Thursday, July 24, 2014

காதல் கதை.. [?]

முன்னரெல்லாம் உமது முகவரி தெரிந்து உமக்கு நான் கடிதங்கள் இடுவேன்.. நீயும் அதற்கு ரெண்டொரு நாட்களில் பதிலனுப்பி என்னிலொரு தாங்கொணா சுகந்தத்தினை மலரச் செய்வாய். அதனை வர்ணிக்கிற பொருட்டு வார்த்தைகளைத் தேடி ஊமையாயின .விரல்கள். 

பரஸ்பரம் நமது ஸ்நேகிதம் மிக அமைதியான தளமொன்றில் எவ்வித ஆர்ப்பாட்டமோ அலட்டலோ அற்று வெறுமே நிகழ்ந்து கொண்டிருந்தது.. நாம் பகிர்ந்து கொள்ள நேர்ந்த விஷயங்கள் பற்பல.... 
 சில அறிவுப் பூர்வமாக.... , சில உணர்வுப் பூர்வமாக....  சில "எதையேனும் நிரப்பியாக வேண்டுமே" என்கிற அற்பத் தன்மையோடு.. ஆனால், அவை கூட அலாதியாக நம்மால் கையாளப் பட்டதென்றே எனக்குத் தோன்றுகிறது.. 

நம்மைக் காதலர்கள் என்று பற்பலரும் தவறாக அடையாளம் கொண்டது நமக்குள் ஒரு ஹாஸ்யமாக எப்போதும் பகிர்ந்து கொள்ளப் படும்.. 
அந்தக் கற்பனை எனக்குக் கூட வந்து போகும் தான்.. ஆனால், நீ?.. 
உமது தீர்க்கமும் செயலாற்றலும் இன்றளவும் எமக்கு ஆச்சர்ய நிகழ்வுகளே...!!
நாளடைவில் நட்பு காதலாக மாறுகிற யதார்த்தம் உமக்கு உடன்பாடில்லாத சுபாவமாக உம்மில் படிந்துள்ளதை நல்லவேளையாக நான் கண்டு வைத்திருந்தேன்.. அல்லவெனில், அனாவசியத்துக்குப் பிரச்சினைகள் மூண்டிருக்க நேர்ந்திருக்கும்...!!

எம்மை நீ வைத்திருந்த தூரம், எனக்கு மிகுந்த சௌகர்யமாக இருந்தது.. மற்றும் ஒரு இனம் புரியா ஏக்கமாகவும் இருந்தது என்பதை சொல்லிக் கொள்ள விழைகிறேன்.. 
நான் அருந்த தண்ணீர் கேட்கிற போது , ஒரு அழகான சில்வர் செம்பில் கொண்டு வருவாய்.... எமது விரல்களை ஸ்பரிசிப்பதை நாசுக்காக நீ தவிர்த்து விடுகிறாயா, அல்லது நான் எமது தூய்மையை நிலைநிறுத்த உன் விரலைத் தொடுவதைத்  தவிர்க்க நேர்ந்ததா என்பது இனம் புரியாத மர்மத் தருணங்கள் அவை.... 

இன்னும் சில சந்தர்ப்பங்கள் அவ்விதம் வாய்க்க நேர்ந்திருக்கும் பட்சத்தில் நான்  நிச்சயம் உமது நகக் கண்களையாவது தொட்டிருக்கத் தான் நேர்ந்திருக்கும் என்று உத்தரவாதமாக எனக்குத் தோன்றுகிறது.. ஆனால், அதற்குள்ளாக காலம் நமக்குள் ஒரு பிரிவினையை மிகத் துரிதமாக உருவாக்க நேர்ந்தது  என்வாழ்வில் நடைபெற்ற, நடந்து கொண்டிருக்கிற சாபக் கேடென்றே உறுதியாக அபிப்ராயம் தெரிவிக்க முடியும்.. 

இன்னும் சொல்லப் போனால், உன்னை நாளடைவில் தவிர்ப்பதற்கான எந்த யோசனைகளுமே என்னிடமிருந்ததில்லை.. மாறாக, சிநேகிதத்தை, காதல் தளத்தில் பயணிக்க வழி  வகுக்கும் சராசரி சித்தாந்தம் தான் என்னுடையது.. உன்போன்று  இறுகிய ஓர் மனவெளி என்வசம் எப்போதும் வீற்றிருந்ததில்லை.. அந்த எனது சாதுர்யம் உமக்குப் பிடிபட்டதன் நிமித்தமோ என்னவோ, மேற்கொண்டு இந்த நட்புக் களேபரத்தை நீடிக்க விட்டால் கதை கந்தலாகி விடுகிற விபரீதம் தவிர்க்கமுடியாத கருமாந்திரம் ஆகிவிடும் என்கிற தீர்க்க தரிசனம் உன்னிடம் இருந்ததை நானறிந்தேன்.. 

பரஸ்பரம் நமது முகங்கள் இருவராலும் சுலபத்தில் கண்டுணரப் பட்டன.. ??அந்தத் திறன் நம்வசம்  இருந்தமையால் தான், இருவரும் நட்பென்கிற ஒரு தளத்தில் ஒரு குறிப்பிட்ட பிராயங்களுக்கேனும் பழகிட நேர்ந்ததோ??.. அந்த இழை எக்காரணம் கொண்டும் அழிந்து விடக் கூடாது என்கிற அனுமானம் உமக்கு. அதனை அழித்து, மாற்றுப் பிராந்தியத்தில் சஞ்சாரம் செய்வோம் என்பது  என்னுடைய... 

இப்படியான நமது சூழல், அறுபட்டு .. தகவல்கள் எதுவுமற்று.. அடர்த்தி கண்டு மாதங்கள் சில தான் ஆகியிருக்கக்  கூடுமென்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்... அவை வருடங்கள் பல ....!!

நீ எங்கிருப்பாய் எப்படி இருப்பாய் , இன்றைய காலகட்டத்தில் உமது வாழ்வு எவ்விதம் பயணிக்கிறது, உமது கணவன் உமது குழந்தைகள், ... 
எப்போதுமே என்மன வெளியில் சலிக்காமல் ஊடாடுகிற பிரலாபங்கள்....

ஆனால் நீ என்னை மறுபடி ஒருமுறையாவது நினைத்திருக்கக் கூடும் என்று என்னால் நம்பவே முடிந்ததில்லை.. என்னைப் பற்றியோ, என் மனைவி குழந்தைகள் பற்றியோ  உம்மிடம் எவ்வித அனுமானங்களும் தோன்றியிருக்கக்  கூடுமென்று கிஞ்சிற்றும் என்னால் ஊகிக்க சாத்யப் பட்டதில்லை... இப்படி அநியாயமாகவும் உன்னை நான் நினைக்கக் கூடாது தான்.. 

ஒருக்கால் உனக்கும் என்மீது ஒரு இனம்புரியாத உணர்வு மலர்ந்திருக்கக் கூடும்? "அடடே.. அவனை அப்படி மண்டை காய வைத்துவிட்டோமே!" என்றொரு மண்டைக்  குடைச்சல் வந்திருக்கும்??

ஆண்கள் மட்டுமே அவ்விதம் ஆசைகொண்டால் அது நிறைவேறாத விஷயமோ என்னவோ.. ஆனால், பெண்கள் அப்படி மட்டும் நினைக்கிற பட்சத்தில் நிச்சயம் மறுபடி சந்திப்பதற்கான ஓர் சூழலை அமைத்துவிடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.. 

ஒரே முறையாவது அப்படி நினையேன் .... சந்தித்துத்தான் பார்ப்போம்... இந்த முறை உமது கால்களை என் கண்களில் ஒற்றிக் கொள்கிற கற்பனை கூட ஓடுகிறது  என்னில்.. 

அதில் மெட்டி இருக்கலாம்.. குதிகால் வெடிப்பிருக்கலாம்.. பரவாயில்லை.. ப்ளீஸ்டி.. 

1 comment:

  1. வேறேதோ பாதையில் (கதை ?) செல்கிறதே...!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...