Saturday, July 24, 2010

குப்பைக்கூடை

மேஜை மீது
பரவிக்கிடக்கிறது
குப்பைகள்..
மேஜையின் அடியில்
காலியாகக்கிடக்கிறது
குப்பைக்கூடை...                                        
உழைக்க தயார் நிலையில்
இருக்கையில்
வேலை கொடுக்காத
எஜமானனைப்பார்த்து
சலித்துக்கொள்வதைப்போல
தோன்றுகிறது
குப்பைக்கூடையின் வெறுமை...

மேஜை மீது இருப்பதில்
குப்பை எது,
தேவைப்படுவது எது
என்று பகுக்க முடியாத
வேலைப்பளுக்களும்
வேலை முடிந்த பிறகாக
சோம்பல்களும் ஒருங்கிணைந்து
கொள்கிறது அன்றாடம்...

சரி , குப்பைக்கூடையை
திருப்திப்படுத்தலாம் என்று
ரெண்டொரு காகிதங்களை
கசக்கி சுருட்டி வீசினாலோ
பிற்பாடு, அதே காகிதங்கள்
அவசியமாகி -- அந்தக்
கசக்கல்களை நிதானமாகப்
பிரித்துப்பார்க்க  வேண்டியாகி
விடுகிறது அனேக சமயங்களில்....
-- அதனாலேயே
உத்தரவாதமாகக் கசக்கி
வீசி விடலாம் என்கிற குப்பைகள்
கூட எந்நேரமும் மேஜையின்  மீது....!!

என் அலுவல் அறையின்
அந்தக்குப்பைக்கூடையை
நான் பார்க்க நேர்கையில் எல்லாம்
அதென்னவோ அந்தக்கூடை
வேலை இல்லாத குற்ற உணர்வில்
சங்கடப்படுவாதாகவே
எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கிறது..!!!

சுந்தரவடிவேலு..

Monday, July 12, 2010

அங்கலாய்ப்புகள்

"இன்னும் கொஞ்சம் முயன்றால் சிறப்படையலாம்..."
என்னில் அறிவு வந்துவிட்டது என்று நான் அபிப்ராயித்த பிராயம் தொட்டு நான் செய்கிற அனேக காரியங்களுக்கான அனுமானங்களும் அபிப்ராயங்களும் அறிவுரைகளும் கிட்டத்தட்ட எல்லாரிடமும் இதுவாகத்தான் இருந்து வருகிறது..
ஆனால் நான் எந்தக்கால கட்டத்திலும் அந்த இன்னும் கொஞ்சம் முயல்வதே இல்லை.. அல்லது முயன்றும் அது என் கைவரப் பெறுவதில்லை... அதற்கான திறமைகளும் அதிஷ்டங்களும் சிலருக்குத்தான் சுலபத்தில் வாய்க்கிறது..
எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி தப்பிக்க விரும்பவில்லை.. அந்தத்திறமையும் இல்லை என்பது தான் யதார்த்தம்..

உழைத்து வருகிற வியர்வைக்கும்
உப்புசத்தில் வருகிற வியர்வைக்கும் 
உடல் ரீதியாக எந்த மாறுதல்களும் இருக்க வாய்ப்பில்லை..
ஆனால் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நிறைய மாறுதல்கள் உண்டு..

அதே தன்மையோடு தான் இயல்பான  திறமைகளோடு எழுதி பெயரும் புகழும் பெறுபவர்களை ஒப்பிட்டு , என் மாதிரியான கத்துக்குட்டிகள் தனக்கு அது மாதிரி ஏன் வாய்க்கவே இல்லை என்று வீண் அங்கலாய்ப்பு படுவதும் ஆகும்...

நன்றி    

Monday, July 5, 2010

அனிச்சையாய் நிகழ்வன...

முன்பென்
காமம் தூண்டிய 
அவளது முலைகள்
இன்றென்
குழந்தையின் 
பசிக்கான அமுதசுரபி 
ஆகி விட்டன...

-பாசம்  பிரதானமாகி
 விட நேர்கையில் எல்லாம்
காமம் பின்னடைவாகிறது...

பதுங்கிப் பாய்கிற புலிகுணம்
கொண்டது காமம்...                                      
பிற்பாடு பாசம்
புள்ளி மானாய் துள்ளி மறையும்..

ஆனபோதிலும் 
புணர்ச்சியின் போதிலாக 
சற்றே
குழந்தையின் அழு குரல் 
கேட்டாலும் என்னை                
தூரம் தள்ளிப்போட்டு 
விடுகிறாள் என் மனைவி..

Friday, July 2, 2010

காலங்கள்

இன்பங்களும் துன்பங்களும்
இனம் புரியாமல் அடர்ந்து 
கிடக்கின்றன .. எதிர்காலங்களில்..!!
நம் எல்லா தீர்க்கதரிசனங்களையும்
புறந்தள்ளி விட்டு 
காலம் அதன் போக்கில்                         
நம் சூழல்களை அரங்கேற்றும்.. 


சற்றும் எதிர்பாராத
எவ்வளவோ விஷயங்கள் 
சுலபத்தில் நிகழக்கூடும்..
நடக்கும் என்று ஆணித்தரமாக 
நம்பியவை நாமதேயமே அற்று
நசுங்கிப்போயிருக்கும்...
உச்சியில் நிறுத்தும்
புரட்டிப்போடும் 
அதல பாதாளத்தில் கொண்டு சேர்க்கும்..

அசை போட அதிகம்
உபயோகப்படும் இறந்த காலம்..
நிகழ்ந்து முடிந்த சுவாரசியங்களும் 
தர்ம சங்கடங்களும் , சுகதுக்கங்களும்
இன்னபிறவும் ..

மேற்சொன்ன 
இறந்த எதிர் ஆகிய 
எல்லா காலங்களை
அலசவும் 
மிகவும் பயன்படுகிற
நிகழ்காலம் மாத்திரம் 
ஏனோ பிரக்ஞை அற்றே
கிடக்கிறது அநேகம் பேர்களிடமும்...!!


சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...