Saturday, November 24, 2012

துப்பாக்கி------------------விமரிசனம்

இவ்ளோ லேட்டாக எவரும் துப்பாக்கிக்கு விமரிசனம் எழுதி இருக்க சான்சில்லை... இது நியாயமுமில்லை... இந்நேரம் ஏகப்பட்ட விமரிசனங்கள் அவர் அவர்கள் பிளாகில் படம் ரிலீசான திவாளி சமயத்திலேயே பட்டாசு கிளப்பி இருப்பார்கள் எல்லாரும்..

என்ன பண்ண?. இன்னைக்குத் தான் எனக்கு அந்த துப்பாக்கியை சுட அனுமதி கிடைத்திருக்கிறது... ஆகவே எனக்கான உளறல்களை விமரிசனம் என்கிற பெயரில் இங்கே கொட்டிவிடுவதில் ஓர் ஆத்ம திருப்தி... என் விமரிசனத்துக்காக எவருமிங்கே காத்துக் கிடக்கவில்லை  என்றபோதிலும் அப்படி காத்துக் கிடப்பதான ஓர் அலாதி கற்பனையில் கொஞ்சம் கொட்டித் தீர்க்க விழைகிறேன்...


சாத்தியப் படாத சங்கதிகளை செவ்வனே சுலபமாக அரங்கேற்றுகிற காரியம் தொன்று தொட்டு சினிமா கதாநாயகனால் மட்டுமே நிவர்த்தி செய்யப் பட்டு வந்திருக்கிற விஷயம் நமக்குப் புதிதில்லை என்ற போதிலும் அதையே எத்தனை முறை "ரிப்பீட்டு" அடித்தாலும் வாயைத்திறந்து பார்ப்பதையும் அதே வாயில் விரல்களைத் திணித்து விசிலடிப்பதையும் நாமெல்லாம் சலிக்காத வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்...

பத்துத் தீவிரவாதிகளையும் பத்து ராணுவ வீரர்கள் குண்டு வைத்திருக்கிற பத்து இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பதற்கு பதிலாக ராணுவவீரர்களின் துப்பாக்கிகள் வெடிக்கின்றன... நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் கூட்டிலும்  குண்டுகள் பாய்ந்து சரமாரியாக சாய்கிறார்கள் தீவிரவாதிகள்..... பிற்பாடு அந்த வெடிக்க இருந்த டைம் பாம்புகளை வெடிக்காமல் செய்து மக்களைக் காப்பாற்றுகிறார்கள்...

நிஜத்தில் இப்படி நிகழ்ந்தால் இதுபோல கின்னஸில் இடம்பெற வேண்டிய செயல் வேறொன்றும் இருந்திருக்காது... திரையில் இந்தக் கற்பனையைக் காண்கிற போது  "குடுத்த காசுக்குப் பரவாயில்லை" என்று காலரைத் தூக்கிக் கொள்கிற ரசிகர்களைப்  பார்க்கையில் "தமிழ்நாட்டில் என்றைக்கும் எம்ஜியார் ஆட்சிகள் தான்" என்று சம்பந்தா சம்பந்தமில்லாத ஓர் அனுமானம் குறும்பாக எட்டிப் பார்த்துப் போகிறது...

அந்தர் பல்டிகளும் அனாயாச நளின நடனங்களும் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல... அனல்பறக்க எல்லாவற்றையும் வள்ளலெனக் கொட்டிக் கொடுக்கிறார் இளைய  தளபதி... ஜோடியாக வருகிற காஜலும் சலித்த பிகரில்லை..சும்மா அலேக்காக கொடுத்த பாத்திரத்தை அழகாகத் தேய்த்துக் கழுவி பளபளக்க வைக்கிறார்..

நாயகனின் நண்பனாக வருகிற சத்யன் என்னவோ தூங்கி எழுந்த மந்தகாசத்திலேயே  படம் முழுக்க பவனி வருகிறார்... நக்கல் என்பதாக அவ்வபோது  என்னவோ பிதற்றுகிறார்... சிரிப்பு தவணை முறையில் வந்துபோகிறதே  தவிர கவு.மணி வடிவேல் ஜோக்குகள் போல ஓர் அடர்த்தி எதுவும் அவரிடம் தென்படவில்லை...

ஓர் வீரியமான இசையும் சில காமெரா ட்ரிக்குகளும் நமுத்துப் போன காட்சி அமைப்பைக் கூட மெருகேற்றி பிரம்மாதப் படுத்திவிடும் என்பதற்கான சாட்சி பல காட்சிகளில் தென்படுவது  திரைக் கதையின் பலவீனம்...

சிவாஜியில் ரஜினிக்கு வருகிற ஆரம்பப் பாட்டின் மெட்டை ஞாபகப் படுத்துகிற மாதிரி இதிலும் ஓர் ஆரம்பப் பாட்டு...

அதென்னடா யாரைப் பார்த்தாலும் பொசுக் பொசுக்கென்று போட்டுத் தள்ளுகிற வில்லன்கள் எல்லாருமே கதாநாயகனை மாத்திரம் கையைக் கட்டி வைப்பதும் , பிறகு கைக்கட்டை அவிழ்த்து ஒற்றைக்கு ஒற்றை மோதி நாயகனிடம் அடிவாங்கி சாவதும் ..... இதே கருமாந்திரத்தை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பதோ ...!!

விஜய்க்கு மிலிடரி ஆபீசராக வருகிற ஜெயராம் நக்கல்கள் தேவலாம்... ஒரு ராணுவ வீரன் சந்திப்பது தீவிரவாதிகளின் தளங்களையே தவிர எந்த இடத்திலும் ராணுவதளம்  படத்தில் காண்பிக்கப் படுவதில்லை...

விஜய் தனது காதலியிடம் காதலை அம்புட்டு சொல்வதும், கிஸ் பரிமாறிக் கொள்வதும்... அப்புறம் கடைசியில் காதலியை அம்போன்னு வுட்டுக்கின்னு மறுக்கா  ராணுவத்துக்குப் போறதும் .. அதுக்காக அம்முணி ரெம்பா பீல் பண்றதும் ... இது மாத்திரம் இயல்பா இருக்கணும்னு ஸ்க்ரீன்ப்ளே அமச்சவங்க, இதுக்கு முன்னாடி  சொதப்புன போதெல்லாம் ரொம்ப யதார்த்தமா சொதப்பிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.. 

Friday, November 23, 2012

மனச்சிதறல்கள் ....

எழுதுகிற திராணியே சமயங்களில் அவிழ்ந்து விழுந்துவிட்டது போல ஓர் மனவெறுமை... இன்னதை எழுதலாம் என்கிற சிந்தனைகள் வந்துவந்து போகின்றனவே அன்றி எழுதிக் குவிக்க கைகள் வரக்காணோம்..

சிலநாட்கள் கவிதை எழுதி, அதன் கருத்தை செதுக்கப் பிரயத்தனித்து... அது ஒவ்வாமல் வார்த்தைகளை செதுக்கி... பிற்பாடு எதுவும் எடுபடாதென்று மனசு ஓர் அபிப்ராயத்தை முன்மொழிய எழுதிய யாவற்றையும் அப்புறப் பட்டுத்தியாயிற்று...

அதன் பின்னர் சில கட்டுரை முயற்சிகள்... அவையும் விளங்காதென்று முடிவெடுத்து ... எட்டி உதைத்தாயிற்று..

எதையேனும் எழுதுகிற எவர்க்குமே இப்படி கவிதை கட்டுரைகள் அவ்வபோது காலிடறி கவிழ்ந்து விடச்செய்யும் என்கிற சங்கதி பலமுறை நிகழ்கிற அனுபவங்களே... மற்றவர்களுக்கு எவ்விதமோ அறியேன்., எனதனுபவத்தில் இது நான் எழுதத் துவங்கிய நாள்தொட்டு நிகழ்ந்து வருகிற விஷயம்...

இந்த எனது குறைகளையே கூட பிரத்யேகமான ஓர் விஷயமாக இங்கே வெளிச்சமிட்டுக் காண்பிக்க முயல்கிற என் எழுதும் திறன் பிரயோகிக்கப் படுகிறதா அல்லது துஷ்ப்ரயோகிக்கப் படுகிறதா என்கிற குழப்ப சந்தேகங்கள் என்னில் ஊடாடுகின்றன..


துப்பாக்கி சென்று பார்க்க ஓர் சூழலை உருவாக்க முயல்கிறேன்... நான் விஜய் அஜித் விக்ரம் எவருடைய ரசிகனும் அல்ல... நல்லா நடிச்சா நாயைக் கூட ரசிப்பேன்... ஓவர் ஆக்ட் கொடுத்துக் குளறுபடி செஞ்சா சிவாஜின்னாலும் டென்ஷன் ஆயிடுவேன் ... விஜய்க்காக அல்ல.., ஏழாவது அறிவை இயக்கிய இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் என்பதால்... நடிகர்களுக்காக ஓடி ஓடிப் படம் பார்த்த பிராயங்கள்  ஓடிவிட்டன... இன்றெல்லாம் விஷயமுள்ள டைரக்டர்களையும், உருப்படியான விமரிசனங்களும் உள்ள படங்களையுமே மனம் நாடுகின்றன... எந்த மேதாவி நடிகர்கள் நடித்துள்ள போதிலும் குலவையாக  விமரிசனங்கள் நாறுகையில்.. இலவச டிக்கட் கிடைத்தால் கூட தவிர்த்துவிடுமளவு  பக்குவப் பட்டுக் கிடக்குது மனசு...
-கிட்டத்தட்ட இப்போதைய மனிதர்கள் பலரும் இதே அலைவரிசையில் தான் இருக்கக் கூடுமென்கிற என் தீர்க்கதரிசனம் மெய்யானால் அரசமரப் பிள்ளையாருக்கு ஆயிரத்தெட்டுத்  தேங்காய் போட்டுடைக்கிறேன்... குறைந்தபட்சம் கனவிலாவது..!!

எனது மனைவியும் குழந்தையும் விஜெய் படம் பார்த்தாகவேண்டுமென்று அடம்பிடிப்பது ஒரு காரணமும் கூட... "என்னை விடவா உனக்கு விஜய்?" என்றொரு ஐ.எஸ்.ஐ. பிராண்ட் ஏக்கத்தோடு ஓர் நக்கல் தொனிக்கிற கேள்வி... "இப்படி சந்தேகமா ஒரு கேள்வி எதுக்கு? உங்களைவிடவா விஜய்?" என்கிற நய்யாண்டி  எனது மனைவியினிடத்து  ரசிக்க உகந்த விஷயம்...

இயக்குனர்கள் குறித்த பிரக்ஞையோடு படம் பார்க்கிற பெண்கள் சுஹாசினி மாதிரி விரல்களில் அடக்கம்... மிகப் பல பெண்களும் நடிகர்களின் பாவனைகளில் சிலிர்க்கவே தங்களை அர்ப்பணிக்கின்றனர்..


"தீவாளிக்கு ரிலீசாகி இருக்கிற ஓர் படத்தை குடும்பமாக சென்று பார்க்கிற ஓர் அற்ப விஷயத்தை சமுதாய உணர்வுகளோடு இழைக்க முனைவது மிக வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது " என்கிற அறிவிப்பு வந்துவிடும் , இந்நேரம் நான்  ஓர் பிரபல அரசியல் தலைவனாக இருக்கும் பட்சத்தில்..(?)

Thursday, November 15, 2012

தினமலர் செய்திக்கு..

கடந்த இரண்டாண்டுகளில் ஐயாயிரம் பேர்கள் ரயிலில் அடிபட்டு சாவு என்கிற தினமலர் செய்திக்கு .. நான் அனுப்பிய வாசகர் கடிதம்..

இதற்கு முக்கிய காரணம் செல்போனே என்பதை சொல்லித்த்தான் தெரிய வேண்டுமா?.. அதென்ன கிரகமோ தெரியவில்லை... எந்த செல்போன் கடையைப் பார்த்தாலும் ஒயின் ஷாப்பை போலவே ஓர் பத்துப் பேர்கள் நின்ற வண்ணமாக உள்ளனர்... லேட்டஸ்ட் மாடல் போனை வாங்கி நண்பர்கள் மத்தியில் பெருமை பீற்றிக் கொள்வதில் ஓர் அலாதி ஆணவம் எல்லாருக்குமே... அப்புறம் தன்னை மறந்தவாறு ரோடு எது, ரயில்வே ட்ராக் எது என்பது புரியாமல் பந்தாவாக காதில் செருகிக் கொண்டு பேசியவாறு போகவேண்டியது.., அப்புறம் போய் சேரவேண்டியது... மேல போயும் கூட ஏதாவது லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் போன் வந்திருக்கா , சாம்சங் வந்திருக்கான்னு கேட்டாலும் கேட்டுக்கிட்டு இருப்பாங்க இந்த மக்கா... டெக்னாலஜி வளரவளர சாவு எண்ணிக்கையும் வளர்கிறது என்றே கருதுகிறேன்... போகிற போக்கில் குடும்பக் கட்டுப்பாடு விளமபரங்கள் எதுவும் நமக்குத் தேவைப் படாது.., செல்போன் விளம்பரங்களே போதுமானது., மக்கள் தொகையை பெருவாரியாக குறைத்துவிடும்... ஐயோ ஐயோ... இதற்கெல்லாம் தீர்வு வரவேண்டுமென்றால் செல்போன் கலாசாரம் ஒழியவேண்டும்.., முக்கியமாக இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜி போன்கள் வரத்து ஒழியவேண்டும்... ஆனால் சத்தியமாக இதற்கெல்லாம் எந்தக் காலத்திலும் சான்ஸே இல்லை... இதனை தடை செய்கிற சட்டமோ உரிமையோ கூட செல்லுபடியாகப் போவதில்லை... நம்ம மந்தை ஆட்டு மனநிலை கொண்ட மக்களும் திருந்தப் போவதில்லை... இந்த உலகம் அழியப் போகுது போகுதுன்னு ஒரு வதந்தி ரொம்ப நாளா உலாவிட்டே இருக்கல்ல?.. அதுக்கான உபகரணம் தான் இந்த செல்போன் போலும்....

Saturday, November 10, 2012

நரகாசுரனும் எங்க அப்பத்தாவும்..

 நரகாசுரன் 
செத்து .. கொண்டாடப் 
படுகிற தீவாளி,
எங்கப்பத்தா 
செத்ததால 
கொண்டாடப் படலே...!

பாழாப் போனவ 
நவம்பர் பத்தாந்தேதியா 
சாகணும் ?..
கொழந்தைக தெனத்தையும் 
கொண்டாடிட்டு 
நவம்பர் பதினஞ்சு 
போயித் தொலஞ்சிருக்கலாம்ல?           

போச்சு..
தீவாளியும் போச்சு..
கொழந்தைக தினமும் போச்சு..

நேரு தினத்தன்னிக்கு 
நாந்தான் நேரு வேஷம் 
போட்டு நடிக்கிறதா இருந்திச்சு..
இப்பப் பாருங்க..
ஆறாப்பு சி செக்க்ஷன் ல 
படிக்கிற சிவப்பிரகாசம் 
கட்றான் அந்த வேஷத்தை..

போட்டோல 
சிரிக்கிற அப்பத்தாவ 
கல்லெடுத்து ஒடச்சுடலாம் போல 
ஆத்திரம் எனக்கு...

னா பாருங்க..
துப்பாக்கி கொள்ளுப் பட்டாசு 
வாங்க எனக்காக 
சுருக்குப் பையில 
முடிஞ்சு வச்சதா 
எங்கப்பன் வந்து அந்தக் 
காசைக் கொடுத்தப்ப 
சிரிக்கிற அப்பத்தா 
போட்டோவைப் பார்த்து 
நான் ரொம்ப நேரமா 
அழுதுட்டேன்...

Thursday, November 8, 2012

அவசரக்காரர்கள்..

பரபரவென்று எதற்கெடுத்தாலும் சிலர் பதட்டப் படுவதைப் பார்க்கையில் என்னுள் அவர்கள் மீது ஓர் இனம்புரியா வெறுப்பு... எதற்கிந்த அவதி?.. அப்படி என்ன வாரிக் கட்டிக்கொண்டு போகப் போகிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல்...

இவர்களுக்கும் ரத்தக் கொதிப்பை கன்னாபின்னாவென்று ஏற்றிக் கொண்டு இவர்களை  சார்ந்த சாதுக்களையும் ஒருவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி.... இப்படியான நபர்களை நாம் சம்பந்தப் படாமல் புறமிருந்து வேடிக்கை பார்ப்பது தான் நமக்கு புத்திசாலித்தனம்... அல்லாமல் இவர்களை சார்ந்து நாம் ஏதேனும் காரியம் நிறைவேற்றவேண்டிய சூழல்கள் உருவாகுமாயின் அது நமது மிகப் பெரிய துரதிர்ஷ்டமென்றே கொள்ளவேண்டும்..

அவசரம் ஆத்திரம் ஒரு மனிதனுக்கு அறவே அனாவசியம் என்று வாதிக்க நான் இங்கே வரவில்லை.. தேவைகள் கருதி, அவ்விதம் நடந்தால் அது ரசிக்க உகந்த விஷயம்... அதுவன்றி ஒன்றுமில்லாத கவைக்குதவாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டு, படுத்தி.., களேபரமாகி, ஆக்கி... 


இவர்களை ஒருவிதமான சைக்கோ என்று தான் சொல்லவேண்டுமே தவிர சுறுசுறுப்பானவர்கள், வேலையை கச்சிதமாக  உடனடியாக நிறைவேற்றுகிற அசாதாரண நபர்கள் என்று வர்ணிப்பது இந்த முட்டாள் தனத்தை நாமே ஊக்குவிப்பது  போலாகும்... 


காலை பத்துமணி பரீட்சைக்கு அதே காலை ஒன்பதேமுக்காலுக்கு அவதிப் படுவதில் ஓர் அர்த்தமிருக்கிறது... ஆனால் ராத்திரி ஒன்பதேமுக்காலுக்கு இருந்து அவதிப் பட்டால் என்னவென்று சொல்வது?


பதறாத காரியம் சிதறாது, நிறைகுடம் தளும்பாது, சட்டியில் இல்லாமல் அகப்பையில் வராது.. என்றெல்லாம் எத்தனை தத்துவார்த்தமாக இவர்களுக்கு விளக்க முயன்றாலும்  தனது தன்மையிலிருந்து வெளிவருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.. 


இப்படியான நபர்கள் அமைதியாக இருப்பதையே அநாகரீகமாக உணர்பவர்கள்... பதட்டமில்லாமல் பக்குவமாக ஒன்றை செய்துமுடிப்பதை கேவலமாகக் கருதுபவர்கள்... 


பாம்பாட்டி பாம்பு கொத்தித்தான் சாவான் என்பது போல, இவர்களது பதட்டமே இவர்களுக்கு  எமனாகி விடும் ஓர் தருணத்தில்... ஆனால் என்ன கொடுமை என்றால், அதனை உணர்கிற ஓர் சந்தர்ப்பத்தைக் கூட இவர்களுக்கு வழங்க காலத்திற்குப் பொறுமை இருப்பதில்லை... 


இன்னும் என்னென்னவோ இவர்கள் குறித்து சொல்ல அசைபோடுகிறது எனது மனநாக்கு... பார்ப்போம், அவ்வப்போது கிடைக்கிற சந்துகளில் எல்லாம் இவர்களது சிந்தினைப்  பாட முயல்வோம்...

Monday, November 5, 2012

கிழிசல் ....



டித்தல்  திருத்தலாகவே 
எல்லாமிருக்கிறது 
என்னிடத்தில்...!

ஆரம்பத்திலேயே 
தெளிவைக் கொணர்கிற 
சாதுர்யம் ஏனோ 
பிசகி விடுகின்றன 
எல்லாவற்றிலும் 
எல்லா தருவாய்களிலும்..!!

திருத்துவதென்பதை
ஓட்டுப் போட்டதாக 
உணர்கிறேன்..
ஆதலால்--
என்னிடம் 
திருந்தி இருக்கிற 
எல்லாமே 
ஓட்டுப் போட்ட 
பலவீனத்திலேயே 
உள்ளன...!
                                                                   
திருந்தப் பெறாத 
தவறுகள் கூட 
ஓர் பிரத்யேக 
தேஜஸில் மிளிர்வதாக 
அபிப்ராயம் எனக்கு...

ஆனால் 
பலவீனப் பட்டாலுமே 
கூடப் பரவாயில்லை..
தவறுகளை 
சரி செய்கிற 
சந்தோஷம் 
வேறெதிலுமில்லை..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...