Saturday, July 5, 2014

குடியிருந்த வீடு..

முப்பது முப்பத்தைந்து வருடங்கள் முன்னர், அதாகப் பட்டது எனக்கு எட்டு பத்து வயது இருந்த போது நாங்கள் குடியிருந்த வாடகை வீடு இப்போது வசிக்கிற சொந்த வீடிருக்கிற அடுத்த தெருவில் தான் இருக்கிறது.

நாங்கள் வசித்த அந்த வாடகை வீடிருக்கிற தெரு வழியாக எமது விஜயம் எதன் நிமித்தமோ அன்றாடம் இருக்கும்.. அனிச்சையாகக் கூட அந்த வீட்டை நான் மறந்தது கிடையாது.. ஒரு லேசான பார்வையை மேய விட்டுத் தான் கடப்பது வழக்கம்..

நாங்கள் இருந்த காரணத்தாலோ என்னவோ அந்த வீடு மேற்கொண்டு எவ்விதப் புணரமைப்பும் அற்று அதே கதியில் ஓர் ஞாபகச் சின்னம் போன்று வீற்றிருந்தது..

எமது இளம்பிராயத்தில் அந்த வீட்டினுள் நான் எண்ணிலடங்கா விளையாட்டுக்களை அரங்கேற்றி சுகம் கண்டிருக்கிறேன்.. பக்கத்து வீட்டு வாண்டுகளை அழைத்து வந்து கண்ணாமூச்சி துவங்கி விறகுக் கட்டை வைத்து கிரிக்கட் ஆட்டம் வரைக்கும் பிய்த்தெறிந்திருக்கிறோம் .. எங்களது சேட்டைகள் எங்கனம் எமது வீட்டாரால் பொறுத்துக் கொள்ளப் பட்டது என்பது இன்றளவும் எமக்கு ஆச்சர்யம்.. எனது அம்மா ஆகட்டும் அப்பா ஆகட்டும் "வெளிய போயி வெளயாடுங்கடா வாண்டுகளா" என்று செல்லமாக அதட்டுவார்களே அன்றி அதில் ஒரு காட்டமோ நொந்து கொள்கிற தன்மையோ இராது.. ஆகவே அதனை மதிக்கிற பெருந்தன்மை எங்கள் அனைவரிடமும் இழந்தே போயிருந்தது என்று சொல்லலாம்..

இன்றைக்கு எனது குழந்தையோடு  தனது மற்ற சிநேகிதக் குழந்தைகள் என்றேனும் அளவளாவ  வருகை புரிகையில் நான் என்னையும் அறியாமல் சிடுசிடுக்க  நேர்கிறது... அதிலே அவைகள் மிரண்டு, மேற்கொண்டு எமது வீடு வரவே யோசிக்கின்றன..

அந்த வீட்டின் இண்டு  இடுக்கு என்று ஒவ்வொரு பிராந்தியமும் எனக்கு அத்துப்படி....

யாராரோ குடி வருகிறார்கள், போகிறார்கள்.. நமக்கு அறிமுகமான யாராச்சும் வந்தால்  ஒரு முறையாவது அந்த மலரும் நினைவுகளை உணர்ந்து ஒருவகை  வார்த்தைப் படுத்த முடியாத ஓர் லாகிரியை உணரவேண்டும் என்கிற அவா  எப்போதும் எனக்குண்டு.. !!

அறிமுகம் ஆகாத நபர்களாக இருந்தால் தான் என்ன?.. இப்போது போய் அறிமுகப் படுத்திவிட்டு கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டு வந்தால் வேண்டாமென்றா  மறுத்து விடப் போகிறார்கள்?.. ஆன போதிலும் அவ்விதம் அனுமதி பெறுவதற்கான  மனநிலை வருவது இல்லை..

பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது, அப்பாவிடம் ஐம்பது காசு திருடி தர்மடி வாங்கியது, பாட்டி சுருக்குப் பையை அவள் தூங்கிய சமயத்தில் உருவி உள்ளே எவ்வளவு இருக்கிறது என்று கூட எண்ணிப் பார்க்காமல் எதிர் திசையில்  இருந்த நாடார் கடையில் பம்பரம் குண்டு பலூன் எல்லாம் வாங்கியது போக  தேன் மிட்டாய், கடுக்காய் மிட்டாய் .. எல்லாம் பாக்-அப் பண்ணி வீடு வந்து மொத்துவாங்கி, சின்ன வலிக்கே உசுர் போனது போல கத்திக் கதறி  ரகளை பண்ணி...
'இனி இப்டி செய்ய மாட்டேன்' என்று சத்தியம் செய்து , செய்த தவறுக்காக தோப்புக் கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டு ..
அப்புறம் அடுத்தவாட்டி உருவிய சுருக்குப் பையில் கொஞ்சம் மட்டும் காசுகளை ஒரு குத்து அள்ளிக் கொண்டு பிற்பாடு கிழவி இடுப்பிலேயே திறமையாக செருகி .... அம்மாதிரி பற்பல முறைகள் நடந்துள்ளன.. ஏனெனில் அது எந்தப் புகாரையும் கொண்டுவரவில்லை கடைசி வரைக்கும்..
எங்க பாட்டி இறந்த பிறகு, முதலில் எனக்குத் தோன்றியது அந்த சு.பை தான்.. ஓடி சென்று அதை எடுத்து உள்ளே துழாவிப் பார்த்த போது 18 ரூ. இருந்தது.. ஏனோ எனக்கு அதை எடுக்கத் தோன்றவில்லை. மாறாக தேம்பித் தேம்பி அழுதேன் வெகு நேரம்.  பொன்முட்டை இட்டுக் கொண்டிருந்த வாத்தை கழுத்து நெரித்து  கொன்று போட்டது போன்று எனக்கொரு எண்ணம்..

என்ன ஆச்சர்யம்..
வியாபாரம் நிமித்தம் 2 மாதங்கள் சென்னை சென்று விட்டுத் திரும்பி வருகையில் அந்த வீடு அவசர அவசர கதியில் புணரமைக்கப் பட்டுக் கொண்டிருந்தது..

"அடடே. ஒரு முறையாவது சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாமே" என்றோர் அங்கலாய்ப்பு  எனக்குள்..

சரி, இந்தத் தருவாயிலாவது ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று அந்த மேஸ்திரியின் அனுமதி வாங்கி, உட்புகுந்தேன்..

அந்த சமையலறையின் ஓரத்தில் ஒரு சின்ன மேடை உண்டு.. அங்கே அமரவைத்துத் தான் எனக்கு, எனது தங்கைக்கு என் அம்மா பருப்பு சாதம் உருட்டி உருட்டி  கதை சொல்லிக் கொண்டு ஊட்டுவாள்..

அந்த மேடை இடிக்கப் பெறுவதற்கான ஆயத்தத்தில் இருந்தது..
'உங்க காலைப் பிடித்து கேட்டுக்கறேன் .. அந்த மேடையை அப்டியே விட்டு வையுங்கள் ' என்று கேட்கத் தோன்றியது.. ஆனால் அப்படிக் கேட்டிருந்தால், நானே எனக்கு  லூஸாகப்  புரிபட்டிருப்பேன்.. !!?

2 comments:

  1. சொந்த வீடோ வாடகை வீடோ! பிரிந்த பின் திரும்ப அங்கு செல்லும் போது பழையநினைவுகள் நம்மை வசீகரிக்கும்! சிறப்பானதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...