Wednesday, December 28, 2011

வெறியில்லாமல்------ காமம் குறித்து ....!!

காம இச்சை குறித்து ஏதேனும் எழுத வேண்டும் என்கிற கங்கணம் ரொம்ப நாளாக...
மிக இயல்பான, யதார்த்தமான உணர்வது என்ற போதிலும், ஏனோ மற்ற உணர்வுகளோடு ஒப்பிடும் யோக்யதை இல்லாதது போலவும், அநாகரிகம் போலவும் ஓர் மாயையை ஏற்படுத்துகிற விபரீதம் காம உணர்வுக்கு அதிகம் உள்ளது...

மனிதன் பூத்தெழ அதுவே ஆதார ஸ்ருதியான உணர்வு... எல்லா ஜீவராசிகளின் ஆதார ஸ்ருதியும் கூட..
ஒன்றிலிருந்து ஐந்தறிவு வரையிலான ஜீவராசிகளின் புணர்ச்சிகளோ , ஆளிங்கனங்களோ, அருவருப்பாகவோ ஆபாசமாகவோ புரிபடுவதில்லை நமது ஆறறிவுக்கு..!.


 மாறாக அவைகள் கவிதையாக, ரசிக்கிற சுவாரஸ்யத்திலுமாக நம்மைக் குதூகலத்திலும் ஆனந்தத்திலும் கொண்டாடச் செய்கிறது..
மனித காமம் மாத்திரம் மனிதனுக்கே நாலந்தரமாகவும், கீழ்த்தர உணர்வாகவும் புரிபடுகிறது... ஆனால் கண்டிப்பாக அந்தரங்கத்தில் ஒவ்வொரு மனிதனும் காமவயப்படுகையில் மிகச் சீராக இயங்குபவனாக, புதுரத்தம் பாய்பவனாக, இதயம் சார்ந்த நோய்கள் குணமடைவதாக அறிவியல் ஆய்வுகள் நிர்ணயிக்கின்றன... பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு செக்ஸ் சர்வே எடுத்து அதனை கவர் ஸ்டோரி போட்டு, சர்குலேஷனை அதிகப் படுத்தி வழக்கத்துக்கு மாறாக விற்பனையில் சரித்திரம் படைக்கிற வியாபார உத்தி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..

இப்படியாக மனிதன் காமமே மனிதனுக்கு பெரும்புதிராகவும், மற்றவன் புணர்ச்சியை தரிசிக்கிற ஆர்வம் கொண்டதாகவும் , தன்னால் அவ்விதம் செயல் பட முடியுமா என்கிற கேள்விகளுடனும், முடியும் என்கிற நம்பிக்கையுடனும் , முடியாதென்கிற குற்ற உணர்வுகளுடனும் .... காமம் ஒவ்வொருவனையும் ஒவ்வொரு தகுதியில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது..

தொடர்ந்து இவை குறித்து எழுதலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன்...காமம் கடலை விடப் பெரிது.. கை அடக்கமாக  யாவற்றையும் விளக்கிவிட சாத்யமில்லை... 
அபிப்ராயங்களைப் பின்னூட்டமாக .... பின்னூட்டங்களை அபிப்ராயமாக ...
தெரிவிக்க வேண்டுகிறேன்.. நன்றி..

சுந்தரவடிவேலு..  

Wednesday, December 21, 2011

முதல் நாவல்... முதல் விருது..

காவல் கோட்டம் என்கிற தமிழ் நாவல் இந்த வருடத்தின் சாகித்திய அகாடமி பரிசு பெற்றிருக்கிறது... சு.வெங்கடேசன் என்பவரது முதல் நாவல், மற்றும் அவரது ஒரே நாவல் என்பது ஆச்சர்யமும் சந்தோஷமும் நிரம்பிய தகவல்..

முதல் நாவல், அதனையும் 1048 பக்கங்கள் எழுதி இருப்பது பெரிய சாதனை... அந்த சாதனைக்கு மட்டுமே கூட மற்றொரு விருதினை அவருக்கு அறிவிப்பது சாலப் பொருந்தும்... ஆனால் பலருக்கும் போல  வெறும் பக்கங்களை நிரப்புகிற புத்தி மட்டுமே அவருக்கு இல்லை... மிகப் பெரிய வரலாற்றுப் பதிவினை திணிக்க வேண்டும் என்கிற பிரக்ஞை அற்புதமானது..
A file picture of Tamil novelist Su. Venkatesan who won the Sahitya Akademi award, 2011. Photo: G. Moorthy.
அறிமுகமாகும் போதே இரட்டை வேடங்களில் நடிக்கிற அந்தஸ்து பெற்று விட்டதற்கான அதிர்ஷ்டம் போல ... நாவலும் பெரிது, அதற்கு உயரிய விருதான சாஹித்ய அகாடமி யும் கூட..

மற்றொரு ஆச்சர்யம் யாதெனில், இதுநாள் வரை இப்படி எந்த முதல் நாவலுக்கோ, அறிமுக எழுத்தாளர்களுக்கோ சா. அகாடமி விருது வழங்கியதாக வரலாறு இல்லை...
--ஆக, கொடுப்பவர் வாங்குபவர் அனைத்த தரப்பினருக்கும் இது ஓர் புது வகையறா அனுபவம்..

ஏற்கனவே களத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த விருதுக்காக எதிர்பார்த்துக் கிடந்திருக்கலாம்... குளத்தில் நாரை போல... ஆனால் கழுகாய் வந்து திமிங்கலத்தையே கவ்விக் கொண்டு பறந்து விட்டது போல அமைந்து விட்டது சு.வெங்கடேசன் பெற்ற விருது..

இனி, மேற்கொண்டு எழுதுகிற அதீத பொறுப்பு சு.வெ' வுக்கு கூடியிருக்கக் கூடும்... அதனை தக்க வைக்கிற வல்லன்மை அவருக்கு இருக்கவும் கூடும் என்று அனைவரையும் அனுமானிக்க வைக்கிறார்..

பொதுவாகவே எவை குறித்த வரலாறுகளும் இயல்பாகவே சுவாரசியம் ஊடுருவிக் கிடப்பது... அதே சமயம் வரலாறுகள் உண்மை போன்ற பொய்கள் போலவும் , பொய்கள் போன்ற உண்மைகளாகவும் ஒருங்கே தோற்றமளிப்பவை.. . ஆனால் நம்மை சிலிர்க்க வைப்பதில் வரலாறுகள் கிஞ்சிற்றும் குறைந்தவையல்ல...

கூடிய விரைவில் இவரது நாவலை வாசிக்கிற சூழல் உருவாக வேண்டும்..அதன் பிறகு இன்னும் தீர்மானமாக விமரிசிக்க முனைய வேண்டும்... அதற்கான காலம் அருகாமையிலோ தள்ளியோ.. அறியேன்..!!

வி.சுந்தரவடிவேலு.. 

Saturday, December 17, 2011

உடையாத கண்ணாடிகளும் உடைபட்ட பிம்பங்களும்...


 


 ட

இளம்ப்ராயங்களில்
-- என் வீட்டின்
கண்ணாடிகளில்
என் போன்ற இன்னொரு
மனிதன் உள்ளிருப்பதான
எனது கற்பனை
எனக்குள் ஓர் அற்புத
உணர்வுக் கிளர்ச்சியை
நிகழ்த்திக் கொண்டிருந்த
ஞாபகங்கள் இன்றுமுண்டு...


கண்ணில் பீளையும்
வாயில் ஜொள்ளும்
வறண்டு கிடக்கிற
என் அதிகாலை முகத்தை..

பல்துலக்கி
குளியல் முடித்து
உடலீரத்தை ஒற்றி
எடுத்த தேஜஸ் முகத்தை...

சாப்பிட்ட பின்
பள்ளி செல்லும் துரிதத்தில்
திட்டுத் திட்டாய்
காய்ந்து கிடக்கிற
பவுடரப்பிய முகத்தை...

---என்று எனது
எல்லா வகையறா
முகங்களையும்
முகஞ்சுழிக்காமல்
பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும்
என் வீட்டின் கண்ணாடிகள்...

வகுப்பறையில்
உட்கார்ந்து கொண்டு
எனது பிம்ப ஞாபகங்களில்
நானிருப்பேன்...
நான் தான் பள்ளிவந்து
சிரமப் படுவதாகவும்
என் பிம்பங்கள் எனது
வீட்டில் ஜாலியாக
இருக்கக் கூடுமென்று
விபரீதக் கற்பனை
செய்து கொண்டிருப்பேன்...

சாயங்காலம்
மறுபடி என் பிம்பங்களை
சந்திக்கிற ஆவலில்
நான் திரும்ப வீடு வருவேன்...


பள்ளிவிடுமுறை நாட்களிலும்,
காய்ச்சல் வந்து
பள்ளி செல்லாத நாட்களிலும்
என் போலவே
என் பிம்பங்களும்
என்னோடு விளையாடிக்
கொண்டிருக்கும்..!!


அதே கண்ணாடிகள்
இன்றும் எனது வீட்டில்
ரசம் போய் ஒதுக்கப்
பட்டுக் கிடக்கின்றன...
என் புதுக் கண்ணாடிகள்
யாவும் இன்றெனது
பகுத்தறிவு பிம்பங்களைப்
பிரதிபலிக்கின்றன...
--ஆனால் நான் மட்டும்
ரசம் போய்க் கிடக்கிறேன்...
எனது வீட்டின்
பழைய கண்ணாடிகள் போலவே..!!!

சுந்தரவடிவேலு..

Friday, December 9, 2011

திருப்பூர்.. திருப்பூர்

முந்தைய தேஜஸ் திருப்பூருக்கு என்றைக்குக் கிடைக்கும்? என்கிற கேள்வி, மறுபடி கிடைக்குமா ? என்கிற கேள்வி... கிடைக்கக் கூடிய வாய்ப்பே இல்லையோ? என்கிற சந்தேகக் கேள்வி..
இப்படி கேள்வியின் நாயகனாக விளங்குகிறது இப்போதைய திருப்பூர்...

தீர்மானமாக எவ்வித பதில்களையும் எவராலும் பகிர்ந்தளிக்க முடிவதில்லை என்பதோடு அனுமானமாகக் கூட எதையும் சொல்கிற பொறுமையற்று மௌனித்துக் கிடக்கின்றனர் திருப்பூர் வாசிகள்..

இத்தனை வெறுமையில் சிலரின் அபிப்ராயம், கேட்பவர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கக் கூடும்..." இனி என்னவோ அவளவு தான்னு தோணுது"..
ஆனால் இது பரவாயில்லை.. அதாவது, " இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் ஆகணும் போல"

எது எவ்வாறாயினும் இப்பவுமே கூட, அங்கங்கே மொய்க்கிற கூட்டங்களை இல்லை என்று சொல்வதற்கில்லை... ஆலாய் பறக்கிற நபர்கள் இன்னும் இருக்கிறார்கள்... அவசரமான காரியமே இல்லை என்ற போதிலும் , நிதானமாகப் போனாலே போதும் என்கிற காரியங்களுக்கே பறந்தடித்துக் கொண்டு ஓடுகிற பேய் மனிதர்களும் உண்டு...

இன்னும் சிலரோ, தலை போகிற காரியங்களுக்கே நின்று நிதானமாக , கண்ணில் பெட்டிக் கடை பட்டால், பொறுமையாக ஒரு தம் இழுத்துவிட்டு... அலுவலகம் நெருங்குகையில் ஓர் அவசரமான பாவனை செய்து விட்டு.., "பயங்கர டிராபிக் சார்".. "பையனை ஸ்கூலில் விட்டுவிட்டு " என்று என்ன இழுவை போட்டு சமாளித்தாலும் , அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விடுமளவுக்கு வாங்கிக் கட்டிக் கொள்வர்.. இல்லை இல்லை.. வாங்கி அவிழ்த்து விடுவர்..

திருப்பூரின் தலையெழுத்தே என்னிடம் தான் உள்ளது போல, ரொம்பவும் எதிர்பார்ப்போடு என்னிடம் கூட சிலர் இந்த ஊரின் நிலவரம் குறித்து கேட்கின்றனர்.., ஏதாவது தேறுமா?.. பழைய நிலைமை வருமா?..

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு ஒரு அறிவுப் பூர்வமான , பகுத்தறிவு நிரம்பிய ஓர் பொன்மொழி{?} உள்ளது... அப்படி கண்ணடியில் திருப்பூர் சிதிலமானதாக என் 7 ஆம் அறிவு உணர்கிறது..
தமிழ்நாட்டுல இருக்கற எல்லா ஊர்காரர்களும் திருப்பூர் போனா பொழச்சுக்கலாம் என்கிற ஓர் தீவிர அபிப்ராயத்தில் இங்கே புடைசூழ்ந்த காலம் ஒன்றுண்டு.. இன்றைய சூழலில் அவ்வித அபிப்ராயம் செல்லாத நாலணா காசாகிவிட்டது..

இருந்த போதிலும், அதே நாலணா காசு ஆயிரம் ரூபாயாக மாறிவிடும் சூழல் உருவாகும்.., காலம் அதனை நிகழ்த்தும்...
நம்பிக்கை..நம்பிக்கை... எங்க ஊரை நானே நம்பலைனா அது என்ன பொழப்புங்கோ?  ..

Tuesday, December 6, 2011

கவனக்குறைவுகள்..


...

வானத்தை மூடுகிற
என் பிரயத்தனத்தில்
வீட்டுக் கூரை
ஒழுகுவதை 
கவனிக்கத் தவறி
விட்டேன்....


தெருவில் 
நனையாமல்
குடை பிடித்துக்
கொள்கிற நான்
என் வீட்டினுள்
முழுதுமாக
நனைந்து  விடுகிறேன்..


இப்படித் தான்---
வீட்டினுள் இம்சிக்கிற
எலிக்குப் பொறி
வைக்க மறந்து
வெளியில் இல்லாத
புலிக்கு 
வலை விரிக்கச்
செய்கிறது விதி..!!
!

சுந்தரவடிவேலு                

Monday, December 5, 2011

ஆன்மாவின் அவஸ்தைகள்..



உடல் சாம்பலாவதற்கான
காத்திருப்பில் கிடக்கிறது
ஆன்மா..
வானில் சுதந்திரமாக
திரிந்து பழகிய ஆன்மாவிற்கு
இந்த உடலும், அது
உலவும் பூமியும்
தாங்கொணா சலிப்பையே
தந்த வண்ணமாயுள்ளது..!

நூறாண்டுகள் என்கிற
மனித ஆயுளின்
அறிவியல் நிர்ணயம்
பெருஞ்சிறையாயுள்ளது
ஆன்மாவிற்கு..
இடைப்பட்ட ஆயுட்காலங்களில்
நோயென்றும் விபத்தென்றும்
எவ்வளவோ விஷயங்களை
மரணத்திற்கு அறிமுகப்
படுத்தப் பிரயத்தனிக்கிறது
ஆன்மா..!!

உடலை அதன் வியாதிகளை
குணப்படுத்துகிற மருந்துகள்
மீது ஆன்மாவிற்கு கோபம்..
"சிவபூசையில் கரடி"
என்று புலம்புகிறது தனக்குள்..

அகாலத்தில் மரணத்தை
அறிமுகப் படுத்திய
எவ்வளவோ 
வாலிப ஆன்மாக்கள்
வானில் சுதந்திரமாக
வலம் வர....
"கொள்ளுப் பேத்தி
கல்யாணத்தை கண்ணுல
பார்த்துட்டுப் போயிட்டா
என் ஆத்மா சாந்தியடையும்"
என்கிற
தொண்டுக் கிழங்களை
எரிச்சலோடு
தரிசிக்கின்றன --
இன்னும் பல
மேலெழும்ப அவஸ்தைப்
படுகிற பூமியின்
கிழ ஆன்மாக்கள்..!!










நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...