Thursday, March 5, 2015

ப கு த் த றி வு ..................

பழிக்கத் துணிகிறார்கள் 
திசைகளை மிக சுலபமாக.. 
மேற்கு சரியில்லை 
தெற்கு  சரியில்லை என்று...!

கிழக்கும் வடக்கும் 
கெட்டிக்கார திசைகள் என்று 
வாய் கிழியப் பிதற்றுகிறார்கள்...!

சொம்பில் சாம்பலாக 
க்ரிமேஷன் சென்டரில் இருந்து 
செத்தவர்கள் இப்போது 
நமக்குக் கிடைப்பதால் பரவாயில்லை.. 

அன்றெல்லாம் செத்தவனைப் 
புதைக்கப் போடுகையில் கூட 
தலை வடக்கிலிருக்காமல் 
பார்த்துக் கொள்கிற கொள்கை 
வீரர்களாக வலம் வந்தோம்.. 

குபேர மூலை உசந்திருக்க 
ஒட்டடைக் குச்சியையாவது 
அங்கே நிறுத்தி வைக்கிறோம்.. 

ஜலமூலையில் சமையலறையை 
சாபக் கேடாக உணர்கிறோம்.. 
அக்கினிமூலையில் 
குளித்துக் கொண்டிருப்பதை  
பெருங்குற்றம் போன்று 
துவட்டிக் கொண்டிருக்கிறோம்.. 

பெரியாரின் பகுத்தறிவை 
தொண்டைகிழியக் கதறி விட்டு 
வெளியே சினிமா பார்க்கக் 
கிளம்புகையில்  கூட 
எதிர்ப்படுகிற விதவைக் கிழவியை 
மெளனமாக ஒரு திட்டு திட்டிவிட்டு 
வீட்டினுள் வந்து மடக்குத் தண்ணியை 
குடித்து விட்டு.. 

குபேர மூலையில் கிழக்குப் பார்த்து 
பீரோவை வைக்கிற 
நம்முடைய வாழ்க்கை மிகவும் 
அழகாக நகர்ந்து கொண்டிருப்பதாகத் 
தான் தோன்றுகிறது.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...