதன் நியாயம் புரிபடக் கூடும் என்பதே எமது அனுமானம்.. 

மழைச் சாரல் அடிக்கிறதோ என்று வானம் அண்ணாந்து பார்த்தால், வானம் தெளிவான நீலத்தில் தகதகக்கிறது.. 
சற்று கண்களை சுழற்றிப் பார்க்கையில் பேருந்துக்குள் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கிற ஒரு பனாதியோ, நமக்கு முன்னர் வண்டியில் கடந்து போகிற ஒரு பீடையோ உமிழ்ந்து சென்ற எச்சில் தான் அது என்று உணர வருகையில் ஒருவித அசூயையையும்  மீறி கோபம் கொப்புளிக்கிறது... 

எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் காரியுமிழவும் , வெற்றிலை சிகப்பு எச்சிலை "புளிச்" என்று வெள்ளையான ஒரு வீதி சுவற்றில் ஓவியம் போன்று வாயிலே அடித்து வரைந்து விட்டுப் போகவும், உச்சா வந்தால் அது என்ன சந்தடி நிறைந்த தெருவாயிருந்தாலும் பெண்கள் கடக்கிற பிரக்ஞையோ , அது குறித்த லஜ்ஜையோ அற்று சிறுநீர் கழிக்கிற இந்தியக் காளையர்கள்.. பள்ளி கோவில் சுற்று சுவர்கள் பின்புறம், நிறைந்திருக்கிற வறண்ட மலக்காடு... 

குழந்தைகளை பிச்சை எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது, எவரும் சொல்லாமலே சுயமாக குழந்தைகள் பிச்சை எடுக்க முனைவது.. 
குழந்தை கைகளில் இருந்தால், சுலபத்தில் மனமிறங்கி பிச்சை இடுவார்கள் என்று தோளிலே  தொட்டிலைக் கட்டி அதில் படுத்துறங்குகிற குழந்தைகளோடு பிச்சை எடுப்பது... 

இதெல்லாம் தான் சுதந்திரம் என்றால் இந்த சுதந்திரம் கிடைத்துத்தான் இருக்கவேண்டுமா? ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவே இருந்து நாளடைவில் நாமும் அவர்கள் போன்றே நடை உடை பாவனைகளில் சிறந்து விளங்கி அவர்களை அடிமைப் படுத்துகிற நபர்களாக மாறி இருக்க வாய்ப்பு இருந்திருந்தும் அதனைத் தவற விட்டு அவர்களிடம் தப்பிப்பதே தலையாய சுதந்திரமாகக் கருதி எல்லா வகைகளிலும் அசிங்கப்பட்டு இன்றைக்கு அவர்களிடமே பாடம் பயில்கிற அடிமைகளாக நாம் மாறி விட்டோமா என்று தோன்றுகிறது எனக்கு.. 

காந்தி நேரு பெரியார் காமராஜர் சந்திரபோஸ் லால்பஹதூர் சாஸ்திரி விவேகானந்தர் பாரதி .. இன்னும் பல மூதறிஞர்களின் அவர்களது சுதந்திரப் போராட்டங்களின் மீதெல்லாம் எனக்கு எவ்வகைக் கோபமும் இல்லை.. அந்தப் போராட்டங்கள் அன்று வெற்றி பெற்று இன்றது எந்த ஒழுக்கங்களையும் நமக்குப் பயிற்றுவிக்காமல் வெறுமே வரலாறுகளாக நமது பாடப் புத்தகங்களில் இடம் பெற்று மதிப்பெண்களாக உபயோகமாகிறதே அன்றி நம்முடைய மதிப்புகளுக்கு சான்றாய் விளங்குகின்றனவா என்றால் அது மிகவும் யோசித்து சொல்லவேண்டிய பதில் மட்டுமே.. 

Tuesday, August 12, 2014

கறிப்பசி...

எந்தக் கருப்பராயனும் 
கட்டளையிடவில்லை 
ஆட்டுக் கிடாயை 
வெட்டச் சொல்லி.. 

உன் குவார்ட்டர் 
அடித்த வாயும் வயிறும் 
தான் கேட்கிறது.. 

மழுங்கிய அரிவாளை 
கருப்பன் கைகளில் 
செருகி விட்டு .. 
ஆட்டுத் தலை வெட்ட 
உன் அரிவாள் 
சாணை பிடிக்கப் படுகிறது.. 

தண்ணியை முகத்தில் 
அடித்தும் கூட சிலிர்க்காத 
ஆடு கண்டு என் அப்பத்தா 
கதறுகிறாள்.. 
"ஐயோ .. சாமி குத்தம் 
ஏதோ நடந்துடிச்சோ?"
என்று சொல்லி.. 

பிற்பாடு சிலிர்த்து 
ஆடு வெட்டப் படுகையில் 
அவளது பூரிப்பும் 
புன்னகையும் ... 
அவள் தலை எடுக்க 
வேண்டும் போல 
ரௌத்ரம் எனக்கு.. !!

"கருமாந்திரம் புடிச்ச 
சரக்கு போல இருக்கு.. 
மப்பே சரியா ஏறலை.. "
என்று எலும்பை 
உறிஞ்சி ஈரலைச் 
சுவைக்கிறான் 
கோவில் பூசாரி.. ! 

Wednesday, August 6, 2014

ஜிகர்தண்டா...

ஜிகர்தண்டா பார்த்து மிக வியந்தேன்.. தமிழில் இப்படி ஒரு வித்யாசமான கதைக் களமா என்று.. வாவ்.. !!
இன்னா ஒரு வழுக்கல் மாதிரியான ஸ்க்ரீன் ப்ளே.. அப்டியே ஐஸ்க்ரீம் நாக்குல நழுவி, தொண்டைக்குப் போயி, தொண்டையில இருந்து வயிற்றுக்கு சில்லுன்னு இறங்கும் பாருங்க..அப்டி ஒரு அலாதி வழுக்கல். 
படத்தோட மெயின் ஹீரோவே அந்த வில்லனா வரும் சிம்ஹா தான்.. 
ஹீரோ சித்தார்த் தைக் காட்டிலும் அவரது நண்பராக வருகிற அந்த நபர் சோபிக்கிறார்.. ஹீரோயின் லக்ஷ்மி ராயைக் காட்டிலும் அவரது அம்மா அம்பிகாவின் துக்கிரித் தனம் ரசிக்கும் விதமாக இருக்கிறது.. 
சந்தோஷ்ணாரயான் இசையில் பின்னணிக்கு இருக்கிற பலம், பாடல்களில் மிஸ்ஸிங்.. 
லக்ஷணமான ஒளிப்பதிவு .. கச்சிதமான எடிட்டிங்.. இப்படி எல்லா துறைகளுக்குமே மெருகு சேர்த்த புத்திசாலித் தனமான வேலையை செய்தது டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்.. 
சீரியஸ்நெஸ்ஸும் ஹியூமரும் இந்த அளவுக்கு மிங்கிள் ஆகி நம்மை ரசிக்க வைக்க முடியுமா என்பது மிராக்கிள்.. 
இந்தக் கதையை யாராவது சொல்லிக் கேட்டாலோ, எழுதிப் படித்தாலோ சப்பை மேட்டராகத் தான் தோன்றும். விஷுவலாகப் பார்க்க நேர்ந்தால் மட்டுமே அந்தத் தன்மையின் வீரியம் புரிந்து கொள்ளப் படும் என்பது பார்த்தவர்கள் அனைவரின் எண்ணமாக இருக்க முடியும்.. 
சிம்ஹாவின் அடியாட்களாக வரும் எல்லா வில்லன்களுமே கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். 
மற்ற சம்பவக் கோர்வைகளும் அதன் திருப்புமுனைகளும் நச் என்ற வசனங்களும் படம் முழுக்கப்  பொலிவேற்றுகிற வஸ்துக்களாக வீற்றிருப்பது ஆச்சர்யம்.. 
ஒரு பக்கா வில்லத் தனத்தோடு இத்தனை சுலபமாக ஹாசியத்தைப் புகுத்தி இருக்கிற விதம் தமிழ் படங்களுக்கே புதிய களம் என்பது எமது அனுமானம்.. 
அடுக்கிக் கொண்டு போவதற்கும்  ஆச்சர்யப் படுவதற்கும் இந்தப் படம் நெடுக நீண்ட பட்டியல்கள் உண்டு.. ஆனால், அத்தனை ஆழ்ந்து விமரிசிக்கிற அனுபவமும் ஆற்றலும் எமக்கில்லை .... 

நூற்றுக்கு ஐம்பதை நெருங்கியோ அதையும் தாண்டியோ விகடன் பாணியில் மதிப்பிடலாம். 
என்னுடைய யதார்த்தத்தில் நூற்றுக்கு எண்பது தாண்டியும் தொன்னூறைத் தொட்டும் கூட மதிப்பெண் இடுவேன்.. 
நன்றி.. 

Monday, August 4, 2014

சக்கரம்..

என்னுடைய 
பல நண்பர்களின் 
மரணம் 
இந்த வாழ்வின் நிலையாமை 
குறித்து எனக்கு 
உணர்த்தி இருக்கின்றன.. 

ஒரு வார கால 
அவகாசத்தில் அவ்வித 
உணர்வுகள் விடைபெற்று 
மறுபடி படிந்து விடுகிறது 
வாழ்க்கை.. 

இருக்கிற வரைக்குமான 
நிரந்தரத் தன்மையில் 
இந்த வாழ்க்கை மட்டுமே 
புரிபடுவதால் 
நாம் உணரும் சாத்தியமற்ற 
மரணத்தின் மீதான 
மதிப்பும் பயமும் 
தாற்காலிகமாகி விடுவது 
எல்லாருக்குமான 
யதார்த்தம் என்பதே 
யதார்த்த உண்மை.. !!

சாசுவதமான மரணம் 
சுவாரசியப் படுவதில்லை.. 
மாறாக சாஸ்வதமற்ற 
வாழ்க்கையே அதீத 
சுவாரஸ்யம்....!

மரணங்களை 
மனிதர்கள் வெறுத்தால் 
என்ன ..?!
வரவேற்க மறுத்தால் 
தான் என்ன??

மனிதர்களை 
அரவணைக்கவும் 
ஆதரவளிக்கவும் 
நிரந்தரப் புகலிடம் 
கொடுக்கவும் 
மரணங்கள் எப்போதும் 
தயார் நிலையிலேயே 
உள்ளன.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...