Sunday, March 30, 2014

புதுசா எதையும் சொல்லலை....!

பொதுமக்களின் பொதுவான குணாதிசயங்கள் சுலபத்தில் அசூயை கொள்ளச் செய்வது வேதனையே..
அவ்வாறு அசூயை கொள்பவர்களும் மக்களே  எனிலும், புறம் நின்று அவ்வித நபர்களை கவனிக்கிற இயல்பில் இருப்பவர்கள் அவர்கள்..

தனது அசிங்கங்களை மற்றொரு நபர் கவனிக்கிறார் என்கிற பிரக்ஞை கூடக் கிஞ்சிற்றும் அற்று அவ்வித தன்மைகளில் தங்களை இயக்குகிற அந்த அற்பப் பிறவிகளை அவர்களது அறிவுக்கே புரியாத வகையில் தான் ஒளிந்திருந்து கவனித்துத் தெரியப் படுத்த வேண்டுமேயன்றி, யதார்த்தமாக அவர்கள் குறித்த தன்மைகளைத் திரட்டுவது என்பது முரமில்லாமல் குருவி பிடிக்கச் சென்ற கதை தான்.. 

கோவில்களில் விசேட காலங்களில் விநியோகிக்கப் படுகிற பிரசாதங்களுக்காக முண்டியடிப்பதும், வரிசையில் பொறுமையாக நிற்கிற வயோதிகர்களையும் குழந்தைகளையும் கருத்தில் கொள்ளாமல், இவர்களது தொன்னை மாத்திரம் நிரம்பினால் போதுமென்கிற சுயநலங்களும், அதனை சிந்தி சிதறிக் கொண்டு சாப்பிடுவதும், நசநசவென்று நடப்பவர்கள் கால்களில் சாதம் மிதிபட்டு ஓர் தாங்கொணா சங்கடம் ஏற்படுத்தும் என்கிற அக்கறை கூட அற்று, அந்த காலித் தொன்னைகளை அதற்கென்று பிரத்யேகமாக ஒதுக்கப் பட்ட கூடைகளில் போடாமல், அப்படியே விசிறி விடுவதும்.... 

பிரசாதங்களுக்கு மட்டும் என்றால் கூடத் தேவலாம்.. கோவிலின்  உள்ளே பூசாரி கொடுக்கிற விபூதிகளுக்கும் கூட இதே ஆர்ப்பாட்டம் தான்.. 

பிறர் விநியோகிப்பதை அமைதியாக வாங்கிச் செல்கிற பொறுமை கூட இல்லாமல் இவர்களுக்கு ஸ்வாமி கோவில்களுக்குள் என்ன வேலை?.. எம்ஜியார் சிவாஜி  படங்கள் ரிலீஸ் ஆன போது இப்படித்தான் முட்டிமோதி அனுமதி சீட்டுப்  பெறுவர் .. கமல் ரஜினி படத்துக்கு, விஜய் அஜீத் படத்துக்கு, .. அதென்னவோ தெரியவில்லை.., முட்டி மோதி அரங்கினுள் நுழைகிற ஆனந்தம்  எதற்கும்  ஈடற்ற ஓர் செய்கை போலும்.. 

தெய்வம் வீற்றிருக்கிற கோவிலுக்குள்ளும் அதே குத்தாட்டம் கும்மாளம் நிகழ்வது  நமது "கலாச்சாரக் கேவலம்" என்று வர்ணித்தாலும் தகும்.. 

உரசி சூடு காண்கிற  சபல புத்திக் காரர்கள் பாடு கூடப் பரவாயில்லை... அவர்களுடைய  திட்டங்கள் செவ்வனே ஈடேறியதும் பிரசாதம் கூட வாங்காமல் நகர்ந்து விடுவார்கள்.. ஆனால், அதுவேண்டும் இதுவேண்டும் என்று பட்டியலோடு வருகிற  பரம பக்தர்களின் ரோதணை தான் சகிக்கவே முடியாத  சமாச்சாரமாகி சாமிக்கே சலிப்பேற்படுத்துகிற  சூழ்நிலை நிலவி விடுகிறது.. 

பேருந்துகளில் பயணிக்கிற பொழுதும் இதே வித அடாவடி மனோபாவத்தில் தான் பயணிக்கிறார்கள்.. வெளியே இருந்து கொண்டே கைக்குட்டைகளை வீசி இடம் பிடிப்பது,  கஷ்டப்பட்டு ஏறுகிற நபர் அவ்விடத்திலே அமர்ந்தாலோ அந்தக் கைக்குட்டை  நபர் வந்து சட்டம் பேசுவதைப் பார்க்கையில்... சிரிப்பதற்கு வாய் மட்டும் போதாது., குண்டியும் வேண்டும்.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...