Tuesday, June 28, 2016

காதல் பூதம்

Image result for lovers in rain


ன்னைக் குளிப்பாட்டுகிற 
தண்ணீர்...
நீ உண்ணச் சமைத்துத் 
தருகிற நெருப்பு.. 
நீ சுவாசிக்க உன் 
நாசிக்கு உதவுகிற காற்று.. 
நீ உலவுமிடமெல்லாம் 
உன்னை நிரப்புகிற -
உன்னில் நிரம்பிக் கொள்கிற 
ஆகாயம்.. 
எங்கு நீ சென்றாலும் 
உன்னைத் தாங்கிப் பிடிக்கிற 
நிலம்.. 

-எனக்கும் இதே 
பஞ்சபூதங்கள் தாம் 
எவ்விதப் பாரபட்சங்களும் அற்று 
இந்தப் பிரபஞ்சத்தில் 
நியமிக்கப் பட்டுள்ளன.. 
என்றான போதிலும் --

உமக்கு நியமிக்கப் பெற்றுள்ளவை 
மிகப் புனிதம் போன்றும் 
என்னிலிருந்து வேறுபட்டவை 
போன்றும் 
அடாத மாயையைத் 
திணித்து வைத்திருக்கிறது 
இந்தக் காலமென்ற 
காதல் பூதம்.. !!

Friday, June 24, 2016

நிபுணர்கள்..



திலும் நிபுணத்துவம் 
அற்று .. நான்.. !
இந்த வெறுமை 
என்னில் சீழ் 
கோர்த்த வலி 
நிகழ்த்துகிறது.. !!

சட்டைக்கு பொத்தான்
வைப்பது, ஹெம்மிங் செய்வது 
போன்ற அற்ப வேலை 
முதல் அனைத்தும் 
தகராறு எனக்கு.. !

எதனை நான் 
மெனக்கெட்டு செய்தாலும் 
நொட்டை சொல்லவென்று 
அதற்கான நபர்கள் 
வாரிக் கொட்டியது போன்று 
குவிந்து கிடக்கின்றனர்.. 

நான் சுவாசிப்பதைக் கூட 
யோகா வல்லுநர், 
'அப்படி இல்லை... இப்படி'
என்று இழுத்து வாங்குகிறார் 
மூச்சினை.. !

நடைப் பயிற்சியில் 
நேர்த்தி இல்லை .. 
'இப்படி நீளமா 
அதற்கும் இதற்குமா 
கைகளை வீசி 
கால்களை நேர்ப்படுத்தி
வேகமாய் நடக்கணும்'
என்கிறார் சிறந்து 
விளங்கி நடப்பவர்.. 

இயல்பாக நம்மோடு 
இழைந்து கிடக்கிற 
நடையும் மூச்சும் கூட 
இன்னும் நன்கு 
பயிற்றுவிக்கப் பெறவேண்டிய 
இழி தகுதியில் இருப்பதை 
எங்கு போய் முறையிட?

நான் செத்துப் 
போனாலும் கூட. 
'இப்டி சாகக் கூடாது பாஸ்.. 
அந்த மாதிரி அழகா .. போறதே 
புரியாம..!' 
என்றொரு மரண நிபுணன் 
அறிவுறுத்தக் கூடும்.. 
குறைந்தபட்சம் 
அந்தக் 'குறைபாடை' 
கேட்க மட்டுமாவது 
நல்ல வேளையாக . 
நான் இருக்கமாட்டேன்.. ஹிஹி..!!

Sunday, June 19, 2016

நவீனத்துவத்தின் பின்னடைவு .. ?..

ள்ளுவனிடம் பாரதியிடம் கணினிகள் இருந்திருக்கும் பட்சத்தில், குறள்கள் .. கவிதைகள் யாவும் பற்பல பாகங்கள் கடந்து இந்த வாழ்வு இன்னும் அடர்த்தி கண்டிருக்கும்.. 
நம்மிடம்  பற்பல கணினிகள் இருந்துமே கூட .. அரைப் பக்கம் சுலபமாக நிரப்பிவிட முடியாத புதுக்கவிதைகள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
.Image result for valluvan bharathi modern artsImage result for valluvan bharathi modern arts

திறன்கள் அவர்களுக்கு மூலைகளில் இருந்தன.. எழுத்தாணி கொண்டே ஓலைகள் கிழிபட 1330 குரல்கள் பதிவு செய்த வள்ளுவனாகட்டும், பற்பல கவிதைகள் கதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் நாவல்கள் புனைந்த பாரதி ஆகட்டும் .. 
இன்றுள்ள வசீகர அறிவியல் முன்னேற்றங்களின் நிமித்தம் மேற்கண்ட அந்த இரு மேதைகள் , அவர்களது சிருஷ்டிகள் இன்னும் செவ்வனே அலங்காரப் படுத்தப் பெற்றுள்ளன என்பதில் ஐயமேதும் இல்லை.. 

அன்றைய பற்பல மேதைகளின் சிருஷ்டிகளுமே இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி நிமித்தம் படையலிட ப் பட்டுள்ளன .. 

பழங்காலக் கோவில்களில் அன்றைய சிற்பிகளின் இடையறாத செழிப்பு மிக உழைப்பால், கற்கள் உயிர் பெற்றன.. தத்ரூபம் தாண்டவமாடின.. 
இன்றைக்கோ, வெறும் அட்டைகளில் அலங்கார அமைப்பு செய்யவே சுணங்கிப் போய் வடிவம் தாறுமாறாகப் புலனாகின்றன.. 

அறிவியல் வளர்ச்சி பெறாத அன்றைய காலகட்டங்கள், மனிதன் எதனை செய்தாலும் அவைகளில்  நேர்த்தியும் ஒழுங்கும் ஒருங்கிழைந்து உன்னத விருந்து படைத்தன.. 

இன்றைய நவீனத் துவத்தில் 'ஆயத்த ஆடை' போன்ற சுலபத்தில் அனைத்துமே காசை விட்டெறிந்தால் உடனடியாக வந்து சேர்ந்து விடுவதால், தனிமனித உழைப்பு மீது, அந்தப் பிரத்யேகத் திறன் மீது எவருக்கும் ஈர்ப்பு வருவதில்லை. 
அச்சு அடித்தாற் போன்ற ஒரு விஷயத்தில் மனசு லயிக்கப் பெற்று 'கைத்திறனில்' பிறந்த இயல்பான வஸ்துக்களுக்கு விலை கொடுக்க கைவருவதில்லை.. 


Thursday, June 16, 2016

மாம்பழமாம் மாம்பழம்..

2 மாம்பழங்கள் 
வாங்கிவந்து.. ஒன்றை 
கீற்றுப் போட்டு 
மூவரும் சுவைத்தோம்.. 
அதன் தேன்சுவை 
நாவில் நர்த்தனம் 
புரியவே... 
பிற்பாடு சாப்பிடலாம் 
என்று மிச்சம் 
வைத்திருந்த அடுத்த 
மாம்பழத்தையும் உடனடி 
கூறு போட ஆயத்தம் செய்கையில் --

முன்னர் அறுக்கப் பட்ட 
அந்தக் கத்தியில் 
நொச நொச வென்ற 
சுவாமிக் கருப்பெறும்புகள் 
புடை சூழ்ந்திருந்தன..

ஆசைதீர அவைகள் 
உண்டு தீர்க்கட்டும் 
பிறகு கழுவி அடுத்த 
மாம்பழம் அரியலாம் 
என்ற எமது முடிவுக்கு 
எங்கள் பாப்பா 
அழத் துவங்கினாள் .. ! !
 Image result for mango eating

Wednesday, June 15, 2016

நாம் அனைவருமே "டைட்டானிக்" கப்பலில் தான்..

உலக அழகி என்பது  இந்த சாஸ்வதமற்ற உடலின் அடையாளம் கொண்டே....!
உயிர் அந்த அழகுடலை விட்டுப் பிரிந்த அடுத்த ஷணம் .. 
நாற்றம் ததும்ப வைக்கிற நுண்ணுயிர்கள் அங்கே தமது பணியை செவ்வனே துவங்கி விடும்.. !
உள்ளூர் கிழவியின் அதே கதியில் தான் உலக அழகியின் கதையும்.. 
Image result for BEAUTIFUL LADIESImage result for GRANDMA
வாழ்ந்து சாகிற மனிதர்களுக்கு மாத்திரமா இக்கதை பொருந்தும்?.. இல்லை.. , வாழ்ந்து மறைந்த தெய்வங்களின் உடற்கூறுகளும் இதே தன்மையில் தான் இயங்கி இருக்கக் கூடும்.. !

இதொன்றும் புதுவித கருத்தோ விளக்கமோ அன்று.. யாதொருவரும் மிக சுலப சிந்தனையில் அனுமானித்துவிட முடியும்.. 

அசாதரணமாகப் புரிபடுகிற இந்த வாழ்வு எத்தனை சாதாரண அம்சம் கொண்டுள்ளது என்று நினைக்கையில் பிறக்கிற அதே ஆச்சர்யம், .. சாதாரணமாகப் புரிபடுகிற இந்த வாழ்வு எத்தனை அசாதாரண அம்சம் கொண்டுள்ளது என்றும் தோன்றுகிறது.. எப்படிப் புரட்டிப் போட்டாலும் இந்த வாழ்வின் வீச்சு மற்றும்  இந்த மரணத்தின் வீச்சு என்பது ஒன்றோடொன்று பலமாகவும் பலவீனமாகவும் புரிபடுவது பெரும் வியப்பு.. !!

எங்கள் திருப்பூரில் அன்றெல்லாம் பிரபலமாக இருந்தது ஜோதி திரையரங்கின் வெங்காய போண்டா.. காலைக் காட்சி சென்று 2 போண்டாக்களை வாங்கி அந்த எழுபது பைசா டிக்கட்டிலோ, ஒன்று பத்திலோ  சென்று நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு மெல்லமெல்ல பிய்த்து பிய்த்து அந்த சூடான போண்டாவை இறக்கிய வண்ணமே, மவுன ராகங்களும் சலங்கை ஒலிகளும் தர்மயுத்தங்களும் சொட்டு சொட்டாக ரசிக்கப் பட்ட அந்தக் காலகட்டங்களில், வாழ்க்கை ஒன்றே, உயிர் ஒன்றே பரம சாசுவதம் போன்று நம்மில் பவனி வந்து கொண்டிருந்த கற்பனைப் பறவைகள் இன்று சிறகொடிந்து .. நொண்டிக் கொண்டிருக்கிறது.. 

அன்று நாம் ஆனந்தமாக போண்டா கடித்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டங்களில் சிறகொடிந்து நொந்து கொண்டிருந்த காலாவதி ஆனவர்கள், ரெண்டணா டிக்கட்டில் பாகப் பிரிவினைகளில் , பாசமலர்களில், பாவ  மன்னிப்புக்களில், கடலை மிட்டாய் அரிசி முறுக்கு கடித்து ரசித்து மரணம் மறந்து கிடந்திருப்பார்கள்.. 

காலச் சுழல்களில் இந்த வாழ்க்கை 'பருந்தாய்' ஒரு கட்டத்திலும் 'நொண்டிக் கோழியாய் ' மறுகட்டத்திலும் புலனாகிறது.. 
வாழ்க்கை சுவாரஸ்யங்களும்-- மரண பயங்களும்  உடன்பிறந்த சகோதரர்கள்.. அல்லது உடன்பிறவா சகோதரர்கள்.. !!

Tuesday, June 7, 2016

இறைவி ..................[விமரிசன முயற்சி?]..............

நம்முடைய கிஞ்சிற்று அறிவை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை விமரிசிப்பது என்பது சற்றே கடினம்.. மாடு விரட்டுகிற சாட்டையை வைத்துக் கொண்டு சிங்கம் மேய்க்க முயல்வது போன்று..
Image result for iraivi
நமக்கே அஞ்சலியைப் பார்த்ததும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து விடவேண்டுமே என்கிற ஆவல் பீறிடுகையில், பாபி சிம்ஹா அவ்விதம் அவா கொண்டதில் ஆச்சர்யம் இல்லைதான்.. அஞ்சலியின் தேஜஸ் இந்தப் படத்தில் கனஜோர்..

வி.சேதுபதியோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிற அந்த விடோ கேரக்டர் ரியல்லி மெச்சூர்ட்.. அந்தப் பெண் வெளிப் படுத்துகிற உணர்வுகளாகட்டும் அதற்கான வார்த்தைகளாகட்டும் .. பாலச்சந்தர் வாசம்..

விஜய் சேது தமது சித்தப்பாவோடு பெண்பார்க்க வருகிற போது அவள் நடந்து கொள்கிற விதம், அந்த யதார்த்த வீச்சு . அதுகண்டு மிரள்கிற வி.சேது அவரது சித்தப்பா.. வாவ்.. !
மற்றொரு முறை விஜய் செய்கிற விஜயத்தின் போது, தன்னை ஒரு வேசி போன்று அடையாளப் படுத்தி விட்டு விஜய் அந்த மழையினூடே பைக்கை எடுத்து  செல்கையில், ஜன்னலோரம் நின்று அவள் தேம்பி அழுவது, வெளிப் பொழியும் மழையைக் காட்டிலும் ஈரம் நிரம்பியது.. !

எஸ்.ஜே.சூர்யாவின் ஆல்கஹாலிக் அடிக்ஷனும் அதற்கென அவர் கற்பிக்கிற காரணங்களும் ஒருவித நியாயம் பொதிந்துள்ள போதிலும், இப்படியும் ஸ்க்ரீனே நாறுமளவுக்கு .. எந்நேரம் பார்த்தாலும் தாறுமாறாக குடித்தே தீர்த்திருக்க வேண்டுமா என்ன?
பிறகொரு தருவாயில் திருந்துவதும், இன்னபிற குடிகாரர்களைத் திருத்துவதும் .. நக்கல் கலந்த சுவாரஸ்யம்..
சூர்யாவுக்கு வாக்கப் பட்ட பொண்டாட்டி  வாழ்க்கையும் படா பேஜாரப்பா .. திடீர் திடீர்னு சூழல்களை மாற்றி பாவனைகளை இறக்குமதி செய்தாக வேண்டும். நெருப்பாக வெறுப்பை வெளிக் கொணர வேண்டும்.. பிறகு, ஒரே பூரிப்பு மயம் .. அப்புறம் டைவர்ஸ் க்கு அப்ளை செய்வதில் தீவிரம் காண்பிப்பது, பிறகு இளகி, சூர்யாவை ஆலிங்கனம் செய்து முத்தமிடுவது..

இத்தனை குழப்ப சூழல்களையும் அந்தப் பெண் மிக அனாயாசமாக நாசுக்காகக் கையாண்டது  போன்று தான் புலனாகிறது..

விஜய் சேதுபதி  எஸ்.ஜே சூர்யாவுக்காக அந்தப் ப்ரொடியூசரை சாகடிப்பது, .. அதற்காக சிறைக்குப் போவது , கர்ப்பிணி மனைவி அஞ்சலியை நிர்க்கதியாக  நிறுத்திவிட்டு ஜெயிலில் கிடப்பது... 
''என்னால அதப் பார்த்துட்டு சும்மா வர முடியில" என்று மனைவியிடம் சொல்ல, அதற்கு அஞ்சலி. "அப்ப என்னை  மட்டும் இந்த கதியில விட்டுட்டு போறது நல்லா இருக்கா?" என்று கேட்பது... உறைய வைக்கிறது.. 

வெளிவந்து மீண்டும்  சிலை கடத்தலில் பங்குபெற்று கேரள போலீஸால் கைதாவது, தப்பித்து வந்து சேர்வது.. [அந்த சிலை கடத்தல் என்பது தான் என்னவோ ஒட்டாத ஒரு ஒவ்வாமையைத் திணிக்கிறது]

கோமாவில் உள்ள வடிவுக்கரசியிடம் பாபி சிம்ஹா தமது திட்டங்களை சொல்லிய வண்ணமே அவருக்குப் பணிவிடை செய்கையில், வடிவுக்கு கோமா தெளிந்து உடனே நம்மை திகில் செய்ய வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா .. இன்று அப்படியெல்லாம் அற்று யதார்த்தத்தை சிக்கென்று பற்றி இருக்கிறதென்றே சொல்லவேண்டும்.. 

எஸ்.ஜே.சூ வுக்காக தயாரிப்பாளரை கொலை செய்து ஜெயில் செல்வது, பிறகு சூர்யா தம்பி பாபி சிம்ஹாவை [தனது மனைவியை கபளீகரிக்க திட்டமிட்ட காரணத்தால்] கொல்வது .. 
சூர்யா அதுகேட்டு சேதுபதியை வந்து சுட்டுத் தள்ளுவது.. 
பிற்பாடு தமது மனைவியிடத்து மொபைலில்  தாம் மீண்டும் குடிகாரனாகி விட்ட பாசாங்கில் அரற்றி அழுது தீர்ப்பது.. 

வழக்க தமிழ் சினிமாக்களை ஓரம் கட்டிவிட்டு ஒரு மாற்றுப் பாதையில் பயணிக்கிற சம்பவங்கள் படம் நெடுக இழையோடுகிறது தான் என்ற போதிலும், நிறைவு என்பது வெறுமை ததும்புவதை சொல்லாமல் இருக்க முடியாது.. 

சந்தோஷின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை, எடிட்டிங், .. அனைத்துமே யதார்த்தப் பிரளயம் நிகழ்த்துகின்றன.. இவைகளை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் .. ஒரு சத்யஜித்ரே ஆவதற்கான அத்தனை தாத்பர்யங்களோடும் மிளிர்கிறார்.. 

அடுத்த படைப்பை எதிர்பார்க்க வைக்கிற கியூரியோசிட்டி கிளப்பி விட்டிருக்கிறார்..                                                                                                                                                            

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...