
காசு
களவாடுவதெனில்
எனக்கு சிரமமிருந்ததில்லை..
என் அப்பா
தொங்கப் போட்ட
அத்தனை சட்டைகளிலும்
எனது ஜேப்படி இருந்தன..
அதற்கென செருப்படி
வாங்கிய அனுபவங்களையும்
தாண்டி எனது ஜேப்படிகள்
தொடர்ந்தன..
"திருந்தாத கபோதி"
என்பதை விருது போல
பெருமிதமாக செருகிக்
கொண்டது எனது இளமை..
செலவுக்கு வேண்டுமென்று
நியாயமாகக் கேட்ட போதெல்லாம்
மறுதலிப்புகள் மட்டுமே
எமக்கு விநியோகிக்கப் பட்டமையால்,
நான் களவாடுவதற்கான
நியாயங்களை நானே
கற்பிக்க நேர்ந்தன..
நான் கேட்டதை மட்டுமே
கொடுத்துப் பழகி இருந்திருந்தார்கள்
என்றால், அவர்களிடமிருந்து
நான் களவாடியதைக் காட்டிலும்
பாதி தான் பெற்றிருப்பேன்..
எமக்குக் களவாடுகிற
புத்தியும் வந்திருக்காது..
அவர்களுக்குக் கஞ்சன்
என்கிற அவப்பெயரும்
கிட்டியிருக்காது...
என் அப்பா இறந்ததற்கு
வராத அழுகை,
அவரது சட்டைப் பாக்கெட்டுகளின்
வெறுமை கண்டு வந்தது ...!
அந்த அழுகைக்கான
வெட்கம் இன்றைக்கும்
என்னைத் தின்று தீர்க்கிறது..
ஆனால் நிச்சயம்
இன்றெல்லாம் நான் அழுவது
என் அப்பா இறந்ததற்காக மட்டுமே.. !!
இருக்கும் போது எந்த அருமையும் தெரிவதில்லை எனபதும் உண்மை தான்...
ReplyDelete