சமீபத்தில் ஈஷா-வில் நிகழ்ந்துள்ள விஷயங்கள் அதனை சார்ந்தவர்கள் மட்டுமின்றி இன்னபிறரும் அறிந்திருக்கக் கூடுமென்று அனுமானிக்கிறேன்..
எனக்குமே கூட ஈஷாவில் லயித்திருப்பது பிடித்தமானது.. அந்த ரம்மிய மலைசூழ் பிராந்தியத்தில் எப்படிக் கிடந்தாலும் ஏற்றுக் கொள்கிற பாங்கில் மனசிருக்கும்.. செருப்பினை பைகளில் அவர்கள் பெற்றுக் கொள்வதில் துவங்கி, குளியலறை, கழிவறை என்று அனைத்தும் பக்தி வாசம் பிரவகிக்கிற தன்மையில் தான் மேலோங்கி இருக்கும்..
அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்த சந்திரகுண்ட சூரியகுண்ட குளியல் குளங்கள்..
முடித்துவிட்டு அந்த பிரம்மாண்ட சிவலிங்கம் முன்னர் கண்மூடி அமர்ந்து சற்றே தியானித்து .. விபூதி அணிந்து கொண்டு விடைபெற்று ..பிறகு பின்புறம் அமைந்துள்ள லிங்க பைரவி கோவில் சென்று ஆராதித்துவிட்டு குங்குமம் வாங்கிப் பூசி வந்துவிடுவேன்..
பின்னர் அவர்கள் பிரசாதமாக வழங்கும் எள்ளுருண்டை கறுப்பிலும் வெள்ளையிலும் மாறி மாறி ரெண்டையும் வெறிகொண்டு தின்று விடுவது என் சுபாவம்.. வீட்டிற்கென்று சில உருண்டைகள் வாங்கி வைத்துத் கொண்டாலும், அவைகளும் திரும்பப் பயணிக்கையில் அவ்வப்ப்போது கிள்ளிக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டே..
அதனை சுவைக்காதவர்கள், அதன் சுவையை அந்தக் கிறக்கத்தை நான் எழுதுவது கொண்டே உணர்வர்.. !
இவை போக சில போட்டோக்கள் க்ளிக்கித்துக் கொண்டு பேஸ்புக்கில் பிதற்றுவேன்.. இவை தான் என்னுடைய ஈஷாவுடனான தொடர்புகள்..மற்றபடி அங்கு வாழ்ந்து வருகிற சந்யாசிகள் குறித்தும், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள் குறித்தும் .. தங்களை அவர்கள் அந்தப் பிராந்தியத்தில் அப்படி ஆழமாக சமர்ப்பித்துக் கொண்ட தன்மைகள் குறித்தும் என்னுடைய பிரக்ஞைக்குள் நுழைவதில்லை..
அவர்கள் அங்கே இடுகின்ற மெல்லிய கட்டளைகளுக்கு அடிபணிந்து மவுனம் கடைப்பிடிப்பதும், அமைதி காப்பதும் என்பவையோடு அவர்களுடனான பிணைப்பு விடைபெறுகிறது.. மற்றபடி அவர்களோடு பேசவேண்டுமென்றோ , அவர்களது வாழ்வாதாரம் எந்தத் தரத்தில் உள்ளதென்று தெரிந்து கொள்கிற ஆர்வங்களோ எனக்குள் பீறிட்டதில்லை...
ஆனால் அப்படியானவர்களுடைய பெற்றோர் அப்படி 'தேமே' என்றிருப்பது சாத்தியமில்லை என்பதை சமீபத்திய செய்திகள் எனக்குள் உணர்த்துகின்றன..
தனது குழந்தை செல்வம், நன்கு படித்து நல்லதொரு வேலையில் அமர்ந்து .. அற்புதமாக சம்பாதித்து .. கல்யாண வயது வந்ததும் கட்டிக்கொடுத்து .. அவர்கள் ஈன்றெடுக்கிற மழலைகளை தாத்தா பாட்டி என்கிற அந்தஸ்தோடு பேணி பாதுகாத்து வளர்த்தி, அகமகிழ்வது என்பது தான் மிகப் பெரிய ஆசீர்வாதங்களாக பயிற்றுவிக்கப் பெற்றுள்ளன.. அவ்வாறு அற்று, வெறுமே இருப்பதென்பது மிகப்பெரும் சூனியம், துயரம் .. கேவலம்.. என்கிற ரீதியில் நம்முடைய மனோபாவங்கள் அமைந்துள்ளன..
லவுகீகத்தை நழுவ விடாத ஆன்மீகங்கள் தான் சுலப வெற்றி காண்கின்றன.. ஆன்மிகம் மட்டுமே தழைத்தோங்கி லவ்கீகம் அடிபடுமேயானால், அது சுயநல ஆன்மிகம்.. அவ்விதம் மூழ்கிக் கிடப்பவர்களுக்கே அது பரவச நிலையை எய்தும் சாத்தியக் கூறுகள் கொண்டிருக்குமே தவிர, அந்த நபர் சார்ந்த பிற குடும்ப நபர்களின் மனநிலை விசனத்தில் விக்கித்துப் போகும்..
எள்ளுருண்டைகள் போன்றே ஜக்கியும் தித்திப்பானவர் எனக்கு.
நாவுக்கு விருந்தளிக்கும் அவர்களுடைய பிரசாதம் போன்றே மனதுக்கும் விருந்தளிக்கிற அபரிமித ஆற்றல் கொண்டவர் ஜகி.. அவருடைய உடல்மொழிகளும், அந்த ஆங்கில ஆற்றல் ததும்பும் அவருடைய தெளிந்த உரையாடல்களும், கேள்வி பதில்களும், தமிழில் அவர் குழந்தை போன்று பேசித் தீர்ப்பதும் .. நீருக்கு ஆவியாகிற ஆற்றல் போன்றே தேனுக்கும் உண்டோ எனத் தோன்றும் வண்ணம் "ஆவித் தேன்" பாயும் நமது காதுகளில் அவர் உரை நிகழ்த்துகையில்..!!
அப்படி பகுத்தறிவு நிரம்பியவரிடம் தான், ...இந்த இயக்கத்தில் வந்து சந்நியாசத்தில் தொலைந்த தங்கள் 2 பெண் குழந்தைகளையும் திரும்பக் கேட்கின்றனர் அவர்களை பெற்றவர்கள்..
. ஜக்கியே அந்தப் பெண்களை வழியனுப்பி வைக்க முயன்றாலும் தோற்பார்.. அப்படியொரு ஆன்மீகலாகிரியில் வசப் பட்டுப் போவர் இங்குள்ள சந்யாசிகள் என்பதனை இந்த சம்பவத்திற்குப் பிறகு அறிகிறோம்.. !
அவர்களுடைய தாத்தா பாட்டி கனவுகள் சுக்குநூறாவதுடன், தாய்-தந்தை தகுதிகள் கூட காயமாகி சீழ் கோர்த்த சோகத்தினை யாதென சொல்வது?
ஜக்கி வாசுதேவ் அவர்கள் மணமானவர்.. மகள் ராதை இருக்கிறார்.. சில வருடங்கள் முன்னர் அவருக்குத் திருமணமும் நிகழ்ந்தது.. திரு.ஜக்கி அவர்கள் கூட தாத்தா ஆகிவிட்டிருக்கக் கூடும் இந்நேரம்..
அந்த இயக்கம் நிறுவிய அவருடைய மகளுக்கு இருக்கிற லெளகீக ஆற்றல் கூட , அந்த இயக்கம் பிடிபட்டுப் போகிற நம்மைப் போன்ற சாதாரண மக்களின் மகள்களுக்கு இல்லாமற்போவது நம்முடைய துரதிர்ஷ்டம் என்று தானே சொல்லியாக வேண்டும்??