Tuesday, April 28, 2015

நேபாளம்..

நேபாளம் ... .

இயற்கையின் கோரத் தாண்டவம்.. கோடித் தீவிரவாதிகளின் கொலைவெறிக் கொண்டாட்டம்.. 
ஆம்லெட்டில் வெங்காயம் போதவில்லை என்று சில நாட்கள் முன்னர் ரகளை செய்த ஞாபகம்.. 
மட்டன் பிரியாணி சூப்பர் என்று தயிர் வெங்காயம் கலந்து மூக்கு முட்ட வெட்டிய ஞாபகம்.. 
இந்த நேபாள சோக செய்தி கேட்டு இந்த ஞாயிறு வெஜ் கூட சாப்பிடப் பிடிக்கவில்லை.. வெறுமே வயிற்றைக் காயப் போட்டு அந்தக் கூச்சல் களேபர சூழலை மனசு அரைத்துக் கொண்டு கிடந்தது.. 

ஒரு சாவுக்கே 3ஆம் நாள் கருப்பு.. பிறகு 16.. இவை போக "அடைப்பு" 6 மாதங்கள் இருப்பதாக கோவில் குளம் தவிர்ப்பது.. என்கிற சங்கதிகள் நமது வாழ்வில் ... 
ஆனால் நேபாளத்தின் இந்தத் துயரை எங்கனம் ஒப்பீடு செய்வது?.. 
செய்த முதலீடு தொலைந்து போய் தொழிலில் தோற்றவர்களுக்கும், கடன் தொந்தரவில் குடும்பமாக தற்கொலை செய்கிற யோசனையில் இருந்தவர்களுக்கும் .. நோயில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த பூகம்பம் குயிலோசையாக ஒலித்திருக்கலாம்.. 
வசந்தங்களைத் துவக்கியிருக்கிற சிறார்களும், ஒய்யார வசதியில் அன்றாடம்  வலம் வருகிற பெரிய மனிதர்களும்.. பல தலைமுறைக்கு என்று சொத்து சேர்த்து வைத்தவர்களும் நடுரோட்டில்.. சொத்து உறவுகள் குழந்தைகள், மனைவிகள் கணவர்கள் என்று அனைத்தையும் சில நிமிடங்களில் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வேண்டிய தருணம்.. 

பசியில் வீறிடும் குழந்தைகள்.. கடும் பனி, குளிர், காற்று, மழை, மறுபடி அதிர்வுகள், பனிப்பாறைகள் உருண்டோடி வருகின்றன.. 
இத்தனை அவஸ்தைகளில் .. நம்முடைய உறவினர்களும் நண்பர்களும் உயிரோடு இருக்கிறார்களா அல்லது ஆபத்தான நிலையில் ஆசுப்பத்திரிகளில் கிடக்கிறார்களா? என்கிற கவலை.. 

எல்லாரது முகங்களிலும் மரணபயம்.. 
இதையெல்லாம் தாண்டி, மற்றொன்றை யோசித்தாக வேண்டும்.. இந்த சீற்றம்  எந்த ஆய்வறிக்கைகளிலும் எதிர்பாராததா ?.. இவ்வளவு கடுமையான அதிர்வுகள் நிகழக் கூடிய  வாய்ப்புக்கள் இருந்தும் எதற்காக இத்தனை அடுக்கடுக்கான வீடுகள்?.. வர்த்தக நிறுவனங்கள்?.. தங்கும் விடுதிகள்?  

80 ஆண்டு காலங்கள் எவ்விதப் பேரிடர்களையும் சந்தித்திராத துணிவே மேற்கொண்டும்  எதனை செய்வதற்கும் தயங்காத ஒரு தன்மை அங்கே நிகழ்ந்திருக்கிறது.. அங்கே மட்டுமன்று .. நாமிருக்கிற பிராந்தியங்களிலும் இதே விதமான கதி தான்.. 

நம்முடைய எச்சரிக்கை உணர்வுகளும், நம்முடைய அதிதீவிர ஜாக்கிரதைகளும் வியாக்யானங்களும் "இயற்கை" யின் முன்னர் "செயற்கை" தான்.. 

நமக்கொரு இயற்கை சீற்றம் நிகழ்வதற்குள்ளாக, அதன் நிமித்தம் பாதிக்கப் பட்ட மற்ற மனிதர்களுக்காக சற்று அவகாசம் ஒதுக்கி பிரார்த்திக்க முயல்வோம்.. 
அதற்குள்ளாக KFC யும் காஞ்சனா 2 ம் எங்கேயும் ஓடிவிடாது..                                                                                                                                                                                                                                                                                                                                         

Monday, April 20, 2015

இன்னொரு பாப்பா..

என் மகள் 
ஸ்னேகாவுக்கு 
முந்தைய 3
பெண்குழந்தைகள் 
லாவண்யா 
ஸ்ருதி
ப்ரீத்தி 
இருக்கின்றனர் எனிலும் 
இன்னொரு தம்பிப் பாப்பாவோ 
தங்கச்சிப் பாப்பாவோ 
கொஞ்சவும் விளையாடவும் 
வேண்டுமென்று அவ்வப்போது 
 அடம் பிடிக்கையில் 
எனக்கும் மனைவிக்கும் 
அழுகையும் சிரிப்பும்
 சேர்ந்து வரும்.. 
3 மாதக் குழந்தையாக 
ஸ்நேகாவை 
தத்தெடுத்து வந்த வரலாற்றை 
பின்னொரு நாளில் 
தெரிவிக்கக் காத்திருக்கிறோம்..
இந்த ஐந்தாவது வயதில் 
பிடிக்கிற அடத்தை மறக்கடிக்க 
நீலம் ரோஸ் கலந்த நிறத்தில் 
சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.. 
சிரித்தவாறு அழுத்திக்  
கொண்டு வலம் வருகிறாள்.. 

அடிக்கடி  இறங்கி 
தம்பியை உட்காரவைக்க 
தயார் நிலையிலிருப்பதாக  
கேரியரைக் காண்பிக்கிறாள்.. !!

Saturday, April 18, 2015

ஓ காதல் கண்மணி.. [சினிமா ரிவ்யூ ]

காதல் கண்மணி.. 
நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிரத்னத்திடம் இருந்து வன்முறைகள் தொலைந்த ஒரு ரொமான்ஸ்.. 
இப்படி ஒரு யதார்த்தமான ரொமான்ஸ் மிக செயற்கையாக... அல்லது.. 
இப்படி ஒரு செயற்கையான ரொமான்ஸ்.. மிக யதார்த்தமாக.. !

மரண தேதி குறிக்கப் பட்ட பிற்பாடாக இருக்கிற கிஞ்சிற்று நாட்களை காதலர்கள் எப்படியெல்லாம் ஆனந்த வைபவமாகக் கொண்டாடி குதூகலிக்கின்றனர் என்கிற வகையிலே பிரீவியஸ் ஆக எத்தனையோ படங்கள் வந்து மக்களை கண்ணீர் சொரிய வைத்தன.. அதே போன்று தங்களின் வேலை நிமித்தம் நாயகி பாரிஸுக்கும் நாயகன் அமெரிக்காவுக்கும் பெயர்ந்து விடுவதாக ஒப்பந்தமாகி 'இந்தக் கடைசி 10 நாட்கள் பரமானந்தம் மாத்திரமே நமது இலக்கே அன்றி, எதற்காகவும் அழுவதோ செண்டிமெண்ட் பார்ப்பதோ துளியும் கிடையாது' என்று முடிவெடுத்து நமது 'முடியை' எடுத்து விடுகிறார்கள்.. 

மணிரத்னமே சொந்தமாக தயாரித்த காரணத்தால் பாரீஸோ அமெரிக்காவோ போகவில்லை என்று தோன்றுகிறது.. ஒரு பெரிய கை தயாரிப்புக்கு கிடைத்திருக்குமே யானால் ஈஃபில் டவரிலும் , சுதந்திர தேவி சிலை ஒட்டியும்  ஒய்யார நடனமாடி டூயட்கள் குவிந்திருக்கும்.. 


மிகப் பிரத்யேகமான ரஹ்மான் இசை.. பின்னணியில் பின்னிப் பிணைந்திருக்கிறார்.. ஆனால், அது என்ன காமா சோமா பாடல்களோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.. இதை வேறு வைரமுத்து புனைந்திருக்கிறார்.. 


மணிரத்தினம் காண்பிக்கிற பெண்கள் மாத்திரம் எப்படி இத்தனை இண்டெலக்சுவலாக  இருக்கிறார்களோ என்கிற ஆச்சர்யமும் பொறாமையும் எப்போதும் "அப்படி வாய்க்கவே வாய்க்காத " என் போன்ற நபர்களுக்கு எழத்தானே  செய்யும்?.. 


இந்தப் படத்தில் வருகிற ஹீரோயின் செம.. அந்த வசீகர முகம், அதிலே மிக சுலபமாக எழுகிற புன்னகை.. அழுகை கோபங்கள் கூட அழகை சேர்த்துக் கொண்டு தான் வருகின்றன.. 

ஹீரோ கூட மோசமில்லை.. எதிரினங்களுக்கு ஓவர் ஹாண்ட்ஸம் போன்று கூடத் தெரியுமோ என்னவோ.. 

பிரகாஷ் ராஜ்.. மற்றும் அவர் மனைவி.. சங்கீதக்காரி.. வயோதிகம்.. மெமரி லாஸ்.. அவ்வப்போது தொலைந்து போவதும் அந்த சந்தடி நிறைந்த மும்பை மழையிலே நனைந்தவாறு நிற்பதும் நமது ஹீரோ ஹீரோயின் கண்டுபிடித்துக்  கொண்டுவந்து விடுவதும்.. ஆர்கே நாராயணன் கதையின் தளம் போன்று, சத்யஜித்ரே யின் சினிமா தளம் போன்று பிரகாஷ்ராஜின் சூழல்  .. வழக்கம் போன்றே அனாயாசமாக அந்தத் தத்ரூபத்தில் வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ்.. 


ஆக , மேற்சொன்ன மாதிரி இருவரும் வெளிநாடுகள் எதுவும் போகாமல் மும்பையிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.. இந்தப் புதுமையான (?)கதைக்கு  ரஹ்மானின் இசை, ஸ்ரீராமின் ஓளிப்பதிவு, நடனம் எடிட்டிங் என்று இதர இதர ஜிகினாக்கள்.. 


ஆனால் இதுதான் மணிரத்னத்தின் உண்மையான மென்மையான மற்றும் மேன்மையான ஒரு தளம்.. 

செயற்கையான சூழல்களை உட்புகுத்தினாலுமே கூட அவருடைய ஒரு நேர்த்தி, ஒரு கைப்பக்குவம் .. அவர் சமைத்திருக்கிற விதம்.. 
புளித்த இட்லி மாவில் மொறு மொறு நெய் ரோஸ்ட்.. ஆனியன் ரோஸ்ட்.. 
கலப்பட டீ தூளில் ஏலக்காய் இஞ்சி கலந்த  'ஒரு வல்லிய சாயா'.. 

Friday, April 17, 2015

அன்றாடம்..

ஒவ்வொரு விடியல் துயில் கலையப் பெற்றதும் நேற்றென்பது நம்மிடமிருந்து நழுவப் பெற்றதும் இன்றை இறுகப் பற்ற வேண்டுமென்கிற அவசரமும் பல்துலக்கும் முன்னரே பற்றி விடுகின்றன நம்மை.. 

நம்முடைய துரிதம் என்பது அளவுகோல்களைக் கடந்து அதீதமாக, ஒரு பிரளயம் போன்று நம்மிலிருந்து பீறிட நேர்ந்தாலும், நமக்கு நடைபெறுகிற சங்கதி என்பது அதன் கதியிலே தான் நடைபெறும் என்கிற மிக சாதாரண கூற்று நமக்கேனோ ஒவ்வொரு நாளும் பிடிபட மறுக்கிற வழுக்கல்  மீனாகவே உள்ளது.. 

சில அபூர்வ நாட்களில், சோம்பி நாம் தேமே என்று கிடந்தாலும் நடைபெறுகிற காரியங்களின் வீச்சு சற்றும் எதிர்பாரா வகையில் பிரம்மாண்டமாக நேர்ந்து விடுவது உண்டு. 
நாம் பெரிதாக திட்டம் தீட்டி மலையை நகர்த்துகிற முஸ்தீபில் உட்கார்ந்து இருந்தாலும்  ஒரு கடுகைக்  கூட அசைக்க முடியாமற் போய் விடுகிறது.. 
ஆனால் ஒருவித அவநம்பிக்கையின் நிமித்தம் ஒருவகை இயலாமையின் நிமித்தம் 'ஸ் .. அப்பாடா. போதுமடா சாமி ..' என்று அரவமற்ற ஓரிடத்தில் அயர்ந்து கிடக்கையில், திருப்பதி லட்டு, நெல்லை அல்வா, பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் மாம்பழம் , பண்ருட்டி பலா என்று எல்லாவற்றையும் வாயில் வைத்தடைத்து திண்டுக்கல் பூட்டைக் கூடப்  போட்டுப் பூட்டி விட்டுப் போகும் காலம்.. 

Thursday, April 16, 2015

பொத்தல் ஜீன்ஸ் .....

ன்றைய இளையராஜாவின் பாடல்கள் கேட்டு மெய்சிலிர்த்த தலைமுறை நாம். ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனைகளும் அவர்களுடைய பாடல் தாகங்களும் எரிச்சலும் வருத்தமும் அளிப்பதாக உள்ளன.. 
அவர்களின் செவிகளுக்கு புத்தம்புதுக் காலை எந்த சுரணைகளையும் கொண்டுவரவில்லை.... ஆனால் ஆரோமலே என்று வாயோயாமல் அலறுகிறார்கள்.. 
அவர்கள் அணிந்துள்ள அந்தப் பொத்தல் ஜீன்ஸ் போலவே மனசும் .. நேர்த்தியானதைக் கூட கிழித்து விடுகிற ஆற்றல் நிரம்பி வழிகிறார்கள்.. 
அதே ஆற்றலை தைப்பதிலோ மூடி மறைப்பதிலோ காண்பிக்கிற அக்கறையோ பிரக்ஞையோ அற்று வெறுமே இருக்கிறார்கள்.. 
ஆனால் யதார்ர்த்தமாக நம் தலைமுறை அவர்களை விமரிசிக்கத் துணிந்தாலோ "வாய மூடு".. "பொத்திக்கிட்டு போறியா?" என்று ப்ரெஷர் ஏற்றுகிறார்கள்.. 
சரிவர தாடி முடியை வளிக்கக் கூட  வக்கில்லாதவனோடு, லிப்ஸ்டிக் நெயில்பாலிஷ் சகிதம் சிலீரென்று இருக்கிற பெண்மணி காதல் உரையாடுகிறாள்..
கூட்டத்தில் அசந்தர்ப்பமாக நாம் உரசிவிட்டால் கூட "ப்ச்" என்று அலுத்துக் கொள்கிற அந்தப் பெண்கள், அந்தக் காதலனின் எந்தத் தீண்டுதலையும் ஏற்றுக் கொள்வதும்.. அந்தத் தீண்டுதலை மிகவும் எதிர்பார்த்துக் கிடப்பதும்.. 
இப்படி, இசையில் காதலில் என்று அனைத்து தளங்களிலும் அரைவேக்காடாகவும் புகை போட்டுப் பழுத்தவர்கள் போன்றும் தான் புலனாகிறார்களே அன்றி, இயல்பான முதிர்ந்த தன்மையே அவர்களை சற்றும் அணுகுவதில்லையோ அல்லது இவர்கள் அணுக விடுவதில்லையோ என்றெல்லாம் யோசிக்கிற சாவகாசத்தில் இருக்கின்றன நமது தலைமுறை..  

"ஹே பெருசு.. ஓனக்கென்னவோ டைம்ல சனி என்ட்ரி ஆயிட்ட மாதிரி தெரியுது" 
அவர்களுடைய அந்த வன்ம வார்த்தைகள் நம் மனதுகளைக் கூட அந்தப் பொத்தல் ஜீன்ஸ் போன்று கிழித்து விடுகின்றன.. !! 

Friday, April 10, 2015

அந்தி...................

முக வரவேற்பு 
அறையில் 
வயோதிகச் சுருக்கங்களை
மனசே இல்லாமல் 
வரவேற்க நிற்கிறது 
இளமைப் பொலிவு.. 

அழையா விருந்தாளியாக 
வெட்கமே அற்று 
வருகிறது முதுமை.. 

பௌருஷம் பருத்து 
தேஜஸாகக் காணப் பட்ட 
அந்த அழகிய வெள்ளாமை 
முகத்தின் நடுவே 
ஊடுபயிராக.. இல்லை இல்லை.. 
களையாகத் துவங்கி விட்டன 
பாழ் சுருக்கங்கள்.. 


எத்தனையோ களிம்புகளைத் 
தடவி.. பிடுங்கி எறியப் 
பிரயத்தனித்தாயிற்று..!

சற்றே புரையோடியதாக 
ஓர் மாயையைத் தோற்றுவித்துவிட்டு 
மறுபடி அதன் ஆளுமையை 
வீறு கொண்டு காண்பிக்கின்றன 
சுருக்கங்கள்.. 

எத்தனை விரட்டினாலும் 
நன்றியுள்ள நாய் போன்று 
வந்து வந்து நக்குகின்றன 
முதுமை நம்மை.. 

அடர்ந்த கருமுடியினுள் 
திடீரென்று ஒரு நாள் 
அகப்பட்ட ஒற்றை 
வெள்ளைமுடி 
அன்றெல்லாம் அதிசயமாக 
உணரப் பட்டு 
அதே மயிரிழையில் கவலையும் 
மனசைத் தொற்றிக் கொண்டு.. 

பிறகு வெகுவிரைவிலேயே 
நரைத்த முடிகள் நடுவே 
கறுப்புமுடி கண்டு 
ஆறுதலடைகிற சுலபத்திற்கு 
வந்துவிட முடிகிறது நம்மால்.. !!

Thursday, April 9, 2015

ஜெயகாந்தன்..

ஜெயகாந்தன் மறைவுக்குப் பின்னர் அவர் குறித்து இனி பலரும் பல தகவல்களை சேகரித்த வண்ணம் பல கட்டுரைகள் புனைவர் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.. 
அவரது அடர்ந்த சாதனைப் பட்டியல்களை ஒவ்வொன்றாகக் கொணர்ந்து எனக்கும் நீண்ட ஒரு புனைவை நிகழ்த்த வேண்டுமென்கிற அவா ஒருபுறம் இருப்பினும் அந்தளவு அழகியலும் பொறுமையும் என்வசம் இல்லை என்கிற அனுமானம் உண்டு என்மீது.. 
ஆகவே, எனது அறிவுக்கு எட்டிய சிற்சில விஷயங்களை மாத்திரமே இங்கே தெரிவிக்க விழைகிறேன்.. 

"கோகிலா என்ன செய்து விட்டாள் ?" என்கிற ஒரு குறுநாவல் தான் முதற்கண் நான் அவருடைய படைப்பை வாசிக்கத் துவங்கினேன்.. அதன் பிறகு அவருடைய அனேக சிறுகதைத் தொகுப்புக்கள், குறுநாவல்கள் மற்றும் பல நாவல்கள் , கட்டுரைகள் என்று படித்து சிலிர்த்திருக்கிறேன்.. 

மனித வாழ்வின் அழகுகளும் அவலங்களும் மிக யதார்த்தமாக பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும் அவரது படைப்புகளில்.. 
பாலச்சந்தரின் அநேகப் படைப்புகள், ஜெயகாந்தனின் சாயல்கள் நிரம்பியே காணப் பெறும் .. 
இன்னபிற இயக்குனர்களும் அதே முறையில் தான் இயங்கி இருப்பரோ , அவைகளை  அப்படி ஆழ்ந்து நான் கவனித்ததில்லை.. 

ஒரு நல்ல சினிமா எடுக்கத் துணிகிற  எவரும் இவரது புனைவுகளை வாசித்தறிதல்  சாலச் சிறந்தது என்பது என் கருத்து.. 
அதே மாதிரி கதை எழுதகிற நபர்களுமே கூட இவரது கதைகளை உள்வாங்கி எழுதினால், அவர்களது கதைகளும் தரம் மிளிர்ந்து காணப் படும்.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...