Wednesday, January 23, 2013

நெரிசல்கள்...

கோவில்களிலும் பேருந்துகளிலும் கூடுகிற கூட்டங்களைப் பார்க்கையில் .... அவைகளைத் தவிர்த்து விடுவதே உத்தமம் என்பதாக மனசுக்குப் படுகிற போதிலும், பேருந்துகளைத் தவிர்த்து இடம் பெயர்வது எங்கனம் என்கிற கேள்வி எழுகிறது.. எவ்ளோ தூரம் வேண்டுமென்றாலும் நான் பைக்கில் பயணிக்க ரெடி என்ற போதிலும் மனைவி அதற்கு ஒத்துழைப்பவளாக இல்லை...

இப்போதைக்கு காரும் இல்லை, பின்னொரு நாளில் அது கைவரப் பெறும் என்பதற்கான உத்திரவாதங்களும் இல்லை... அதையும் தாண்டி காலம் ஓர் காரை எனது வீட்டு வாசலில் நிறுத்தக் கூடுமென்கிற அதிகப் பிரசங்கமான கனவுகள் எனக்கில்லை என்ற போதிலும், மனைவிக்கும் மகளுக்கும் உண்டென்றே கருதுகிறேன்..

சிலரை காலம் வெறுமனே துரத்துவதில் குறியாக உள்ளது... ரோல்ஸ் ராய்ஸ் , மெர்சிடஸ் பெஞ்சு, ஆடி , மீதெல்லாம் குறிவைத்த காலங்கள் உண்டு... இன்றைக்கு இரண்டாம் கையில் ஓர் மாருதி எய்ட் ஹண்ட்ரட் என்பதே கனவுப் பட்டியலில் சேர்ந்துவிட்ட கொடுமை செய்தியை உங்களுக்கெல்லாம் சொல்லி எனது கவுரவத்தை இழக்க வேண்டாமென்று தானிருந்தேன்... "சரி.. நம்ம நாத்தம் தெரிஞ்சா தான் என்ன?" என்கிற ஓர் விட்டேற்றித் தனமும் வெறுப்பும் ஒருங்கே கூடி இங்கே நான் யாவற்றையும் பிதற்ற நேர்கிறது..

ஆனாலும் பாருங்கள்., என்னதான் இப்படி எல்லாம் சொல்வதற்கு நான் முனைந்தாலும் மனதின் அடியாழத்தில்.., மிக மிக அடியாழத்தில்... "கண்டிப்பா வாங்குவமடா காரு.." என்றோர் சிலுவை போன்றோர் நம்பிக்கை அறையப் பட்டிருக்கிறது... வேர்விட்ட அந்த நம்பிக்கையின் நிமித்தம் ஒவ்வொரு நொடியையும் இந்தப் பிரபஞ்சத்தில் என்னை இயக்கிக் கொள்வது சாத்யமாகிறது...

கறாராக , சத்தியமாக , கடவுள் சத்தியமாக எனக்கு காரே இனி வாழ்க்கையில் இல்லை ,.. இல்லவே இல்லை... என்றெல்லாம் உத்திரவாதமாக எந்த சாமியும் வந்து என்னை  சபிக்கவில்லை என்பது உறுதி என்பதை இங்கே உங்களிடமெல்லாம் தெரிவித்துக் கொள்ள மிகவும் கடமைப் பட்டுள்ளேன்...[என்னாங்கடா இது கடமை?]

ஆக , இனி அந்தக் கார் சமாசாரத்தை விட்டொழிப்போம்.. அது கெடக்குது கழுதை.. இந்தக் கூட்ட நெரிசல் விஷயமா அலசுவோம்...

நம்ம மக்கா என்னமா கூட்டம் போடுறாங்க ஒவ்வொரு இடத்திலையும்?.. கல்யாணம்னா கூட்டம், காதுகுத்துன்னா கூட்டம்.., வெத்தலை பாக்கு மாத்த .. உப்பு சர்க்கரை  வாங்க... ஜவுளி அள்ள ... ஹோட்டலில் அந்த அவசரக் கோல இட்டிலி  சாம்பார் சட்டினி..வேகாத சோறு.. வெளங்காத சாம்பார் ரசம்... அதே காசைப் புடிங்கிட்டு இந்த ஹோட்டல் ஆளுங்க பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை... எக்ஸ்ட்ரா புளி சட்னி கேட்டா கூட "அது கெடயாது" என்று ரத்தக் கொதிப்பை ஏற்றுகிறார்கள்..

இந்தக் கல்யாண கருமாதிக் கூட்டங்களுக்கு ஹோட்டல் பசங்க பண்ற கொடுமை கொஞ்சநஞ்சமல்ல.... பாவம் அதையும் வாரிக் கட்டிக்கிட்டு ஏப்பம் போடுற அப்பாவி ஜனங்களைப் பார்க்கையில் ... "இவனுங்க எல்லாம் வெளங்குவானுகளா? என்று ஓர் சாது கூட சபிக்கக் கூடும்..

தேவையோ தேவை இல்லையோ சலிப்பே இல்லாம நம்ம மக்க கூட்டம் கூடிர்றாங்க... ஊட்டாண்ட அவுட்டிங்ல முக்கிய ஜோலி இருக்கறதா பீலா வுட்டுக்கின்னு  இங்க வந்து பஸ்சுல கோவில்ல கூட்டத்துல சிட்டுங்களை ஒராசிட்டு  சூடேறிப் போறது... அப்புறம் வூட்டுக்குப் போயி .."என்ன தான் மக்களோ.. எதுக்குத் தான் இப்டிக் கூடி நாசமாப் போறாங்களோ"ன்னு சடஞ்சுக்கிறது..

இப்பப் பாருங்க.. நான் போக வேண்டிய இடத்துக்கு நாலஞ்சு பஸ் போயாச்சு.. என்னால ஏற  முடியலை... ஏன்னா, நான் பொதுவா லேடீஸ் சைடு தான் ஏறுவேன்.. அது பொறுக்காத கண்டக்டர் பசங்க, "யோவ் .. பின்னாடி வந்து ஏறுய்யா "ன்னு சட்டம் போட்டான்னா "போய்யா வெண்ணை.. நீயுமாச்சு. ஒன் பஸ்சுமாச்சு " ன்னு இறங்கிடறேன்..

கடேசியா ஒரு பஸ்சுல  ஒரு மவராச  கண்டக்டர் "வெடுக்குன்னு ஏதோ ஒரு பக்கம்  ஏறுங்கய்யா "ன்னு கூவ, அய்யா ஆசையா என்டர் ஆனா ஒரு கெழவி பன்றாயா  அதிகாரம்.. "பொறவுக்கு ஏறது தானே? இங்க வந்து பொம்பள குண்டிக்குள்ளேயே பூந்துக்கொனுமா?" ங்கறா ..
"சும்மா பொத்திட்டு நில்லு பெருசு" என்றொரு மாமேதை நல்லவேளையாக எனக்காகவே  மொழங்குன மாதிரி தேனை வார்த்தாரு ..

ஐயோ .. ஐயோ.. 

1 comment:

  1. சுகமான அவஸ்தை பேருந்து பயணம்! டூ வீலர் வாங்கி விட்டதால் இப்போது எனக்குஅந்த அவஸ்தை குறைந்துள்ளது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...