ஏதாவது மொபெடோ
பைக்கோ அவ்வப்போது
கால்களில் மோதி
அங்கும் இங்குமாக
காயங்கள் நிகழ்ந்த
வண்ணமே உள்ளன..
சைக்கிள் ஸ்டாண்டில்
என் வண்டியை
போட்டுவிட்டு வருகையில்
பக்கம் நின்றிருக்கிற
ஏதாவது வாகனம்
அதன் கூரிய பாகத்தில்
என் கால்களை கீறி
விடுகின்றன..மேல்தோல்
பிய்ந்து ரத்தம் வராமல்
வெண்குஷ்டம் போல
எரிச்சலூட்டுகின்றன..
என்ன மருந்து தடவினாலும்
நான்கு நாட்கள்
ஓர் வலியுடன் இருந்துவிட்டுத்
தான் நகர்கின்றன காயங்கள்..
அப்படி காயப்படுத்துகிற
வாகனங்கள் மீது உடனடியாக
ஓர் எரிச்சல்... அதுபோக
அதன் உரிமையாளன் மீது
ஓர் மகா எரிச்சல்...
ஒழுக்கமில்லாமல் அவன்
நிறுத்தி இருப்பதாக
வாதாடும் மனது மெளனமாக..!
எனது அஜாக்கிரதை குறித்தோ
அனாவசியமான அவசரம் குறித்தோ
ஒருமுறை கூட என்னை நான்
கண்டித்துக்கொண்ட ஞாபகமே இல்லை...
என் வண்டியை
வெளியே எடுத்து வருகையில்
என் வண்டியே என்னை
காயப்படுத்துகிற சந்தர்ப்பங்களும்
நிகழும்...
அப்போது மட்டும் என் வண்டியை
கண்டபடிக்கு திட்டி விட்டு
மன்னிப்பும் கேட்டுவிட்டு
வீடு திரும்பிக்கொண்டிருப்பேன்...!!
சுந்தரவடிவேலு..