Thursday, October 4, 2012

என் அபிப்ராயம் சரியா??

இளம்பிராயம் சிறுபிள்ளைத் தனங்களின் ஓர் அற்புதத் தளம்..
அந்தத் தளத்தில் நின்றவாறு நமது அனாவசிய சேஷ்டைகளை
அரங்கேற்றினோம்... நமது அதிகப் பிரசங்கங்களை முழங்கித் தீர்த்தோம்..

திருக்குறள் வலியுறுத்திய நாவடக்கம் குறித்த பிரக்ஞையற்று-- வந்தது வார்த்தை என்று வாயோயாமல் உளறிக் கொட்டிக் கிளறி அலப்பறை செய்தோம்... கீ கொடுத்தால் சுற்றுகிற பொம்மைகளாக, தூண்டிவிட்டால் எரிகிற நெருப்பாக, கவைக்குதவாத விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி கறார் பேசி அரசியலாக்கினோம்..

ஆனால் ஓர் இழையில் இந்த மடத்தனங்கள் எல்லாம் நமது அறிவுக்கு "மடத்தனம்" என்று புரிகிற தருணம் எல்லாருக்கும் வாய்க்கும்... அப்போதைய நமது தர்மசங்கடங்களின் வீச்சு மழைக்கால மின்னலின் அதீதத் தன்மையோடு நம்மில் பதுங்கி நம்மைக் கிடுகிடுக்க வைக்கக் கூடுமென்றே எனக்குத் தோன்றுகிறது...

அவ்வித சிறுபிள்ளைத் தனங்களை அடையாளம் காணமுடியாமல் கூட சிலரது வளர்ச்சி இருந்துவிடுமோ என்றொரு சந்தேகம் எனக்குண்டு... அப்படியாயின் அது சாபமென்றே கருதுகிறேன்... அப்படி அடையாளம் காணவே முடியாத வகையில் அவனது வளர்ச்சி இருக்கும் பட்சத்தில்  அது வளர்ச்சி என்று கொள்ளவே லாயக்கில்லை என்றும் , அவன் இன்னும் அந்த சிறுபிள்ளைத்தனங்களின் இழையினின்று  அறுபடவில்லை என்றுமே அனுமானிக்க வேண்டியுள்ளது..

அவன் தான் கரைவேட்டி கட்டி ராயல் என்பீல்ட் புல்லட்டில் வலம்  வருகிற திவ்யமான அரசியல் வாதி என்று என்னால் அடித்து சொல்லமுடியும்... மனரீதியாக ஓர் பக்குவம் பெற்று நாகரீகமாக நடந்து கொள்கிற மனிதனுக்குக் கூட அவ்வளவு சுலபத்தில் மதிப்போ மரியாதையோ இந்த சமூகத்தில் வந்துவிடுவதில்லை.., ஆனால், இந்தக் கரைவேட்டி ஆசாமிக்கு அலேக்காக எல்லா சீர்வரிசையும் நிகழ்ந்து விடுகிற கொடுமை தமிழ்நாடெங்கிலும் பட்டிதொட்டி எல்லாம் அரங்கேறுகிறது..

வார்டுக் கவுன்சிலர் ஆகிறான் முதற்கண்... பிறகு, எம்.எல்.எ. தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெயிக்கிறான்... எம்.பி ஆகிறான்... இப்படி நீள்கிறது அவனது செல்வாக்கும் அரசியல் வாழ்க்கையும்... வாயும் குண்டியும் சேர்ந்து பேசுகிறான்., தொகுதிக்கு அதை இதை எதையும் தன்னால் செய்து  சாதிக்கமுடியும் என்று பேசி, பேசிய வண்ணமே சாதித்தும் காண்பிக்கிற அவனது மாண்பில் மயங்கி மக்களும் அவனுக்கு சுலபத்தில் அடிபணிந்து விடுகிற  சூழ்நிலை கண்கூடு... அப்புறம் ஓர் கட்டத்தில் மக்களை சந்திக்கவே முடியாத ஓர் பெரும்பதவியில்  அவன் காலடிவைத்து மலரும் நினைவாகக் கூட தனது தொகுதிக்குத் திரும்ப  வந்து தரிசனம் செய்யாத அவனது கயமை மொத்தமாக உணரப்படும்.... இவனையா  இவ்ளோ தூக்கிக் கொண்டாடினோம் என்று லபோதிபோ என்று அடித்துக் கொள்கிற அப்பாவி மக்கா  ஒரு பக்கம்.... , இவன வச்சு நாமுளும் பெரிய ஆளா ஆகிடலாம் என்று கைத்தடி ஆகி, கூஜாவாகி, மானம்கெட்டு மரியாதை கெட்டு .. காசு பணம் மட்டும் கொறபாடு இல்லாத .. பச்சோந்தி வர்க்கம் ஒரு பக்கம்....!!


"

1 comment:

  1. நீங்கள் சொல்லும் உண்மைகள் எங்கும் உண்டு...

    மக்கள் தான் மாற வேண்டும்... மாற்ற வேண்டும்... இல்லையெனில் தீர்க்க முடியாத சாபம் தான்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...