Thursday, March 26, 2015

இந்தியக் கிரிக்கெட்

"ரௌத்திரம் பழகு!".. இந்த சூத்திரத்தை நமது இந்தியக் கிரிக்கெட் அணியிடம் சொல்லி ஊக்குவித்தாக வேண்டும்.. 
ஆஸ்திரேலியா மாதிரியான வெறி பிடித்த ஒரு வேகம் நம்மிடம் இல்லை என்றே தோன்றுகிறது.. நமது வேகம், விவேகம் கொண்டுள்ளது.. அது போதாது இந்த மட்டைப் பந்தாட்டத்துக்கு.. 
அதனோடு ஒருவித அக்ரெஸீவ் நெஸ் அப்ளை செய்தாக வேண்டியுள்ளது.. அதர்வைஸ் எப்போதுமே இந்த செமி ஃபைனல் வந்து திரும்புவதோடு இந்தியாவின் கிரிக்கெட் முடிந்துவிடும்.. 
Image result for cricket
கால்பரீட்சை அரைப் பரீட்சை நடக்கிற போது 1200 க்கு 1190 கூட எடுத்து சுலபத்தில் ஆஸி யை வீழ்த்தி விடுகிற நாம், முழுப் பரீட்சை [அதாவது பிளஸ் 2 மாதிரி என்று வைத்துக் கொள்வோமே] வருகிற போது , 890 , 900 போன்று எடுத்து மானத்தை வாங்கிவிடுகிறோம்.. !!

அவர்களோ ஏனுயல் எக்ஸாமுக்குத்தான் நிறைய ஹோம் வொர்க் செய்கிறார்கள்.. நாம், ஜஸ்ட் முன்னர் நடந்த சாதா டெஸ்ட் மாட்ச்சில் விளாசி அவர்களைத் தோற்கடித்து விட்டாலே போதும்.. பெரிய ஜாம்பாவான்கள் போன்று பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனெர்ஜி என்று பிதற்றிக் கொண்டு விளம்பரத்தில் நடிக்கிறோம்.. மிடில் க்ளாசை ஈஸியாக ஏமாற்றி பூஸ்ட் வாங்க வைக்கிறோம்.. 

இன்னும் சொல்லப் போனால், டெஸ்ட் மாட்சுகளில் வேண்டுமென்றே கூட அவர்கள் தோற்பார்கள்  என்றே அனுமானிக்கிறேன்.. .. 
நாம் அதைக் கண்டு நம்மை பலசாலிகள் போன்று கருதி பவனி வரத் துணிகிறோம்.. 

ஒரு டெண்டுல்கரும் ஒரு கபிலும், ஒரு காவஸ்கரும், ஒரு தோனியும் மட்டுமே எப்போதும்  இந்திய அணியில் இடம் பெற்று வந்திருக்கிறார்கள்.. இந்தியா  இன்னும் ஒரு  அடி முன்வைக்க இது போதாது.. 11 பேர்களில், குறைந்தபட்சம்  4 தோனிகள் தேவைப் படுகிறார்கள்..
 Image result for cricket

Tuesday, March 24, 2015

எனது பிணம் குறித்த கவலை..

ரணித்துக் கிடத்தப் 
பட்டிருக்கையில் 
எனது அவயவங்கள் 
கவனிக்கப் படக் கூடுமோ 
என்கிற அனாவசிய வெட்கம் 
இப்போதைய என் உயிரில்...!

எனது  ஆன்மா 
தேர்ந்தெடுத்துள்ள உடல் 
எனது குற்ற உணர்வுகளின் 
ஊற்றாய் விளங்குவதை 
சொல்லியாக வேண்டும்.. 

இருக்கிற உயிரின் 
நிமித்தம் அவைகளை 
எதையேனும் போட்டு 
மூடி மறைக்கிற 
உத்திகளைக் கையாண்டு 
வெற்றிபெறத் தெரிந்து
வைத்திருக்கிறேன்.. 

என்ற போதிலும் --

பிரக்ஞை உதிர்ந்து 
நாறத் துவங்குகிற இந்த 
உடல் குறித்தான 
என்னுடைய இப்போதைய 
அனாவசிய வலிகளும் 
வெட்கங்களும் 
நகைக்க உகந்தவை 
போன்றே தோன்றுகிறது.. 

சற்றேனும் எனதுடல் 
மிளிர்கிறது எனில் 
மணக்கிறது எனில், 
அது இந்த அறுந்து போகக் 
காத்திருக்கிற உயிரின் 
கைங்கர்யமே அன்றி 
வேறென்ன? 

இடம் ஏவல் புரிபடாமல் 
மூக்குச் சளி சிந்தி 
எனக்கென மனமொன்றிக் 
கதற சிலர் இருப்பர் .. 
பிரச்சினை அவர்களல்ல.. 

மேற்கொண்டு இந்தப் 
பிரபஞ்சத்தில் எனது 
சுவடுகள் எவையும் இல்லை....

சாம்பலென சற்று நாழிகையில் 
பொசுங்கப் போகிற உடல் 
நிறைவு முறையாக  சிலரால் 
அலசப் பெறுமன்றோ ?

அவர்களுக்கென 
என் பிணம் சற்றே 
பொலிவுற்றால் தேவலாம் 
என்கிற எனது இப்போதைய 
கவலை மறுபடி எனக்கு 
சிரிப்பை முட்டவே  வைக்கிறது.. !!

Friday, March 20, 2015

புதுப்புதுக் கவிதைகள்..

 பேதங்கள் 

எல்லாருக்குமாக 
பரிமாறப் பட்டுள்ள இந்த 
வாழ்க்கை என்பது 
பிரம்மாண்ட பேதம்
நிரம்பிய வெண்ணை
சுண்ணாம்பாக உள்ளன..

வெண்ணை வைத்திருப்பவன்
வெற்றிலை போடுகையில்
சுண்ணாம்பு வைத்திருக்கிறவன்
கொடுக்கிறான்..

ஆனால் சுண்ணாம்பு 
வைத்திருப்பவன் 
பருப்புசாதம் சாப்பிடுகையில் 
வெண்ணை வைத்திருப்பவன் 
கொடுக்க மறுக்கிறான்..
 
        ==============  

  தொன்று தொட்டு.. 


'நிலைபெறாமை' என்பதே 
நிரந்தரமென்றிருக்க 
'நிலையான' என்பதே 
நிரந்தரம் போன்று 
போராடுகிற மனிதர்கள்.. 

நேற்றை சரிசெய்ய 
மெனக்கெடுதல்.. 
நாளையைத் தூங்கவைக்க 
பொன்தொட்டில் செய்தல்.. 
இன்றை இப்பொழுதை 
குப்பைத் தொட்டியில் 
போடுதல்....

கோவணம் கட்டி 
மானம் காத்த நாள்தொட்டு 
இன்றைய ஆண்டிராய்டு  
காலம் வரைக்குமான 
மனித சுபாவம் இது.. !!
=====================

நாசுக்குகள்..

"அவருடைய விந்தில் 
உயிரணுக்கள் இல்லை"
சக தோழிகளிடத்து 
மனைவி சொல்வது.. 

"அவளோட கர்ப்பப் பையில் 
என்னவோ கோளாறு"
நண்பர்களிடம் 
கணவன் சொல்வது.. 

குழந்தை இல்லா தம்பதிகள் 
பரஸ்பரம்  பேசிக் கொள்கையில் 
"என்னால தாம்மா 
 நீ தாய்மை அடையலை "
என்கிறான் கணவன்.. 
"பிரச்சினை என்கிட்டத் தான்"
என்கிறாள்  மனைவி.. 
.


Thursday, March 12, 2015

காதலனின் டைரியிலிருந்து ......

மிக மிக அனிச்சையாகவே 
அன்றாடம் உம்மை 
தரிசிக்க வேண்டுமென்பதில் 
தீவிரம் காண்பிக்கிறேன்..!

உன்னைத் தேடும் போதிலாக
நீ கிடைத்து விட்டதான 
திருப்தியில் கிடந்த நான் 
நம்மில் நிகழ்ந்த ஆலிங்கனங்களில் 
நீ தொலைந்து போனதான 
ஏக்கத்தில் விம்முகிற எனது 
வினோத இதயத்தினை என்னவென்பது?

அவ்வப்போது 
நானுன்னைத் தேடியும் 
கிடைக்கப் பெறாமல் இருக்கிறாய்..
ஆனால்...
நான் கிடைத்தாலும் கூட 
நீ என்னைத் தொலைக்கவே 
பார்க்கிறாய் அவ்வப்போது..!!

உன் மீதான எனது 
காதலின் ஆழத்தை, 
உனக்கும் அதே தன்மையில் 
பயிற்றுவிக்கிற என் முஸ்தீபை 
ஏளனமாகப் புறந்தள்ளும் 
உமது செயலில் கூட 
ஒரு வசீகரம் உணர்கிற 
என் ரசனை 
எனக்கே என்னில் நிகழ்கிற 
ஒரு பொருந்தா உணர்வாக  
இம்சிக்கிறது..!

உன்னைக் கடிந்து 
கொள்கிற கற்பனை கூட 
வலி தருகிறது எனக்கு.. 
நீயோ 
நிஜவலி தரும் வகையில் 
சுலபத்தில் கடிந்து 
கொள்கிறாய் என்னை.. !

ஆலிங்கனங்கள் 
சுலபநிகழ்வாக அமையப் பெற்ற 
எனது அதிர்ஷ்டக் காதலில் 
என்னை நீ புறக்கணிக்கிற 
துரதிர்ஷ்டங்களும் அதே 
சுலபத்தில் நடந்தேறின 
என்கிற முரண்கள் 
சகிக்க முடியாத சாபக்கேடுகள் 
போன்றே தோன்றுகின்றன...!!

Sunday, March 8, 2015

நம்முடைய ...............

ஒரு பிரத்யேகப் பிராயத்தில், பிரத்யேக சம்பவங்கள் மனதை அபரிமிதம் வசீகரிக்கிற சூழல் அநேகமாக எல்லாருக்கும் வாய்க்கிற விஷயம்..

ஒருவகையான சௌகர்யம் மனசு முழுதுமாக கைகோர்த்துக் கொள்கிற விதத்தில் அந்த சம்பவங்கள் பரம ரம்மியமாக நம்மில் ஊடாடி அந்தப் பொழுதுகளை மிகவும் அர்த்தப் படுத்தி விடும்..

பாறைக் குழி என்று  ஒரு இடம்..  விவசாயம் நடக்கிற சமவெளி நிலத்தில், கிஞ்சிற்று குன்று போன்று முளைத்திருக்கிற ஒரு பாறை.. ஆனால், அதனை 'குழி' என்கிற அனர்த்தமான அடைமொழி சேர்த்துக் குறிப்பிடுவார்கள்.
மிதிவண்டி எடுத்துக் கொண்டு ஸ்கூல் லீவ் நாட்களில் அந்தப் பாறைக்குப் போவேன்.. வீட்டிலிருந்து சுமார் நான்கல்லது ஐந்து கி.மீ.கள் இருக்கும்.. அனாயாசமாக அழுத்திக் கொண்டு செல்வேன்.. இன்றைய நாட்கள் மாதிரி அநியாய டிராஃபிக் இருக்காது... கன்னாபின்னாவென்று காட்டு மிராண்டிகள் போன்று எவரும் பைக்கை ஓட்ட மாட்டார்கள்.., அப்படி ஹை - ஸ்பீட் எஞ்சின் பைக்குகளும் அறிமுகமாகி இருக்கவில்லை... முக்கால்வாசிப் பேர்கள் சைக்கிள் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.. மொப்பெடும் பைக்கும் கனவு வாகனங்களாக இருந்தன..

இன்றோ இத்த செத்த  எல்லாரும் 20,000 ரூ.செல்போன்  வைத்துப் பேசுகிறார்கள். டியூவில் பல்ஸர் எடுத்து ஈ.எம்.ஐ கட்டி ஜமாய்க்கிறார்கள் .. கட்டமுடியாட்டி  வண்டியை எடுத்துட்டுப் போ என்று சுலபமாக அடுத்த மாடலுக்கு மாறுகிறார்கள்.. சட்டை  ஜீன்ஸை மாற்றுவது போன்று எதை வேண்டுமானாலும் புதிதாக அப்டேட் செய்கிற "செம தெர்ஸ்டியில் " அலை பாய்கிறார்கள்..

எதனையும் சாத்தியத்துக்குக் கொணர்கிற திறனோடு அளப்பறை செய்கிறார்கள்.. !!   

அந்தப் பாறை மீது ஏறி உச்சம்  போய் முன்சட்டைப் பாக்கெட்டின் வியர்வை ஈரம் சற்றே படிந்துள்ள கோல்ட் பில்டர் எடுத்து ரெண்டே குச்சி இருக்கிற தீப்பெட்டியில் ஒரு குச்சியை மருந்தில் கிழித்து பற்ற வைத்தோமென்றால் .. ஒருவகை சாபக்கேடு போன்று , ஒன்று அந்த நமுத்த சிகரெட்டில் தீ ஏறாது.. , அல்லது முதல் குச்சி முடிந்தும் சிகரெட் பற்ற வைத்த பாடு இருக்காது. இருக்கிற அடுத்த ஒரே 2ஆம் குச்சி பார்த்து பற்ற வைத்தால் உண்டு. அல்லது அதுவும் காற்றுக்கு அணைந்து போகிற சூழலில் செம டென்ஷன் ஏறும்.. 2 ரூ கொடுத்து சிகரெட் வாங்குகிற எனக்கு எட்டணா தீப்பெட்டி வாங்க முடியவில்லை என்பதை விட தீப்பெட்டி சட்டை ஜேப்பில் இருந்து அம்மா துவைக்கையில் சிக்கவைத்து விடும் என்கிற பயம்.. 
[குறிப்பு: அன்றைக்கு கோல்டு பில்டர் ரூ.2. இன்று ரூ.5 என்கிறார்கள் .. நான் இன்று ஊத  ஆசைப் பட்டும் உடல்நிலை நிமித்தம் வாயை மூடிக் கொண்டிருக்கிறேன்]    
ஆகவே, சிகரெட் வாங்குகிற கடைக்காரரிடமே காலித் தீப்பெட்டியும் குச்சி ரெண்டும் வாங்கிக் கொள்வேன்.. அண்ணாச்சி ஐந்தாறு குச்சிகள் திணிப்பார் என்ற போதிலும் நான் தான் பிடுங்கி மாதிரி" 2 போதும் அண்ணாச்சி .. ஏன் வேஸ்ட் பண்றீங்க?" என்று தெனாவெட்டாகப் பேசி சைக்கிள் ஸ்டாண்டை ஸ்டைலாக  அன்லாக் செய்து வலதுகாலை பின்னாடி தூக்கி பந்தாவாக ஏறுவேன்.. என்னுடைய அப்பா இன்னும் முன்பாரில் தான் காலை வளித்துப் போட்டு ஏறுகிறார் என்கிற இளப்பமான ஒரு அனுமானம் எனக்கிருந்தது.. ஆனால் அது அவர் வேட்டி கட்டும் காரணத்தால் அவ்விதம் தான் ஏற முடியும் என்கிற அறிவு பிடிபடவே என் மரமண்டைக்கு வருடங்கள் கண்டன.. 

2 மணிநேரங்கள் நழுவுவது கூட தெரியாமல் அந்தப் பிராந்தியத்தில் நானிருப்பேன்.. அங்கே ஆடு மாடு மேய்க்க வருகிற சில நபர்களும் கூட எனக்குப் பழக்கமானார்கள்.. 
ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் எப்போது துவங்கின, எப்போது நிறைவுற்றன என்கிற அலசல்களின் போதெல்லாம் நான் ஒருவித மயக்கக் குழப்பத்துக்கு ஆளாவேன். 

இன்றும் அந்த வழி செல்ல நேர்கையில், நான் பொழுதோட்டிய பாறையைத் தேடுவேன்.. அதைக் காணோம்.. அந்த விவசாய பூமி காணோம்.. அன்றைய எவ்வித அடையாளங்களும் அற்று அங்கே கட்டிடங்கள் முளைத்திருந்தன.. 

இது போன்று பல பிராயங்களில் பற்பல சம்பவங்கள்.. ஒவ்வொன்றையும் விவரிக்க ஆரம்பித்தால், நிகழ்காலமே ஸ்தம்பித்துப் போய் விடும்.. 

ஆனால், நிகழ்காலம் எதிர்காலப் பதிவுகளுக்கு உபயோகப் படும் என்கிற பிரக்ஞை எவருக்கும் என்றைக்கும் உதிக்காத ஒரு மர்ம சூரியன்.. 

ஆனால், அவை பின்னொரு தருவாயில் விவரிக்கப் படுகையில் அந்தக் குறிப்பிட்ட பிரத்யேக விஷயங்கள் என்றென்றும் அஸ்தமனமாவதற்கு வாய்ப்பே இல்லை போன்றொரு தீவிர நம்பிக்கை நம்மில் செழித்தெழுகிறது .. 
ஆனால் நாம் தான் சுலபத்தில் ஒரு நாள் அஸ்தமித்து விடுகிறோம்.. !!

                                                                                  

Thursday, March 5, 2015

ப கு த் த றி வு ..................

பழிக்கத் துணிகிறார்கள் 
திசைகளை மிக சுலபமாக.. 
மேற்கு சரியில்லை 
தெற்கு  சரியில்லை என்று...!

கிழக்கும் வடக்கும் 
கெட்டிக்கார திசைகள் என்று 
வாய் கிழியப் பிதற்றுகிறார்கள்...!

சொம்பில் சாம்பலாக 
க்ரிமேஷன் சென்டரில் இருந்து 
செத்தவர்கள் இப்போது 
நமக்குக் கிடைப்பதால் பரவாயில்லை.. 

அன்றெல்லாம் செத்தவனைப் 
புதைக்கப் போடுகையில் கூட 
தலை வடக்கிலிருக்காமல் 
பார்த்துக் கொள்கிற கொள்கை 
வீரர்களாக வலம் வந்தோம்.. 

குபேர மூலை உசந்திருக்க 
ஒட்டடைக் குச்சியையாவது 
அங்கே நிறுத்தி வைக்கிறோம்.. 

ஜலமூலையில் சமையலறையை 
சாபக் கேடாக உணர்கிறோம்.. 
அக்கினிமூலையில் 
குளித்துக் கொண்டிருப்பதை  
பெருங்குற்றம் போன்று 
துவட்டிக் கொண்டிருக்கிறோம்.. 

பெரியாரின் பகுத்தறிவை 
தொண்டைகிழியக் கதறி விட்டு 
வெளியே சினிமா பார்க்கக் 
கிளம்புகையில்  கூட 
எதிர்ப்படுகிற விதவைக் கிழவியை 
மெளனமாக ஒரு திட்டு திட்டிவிட்டு 
வீட்டினுள் வந்து மடக்குத் தண்ணியை 
குடித்து விட்டு.. 

குபேர மூலையில் கிழக்குப் பார்த்து 
பீரோவை வைக்கிற 
நம்முடைய வாழ்க்கை மிகவும் 
அழகாக நகர்ந்து கொண்டிருப்பதாகத் 
தான் தோன்றுகிறது.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...