Saturday, December 17, 2011

உடையாத கண்ணாடிகளும் உடைபட்ட பிம்பங்களும்...


 


 ட

இளம்ப்ராயங்களில்
-- என் வீட்டின்
கண்ணாடிகளில்
என் போன்ற இன்னொரு
மனிதன் உள்ளிருப்பதான
எனது கற்பனை
எனக்குள் ஓர் அற்புத
உணர்வுக் கிளர்ச்சியை
நிகழ்த்திக் கொண்டிருந்த
ஞாபகங்கள் இன்றுமுண்டு...


கண்ணில் பீளையும்
வாயில் ஜொள்ளும்
வறண்டு கிடக்கிற
என் அதிகாலை முகத்தை..

பல்துலக்கி
குளியல் முடித்து
உடலீரத்தை ஒற்றி
எடுத்த தேஜஸ் முகத்தை...

சாப்பிட்ட பின்
பள்ளி செல்லும் துரிதத்தில்
திட்டுத் திட்டாய்
காய்ந்து கிடக்கிற
பவுடரப்பிய முகத்தை...

---என்று எனது
எல்லா வகையறா
முகங்களையும்
முகஞ்சுழிக்காமல்
பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும்
என் வீட்டின் கண்ணாடிகள்...

வகுப்பறையில்
உட்கார்ந்து கொண்டு
எனது பிம்ப ஞாபகங்களில்
நானிருப்பேன்...
நான் தான் பள்ளிவந்து
சிரமப் படுவதாகவும்
என் பிம்பங்கள் எனது
வீட்டில் ஜாலியாக
இருக்கக் கூடுமென்று
விபரீதக் கற்பனை
செய்து கொண்டிருப்பேன்...

சாயங்காலம்
மறுபடி என் பிம்பங்களை
சந்திக்கிற ஆவலில்
நான் திரும்ப வீடு வருவேன்...


பள்ளிவிடுமுறை நாட்களிலும்,
காய்ச்சல் வந்து
பள்ளி செல்லாத நாட்களிலும்
என் போலவே
என் பிம்பங்களும்
என்னோடு விளையாடிக்
கொண்டிருக்கும்..!!


அதே கண்ணாடிகள்
இன்றும் எனது வீட்டில்
ரசம் போய் ஒதுக்கப்
பட்டுக் கிடக்கின்றன...
என் புதுக் கண்ணாடிகள்
யாவும் இன்றெனது
பகுத்தறிவு பிம்பங்களைப்
பிரதிபலிக்கின்றன...
--ஆனால் நான் மட்டும்
ரசம் போய்க் கிடக்கிறேன்...
எனது வீட்டின்
பழைய கண்ணாடிகள் போலவே..!!!

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...