Thursday, September 23, 2010

உள்ளொன்று வைத்து...

இன்னொருவன் மனைவி
என்னைப்பார்த்து சிரிப்பதில்
எந்த விபரீதங்களும் இல்லை..
இன்னொருவனைப்பார்த்து
என் மனைவி சிரிப்பதே              
விபரீதமெனக்கு...
--என் மீது எனக்குள்ள
நம்பிக்கை
என் மனைவி மீது
இல்லாதது வினோதமே..

இத்தனைக்கும் நான்
பிறன் மனை புணர்வதற்கான
சந்தர்ப்பம் வாய்க்கையில்
அதனைக்கூட சாதகமாக்கிக்
கொள்கிற ஏற்பாட்டில் இருக்கிறவன்..,
--ஆனால்
தன்னைப்பார்த்து எவனாவது
சிரித்தாலே கூட
அதனை ஓர் புகார் போல
என்னிடம் முறையிடுபவள்
என் மனைவி..
''என் புத்தியை
அவள் தன்மையோடு
ஒப்பீடு செய்கிற யோக்யதையே
கிடையாது'' என்கிற கூற்றில்
ஆணித்தரமாயுள்ளேன்
என்ற போதிலும்
--எவனாவது
பல்லைக் காட்டறான்னு
நீயும்  எங்காச்சும்
இளிச்சுக்கிட்டு நிக்காதே---
என்கிற ஓர் மிரட்டலோடு
வெளிக்கிளம்புவேன்
அனேக சமயங்களில்.....!!!

Tuesday, September 14, 2010

ஆங்கிலத்தில் ஏதேனும் முயலலாம் என்கிற எனது பிரயத்தனம், அநேகமாக அதிகப்பிரசங்கமாக உணரப்படும் என்பதாகவே நான் அபிப்ராயிக்கிறேன்...
அந்த மொழியிலே ஓர் சரளம் வேண்டும் என்பது என் பல நாள் கனா.. இன்னும் அது கனவாகவே என்னில் உலா வந்த வண்ணமுள்ளது..
ஓர் ஆங்கிலப்புலமை வாய்ந்த நபரிடம் வாட் இஸ் யுவர் நேம் என்பதை மாத்திரம் உத்தரவாதமாக என்னால் கேட்க முடியும்... மற்றபடி அவரது புலமைக்கு ஈடு கொடுக்கும் வகையில் தொடர்ந்து உரையாற்றுகிற திராணி என்னிடம் இல்லை..

இதற்காக குற்ற உணர்வில் பரிதவித்த காலங்கள் உண்டு.. இன்றெல்லாம் தமிழை மறக்காமல் இருந்தாலே பெரிய விஷயம் என்கிற பக்குவம் {?} வந்து விட்டது..

இப்படித்தான் வாழ்க்கை ஒரு கட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பிலும் மற்றொரு கட்டத்தில் ஏமாற்றத்துடனும் அமைந்து விடுகிறது.. அதற்காக பெரிய ரோஷக்காரன் போல வாழ்வையோ காலத்தையோ இளப்பமாக நினைத்து விட முடிவதில்லை..
காலம் நமக்கு அளித்த கொடை இவ்வளவே., இதனை செவ்வனே அனுசரிப்பதே நேர்மை.. அதனை விடுத்து காலம் நம்மை இப்படி படுகுழியில் தள்ளி விட்டதாக புலம்பிக்கொண்டிருப்பது மடைமை...

Saturday, September 11, 2010

ABOUT LOVE

fragrance of  flowers 
and its colours all seems to
be an absolute bogus
after i saw you...

except you 
everybody and everything
all changed into
a great illusion.

unusually 
i am laughing while
my parents scolding me..
they concluded me as mad..

power of love
scattered me into drizzles..
but i failed to wet you,
that's my idioticness...

no pain is simultaneous
to the pain, which is
the make of love failure...

being in love is one state..
whereas failure in it as an another state..

the person who
escapes from the suicide state,
sure they will be in a rigid state forever..


Tuesday, September 7, 2010

மறுபடி சிறை..

1996 ஆம் வருடம் நான் எழுதிய ஒருபக்கக் கதை.. அரை பக்கம் கூட வராதென்று நினைக்கிறேன்...

அன்புள்ள கதிரேசனுக்கு...
உன் ப்ரிய சுப்பிரமணி எழுதுவது..ரெண்டொரு நாட்கள் முன்பு நீ போட்டிருந்த கடிதம் கிடைத்தது.. உனக்கின்னும் தண்டனைக் காலம் நீட்டித்திருப்பதாக நீ எழுதியிருந்தது எனக்கும் உன் மனைவிக்கும் சற்று வருத்தத்தைத் தந்தது.. உன் மனைவியை  தேற்ற நான் மிகவும் பிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டியாயிற்று..... கடிதம் என் கைக்குக் கிடைத்தும் கூட விவஸ்தை இல்லாமல் சுகந்தியிடம் காண்பித்தது என் கேனத்தனம்... எதற்கும் அடுத்த முறை என்ன தகவலானாலும் என் வீட்டு  முகவரிக்கு நீ எழுதவும்..
உன் மனைவி குறித்து நீ எந்த வேதனையும் அடைய வேண்டாம்.. நான் இருக்கிறேன்.. வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கிறேன்.. நீ திட சித்தத்துடன் இரு கதிரேசா...அடுத்த முறை வேலூர் வருகையில் உன்னை வந்து பார்த்து விட்டு வருகிறேன்..

மற்றவை நேரில்
உன் பிரிய நண்பன் சுப்பிரமணி...

---கதிரேசனாகப்பட்ட எனது நிலவரம் ஓரளவு உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.. சுப்பிரமணி போன்ற நண்பர்களால் மட்டுமே சிறையில் கூட கொஞ்சம் நிம்மதியோடு இருக்க முடிகிறது... அசந்தர்ப்பமாக நிகழ்ந்த  ஓர் கொலைக்கு என்னை சம்பந்தமில்லாமல் கைது செய்தது போதாதென்று தண்டனைக்காலத்தை வேறு அனாவசியத்திற்கு  நீட்டித்துக்கொண்டு வேதனைப்படுத்துகிறார்கள்..
எனக்கு மனைவி வாய்த்ததை, நண்பன் வாய்த்ததை .. யாவற்றையும் விலாவாரியாக விளக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஓர் குறுநாவல் போலவாவது சொல்லியாக வேண்டும்.. அதற்கு இந்த ஒற்றைப்பக்கம் போதாது...

--- சற்றும் நான் எதிர்பாராத ஒரு நாளில் --- எனக்கு விடுதலை அறிவிக்கப்பட்டது..
வீடு வந்த போது.. சுப்ரமணியும் என் மனைவியும் தலைமறைவென்ற தகவல்...

--- மறுபடி நான் என் வீட்டிற்குள் சிறைப்பட்டேன்...

Sunday, September 5, 2010

நண்பனுக்கு அஞ்சலி.

மிகவும் மனதை பாதிக்கிற விஷயங்களுள் தலையாயது பால்ய சிநேகிதனின் மரணம் என்று தான் நினைக்கிறேன்.. நான்கைந்து நாட்கள் முன்னர் என் இளம்ப்ராயத்தோழன் ஒருவன் பைக்கில் செல்போன் பேசியவாறு பயணித்ததில் ஏதோ ஓர் மரத்தின் மீதோ பாலத்தின் மீதோ மோதி தூக்கிஎறியப்பட்டு அதே இடத்தில் அகால மரணம் அடைய நேர்ந்தது..
எவ்வளவோ முறைகள் எங்களுக்குள் மனஸ்தாபம் வந்திருக்கிறது, கைகலப்பு செய்திருக்கிறோம் , மறுபடி சில மாதங்களோ  வருடங்களோ பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்திருக்கிறோம்... அதன் பிறகு மனமுதிர்வு அடைந்த கால கட்டங்களில் இருவரும் முந்தைய நடவடிக்கைகள் குறித்து மலரும் நினைவுகளாக பகிர்ந்து அந்த சிறுபிள்ளைத்தனங்கள் மீண்டும் வாராதா என்று  ஏங்கி இருக்கிறோம்.... 
மரணம் இப்படியாக எல்லா உணர்வுகளையும் உறவுகளையும் சுலபத்தில் கபளீகரித்து விடுவது வேதனை நிரம்பிய வியப்பு...
அவனது ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா ... அது மனித மூளையின் அபரிமிதமான கற்பனையா...அதே போன்று, அடுத்த பிறவி என்பதும் ஓர் சுகமான கற்பனை என்றே அனுமானிக்கிறேன்...
அப்படி ஆத்மா  இருக்கிற பட்சத்தில் ---எல்லாரும் பிரார்த்தித்துக்கொள்வது போல---சத்தியமாக அது சாந்தி அடையட்டும்... அடுத்த பிறவி இருக்கிற பட்சத்திலும்,  அவன் அடுத்த பிறவியிலும் என் நண்பனாகவே வந்து அவதரிக்கட்டும்...   
..

Wednesday, September 1, 2010

ஓர் சபலிஷ்டின் அவஸ்தை....

நானும்
சபலக்காரன் தான்
என்ற போதிலும்
மற்ற சபலப்பேர்வழிகளைப்
பிடிப்பதில்லை எனக்கு...                    
பாம்பின் கால்
பாம்பறியும் போல
யார் எந்த சபலத்தில்
இருக்கிறார்கள் என்கிற
முக ஜோதிடம்
எனக்குத்தெரியும்...{?}

இப்படித்தானே
நானும் அடையாளப்
படுவேன் ? என்கிற
சங்கடங்களும் அச்சங்களும்
உண்டென்ற போதிலும்
--அப்படிப்
பிரித்துணரும் வண்ணம்
அப்பட்டமானதல்ல
என் சபலம்
என்கிற அனுமானம்,
 மற்றும்
நம்பிக்கை எனக்கு...

ஒவ்வொரு சபலக்காரனும்
இவ்வித நம்பிக்கையில் தான்
இருப்பான்?

சபலங்கள் தவிர்க்கப்பட்ட
வாழ்க்கை மிகவும்
யதார்த்தமானது...
சத்யம் நிரம்பியது...!
-அப்படிப்பட்ட நபர்களையும்
நான் அடையாளம் காண்பேன்...,
--குறைந்த பட்சம்
அவர்களினிடமாவது
என் சபலம் அடையாளப்
பட்டுவிடக்கூடாது என்பது
என் பிரார்த்தனை..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...