ஆப்பீசு போறதா தான்
சொல்றான் பெரிய பய்யன்..
ஆனா, அப்பப்ப வந்து
'எம்புட்டாயா சில்ற
வச்சிருக்கே ன்னு கேட்டு
அம்பது நூறுன்னு
அள்ளிக்கிட்டுப் போயிடறான்..
'அப்புறமா தாறேன்.. கணக்குல
வச்சுக்கன்னு '
பெரிய நேர்மவாதி போல
பீத்திக்கிட்டுப் போவான்..
மறுபடி
'பெட்ரோல் போட ஒரு
அம்பது குடு ஆத்தா' ன்னு
சொரண கெட்டுப் போயி
சாக்கைத் தூக்கி
காசை வாரிட்டுப் போயிடுவான்
படுபாவி..
'வயசான காலத்துல
பெத்தவள வச்சு
கஞ்சி ஊத்தத் தான்
வக்கில்ல..
ஏதோ அவ ஒட்டுன
வயித்துக்குன்னு நாலு
காசு சேர்த்து வச்சா
அதுலயும் வந்து மண்ணப்
போடுறானே மானங்கெட்ட
நாயி. ' ன்னு
கேவிக் கேவி
நமுத்துத்தான் போனா
கெழவி..
மருமவ இருக்காளே.. மூதி.
அதுக்கு மேல..
போறப்ப வாரப்ப
புதுசா என்ன காயி
அத்த வந்திருக்குன்னு
அள்ளிப் போட்டுக்கிட்டு..
பர்ஸ் ஜிப்பை தெறப்பா..
'ஐயோ சில்றைய வூட்டாண்ட யே
வச்சிட்டேன்.. வாரப்ப தாரேன்..
என்பாள்.. சில சமயங்களில்
போறப்ப தாரேன்.. என்பாள்..!
ஆனா எல்லாவாட்டியும்
வெறும் பர்சையே ஜிப்பைத்
திறந்து காண்பிப்பாள்..
வடுகப்பட்டிக்குக் கட்டிக்
குடுத்த ஒத்த மவ இருக்காளே
சிறுக்கி..
மருமவளே தேவலேன்னு
பண்ணிடுவா..
நடு ரோட்ல
நாலு பேரு காயி வாங்குற
டைம்ல வந்து
'மாப்ளைக்கு மைனர் செயன்
எப்ப போடுவியாம்?.. அதுவரைக்கும்
வந்துடாதேன்னு அனுப்பிச்சு
விட்டாக ' என்று ஏதாவது
ஒவ்வொரு தபாவும்
ஒவ்வொரு புதுக் கதையோட
வந்து கழுத்தறுப்பா..
நாசமாப் போன இந்த
வுசுரு போயித் தொலையவும்
மாட்டேங்குது ..
ஊட்டுக்காரன் மவராசன் இந்தக்
கொடுமைய எல்லாம் கண்ணுல
பாக்கக் கூடாதுன்னு அப்பவே
கண்ணை மூடிட்டான்..
நாந்தேன் இப்ப சீரழியறேன்..
இத்தனை இம்சைக்கு
நடுவிலும்
3 வயது மகள் வழிப்
பேரனை மடியில்
வைத்து அவன்
சாப்பிட கேரட்டைக்
கழுவிக் கொடுக்கிற
ஒரு சுகம் தான்
இன்னும் அவள்
ஆயுளை கெட்டிப்
படுத்தி வைத்திருக்கிறது..!!
புகைப்பட உதவி : திரு. தங்கம் பழனி