Saturday, April 18, 2015

ஓ காதல் கண்மணி.. [சினிமா ரிவ்யூ ]

காதல் கண்மணி.. 
நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிரத்னத்திடம் இருந்து வன்முறைகள் தொலைந்த ஒரு ரொமான்ஸ்.. 
இப்படி ஒரு யதார்த்தமான ரொமான்ஸ் மிக செயற்கையாக... அல்லது.. 
இப்படி ஒரு செயற்கையான ரொமான்ஸ்.. மிக யதார்த்தமாக.. !

மரண தேதி குறிக்கப் பட்ட பிற்பாடாக இருக்கிற கிஞ்சிற்று நாட்களை காதலர்கள் எப்படியெல்லாம் ஆனந்த வைபவமாகக் கொண்டாடி குதூகலிக்கின்றனர் என்கிற வகையிலே பிரீவியஸ் ஆக எத்தனையோ படங்கள் வந்து மக்களை கண்ணீர் சொரிய வைத்தன.. அதே போன்று தங்களின் வேலை நிமித்தம் நாயகி பாரிஸுக்கும் நாயகன் அமெரிக்காவுக்கும் பெயர்ந்து விடுவதாக ஒப்பந்தமாகி 'இந்தக் கடைசி 10 நாட்கள் பரமானந்தம் மாத்திரமே நமது இலக்கே அன்றி, எதற்காகவும் அழுவதோ செண்டிமெண்ட் பார்ப்பதோ துளியும் கிடையாது' என்று முடிவெடுத்து நமது 'முடியை' எடுத்து விடுகிறார்கள்.. 

மணிரத்னமே சொந்தமாக தயாரித்த காரணத்தால் பாரீஸோ அமெரிக்காவோ போகவில்லை என்று தோன்றுகிறது.. ஒரு பெரிய கை தயாரிப்புக்கு கிடைத்திருக்குமே யானால் ஈஃபில் டவரிலும் , சுதந்திர தேவி சிலை ஒட்டியும்  ஒய்யார நடனமாடி டூயட்கள் குவிந்திருக்கும்.. 


மிகப் பிரத்யேகமான ரஹ்மான் இசை.. பின்னணியில் பின்னிப் பிணைந்திருக்கிறார்.. ஆனால், அது என்ன காமா சோமா பாடல்களோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.. இதை வேறு வைரமுத்து புனைந்திருக்கிறார்.. 


மணிரத்தினம் காண்பிக்கிற பெண்கள் மாத்திரம் எப்படி இத்தனை இண்டெலக்சுவலாக  இருக்கிறார்களோ என்கிற ஆச்சர்யமும் பொறாமையும் எப்போதும் "அப்படி வாய்க்கவே வாய்க்காத " என் போன்ற நபர்களுக்கு எழத்தானே  செய்யும்?.. 


இந்தப் படத்தில் வருகிற ஹீரோயின் செம.. அந்த வசீகர முகம், அதிலே மிக சுலபமாக எழுகிற புன்னகை.. அழுகை கோபங்கள் கூட அழகை சேர்த்துக் கொண்டு தான் வருகின்றன.. 

ஹீரோ கூட மோசமில்லை.. எதிரினங்களுக்கு ஓவர் ஹாண்ட்ஸம் போன்று கூடத் தெரியுமோ என்னவோ.. 

பிரகாஷ் ராஜ்.. மற்றும் அவர் மனைவி.. சங்கீதக்காரி.. வயோதிகம்.. மெமரி லாஸ்.. அவ்வப்போது தொலைந்து போவதும் அந்த சந்தடி நிறைந்த மும்பை மழையிலே நனைந்தவாறு நிற்பதும் நமது ஹீரோ ஹீரோயின் கண்டுபிடித்துக்  கொண்டுவந்து விடுவதும்.. ஆர்கே நாராயணன் கதையின் தளம் போன்று, சத்யஜித்ரே யின் சினிமா தளம் போன்று பிரகாஷ்ராஜின் சூழல்  .. வழக்கம் போன்றே அனாயாசமாக அந்தத் தத்ரூபத்தில் வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ்.. 


ஆக , மேற்சொன்ன மாதிரி இருவரும் வெளிநாடுகள் எதுவும் போகாமல் மும்பையிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.. இந்தப் புதுமையான (?)கதைக்கு  ரஹ்மானின் இசை, ஸ்ரீராமின் ஓளிப்பதிவு, நடனம் எடிட்டிங் என்று இதர இதர ஜிகினாக்கள்.. 


ஆனால் இதுதான் மணிரத்னத்தின் உண்மையான மென்மையான மற்றும் மேன்மையான ஒரு தளம்.. 

செயற்கையான சூழல்களை உட்புகுத்தினாலுமே கூட அவருடைய ஒரு நேர்த்தி, ஒரு கைப்பக்குவம் .. அவர் சமைத்திருக்கிற விதம்.. 
புளித்த இட்லி மாவில் மொறு மொறு நெய் ரோஸ்ட்.. ஆனியன் ரோஸ்ட்.. 
கலப்பட டீ தூளில் ஏலக்காய் இஞ்சி கலந்த  'ஒரு வல்லிய சாயா'.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...