Friday, September 21, 2012

ஏதோ சொல்ல வருகிறேன்..

எல்லாம் மாயை என்கிற சித்தாந்தம் இந்த வாழ்வு குறித்த ஓர் வகையான வெறுமையான அபிப்ராயமேயன்றி, அவ்வித சித்தாந்தம் அப்படி ஒன்றும் ஆரோக்கியமான தன்மையாகத் தெரியவில்லை...

எவ்வளவோ அரிய பெரிய சாதனையாளர்கள் எல்லாம் இவ்விதமாக எதிர்மறையாக இந்த வாழ்வினை அனுசரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடைய சாதனை நிச்சயம் சாத்தியப் பட்டிருக்காது.. 

சாதிக்க வேண்டுமென்கிற அக்கறை அற்றவர்களும் சாதிப்பதை தனது பிரக்ஞையுள் கொணர்ந்திராதவர்களுமே இவ்வித அற்ப முடிவினை உடனடியாக எடுத்து கவிதையும் கதையும் புனைந்து கொண்டிருப்பர்....

நமது பிரபஞ்சம் நவகோள்களுள் ஒன்றென்பதையும், மற்ற எட்டுக் கோள்களும் மனிதர்கள் வசிக்கும் லாயக்கற்றவை என்பதையும் கண்டுணர்ந்த விஞ்ஞானிகள் மூளை எம்மாத்திரம், தண்ணி அடித்துவிட்டு தனது வீடே மறந்து போய் மல்லாந்து கிடக்கிற அற்ப மனித மூளை எம்மாத்திரம்?..

       
மூளையின் வடிவமும் அதன் இயக்கங்களும் வேண்டுமானால் மாறுபாடற்று இருக்கலாம்... ஆனால் அதன் சிந்திக்கிற ஆற்றலும் திறனும் அதற்குரிய ரசாயனங்களும் வெவ்வேறு வகையறாவில் வியாபித்துள்ளன..

பிரக்ஞை தொலைந்து மல்லாந்து மாயை என்று உளறுபவன் உளறலை ஏற்பது நமது   கேனத்தனம் ...
விண்வெளியில் அன்றாடம் நிகழ்கிற பற்பல அற்புதங்களை செய்தியாகப் படிப்பதற்கும் கேட்பதற்கும் கூட ஓர் மனநிலையற்று எருமைமாடு  கணக்காக நம்மையும் அறியாமல்  நாமெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நிதர்சன  உண்மை..

Monday, September 17, 2012

முக்கிய அறிவிப்பு..

நீர்நிலைகளை அசிங்கப் படுத்துவதிலும், பார்த்தாலே அருவருத்துக் குமட்டி வாந்தி எடுக்க வைப்பதிலும் இந்தியர்களுக்கு ஈடு இந்தியர்களே என்பது எனது அசைக்க முடியாத வாதம்..

அமாவாசை நாளில் இறந்து போன நமது முன்னோர் வரக்கூடும் என்கிற ஓர் அனுமானத்தில் ஆற்றோரங்களில் அனுஷ்டிக்கப் படுகிற சடங்குகள் .. தர்மசங்கடங்கள்... நமது எல்லா அசிங்கங்களையும் நீரில் விட்டொழிக்க வேண்டுமென்கிற  விடாப்பிடியான நமது மூட நம்பிக்கைகள்...

நீரில் விட்டுவிட்டால் நம் எல்லா பாவங்களும் தொலைவதான கேவலமான ஓர் ஐதீகம்... 
மனோவியல் ரீதியாக நாம் சுலபத்தில் இயங்குவோம் என்பதை இந்த விற்பன்னர்கள் நன்குணர்ந்து வைத்துள்ளனர்... ஆதலால் தான் மிக சுலபத்தில் அங்குமிங்குமெங்கிலுமாக நாமெல்லாம் ஆட்டுவிக்கப் படுகிறோம்..

இவ்வித மூடத் தனங்கள் குறித்து சிலர் ஓர் வித அசூயையுடனும், இதற்கு நாமும் பலிகடா ஆகிவிடக் கூடாதென்கிற அதி பிரக்ஞையுடனும் இருந்தாலுமே கூட அவரது அருகாமையில் அவரையும் அவரது அபிப்ராயங்களையும் குழிதோண்டி புதைப்பதற்கென்றே சில ஜன்மாக்கள் வலம் வரும்... அவைகளின் கண்டிப்பை மீறமுடியாத ஓர் மாய வலையம் நம்மீது பின்னப்பட்டு ... கடைசியில் ... தண்ணி தெளித்து ஆடு தலையை ஆட்டியே விடுவது போல ... ஓங்கி ஒரே போடில் முண்டத்தை தனியாகத் துடிக்க வைத்து ரசிப்பார்கள் படுபாவிகள்...

ஓர் அறிவுப் பூர்வமான ஆக்கப் பூர்வமான மனிதனே ஈரத்துணியோடு அரசமர விநாயகனை  வலம் வந்துகொண்டிருப்பான், பற்கள் கிடுகிடுக்க..

என்னவோ கருமத்தை செய்து விட்டுப் போ... நதியை ஏனடா நாசமாய்ப் போக வைக்கிறாய்? .. 

வெளிநாட்டு நீர்நிலைகளை கவனி.. அதன் தூய்மை.. அதன் மேன்மை... அங்கெல்லாம் எவரும் சாவதில்லையா? அமாவாசை வருவதில்லையா? அப்படி இருந்தும்  எவ்வித அசிங்கங்களும் நிகழ்வதில்லை... 

ஜப்பானின் பைக்கை காரை தன்வசப் படுத்தி பந்தா காண்பிக்க மாத்திரம் மனசு  பாடுபடுகிறதே தவிர , அவர்களது தனிமனித ஒழுக்கத்தை, சுகாதாரத்தை, சுயமரியாதையை கடைபிடிக்க வேண்டுமென்கிற உணர்ச்சி நம்மில்  மேலோங்காதது , ஓர் கீழ்த்தரமான செயல் என்பது கூட நமக்கு  உறைப்பதில்லை... 

Friday, September 14, 2012

அபத்தம்...

மிக நான் உன்னிடம்
எதிர்பார்த்ததெல்லாம்
என் மீதான காதல்
கலந்த பார்வைகளை
மாத்திரமே...

உன்னைக் கவிழ்த்துவிட்டதாக
நம்பிக்கையோடு சொன்ன
என்னை
-விருந்து வைக்கச் சொல்லி
நச்சரித்து
இன்பமாகத் துன்புறுத்தியது
நண்பர் குழாம்...

இந்தக் கூத்தெல்லாம்
நடந்து முடிந்து
கிட்டத்தட்ட இரண்டொரு
ஆண்டுகள் கழிந்துவிட்டன...

இன்றைக்கு
என் மனைவி நீ இல்லை..வேறொருத்தி..
உன் கணவன்-
அன்று எனது காதல் வெற்றிக்காக
நச்சரித்து விருந்து வைக்க
சொன்ன நண்பர்களில் ஒருவன்..


Wednesday, September 12, 2012

நான் எழுதாத இரண்டு நல்ல கவிதைகள்..

ஒரு சிறு அழகிய கவிதை..


மழையில் நனைந்த போது --
 பார்ப்பவர்கள் 
என்னைத் திட்டினர்...

என் தலையைத் 
துவட்டியபடி 
மழையைத் திட்டினாள் 
என் அம்மா..

மற்றுமொரு கவிதை....  தனக்குச் 
                                                   சோறூட்ட வருகிற 
                                                    பிஞ்சு விரல்களை 
                                                     ரசித்துக் கொண்டே 
                                                      உண்ண மறக்கின்றன 
                                                       பிளாஸ்டிக் பொம்மைகள்.

இந்தவாரக் குங்குமம் இதழில் மேற்கண்ட இரண்டு கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.. மிகவும் ரசித்தேன்.

வழக்கமாக நான் விகடன் தவிர எந்த வார இதழ்களும் வாசிப்பதில்லை.. விகடனைக் கூட மிக அரிதாக, கைக்குக் கிடைக்கிற பட்சத்தில் மட்டுமே ..
அதிலும் நான் எந்தக் கவிதைகளையும் தேடித் பிடித்து படிப்பவனல்ல..
அதையும் தாண்டி இவை என் கண்ணில் பட்டு என்னை மிக ரசிக்க வைத்தன . இனி, மற்ற பத்திரிகைகளையும் படிக்க வேண்டும், மற்ற கவிதைகளையும் தேடித் பிடித்து படிக்கவேண்டும் என்ற ஆசைகளைத் தூண்டிவிட்டன, குங்கமும் அதன் இரண்டு சிறு கவிதைகளும்...

ஆனால் நான் சோம்பேறி .. அப்படி எல்லாம் படிப்பேன் என்று எனக்கே நம்பிக்கை இல்லை .. பார்ப்போம்.




























Monday, September 10, 2012

புதிய பார்வை..



இந்தப் புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
நிச்சயம் ஓர்
சந்தோஷமான கவிதை
வரப்போவதில்லை...

ஆனால் இந்தப்
புகைப்படத்திலுள்ள
குழந்தைகளுக்குப்
போல சந்தோஷம்
வேறாருக்கும்
இருக்கப் போவதுமில்லை...

இந்தப் புகைப்
படத்திற்கு முந்தைய
இதற்குப் பிந்தைய...
இவர்களது அவகாசங்கள்
யாவும் சத்தியமாக
ஆனந்தக் குறைபாடற்றுத்
தான் இருந்திருக்கக் கூடும்...

ஆனால்
கவிதை எழுதுகிற நாம்
இவர்கள் சேற்றில்
விழுந்துவிட்டதாகப்
புனைகிறோம்...
இவர்கள் கவலைப்
படுவதாக
கவிதையை நடிக்க
வைக்கிறோம்...

இவர்களுக்கு அறிவு வந்து
வாழ்நாளில் இவர்கள்
அறிகிற கவலை
என்பது ... நாமெல்லாம்
அனுபவிக்கிற
பெருங்கவலைகளின்
சிறு துகள்களே அன்றி
வேறொன்றுமல்ல...

என்ன.. நாமெல்லாம்
காருக்குள் அழுதுகொண்டு
போய்க் கொண்டிருப்போம்..
இவர்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
தேரிழுப்பவர்கள்....!!
--------*************--------

Saturday, September 8, 2012

தாடிக் கொம்பு..

முதல் முறையாக திண்டுக்கல் அருகே அமைந்துள்ள சௌந்தர ராசப் பெருமாள் கோவில் அமைந்துள்ள தாடிக்கொம்பு என்ற இடம் சென்றிருந்தேன்.. தேய்பிறை அஷ்டமிக்கு அங்கே இருக்கிற பைரவர் மிக விசேஷம் என்று சொல்லக் கேள்வி. .. பொதுவாக பைரவர் ஈஸ்வரர் கோவில்களில் தான் வீற்றிருப்பார்.. ஆனால் இங்கே பெருமாள் கோவிலில் இருப்பது தான் இவ்வளவு விசேஷத்துக்கு காரணமாக அமைந்ததோ என்னவோ..18

கூட்டம் அப்படி மொயப்பதைப் பார்த்தால் பெருமாளும் பைரவரும் கீழிறங்கி வந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ....
அடேங்கப்பா... என்று வியக்கத் தூண்டுமளவு சும்மா கூட்டம் அப்படி பம்முகிறது... 
2619152228
நாமெங்கே பார்க்கப் போகிறோம் என்று ஓர் சந்தேகம் வரவே, சரி திரும்பி விடுவோம் என்று யோசிக்கத் துவங்கி விட்டேன்... 
திருப்பூரிலிருந்து மெனக்கெட்டு இம்புட்டு தூரம் வந்துட்டோம், பார்க்காமப் போனா என்ன அர்த்தம்... மறுபடி இனி எப்ப வருவோம்?.. அல்லது வருவதென்பது என்ன நிச்சயம்?.. இப்படியெல்லாம் அறிவுப் பூர்வமாகத் தோன்றவே , எப்டியாச்சும் தரிசனம் பண்ணிட்டே போயிடலாம் என்று முடிவெடுத்து , சௌந்தரராசப் பெருமாள், சௌந்தரவல்லித் தாயார், காலப் பைரவர் என்று .. ஒரே ஸ்ட்ரோக்கில் மூவரையும் தரிசித்தாயிற்று.. வெளியே வந்தாயிற்று..24

எல்லா விஷயங்களும் இப்படித்தான்.. நாம் பார்த்து என்ன முடிவெடுக்கிறோமோ, அது தான் அங்கே நடக்கிறது.. . 
முடியாது நடக்காதென்று முடிவேடுத்தோ மேயா னால் .. அது முடிகிற மாதிரி இருந்தால் கூட  முடியாமலே போய் விடும்..
சத்தியமாக முடியாது என்றாலும் , முடியுமென்று ஓர் முடிவை எடுத்த் விட்டால்  அது முடிந்தே விடும்... 
இதொன்றும் புதுத் தத்துவம் போல தெரியவில்லை.. மிக யதார்த்தமான ஒரு நடைமுறை என்றே எனக்குத் தோன்றுகிறது.. 

ஓர் கூட்டமில்லாத நாளில் இந்தக் கோவில் சென்றிருந்தால் இவ்வளவு தத்துவங்களுக்கு இங்கே  வேலை இல்லை .. எல்லா சாமிகளும் ப்ரீ யாக இருப்பார்கள், நாமும் அப்டியே ஹாயாக தரிசித்து விட்டு வந்திருக்கலாம்... ஆனால் இந்த நம்பிக்கை சம்பந்தமான எந்தக் கண்செப்டுகளும்  உதயமாகி இருக்காது... ஹிஹி..
27

காதலின் அடுத்த தளம்..

அங்கும் இங்குமாக காதலர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஓர் தீரா ஏக்கம்... நமக்கிந்த சுகந்த அனுபவம் வாய்க்காமல் போயிற்றே என்று...
அதற்கான மெனக்கெடல்கள் என்வசம் இல்லை என்று முழுதுமாக சொல்லி விட முடியாது... என் மெனக்கெடல்கள் யாவும் நனைந்த பட்டாசுக்கு நெருப்பைச் செருக முயன்ற மாதிரியே அன்றி வெடிக்கத் தயாரிலிருந்த பட்டாசுகளுக்கு நெருப்பை  நான் காட்டவில்லை... கால ஈரத்தில் அவை நமுத்துப் போயின நாளடைவில்... பட்டாசும் நமுத்து தீக்குச்சியும் நமுத்து ....

என் காதலை வர்ணிக்க முனைகையில்-- என் பேனா- காகிதம், இப்போது இந்த கணினி .. எல்லாமே சத்தமில்லாமல் எங்கேனும் ஓர் மூலையில் மூக்கை சிந்தி அழுதவண்ணம் இருக்கக் கூடுமென்பது எனதெண்ணம்..

ஒரு ஒடுங்குன டப்பா மூஞ்சியை வைத்துக் கொண்டு ஒய்யாரமான ஒருத்தியைக் கவிழ்த்துப் போட்ட அவனுடைய சாதுரியம் எனக்கு அதிசயம், ஆச்சர்யம்... என்ன தேஜஸ் அவனிடம் கண்டாள்  அந்த அழகிய பெண்?.. அவளது கால் தூசின் சமானம் கூட அவன் இல்லை, ஆனால் அவனில் லயித்து...,  தன்னை முழுதுமாக அவனுள் புதைத்து... காதல் புரிகிறாளே ...! செய்வதறியாது திகைக்கிறேன்..!!

-இந்தத் திகைப்பு ஏதோ ஒரு ஜோடியை மட்டுமே கண்டல்ல... ஏகப்பட்ட ஜோடிகள் இந்த தினுசில் தான் இருக்கின்றன...
எக்ஸ்க்ளூஸீ வாக ரெண்டொரு ஜோடி மட்டுமே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும்... அதிலொரு ஆத்மதிருப்தி...
எது எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு மனசு போகுதா?.. நமக்குத்தான் இதெல்லாம் வாய்க்கலே.. வாய்ச்சதாவது  வெளங்குதான்னு ஒரு நோட்டம்    போடறதுல ஒரு  த்ரில்..

இந்தப் பெண் நமக்கு கிடைப்பாளா?.. இவளது தேகம் நம் சொந்தமாகி, இவளை முழுதுமாக வருடி இன்ப ரசத்தில் கிறங்கும் தருணம் நிகழுமா?.. அல்லது எல்லாமே வெறும் ஆசை கற்பனையோடு  முடிவு பெற்று விடுமா?.. ஹய்யோ.."
என்றெல்லாம் சதா கவலை கொண்டு, பசித்தும்  சாப்பிடாமல் படுத்தும் உறங்காமல்,  குளிக்கத் தோன்றாமல், குளிப்பதை நிறுத்த முடியாமல்... இப்படியான பேரவஸ்தைகளுக்குப் பிற்பாடு அந்தப் பெண் தனது மனைவியாக அமைந்தால்..? அதற்கீடு இவ்வுலகில் வேறொன்றுண்டோ??

மனைவி பேரழகியாகக் கிடைத்த பிற்பாடு அவளைக் காதலிக்கிற சுகம் கூட ரெண்டாம் பட்சம் தான்.. முந்தைய அனுபவத்தை ஒப்பிடும் போது ...

ஆனால் காதல்கள் ஆரம்பத்தில் மட்டுமே  கிறக்கம்  நிரம்பி வழிவதாகவும் ஆன் தி வே .. குண்டி துடைக்கிற கல்லாக மாறி நிற்பதை கண்கூடாகப் பார்க்கிறோம், பல இடங்களில்...

பெற்றோரின் மானக்கேடான உணர்வுகளும் அதன் நிமித்தமான சபிப்புகளும் தங்கள் குழந்தைகளை அந்த கதிக்கு நிறுத்தி விடுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றும் அளவு காதலர்களின் வாழ்வு வளமிழந்து போய் விடுவது சற்று வேதனையே..

ஆனால் நகை விற்கிற விலையைப் பார்த்தால், என்னைப் போல-- காதலிக்க வராத குழந்தைகளைக்  கண்டு பெற்றோரே கவலைப் படுமளவு காலம் மாறுகிறதோ என்று  கவலையோடு சிரிக்க நேர்கிறது...

"ஹேய் .. எரும மாடே.. அவன் உன்னைப் பார்த்து எவ்ளோ அழகா ஸ்மைல் பண்ணினான்.. நீ என்ன லூசு மாதிரி எந்த ரியாக்ஷனும் இல்லாம போயிட்டிருக்கே?"
இப்படி, தாய் மகளை -காதலிக்காததற்கு- சங்கடப்பட்டு சலித்துக் கொள்கிற காலம் நெருங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது, விண்ணை முட்டுகிற விலைவாசிகளும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எகிறிக் கொண்டிருக்கிற நகை விலையும் ..

Tuesday, September 4, 2012

மானங்கெட்ட காதலன்..

உன் முகவரி
தெரியாதெனிலும்
உனக்குக் கடிதம்
எழுதாமலிருக்க
எனக்கு முடியவில்லை...

அன்றைய நாட்களில்
உன் முகவரி
தெரிந்து நானே
உமது இருப்பிடம்
வந்துபோவதுண்டு...

ஓர் தருணமதில்
என்ன காரணமோ
தகவல் தெரிவிக்காமல்
நீ பெயர்ந்து விட்டாய்
ஓர் எதிர்பாரா இரவில்...

உன் அப்பாவின்
கடன்சுமை என்று
காரணம் சொல்லினர்
அருகிலிருந்தோர்..

ஒரு வார்த்தை
என்னிடம் சொல்லி
இருந்திருக்கலாம்..

நானும்
வந்திருப்பேன்..
உங்களோடே .,
உன்னோடே ...!!


Saturday, September 1, 2012

மூக்கைப் பிடித்துக் கொண்டே படிக்கவும்..

னித வாழ்வின் அன்றாட அவலங்களில் ஓர் பகுதியாக தனது காலைக் கடன்களைக் கழிக்க கியூ கட்டி நிற்பதை சொல்லவேண்டும்..

சாப்பிடுவதற்காக அன்னதான விழாக்களில் வரிசை போட்டு நிற்கிற கூட்டத்தைப் பார்க்கவே என்னடா பொழப்பிது என்பதாக உறுமத் தோன்றுகிறது...

 உண்டதைக் கழிக்கவும் இப்படி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கையில் சிலரது வாழ்க்கை எவ்ளோ அவஸ்தைகளுள் நித்தமும் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது..

இவர்களுக்கெல்லாம் வயிற்றுப் போக்கு வந்தால் என்ன செய்வார்கள்?.. அதுவும் ஒரு முறை உள்ளே சென்று சிறுநீர் கழித்து விட்டு வரவே ரூ.மூன்றிலிருந்து ஐந்து வரைக் கொடுத்தாக வேண்டியுள்ளது... வயிற்றுபோக்கு சொஸ்தமாக சிகிச்சை மேற்கொள்வார்களா அல்லது அந்தக் காசை இந்தக் கக்கூசிலேயே இன்வெஸ்ட் செய்து முடித்து விடுவார்களா?

நவீன மயமாக்கப் பட்ட கழிப்பிடம் என்கிற தலைப்போடு அங்கங்கே வீற்றிருக்கிற இம்மாதிரியான பொதுக் கழிப்பிடங்கள் உண்மையாகவே அவர்கள் அறிவித்த டைட்டில் மாதிரி நவீனமயமாக்கப் பட்டிருந்தாலுமே கூட நமது பொதுமக்கள் அவர்களுக்குத் தெரிந்த பாணியில் வேறு விதமாக நவீனப் படுத்திவிட்டு வருவார்கள்..

அற்ப விஷயங்களுக்கெல்லாம் அருவருத்து முகம் சுழிக்கிற ஏராள நபர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் இங்கே அசந்தர்ப்பமாக விசிட் அடிக்க நேர்ந்தால், அவ்ளோதான்...

ஆனால் இது குறித்தெல்லாம் நன்கு பழகிப்போன ஏராளமானோர், தனது கடமையில் மாத்திரமே  மனசை செலுத்தி எவ்வித முகச்சுழிப்புகளுமற்று இறக்கிவைத்த இறுமாப்போடு  புன்னகை தவழ வெளிவருவதைப் பார்த்தால்    நிச்சயமாகவே நவீனமயமாகப் பட்டுள்ளதோ என்று தான் தோன்றும், புதிதாக வரிசையில் நிற்கிற நபருக்கு..

அந்த நபர் உள்ளே என்ட்ரி ஆகிறபோது தான் விஷயம் புரியும்.."உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லையாடா..:: '"என்று  உள்ளே உரத்துக் கதறுவது அவருக்கு மட்டுமே கேட்கிற அபஸ்வரம்..

அமெரிக்காவின் ஜப்பானின் சீனாவின் ஆஸ்திரேலியாவின் சுவிட்சர்லாந்தின் .. இப்படி எந்த நாடுகளின் பொதுக் கக்கூசும் சத்தியமாக இப்படி எல்லாம் இருக்காதென்று எந்தப் படிப்பறிவும் அற்ற  பாமரனும் அறிவான்... ஆனால் இன்னும் சில வருடங்களில்... என்னது.. வல்லரசாகப் போகிற இந்தியாவின் நிலை இப்படி  இருக்கிறது..ஒருக்கால் வல்லரசானால் இந்த அசிங்கங்கள் அகன்று விடுமோ?

ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் வெண்கலம் பெறுவதையே பெருமிதமாக கொண்டாடுகிற  நாமெங்கே?.. தங்கங்களின் எண்ணிக்கையே எல்லைமீறி எகிறும் சீனாவும் அமெரிக்காவும் எங்கே?

அடிப்படையில் ஒவ்வொரு பிரஜைக்கும் சுகாதாரத்தைப் பயிற்றுவிப்பதே இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.. இதிலே, பதக்கங்களைப் பெற எப்படி சாத்தியமாகும்..

நல்ல நல்ல விஷயங்களை அடைய நாம் இன்னும் கடக்க வேண்டிய பாதை இன்னும் நெடுந்தொலைவு உள்ளது... ஆனால் கவர்ச்சி விளம்பரம் போல, அல்லது ஓர்  வதந்தி போல.. இந்தியா வல்லரசாகப் போகிறது .. இதோ, இதோ இன்னும் .. கொஞ்ச காலத்தில்... இதோ இதோ..நெருங்கிவிட்டது..இன்னும் சில நாட்களில்.. என்று கூவுகிறோம்...

இப்படி ஓர் தாக்கத்தை ஏறுபடுத்தியாவது நம் நாட்டை உயர்த்த வேண்டும் என்கிற  நோக்கில் இவ்விதம் வதந்தி பரப்புபவர்கள் செயல்படுவதாகத் தோன்றுகிறது... அப்படியாயின், அது கூட வரவேற்க உகந்த ஒன்றே..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...