படம் ரிலீசான ஏழாம் தேதியில இருந்து "ஐயோ.. பார்த்துடனுமே... மறுபடி எங்கியாச்சும் பான் பண்ணிட்டாங்கன்னா வம்பா போயிடுமே " என்றெல்லாம் ரொம்ப பீல் பண்ணி, எப்டியோ இன்னைக்குப் போயி பார்த்தே பார்த்துட்டேன்..
நானும் மனைவியும் பாப்பாவை அழைத்துக் கொண்டு போகணும் என்பதாகத்தான் திட்டம்... ஆனா கடவுள் ரொம்பக் கருணை உள்ளவர்னு நினைக்கிறேன்.. "பாப்பாவுக்கு ஒடம்பு கொஞ்சம் சரி இல்லைப் போல இருக்கு.. பார்த்துட்டு நாளைக்குப் போகலாம்" சொன்னாலோ இல்லையோ, "சரி, மொதல்ல நான் போயி ஒருக்கா பார்த்துட்டு வந்துர்றேன்.. பெறகு நீ நான் பாப்பா போலாம்" ன்னு சொன்னேன்..
தனியா போயி பார்த்தது ரொம்ப நல்லதா போச்சு.. அவுகளக் கூட்டியாந்திருந்தா நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..
எதுக்கு கமல் இவ்ளோ தீவிரமா யோசிச்சு "அல் - கொய்தா" இயக்கம் பற்றி எல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி, ஆப்கானிஸ்தான் போயி ஷூட் பண்ணி, நம்மையும் ஒரு ரெண்டு மணி நேரம் ஒரு விபரீத இடத்துக்கு அழைத்து சென்ற ஓர் தத்ரூபத்தை ஏற்படுத்தி .. இம்சித்து விட்டாரென்றே எனக்குத் தோன்றுகிறது..
ஓர் அலி போன்ற தோற்றத்தில் தோன்றி , கதக்கலியோ குச்சிப்பிடியோ ஆடி, அய்யர் பாஷை பேசி, ஒரே பாட்டை பாடி, மனைவி போல ஒருத்தியும், தோழி போல ஒருத்தியும்..
அந்த சூழ்நிலைகளை கிரகித்துக் கொள்ளவே ஓர் பிரத்யேக அறிவு அவசியப் படுகிறது.. பொத்தாம் பொதுவாக எவரைக் கேட்டாலும் "படம் சூப்பர்" என்று ஓர் ப்ரெஸ்டீஜ் இஷ்யு வுக்காக எல்லாரும் சொல்லி விட்டார்களோ என்று கூட எனக்கொரு சந்தேகமுண்டு.. "ஒன்னும் பிடிபடலை", "படம் அறுவை" என்றெல்லாம் சொன்னால் முட்டாள் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்தே அநேகம் பேர்கள் இந்தப் படம் குறித்து பொய்யாகவாவது பாசிட்டிவாக பேசி விட்டார்கள் என்று அனுமானிக்கிறேன்..
தைரியமாக நான் சொல்கிறேன்..
"எனக்கு விஸ்வரூபம் பிடிபடலை"... இதை சொல்ல எனக்கென்ன வெட்கம்?..
இப்படி ஓர் நெளிவு சுழிவான திரைக் கதையைப் புரிந்து கொள்கிற டெக்னிக்கல் புத்தி உள்ள நபர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.. ,மற்ற அப்பாவி ஆடியன்ஸை கமல் அம்போ வென்று விட்டு விட்டார்..
என்னவோ நாங்கெல்லாம் அதிகபட்சம் அறுபது எழுபது ஆயிரங்கள் போட்டு ஓர் பைக்கை வாங்கி ஓட்டுகிற தகுதியில் மட்டுமே இருக்கிறோம்..
அய்யா கமலஹாசா.. நீர் பாட்டுக்கு ஒரு பாரீன் மேட் பைக்கை, அதுவும் லிட்டருக்கு பத்து கிலோமீட்டர் கிடைக்கிற முப்பது லட்சம் நாற்பது லட்சம் மதிப்புள்ள பைக்கை வந்து பந்தாவாக ஓட்டிக் காண்பித்தால், வாயில் ஈ புகுவது கூடப் புரியாமல் "பே" வென்று வேடிக்கை பார்த்து வியக்கிறோம்..
சும்மா தடாலடியாக குண்டுகள் வெடிக்கின்றன.. நம்ம படம் பார்க்கிற தியேட்டர் சீட்டுக்கடியில் குண்டு வைத்தது மாதிரி சும்மா அதிருதில்ல?
யதார்த்தமாக சொல்லப் போனால், ஒரு ஆங்கிலப் படம் கூட வெடுக்கென்று புரிந்து விடும் போலிருக்கு.... , ஆனா, இந்த வி.ரூபம் ம்ஹ்ம் ..
பலமுறை இந்த விஸ்வரூபத்தை யூ டியூபில் ட்ரைலர்களாக கண்டு களித்து விட்டேன்.. அந்த ஆர்வத்தில் இந்தப் படத்தைப் பார்க்கப் போனால், படம் முழுக்கவே ரெண்டரை மணி நேரங்கள் ட்ரைலர் பார்க்கிற உணர்வே வியாபித்ததே அன்றி முழுநீளமாக ஓர் படத்தை பார்த்த உணர்வே இல்லை ...
இதன் கதைத்தளமும், சம்பவங்களுக்கான வேர்களும், கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கிற ஆப்கானிஸ்தான் தான்...
ஓர் பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை செய்திகளில் புரிந்து கொள்வதை மாத்திரமே நமக்கெல்லாம் நடைமுறை சாத்தியமாயிற்று... அவனது சூழல் குறித்தோ, அந்த அல்கொய்தா பயிற்சி மையம் குறித்தோ ஓர் அனுமானப் பிரக்ஞையோடு மாத்திரமே நம்மால் இருக்க முடிந்தது.., பிற்பாடு அவன் செத்துப் போன பிறகு அந்தப் பிராந்தியம் நமது சிந்தனைக்கே முரண் பட்டதாகவும் சம்பந்தமற்றதாகவும் நம்மிலிருந்து கழன்று விட்டொழிந்து விட்டதென்பதே எல்லாருக்குமான யதார்த்த நிகழ்வாக இருந்தது..
ஆனால் ஓர் மெல்லிய கலைஞனாக உள்ள கமலஹாசனுக்கு அந்த விபரீத நிதரிசனத்தை , நிஜத்தில் சென்று தரிசிக்கவும் அதனையே தனது படத்திற்கான கதைக் களமாக மாற்ற வேண்டுமென்கிற எண்ணங்களும், அதனை செவ்வனே செயற்படுத்திய விதமும் பிரம்மிப்பும் பெருமையும் ஒருங்கே நம்மில் மிளிரச் செய்கிற விஷயங்களாகும் ..!
ஆனால், இந்த யுத்த சம்பவங்கள் நடக்கிற களத்திலே , அவர்கள் பரிமாறிக் கொள்கிற விவாதங்களும், போடுகிற திட்டங்களும், நடைமுறைப் படுத்துகிற சண்டைகளும், என்னால் ஓர் யூக அடிப்படையில் தான் ரசிக்க முடிந்ததே அன்றி திட்டவட்டமாக இன்னது தான் பிரச்சினை என்கிற விதத்தில் காட்சிகளை அணுக முடியாதது பெரிய அவஸ்தை என்றே சொல்வேன்..
இப்படி படம் நெடுக ஓர் மாயை சூழ்ந்து அந்த ரெண்டரை மணி நேரங்கள் நழுவியது புரியவில்லை என்ற போதிலும் அத்தனை ஆழமாக லயித்து விடுமளவு ஓர் புரிதல் இருந்ததா என்பது மிகப் பெரும் கேள்வி தான்..
எல்லா கோணங்களையும் இந்தப் படத்தில் கிரகித்துக் கொண்ட நபர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.. குறிப்பாக, காலம் சென்ற எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் இதனை மிகத் துரிதத்தில் உறிஞ்சி ஐ மீன் ABSORB செய்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்..
அப்படி ஓர் வீச்சோடு இயங்க முடியாத எனது மூளையை நான் சபிக்கிறேன்.. எனது சுயத்தையே வெட்கத்தோடு பார்த்து நகைக்கிறேன்.. .
நன்றி..