Wednesday, June 15, 2016

நாம் அனைவருமே "டைட்டானிக்" கப்பலில் தான்..

உலக அழகி என்பது  இந்த சாஸ்வதமற்ற உடலின் அடையாளம் கொண்டே....!
உயிர் அந்த அழகுடலை விட்டுப் பிரிந்த அடுத்த ஷணம் .. 
நாற்றம் ததும்ப வைக்கிற நுண்ணுயிர்கள் அங்கே தமது பணியை செவ்வனே துவங்கி விடும்.. !
உள்ளூர் கிழவியின் அதே கதியில் தான் உலக அழகியின் கதையும்.. 
Image result for BEAUTIFUL LADIESImage result for GRANDMA
வாழ்ந்து சாகிற மனிதர்களுக்கு மாத்திரமா இக்கதை பொருந்தும்?.. இல்லை.. , வாழ்ந்து மறைந்த தெய்வங்களின் உடற்கூறுகளும் இதே தன்மையில் தான் இயங்கி இருக்கக் கூடும்.. !

இதொன்றும் புதுவித கருத்தோ விளக்கமோ அன்று.. யாதொருவரும் மிக சுலப சிந்தனையில் அனுமானித்துவிட முடியும்.. 

அசாதரணமாகப் புரிபடுகிற இந்த வாழ்வு எத்தனை சாதாரண அம்சம் கொண்டுள்ளது என்று நினைக்கையில் பிறக்கிற அதே ஆச்சர்யம், .. சாதாரணமாகப் புரிபடுகிற இந்த வாழ்வு எத்தனை அசாதாரண அம்சம் கொண்டுள்ளது என்றும் தோன்றுகிறது.. எப்படிப் புரட்டிப் போட்டாலும் இந்த வாழ்வின் வீச்சு மற்றும்  இந்த மரணத்தின் வீச்சு என்பது ஒன்றோடொன்று பலமாகவும் பலவீனமாகவும் புரிபடுவது பெரும் வியப்பு.. !!

எங்கள் திருப்பூரில் அன்றெல்லாம் பிரபலமாக இருந்தது ஜோதி திரையரங்கின் வெங்காய போண்டா.. காலைக் காட்சி சென்று 2 போண்டாக்களை வாங்கி அந்த எழுபது பைசா டிக்கட்டிலோ, ஒன்று பத்திலோ  சென்று நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு மெல்லமெல்ல பிய்த்து பிய்த்து அந்த சூடான போண்டாவை இறக்கிய வண்ணமே, மவுன ராகங்களும் சலங்கை ஒலிகளும் தர்மயுத்தங்களும் சொட்டு சொட்டாக ரசிக்கப் பட்ட அந்தக் காலகட்டங்களில், வாழ்க்கை ஒன்றே, உயிர் ஒன்றே பரம சாசுவதம் போன்று நம்மில் பவனி வந்து கொண்டிருந்த கற்பனைப் பறவைகள் இன்று சிறகொடிந்து .. நொண்டிக் கொண்டிருக்கிறது.. 

அன்று நாம் ஆனந்தமாக போண்டா கடித்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டங்களில் சிறகொடிந்து நொந்து கொண்டிருந்த காலாவதி ஆனவர்கள், ரெண்டணா டிக்கட்டில் பாகப் பிரிவினைகளில் , பாசமலர்களில், பாவ  மன்னிப்புக்களில், கடலை மிட்டாய் அரிசி முறுக்கு கடித்து ரசித்து மரணம் மறந்து கிடந்திருப்பார்கள்.. 

காலச் சுழல்களில் இந்த வாழ்க்கை 'பருந்தாய்' ஒரு கட்டத்திலும் 'நொண்டிக் கோழியாய் ' மறுகட்டத்திலும் புலனாகிறது.. 
வாழ்க்கை சுவாரஸ்யங்களும்-- மரண பயங்களும்  உடன்பிறந்த சகோதரர்கள்.. அல்லது உடன்பிறவா சகோதரர்கள்.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...