Friday, November 23, 2012

மனச்சிதறல்கள் ....

எழுதுகிற திராணியே சமயங்களில் அவிழ்ந்து விழுந்துவிட்டது போல ஓர் மனவெறுமை... இன்னதை எழுதலாம் என்கிற சிந்தனைகள் வந்துவந்து போகின்றனவே அன்றி எழுதிக் குவிக்க கைகள் வரக்காணோம்..

சிலநாட்கள் கவிதை எழுதி, அதன் கருத்தை செதுக்கப் பிரயத்தனித்து... அது ஒவ்வாமல் வார்த்தைகளை செதுக்கி... பிற்பாடு எதுவும் எடுபடாதென்று மனசு ஓர் அபிப்ராயத்தை முன்மொழிய எழுதிய யாவற்றையும் அப்புறப் பட்டுத்தியாயிற்று...

அதன் பின்னர் சில கட்டுரை முயற்சிகள்... அவையும் விளங்காதென்று முடிவெடுத்து ... எட்டி உதைத்தாயிற்று..

எதையேனும் எழுதுகிற எவர்க்குமே இப்படி கவிதை கட்டுரைகள் அவ்வபோது காலிடறி கவிழ்ந்து விடச்செய்யும் என்கிற சங்கதி பலமுறை நிகழ்கிற அனுபவங்களே... மற்றவர்களுக்கு எவ்விதமோ அறியேன்., எனதனுபவத்தில் இது நான் எழுதத் துவங்கிய நாள்தொட்டு நிகழ்ந்து வருகிற விஷயம்...

இந்த எனது குறைகளையே கூட பிரத்யேகமான ஓர் விஷயமாக இங்கே வெளிச்சமிட்டுக் காண்பிக்க முயல்கிற என் எழுதும் திறன் பிரயோகிக்கப் படுகிறதா அல்லது துஷ்ப்ரயோகிக்கப் படுகிறதா என்கிற குழப்ப சந்தேகங்கள் என்னில் ஊடாடுகின்றன..


துப்பாக்கி சென்று பார்க்க ஓர் சூழலை உருவாக்க முயல்கிறேன்... நான் விஜய் அஜித் விக்ரம் எவருடைய ரசிகனும் அல்ல... நல்லா நடிச்சா நாயைக் கூட ரசிப்பேன்... ஓவர் ஆக்ட் கொடுத்துக் குளறுபடி செஞ்சா சிவாஜின்னாலும் டென்ஷன் ஆயிடுவேன் ... விஜய்க்காக அல்ல.., ஏழாவது அறிவை இயக்கிய இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் என்பதால்... நடிகர்களுக்காக ஓடி ஓடிப் படம் பார்த்த பிராயங்கள்  ஓடிவிட்டன... இன்றெல்லாம் விஷயமுள்ள டைரக்டர்களையும், உருப்படியான விமரிசனங்களும் உள்ள படங்களையுமே மனம் நாடுகின்றன... எந்த மேதாவி நடிகர்கள் நடித்துள்ள போதிலும் குலவையாக  விமரிசனங்கள் நாறுகையில்.. இலவச டிக்கட் கிடைத்தால் கூட தவிர்த்துவிடுமளவு  பக்குவப் பட்டுக் கிடக்குது மனசு...
-கிட்டத்தட்ட இப்போதைய மனிதர்கள் பலரும் இதே அலைவரிசையில் தான் இருக்கக் கூடுமென்கிற என் தீர்க்கதரிசனம் மெய்யானால் அரசமரப் பிள்ளையாருக்கு ஆயிரத்தெட்டுத்  தேங்காய் போட்டுடைக்கிறேன்... குறைந்தபட்சம் கனவிலாவது..!!

எனது மனைவியும் குழந்தையும் விஜெய் படம் பார்த்தாகவேண்டுமென்று அடம்பிடிப்பது ஒரு காரணமும் கூட... "என்னை விடவா உனக்கு விஜய்?" என்றொரு ஐ.எஸ்.ஐ. பிராண்ட் ஏக்கத்தோடு ஓர் நக்கல் தொனிக்கிற கேள்வி... "இப்படி சந்தேகமா ஒரு கேள்வி எதுக்கு? உங்களைவிடவா விஜய்?" என்கிற நய்யாண்டி  எனது மனைவியினிடத்து  ரசிக்க உகந்த விஷயம்...

இயக்குனர்கள் குறித்த பிரக்ஞையோடு படம் பார்க்கிற பெண்கள் சுஹாசினி மாதிரி விரல்களில் அடக்கம்... மிகப் பல பெண்களும் நடிகர்களின் பாவனைகளில் சிலிர்க்கவே தங்களை அர்ப்பணிக்கின்றனர்..


"தீவாளிக்கு ரிலீசாகி இருக்கிற ஓர் படத்தை குடும்பமாக சென்று பார்க்கிற ஓர் அற்ப விஷயத்தை சமுதாய உணர்வுகளோடு இழைக்க முனைவது மிக வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது " என்கிற அறிவிப்பு வந்துவிடும் , இந்நேரம் நான்  ஓர் பிரபல அரசியல் தலைவனாக இருக்கும் பட்சத்தில்..(?)

1 comment:

  1. என்ன எழுதுவது என்று சொல்லிக் கொண்டே 'நச்... நச்' என்று பலர் மனதில் எழும் உண்மைகளை எழுதி விட்டீர்கள்... முடிவில் நல்ல கேள்வி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...