மாயை என்பதாக வாழ்க்கை புரிபடுகையில் , பற்றற்ற தன்மைகளை குறி வைக்கிறது மனது..., வாழ்க்கை மீது பற்று அபரிமிதம் ஆகிற பொழுது, மாயை என்பதே புரியாமல் போகிறது...
எல்லா தன்மைகளும், எல்லா நிகழ்வுகளும் ஓர் இழையில் எல்லாருக்கும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது ...
மரணங்களும் மயானங்களுமே பேராசைகளையும் அகம்பாவங்களையும் சற்றேனும், தாற்காலிகமாகவேனும் தணிக்கிற வல்லன்மை கொண்டவையாக உள்ளன...
மற்றபடி மறுபடி வீடு திரும்பி குளித்து விட்டு உள்ளே நுழைகையில், அதே மனவியாதிகள் சுலபத்தில் தொற்றிக் கொள்கின்றன...!!
சிலரைத்தான் "இந்த வாழ்க்கை மாயை" என்கிற கூற்று அபரிமிதமாகத் தாக்கி
புத்தராகவும் , ஞானியாகவும் மாற்றுகிறது...
-- பலரையும் இவ்வித சிந்தனைகள் கிஞ்சிற்று மட்டும் உட்புகுந்து விட்டு உடனடியாக வெளியேறி விடுகிறது...
எந்த லஜ்ஜைகளும் அற்று "ரெண்டு ரூபாய் கூட குறைக்க முடியாது"என்கிற விதத்தில் விவாதம் செய்து வியாபாரத்தில் களமிறங்க முடிகிறது...
ஆனால் அப்படி பேரங்களோடும் விதண்டாவாதங்களோடும் சச்ச்சரவுகளோடும் வாழ்கையில் தான் இந்த வாழ்க்கை உயிர்ப்போடும் உன்னதத்தோடும் புரிபடுகிறது... எல்லாம் மாயை என்று விலகி நிற்பது உயிருடன் புதையுண்டதாக ... அசுவாரஸ்யமாக ..... அநாவசியமானதாக.... இன்னபிற இம்சைகளாக --- உணர்ந்து விட ஏதுவாகிறது...??
மற்ற எல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித உயிர் மகத்தானதாக நாம் பிதற்றிக்கொள்கிறோம்...
--எல்லா உயிரினங்களும் அதனதன் பாஷைகளில் இப்படித்தான் பிதற்றிக்கொள்ளும் என்று அனுமானிக்கிறேன்...
வி. சுந்தரவடிவேலு... ..