Saturday, August 20, 2011

அசந்தர்ப்பக் கவிதைகள்...

எழுதுகிற
சந்தர்ப்பங்கள் 
வாய்க்காத போது
ஏதேதோ அர்த்தம்
நிரம்பிய சிந்தனைகள்
வழிந்தோடும்...                      
யாவற்றையும் மனதில்
நிறுத்தி மற்றொரு 
தருணத்தில்
எழுத்தில் கொணர்வதற்கு
முனைகையில் 
என்ன சிந்தித்தேன்
என்பதே மறந்து
புதியதாய் ஏதேனும் 
சிந்தித்துக்கிறுக்க வேண்டிய
நிர்ப்பந்தங்களுக்கு
தள்ளப்பட்டே எனது
அனேக கவிதைகள் 
பிறக்கின்றன...

செயற்கைக் கருவுறுதல்
மாதிரி... அல்லது
அவசரத்துக்குத் தத்தெடுத்த
மாதிரி... 
இப்படியாக என் கவிதைக்
குழந்தைகளை நான் 
உணர நேர்வது சற்று 
சங்கடமே...
--ஆயினுமே
அவைகள் எனது
குழந்தைகள் தாமே... 

நான் மறந்து விட்ட
மற்றும் என்னை 
மறக்கடிக்க செய்த
அந்தப் போக்கிரி
சிந்தனைகளைக்காட்டிலும்
என்னையும் ஓர் 
கவிதை கோதாவில்
நிறுத்தி கவிஞன் அந்தஸ்த்தை
பெற்றுத்தர முனைகிற
உடனடி சிந்தனைகளை
உடனடி கவிதைகளை
என் மானத்தைக் 
காப்பாற்றிய குழந்தைகளாக
உணர்கிறேன்...

இந்தக் குழந்தைகள்
கூட என்றோ என்
மறக்கப்பட்ட சிந்தனைகளாக
இருக்கக் கூடும்.., 
இன்றைய மறந்து
விட்ட சிந்தனைகளுமே கூட
இன்னுமொரு தருவாயில்
இதே மாதிரி 
என் மானத்தைக்
கப்பலேற்றாமல் 
காப்பாற்றுமென்றே கருதுகிறேன்.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...