ஓர் தத்துவ மேதை போல ஏதாவது சொல்வதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை... வெறுமனே சொன்னால் போதும்... ஆனால் அதை செய்வதற்குத் தான் அதிகம் உழைப்பு தேவைப் படுகிறது... செய்வதில் உள்ள உழைப்பு சொல்வதிலும் தேவை என்ற பட்சத்தில் .. நான் அநேகமாக வாயை இறுக மூடிக் கொண்டிருப்பேன் .. ஹிஹி..
நிலைபெறாமை குறித்த சுவடுகள் எல்லாரும் அறிந்ததே எனிலும், தானும் அவ்வித சுவடுகளோடு பின்னாளில் மற்றொருவரால் உணரப்படுவோம் என்கிற சிந்தனை, பிரக்ஞை அநேகமாக -வாழ்கிற நாட்களில்- எவருக்குமே பிடிபடுவதே இல்லை என்று உத்தரவாதமாக சொல்லலாமென்றே தோன்றுகிறது..
நிரந்தரம் மாயை என்கிற உண்மை விளங்குவதில்லை என்பதோடு, தற்காலிகமே நிரந்தரம் என்கிற நிதர்சன உண்மை, சுடுவதாகவும் தவிர்க்கப் படவேண்டியதாகவும் எல்லாரிலும் மிகவும் படிந்து கிடப்பது ஆச்சர்யமானது...
வாழ்கிற நாட்களில் எதற்கு இல்லாமை குறித்த இத்தனை விளக்கங்கள்?.. இருக்கிற ஒவ்வொரு நாளும் லாபம் என்கிற உற்சாகத்தில் கைகொட்டி கும்மியடித்து ஆனந்தக் கூத்தாடுவதை விடுத்து எதற்கிந்த எதிர்கால நிகழ்வு குறித்த பீதி கலந்த கவலை??.. எதுவும் நிலை இல்லை என்கிற பற்றற்ற வாழ்வை விடவும் , பண ஆசை, பொருளாசை, அந்த ஆசை இந்த ஆசை என்று அபரிமிதமான ஆசைகளின் பட்டியல்களோடு இந்த வாழ்வினை கொண்டாட வேண்டுமே அன்றி... எல்லாம் பொய், எல்லாம் மாயை, எதுவும் நிரந்தரம் அல்ல என்கிற சித்தாந்தகளோடு சிறகுகளை முறித்துக் கொள்வதில், மேற்கொண்டு பறக்கும் நோக்கற்று விந்திக் கொண்டிருப்பது அசுவாரசியமானது என்றே தோன்றுகிறது ...
பகுத்தறிவோடு வெறுமனே சிந்திப்பதற்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு... சிந்திப்பதையே உன்னதமென்கிற மாயையில் திளைப்போர் அதிகம்... அதனையே அந்த நபர்கள் செய்ய ஆரம்பிக்கையில் வழக்கமான முட்டாள் தனங்களோடு தான் தங்கள் காரியம் அரங்கேறி இருக்கிறது என்கிற விஷயம் அறிவுக்கு உறைக்கையில்.. தங்கள் உயர்ந்த சிந்தனைகள் மீதாக இயல்பானதோர் அவநம்பிக்கை வர ஏதுவாகிறது..
வாழ்வு நெடுக இவ்வித முரண்களோடும் , நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கைகளோடுமே பயணிக்க வேண்டியுள்ளது...