Thursday, February 25, 2010

பிரச்சினைகள்...

பிரச்சினைகளுக்கு முகம் காட்ட மறுக்கிற சுபாவம் உள்ள நபர்கள் அதிகம் உள்ளார்கள்... நானுமே கூட...!!
முளையிலேயே நகத்தில் கிள்ளி எறிந்திருக்க வேண்டிய பிரச்சினைகளை நமது சுபாவமே ஆன தர்மசங்கடம் காரணமாக தவிர்த்திருப்போம்... அது பிற்பாடு நமக்கே புரியாமல் பூதாகரமாக வளர்ந்து நம்மையே கபளீகரம் செய்து விடக்கூடிய விபரீதங்கள் சுலபத்தில் நிகழும்.. ஏது செய்வதென்று தெரியாமல் சுக்கு நூறாகி விடுவோம்...

ஆகவே, தயை கூர்ந்து யாதொரு பிரச்சினைகள் எனிலும், அதற்கு முகங்காட்டி , நம்மைக்கண்டு அந்தப்ப்ரச்சினை தலைதெறிக்க ஓடி விட வேண்டுமேயல்லாது , அவைகளிநிடத்து நாம் சிக்கி சீட்டி அடிக்கக்கூடாது...

பிரச்சினைகள் மெழுகு பொம்மைகள்... நெருப்பென நாம் அவைகளுக்கு முகம் காட்டி உருகி விலகச்செய்திட வேண்டும்..
பாறைகள் என நினைத்து பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கிநோமேயானால் அவைகள் நம்மை சிதிலமாக்கி சின்னா பின்னமாக்கி விடும்..

Saturday, February 20, 2010

நாத்திகன் உளறல்கள்....

கழுத்தில் சுற்றி
சிவனை அழகு
படுத்துகிற பாம்பு
நம்மை ஏன் கொத்திக்
கொல்ல மட்டுமே
வருகிறது?...

முருகனை மட்டுமே
ஏற்றி உலகம் சுற்றுகிற
மயில் .. நாம் வெள்ளாமை
செய்திருக்கிற நெற்பயிர்களை
வந்து ஓயாமல் சேதம் செய்வது ஏன்?

விநாயகர் முன்னிலையில்
லட்டைக் கையில் ஏந்தி
மிகவும் பவ்யமாகக்
காட்சி தருகிற சுண்டெலி
நம் வீட்டுத் தலையணை
போர்வைகளை ரணகளம்
செய்து நம் தூக்கங்களை
அல்லவா துவம்சம்
செய்கின்றன?...!!

யதார்த்த வாழ்விலே
மனிதனுக்கு அவஸ்தை
கொடுக்கிற யாவற்றையும்
தெய்வத்தின் முன்னிலையில்
சாதுவாக நிறுத்துகிற
அவனுடைய கற்பனாரசனை
கவித்துவம் நிரம்பியதே..
--கடவுளையே
அற்புதமாக கற்பனை
செய்கிற மனிதன்
அல்ப மிருகத்தை
செய்ய சிரமப்படுவானா என்ன?

சுந்தரவடிவேலு..

Monday, February 15, 2010

காதலர் தினம் குறித்து...

காதலையே கொச்சைப்படுத்துவது மாதிரியான ஒரு நாளாக உணர முடிகிறது இந்தக் காதலர் தினத்தை. நாசூக்கான மெல்லிய உணர்வது.. மென்மையும் மேன்மையும் பொதிந்த அதனை, காலத்திற்கும் வெளிக்காண்பிக்க வேண்டிய அதனை, ஒரே ஒரு நாளில் அடக்கி அன்று மட்டும் அதற்கு முக்கியத்துவம் தருவதும் அதற்காக காதலர்கள் குதூகலிப்பதும் அப்பட்டமான அல்பத்தனமாக படுகிறது...

காதல் என்பதும் காமம் என்பதும் புனிதமும் ரகசியமும் நிரம்பிய மகோன்னதமான உணர்வுகள்... அதனை சந்தைப்படுத்துவது போன்று நாகரீகமற்று இம்மாதிரியான நாட்களை அனுஷ்டிப்பதெல்லாம் நம் இந்தியக் கலாச்சாரத்திற்கு முரணாயும் முட்டாள்தனமாயும் புரிகிறது...

இதனை வரவேற்பதும் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வதும் பார்க்கவும் கேட்கவும் கூச்சத்தில் நெளிய வைக்கிறது.. லஜ்ஜை உள்ள எல்லார்க்கும் இவ்விதமாகத்தான் இருக்கும்...

இதனை எதிர்ப்பவர்கள் கூட ஓட்டுப்பொறுக்கிகளும் , வன்முறைகளை வளர்க்க விரும்புகிற அரசியல் கட்சிகளும் தானே தவிர, வேறு உருப்படியான உள்நோக்கம் கொண்டவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கதே...

ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களுக்கும் இந்தக் காதலர் தினத்தை ஆதரிப்பவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசம் இருப்பது போல எனக்குப் படவில்லை...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

Saturday, February 13, 2010

நாளைக்கு மறுபடியும்....

வழக்கமான மைதான நடைபயிற்சிக்கு பதிலாக வீதிகளில் அவ்வப்போது நடப்பேன்.. சர்க்கரை , ரத்த அழுத்தம், இன்னபிற என்று நமக்கும் புரியாமல் பட்டியல் போட்டு வைத்திருக்கிறது நம் உடல்...
இவை எல்லாமே நடைபயிற்சியில் நம்மை விட்டு ஓடிப்போய்விடும் என்கிற மாயை நடக்கிற எல்லாருக்குமே உண்டென்பதால் மார்னிங் வாக்கிங் என்பது இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார்..

ரெண்டொரு நாட்கள் நடப்பது ஏதாவது காரியம் நிமித்தம் தடைபட்டுவிட்டால் கூட மனசுள் பெரும் குற்ற உணர்வை கொண்டு வருகிற அளவிற்கு நடப்பது என்பது இன்று எல்லாரது வாழ்விலும் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையன்று...

அதிகாலை நாலு மணிக்கே பயிற்சியை துவங்குகிற நபர்கள் உண்டு.. அந்த நேரத்தில் ஒன்றுக்கு.. ஐ மீன் உச்சா.. ஒன் பாத்ரூம் அவசரமாக வர இருந்தாலுமே கூட , நன்றாக இழுத்து போர்த்திப்படுத்து விட்டு ஆறுக்கோ ஏழுக்கோ எழுந்து தான் போகிற அளவுக்கு நான் சுறுசுறுப்பானவன்..
ஆக, அதற்கும் பிறகாக நிதானமாக எழுந்து ஒரு சாயா அடித்துவிட்டு கிளம்புவேன்..

அநேகமான நாட்கள் மைதானம் தவிர்க்கப்படும்.. விரிந்து கிடக்கிற புதுப்புது வீதிகளில் பராக்கு பார்த்த வண்ணம் கடந்து செல்வது ஓர் அலாதி சுகம் எனக்கு... டி.சர்ட்டுகள் நாயை பயமுறுத்தும் என்பதால் சாதாரண சட்டையே போட்டு செல்வேன்..

எல்லாருமே வீட்டு வாசலுக்கு வந்து தான் பல் துலக்குவார்கள் போலும், குளியலறைகளை குளிப்பதற்கு மாத்திரமே உபயோகிக்கிறார்களோ? பிரஷும் பேஸ்ட் நுரையுமாக ரொம்பப்பேர்களை தெரு நெடுகிலும் தரிசிக்கலாம்...

அடுப்பை வேறு வெளியில் வைத்திருப்பார்கள்.. தண்ணீர் காய வைப்பதற்காக கண்ட குப்பைகளையும் போட்டு கவலையே படாமல் மாசு படுத்துவதில் இந்தியர்கள் கில்லாடிகள்...
இதே மோசமான பழக்கங்களையே தன் குழந்தைகளுக்கும் கூச்சமில்லாமல் கற்றுக்கொடுக்கிறார்கள், அல்லது இதையெல்லாம் பார்த்து பொடிசுகள் இயல்பாகவே கற்றுக்கொள்கின்றன...

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டே வயிற்றுக்கு ஊட்டுவார்கள்.., அப்படித்தான் ஓர் நடுவயதுப்பெண்மணி தன் குழந்தைக்கு இன்று... சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை என்னைக்காண்பித்து இட்லியைத் திணித்துக் கொண்டிருந்தாள்.. அந்நேரம் வரை அது அழுது அடம் செய்திருக்கும் போல.., என்னையும் ஏன் ராஜ நடையையும் பார்த்த பிற்பாடு சிரித்த முகத்தோடு இட்லி உட்கொண்டதாக ஓர் அற்புதமான தகவலை அந்தப்பெண்மணி நான் அருகில் சென்றதும் சொல்லக்கூடும் என்கிற என் அனுமானம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனது...
வெறுமனே ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவள் வாசலை கடக்க நேர்ந்தது., என் அந்தப்புன்னகை அவளைப்பார்த்தா அவள் குழந்தையைப் பார்த்தா என்கிற கேள்வியுடன்...
அவளுக்குள்ளும் அந்தக்கேள்வி இருக்கும்?
பார்ப்போம், நாளைக்கும் அதே தெருவில் நடந்து...!!

Wednesday, February 10, 2010

பிற்பாடு..

அனாவசியம் என்று
எதனையும் அவ்வளவு
அவசரப்பட்டு அப்புறப்
படுத்த முடிவதில்லை..

மேஜை எங்கிலும்
பரவலாக காகிதங்கள்..,
எடுத்து பத்திரப்படுத்த வேண்டும்
என்பதான அனுமானம்
பத்து நாட்களுக்கும் மேலாக...!

கசக்கி குப்பைக்கூடையில்
போட்ட பிற்பாடே அந்தக்
காகிதம் பிரத்யேகமான
தேடலுக்கு உள்ளாகும்...
-மேஜையின் மீது
நாய் கூட சீந்தாமல்
நாற்பது நாட்கள் கிடக்கும்...!!

நம் வாழ்க்கை கூட
அந்தக்காகிதம் போல தான்...
எந்தப்ப்ரயோஜனமும் அற்று
சும்மாவே கிடப்போம்..,
புதையுண்ட பிறகாக
ஆற்ற வேண்டிய ஆயிரம்
கடமைகள் அநாதைகளாகி
விட்டதாக
நம் ஆன்மா அரற்றும்?....


சுந்தரவடிவேலு

Tuesday, February 9, 2010

புலிகளுக்கு நேரம் சரியில்லை...

புலிகள் நம் நாட்டில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும் .. அற்ப எண்ணிக்கையில் மாத்திரமே இப்போது இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்...
காணவில்லை விளம்பரம் மாதிரி அடிக்கடி ஒரு குட்டிப்புலி தன் தாயை தேடி ஓடி வருவது போலவும் தாயைக்காணாமல் வேதனையாக முனகுவது போலவும் ஓர் விளம்பரம் போடுகிறார்கள்.. அதன் தாய் புலி திரும்பி வருமோ அல்லது மனித வேட்டைக்கு இரையாகி இருக்குமோ என்று ஓர் சோக சந்தேகமாய் பின்னணியில் குரல் ஒன்று ஒலிக்கிறது...
டிஸ்கவரி சானலில் மானை புலி ஆடுகிற வேட்டைகளை காண்பிக்கிற போதெல்லாம் அது துரத்துகிற மான் தப்பித்தால் தேவலாம் போலவே தோன்றும் ... ஆனால் எப்படியும் அது மானை சாதுர்யமாக பிடித்தே தீரும்... பிறகு மானின் மீதான அக்கறை குறைந்து .. புலி அந்த மானை சாப்பிடுகிற நேர்த்தியை ரசிக்க ஆரம்பிக்கும் மனிதர்கள்...
ஆயுதங்கள் ஏதுமற்று மானிடமே தோற்றுப்போகிற மானிடர்கள் நாம்...
எந்த ஆயுதங்களும் அற்று மானை வீழ்த்துகிற புலிகளையே வீழ்த்தி விடுகிறோம்..

பொதுவாகவே புலிகளுக்கு இப்போது நேரம் சரியில்லை என்றே தோன்றுகிறது...

தொலைக்காட்சியில் இந்த விளம்பரம் தான் விவஸ்தை இல்லாதது போல படுகிறது...
சாதரணமாக டிவி பார்க்கிறவர்கள் அநேகமாக நாய் வளர்ப்பார்கள், பூனை ஆடு கோழி மாடு வளர்ப்பார்கள்.. மீன்கள் கூட கலர் கலராக வளர்ப்பார்கள்...
புலியை வேட்டையாடுகிற காட்டுமிராண்டிகள் டிவி பார்க்க மாட்டார்கள்.. டிவி பார்க்கிற நாம் அவர்களைப்பார்த்து புலியை கொல்லாதீர்கள் என்று சொல்லவா முடியும், முதலில் அவர்களை பார்க்கவாவது முடியுமா? பார்த்து சொன்னாலும் தான் புரியுமா அவர்களுக்கு? புரிந்தாலும் தான் கேட்பார்களா?

தமாசுக்கு அளவே இல்லை....

சுந்தரவடிவேலு...

Monday, February 8, 2010

எழுதுகிறவர்கள் குறித்து...

ஓர் அசந்தர்ப்பத்தில் என் எழுத்துக்களில் சுவாரஸ்யங்களும் அறிவுப்பூர்வங்களும் ஒருங்கே இழைந்து என்னை ஓர் அறிவுஜீவி போல எனது கவிதைகளும் கட்டுரைகளும் உணர்த்தி விடுகின்றன... என் உயரிய கருத்துக்களுக்கும் என் செயற்பாடுகளுக்கும் இருக்கிற முரண்கள் எனக்குள் ஒரு இனம் புரியாத குற்ற உணர்வுகளைக்கூட கிளர்ந்திடச்செய்யும்..
இது எல்லா எழுதுகிறவர்களுக்கும் பொருந்துமோ என்னவோ புரியவில்லை.., !!

என் தனிப்பட்ட கருத்துக்களையும் உணர்வுகளையும் பிறர் வசமும் எதிர்பார்க்கிற இந்த மனோபாவம் ஒரு வகையான சிறுபிள்ளைத்தனம் என்றே அனுமானிக்கிறேன்... நம் பலவீனங்களை கூட யதார்த்தமாக வெளியிடுகிற நாகரீகம் நமக்கு வேண்டுமேயல்லாது, அதில் ஒப்பீடும் சந்தோஷங்களும் கொள்கிற சிறுமை தவிர்க்கப்படவேண்டிய ஒன்றே...!

நாம் எழுதுவதில் எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனைகளும் பிறர் பாராட்டுக்களும் இருக்க வேண்டுமென்கிற தீராத தாகம் ... அனாவசியமானதென்றே கருதுகிறேன்... நம் போக்கில் யதார்த்தமாக எழுத வேண்டும், அது நேர்மையாக தெளிவாக இருக்க வேண்டும்.. அவ்வளவு தானே அன்றி .. பலரது பாராட்டைப்பெற வேண்டும் .. மிகுந்த கரகோஷம் பெற வேண்டும் என்று கருதுவதெல்லாம் ஓர் பெரும் பின்னடைவை நிகழ்த்தவே ஏதுவாகும் என்று கருதுகிறேன்...

யாதொருவருக்கும் அதிர்ஷ்டம் என்பது இயல்பாயும் விபத்தாயும் அமையுமே அல்லாது எதிர்பார்ப்பதோ, அடைய வேண்டும் என்கிற வெறி கொள்வதோ அறிவீனமே ஆகும்..


சுந்தரவடிவேலு ...

Saturday, February 6, 2010

ஆதார ஸ்ருதிகள்...

அசை போடக்கூட அலுத்துப்போகிறது எனது அன்றைய நாட்களின் காதல் அனுபவங்கள்.. அன்றைய போழ்துகளில் மிகுந்த மென்மையும் மேன்மையும் பொதிந்து உணரப்பட்ட காதல் இன்று ஓர் தடயம் கூட இழந்த தன்மையில் பாழ் பட்ட அரண்மனை போல வவ்வால் எச்சம் போல ஓர் அசூயை கொண்டு நாறுகிறது என் மன ஓட்டங்களில்...
பேரானந்தங்களையும் ரம்மியங்களையும் ஓயாமல் அள்ளி வழங்கிய காதல் இன்று வெறுமனே ஓர் லஜ்ஜையான ஞாபகமாய் என்னில் வியாபித்து, உபயோகமற்ற பாசி போல படர்ந்து கிடக்கிறது...
காதலித்த நாட்களில் ... இந்தக்காதல் என்கிற ஓர் அதியற்புதமான உணர்வு பின்னொரு நாளில் மலரும் நினைவுகளாய் மனதில் பொங்கி என்னை சிலிர்க்க வைக்கக்கூடும் என்று அனுமானித்திருந்த எனக்கு இன்று ஓர் பெரிய ஏமாற்றமாய் தான் உள்ளது...
காமம் தவிர்த்து மிகவும் புனிதமாகவும் தெய்வீகமாகவும் மாத்திரமே உணரப்பட்ட காதல் ... எங்கோ தொலைந்து போய் இன்று ....
காதல் இழந்த காமம் தான் அவ்வப்போது தொனிக்கிறது ...

இந்தக் காதல், காமம் இரண்டும் தான் மனித வாழ்வின், பிற உயிரனங்களின் ஆதார ஸ்ருதி என்றாலுமே கூட , மற்ற பிரச்சினைகள் சுலபத்தில் மையம் கொண்டு விடுவதால் , இவை இரண்டும் தன் வீரியங்களை இழந்து நினைத்துப்பார்க்கக்கூட சாத்யமற்றுப்போகிற விபரீதம் கொஞ்சம் வேதனை தான்...

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...