நன்கு பரிச்சயமானவரின்
அகால மறைவு
க்ஷணங்கள் சில
துணுக்குற வைத்து..
பிற்பாடாக வருகிறது
ஒரு ஆசுவாசம்..
எவருக்கும் இது
புது நிகழ்வன்று..
ஏதோ ஒரு தருவாயில்
எல்லாருக்குமான
திடுக்கிடல்..
எல்லாருக்குமான
ஆசுவாசம் ..
மறுபடி உடன்கட்டைமுறை
பிரகடனப் படுத்தப்படும்
பட்சத்தில் ..
சென்ற பிறப்பில்
அவ்விதம் மாண்ட
இப்பிறவிப் பெண்டிர் கூட
துடைப்பமும் காலணியும்
உயர்த்திப் போர்க்குரல்
எழுப்பக் கூடும்.. !!
எல்லாருக்கும் தெரியும்
துயரம் சில நாட்கள் என்று..
அதன்பிறகு அவ்வப்போது
வருகிற இறந்தவர் ஞாபகத்தை...
சற்றே அழுது ..
கண்ணீரில் சுண்டி எரிந்து விடலாம்...!
துயர் சில நாட்களே
என்று புரிந்து விடுகிற நமக்கு
சில நொடிகளே
நீர்க் குமிழ் எனப்
பருத்து வெடித்து விடக்கூடியவை
சந்தோஷங்கள் என்பன
என்பதும் தெரியாமல் இல்லை...!
அடர்த்திமிகு மரணத்தின் முன்னர்
மிக சுலபத்தில் நீர்த்து
விடும் தன்மை கொண்ட
இந்த வாழ்வின் மீதான பிரக்ஞை
மிகவும் அடர்த்தியாயிருப்பது
முரண்பட்ட .. மற்றும்
சிரிக்கமுடியாத நகைச்சுவையாக
நமக்குள் அமிழ்ந்து கிடக்கிறது.. !!
No comments:
Post a Comment