Sunday, March 30, 2014

புதுசா எதையும் சொல்லலை....!

பொதுமக்களின் பொதுவான குணாதிசயங்கள் சுலபத்தில் அசூயை கொள்ளச் செய்வது வேதனையே..
அவ்வாறு அசூயை கொள்பவர்களும் மக்களே  எனிலும், புறம் நின்று அவ்வித நபர்களை கவனிக்கிற இயல்பில் இருப்பவர்கள் அவர்கள்..

தனது அசிங்கங்களை மற்றொரு நபர் கவனிக்கிறார் என்கிற பிரக்ஞை கூடக் கிஞ்சிற்றும் அற்று அவ்வித தன்மைகளில் தங்களை இயக்குகிற அந்த அற்பப் பிறவிகளை அவர்களது அறிவுக்கே புரியாத வகையில் தான் ஒளிந்திருந்து கவனித்துத் தெரியப் படுத்த வேண்டுமேயன்றி, யதார்த்தமாக அவர்கள் குறித்த தன்மைகளைத் திரட்டுவது என்பது முரமில்லாமல் குருவி பிடிக்கச் சென்ற கதை தான்.. 

கோவில்களில் விசேட காலங்களில் விநியோகிக்கப் படுகிற பிரசாதங்களுக்காக முண்டியடிப்பதும், வரிசையில் பொறுமையாக நிற்கிற வயோதிகர்களையும் குழந்தைகளையும் கருத்தில் கொள்ளாமல், இவர்களது தொன்னை மாத்திரம் நிரம்பினால் போதுமென்கிற சுயநலங்களும், அதனை சிந்தி சிதறிக் கொண்டு சாப்பிடுவதும், நசநசவென்று நடப்பவர்கள் கால்களில் சாதம் மிதிபட்டு ஓர் தாங்கொணா சங்கடம் ஏற்படுத்தும் என்கிற அக்கறை கூட அற்று, அந்த காலித் தொன்னைகளை அதற்கென்று பிரத்யேகமாக ஒதுக்கப் பட்ட கூடைகளில் போடாமல், அப்படியே விசிறி விடுவதும்.... 

பிரசாதங்களுக்கு மட்டும் என்றால் கூடத் தேவலாம்.. கோவிலின்  உள்ளே பூசாரி கொடுக்கிற விபூதிகளுக்கும் கூட இதே ஆர்ப்பாட்டம் தான்.. 

பிறர் விநியோகிப்பதை அமைதியாக வாங்கிச் செல்கிற பொறுமை கூட இல்லாமல் இவர்களுக்கு ஸ்வாமி கோவில்களுக்குள் என்ன வேலை?.. எம்ஜியார் சிவாஜி  படங்கள் ரிலீஸ் ஆன போது இப்படித்தான் முட்டிமோதி அனுமதி சீட்டுப்  பெறுவர் .. கமல் ரஜினி படத்துக்கு, விஜய் அஜீத் படத்துக்கு, .. அதென்னவோ தெரியவில்லை.., முட்டி மோதி அரங்கினுள் நுழைகிற ஆனந்தம்  எதற்கும்  ஈடற்ற ஓர் செய்கை போலும்.. 

தெய்வம் வீற்றிருக்கிற கோவிலுக்குள்ளும் அதே குத்தாட்டம் கும்மாளம் நிகழ்வது  நமது "கலாச்சாரக் கேவலம்" என்று வர்ணித்தாலும் தகும்.. 

உரசி சூடு காண்கிற  சபல புத்திக் காரர்கள் பாடு கூடப் பரவாயில்லை... அவர்களுடைய  திட்டங்கள் செவ்வனே ஈடேறியதும் பிரசாதம் கூட வாங்காமல் நகர்ந்து விடுவார்கள்.. ஆனால், அதுவேண்டும் இதுவேண்டும் என்று பட்டியலோடு வருகிற  பரம பக்தர்களின் ரோதணை தான் சகிக்கவே முடியாத  சமாச்சாரமாகி சாமிக்கே சலிப்பேற்படுத்துகிற  சூழ்நிலை நிலவி விடுகிறது.. 

பேருந்துகளில் பயணிக்கிற பொழுதும் இதே வித அடாவடி மனோபாவத்தில் தான் பயணிக்கிறார்கள்.. வெளியே இருந்து கொண்டே கைக்குட்டைகளை வீசி இடம் பிடிப்பது,  கஷ்டப்பட்டு ஏறுகிற நபர் அவ்விடத்திலே அமர்ந்தாலோ அந்தக் கைக்குட்டை  நபர் வந்து சட்டம் பேசுவதைப் பார்க்கையில்... சிரிப்பதற்கு வாய் மட்டும் போதாது., குண்டியும் வேண்டும்.. !!

Wednesday, March 26, 2014

கற்று மறந்த களவுகள்..


  .. 

காசு 
களவாடுவதெனில் 
எனக்கு சிரமமிருந்ததில்லை.. 

என் அப்பா 
தொங்கப் போட்ட 
அத்தனை சட்டைகளிலும் 
எனது ஜேப்படி இருந்தன.. 
அதற்கென செருப்படி 
வாங்கிய அனுபவங்களையும் 
தாண்டி எனது ஜேப்படிகள் 
தொடர்ந்தன.. 

"திருந்தாத கபோதி"
என்பதை விருது போல 
பெருமிதமாக செருகிக் 
கொண்டது எனது இளமை.. 

செலவுக்கு வேண்டுமென்று 
நியாயமாகக் கேட்ட போதெல்லாம் 
மறுதலிப்புகள் மட்டுமே 
எமக்கு விநியோகிக்கப்  பட்டமையால்,
நான் களவாடுவதற்கான 
நியாயங்களை நானே 
கற்பிக்க நேர்ந்தன.. 

நான் கேட்டதை மட்டுமே 
கொடுத்துப் பழகி இருந்திருந்தார்கள் 
என்றால், அவர்களிடமிருந்து 
நான் களவாடியதைக் காட்டிலும் 
பாதி தான் பெற்றிருப்பேன்.. 
எமக்குக் களவாடுகிற 
புத்தியும் வந்திருக்காது.. 
அவர்களுக்குக் கஞ்சன் 
என்கிற அவப்பெயரும் 
கிட்டியிருக்காது...

என் அப்பா இறந்ததற்கு 
வராத அழுகை,
அவரது சட்டைப் பாக்கெட்டுகளின் 
வெறுமை கண்டு வந்தது ...!

அந்த அழுகைக்கான 
வெட்கம் இன்றைக்கும் 
என்னைத் தின்று தீர்க்கிறது..

ஆனால் நிச்சயம் 
இன்றெல்லாம் நான் அழுவது 
என் அப்பா இறந்ததற்காக மட்டுமே.. !!

Tuesday, March 25, 2014

மலேசிய விமானம்..

கடந்த 20 நாட்களாக உலகத்தையே ஒவ்வொரு வகையறா அனுமானத்தில் உறைய வைத்திருந்த அந்த மலேசியா விமானம், கடலில் வீழ்ந்து சின்னாபின்னமாகி விட்டதான தகவல் எல்லாரது மனசுகளையும் ரணகளப் படுத்தி விட்டதென்றே சொல்லவேண்டும்.. 

எங்கேனும் நாடு கடத்தப் பட்டு ரேடாருக்குப் புலனாகாத விதத்தில் பயணிகள் யாவரும் அவஸ்தையில் தவிப்பதாக .... 
உண்ண  உணவின்றி , அருந்த நீரின்றி குழந்தைகளும் வயோதிகர்களும் பேராவஸ்தை அனுபவித்து வருவதாக.. 
எவ்வளவோ தர்மசங்கடங்கள் நேர்ந்தாலும் பரவாயில்லை.., எப்படியோ மறுபடி ஓர் குறிப்பிட்ட நாளில் நாடு திரும்பினாலே போதும் என்கிற உலக மக்களின் பிரார்த்தனைகள்.. 

யாவும் பொய்த்து .. மூழ்கி மூர்ச்சையான செய்தி நம்மை சற்றேனும் மூச்சடைக்கச் செய்தது.. 
அந்த இருநூற்று சொச்சம் பேர்களுக்கான மரணம் இவ்வளவு பயங்கரமாகவா வழங்கப் பட்டிருக்கவேண்டும்?.. பெருவாழ்வு வாழ்ந்த அவர்கட்கு மரணமும் பெருமரணமாகவே விநியோகிக்கப் பட்டுள்ளது ஆண்டவனால்..!!

இதற்கு முன்னர் இப்படி ஓர் சோக வரலாறு நிகழ்ந்தது இல்லை.. 
சம்பவம்  நிகழ்ந்த மாத்திரத்தில் செய்தியாக வலம் வந்து கேட்டே பழகிப் போன நமக்கு.. இந்த சம்பவம் ஓர் மர்மத் துயரை நம்மில் நீடிக்கச் செய்து .. நேற்றைய இதன் செய்தி ஓர் தாங்கொணா உணர்வொன்றை கிளர்ந்தெழச் செய்திற்று.. 

இவர்களது உறவினர்களின் துயரை சொல்ல வார்த்தைகள் ஏது ?.. ரோட்டில் அடிபட்டுச்  சாவு நேர்ந்திருந்தால் கூட கடைசியாக அந்த உடலைப் பார்த்தேனும் ஓர் ஆறுதல் காண வாய்ப்புண்டு.. ஆனால், இந்தக் குரூர விதியின் வசத்தில் .. விரல் நகங்களைக் காண்கிற சூழ்நிலை கூட இல்லாதது பரமவேதனை.. 

சுறாக்களும் திமிங்கலங்களும் மீன்களும் இன்னும் இன்னும் இவர்களைத் தின்று தின்று பசி ஆறிக் கொண்டிருக்குமோ ? அல்லது தின்று தீர்த்திருக்குமோ??

நம்மால் இயன்றதெல்லாம் இவர்களது ஆன்மா சாந்தி பெறப் பிரார்த்திப்பதே  அன்றி  வேறு என்னவாக இருக்க முடியும்?.. 

ஒரு விடுமுறை நாளிலோ , அல்லது மற்ற விழாக் காலங்களிலோ, இவர்களை உண்ட மீன்கள் .. மீன்மார்க்கெட்டில் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.. 
பேரம் படிந்த பிற்பாடு, அடுப்பில் குழம்பாகக் கொதிக்கத் துவங்கும்.. !!

Monday, March 24, 2014

வந்துட்டான்யா வந்துட்டான்.

எனது மனதிற்கினிய அனைவருக்கும் .. 

நான் சுந்தரவடிவேலு.. எமது கணினி கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக எனது வசம் அல்லாமல் பழுதை அகற்றியாக வேண்டிய ஓர் சூழலில் இருந்தமையால்-- நான், எவ்வித இடுகைகளும் இடுவதற்கு வாய்க்கவில்லை.. 

எனது இடுகைகள் அற்று பிளாக் உலகமே வெறிச்சோடி கிடந்திருக்கும் என்பதை இவன் நன்கறிவான்.. என்ன செய்வது, காலத்தின் கோலம்.. 
நல்ல வேலையாக .. நானும் எனது கணினியும் மீண்டும் மீண்டு வந்துவிட்டோம் உங்கள் அனைவருக்கும் விருந்து படைக்க.. இனி, உங்களுக்கெல்லாம் பரமானந்தம் தானே?..ஹூஹ்............

நானில்லாமல் எமது ரசிகர் பட்டாளம் இந்தப் பத்து நாட்கள் அடைந்த இடர்களை வார்த்தைகள் போட்டு நிரப்பும் சாத்யம் அறவே இல்லை.. 
இனி இவ்வித ஹிம்சைகள் நேரா வண்ணம் நன்கு பழுதை நீக்கி உள்ளார் திரு. முரளி அவர்கள்.. அவரும் "அன்பே சிவம்" என்கிற பெயரில் இடுகைகள் அவ்வப்போது எழுதி வருவதாக எமது நண்பர் வெண்புரவி அருணா அவர்கள் சொல்லி, கேள்வி.. 

"வந்துட்டான்யா வந்துட்டான்.. இம்புட்டு நாளா நிம்மதியா இருந்தோம்.. மறுபடி வறுத்தெடுக்க கிளம்பி வந்துட்டான்யா இந்த வடிவேலன்.. அடிக்கிற வெய்யில் போதாதுன்னு இவன் வேற உப்புசம் பண்ணப் போறான்!"
--அநேகமாக, இதுதான் உண்மையாக இருக்க முடியும்... ?

எது எப்டியோ.. இதோ.. இதோ.. வந்தே வந்துட்டேன்..! ஹிஹி!!


Thursday, March 13, 2014

கோவில்கள் எங்கிலும்..

முன்னரெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைதியாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த சாயிபாபா கோவில்கள் இன்று, நகரெங்கிலும் புற்றீசல்கள் போல வியாபித்து, வியாழக்கிழமைகளில் ரஜினி ரிலீஸ் பட கூட்டம் போல பொங்கிப் பெருகுவதைப் பார்க்கையில் ஆச்சர்யம் வழிகிறது..
ஏரியாவிற்கு ஒரு கோவில் என்கிற ரீதியாக இக்கோவிலின் ஆக்கிரமிப்பு இருக்கிறது.. அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கிற மக்களின் வசதிக்கேற்ப இக்கோவில் அருகாமையிலேயே கிளை  போல அமைந்திருப்பதைப் பார்க்கையில் இதன் உள்ளார்ந்த நோக்கம் சுலபத்தில் வெளிப்படையாக எவருக்கும்  புரியவில்லை...

அன்றைய தினம் ஆரத்திகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.. பிரசாத விநியோகம் தொடர்கிறது..
பிஸ்கட்டுகளும், பழ வகையறாக்களும் காணிக்கைகளாகக் குவிந்த வண்ணமே உள்ளது.. அவர்கள் வைத்துள்ள
ஹுண்டியல்களில் பணமும் குவிந்த வண்ணமே..
பரஸ்பரம் காணிக்கைகளும் பிரசாதங்களும் எல்லா சாய் கோவில்களிலும்..
காணிக்கைகளை மட்டுமே செலுத்தி விட்டு பிரசாதங்களைத் தவிர்த்து விடுகிற பக்தர்கள்..
காணிக்கை என்று பத்துப் பைசாச கூட இடாமல் வெறுமே பிரசாதங்களை வாங்கி நக்கி, உப்பில்லை காரமில்லை என்று குறை சொல்லி நகர்கிற அற்பப் பதர்கள்..
இப்படி பல மனோபாவங்களில் மனிதர்கள் எல்லா கோவில்களிலும் குவிகிறார்கள்..
சுவாமியை தரிசினம் செய்து தனது பிரச்சினைகள் விலக மனமுருகி வேண்டி கண்ணீர் மல்குகிற சிலர்..
கூட்ட நெரிசலை, தனது வக்கிர உணர்வுகளைத் தீர்ப்பதற்கு உபயோகிக்கிற விதத்தில் பிறன் மனை நோக்கும் பேராண்மை அற்ற சபல ஆண்கள், யதார்த்தமாக இடிப்பது போல பெண் மார்பகங்களைத் தொடுவது... இவர்கள் சுவாமிக்கான தீபாராதனை தவிர்த்து எல்லாவற்றையும் தரிசிப்பவர்கள்..
எல்லா கோவில்களிலும் கூட்டத்தின் சதவிகிதம் இந்த அற்ப மனோபாவம் நிரம்பியவர்களால் தான் அதீதம் உள்ளது என்கிற தர்மசங்கடமான உண்மை, உண்மையான ஆஸ்திகன் ஒவ்வொருவனையும் காயப் படுத்துகிற செய்தி..

ஆஸ்திகனையே கூட சபலிஸ்டாக மாற்றக் கூடிய வல்லன்மை இந்தக் காமத்துக்கு உண்டு..
அது கூடப் பரவாயில்லை..
சுவாமிகளை அந்தத் தொந்தரவுகளுள் மூழ்கச் செய்துவிடக் கூடாது பக்தகோடிகள்..
இது தான் எனது பிரார்த்தனை.. ஆனால், யாரைப் பிரார்த்திப்பது என்பது தான் குழப்பம்..
இப்போதைக்கு, சாயிபாபாவையே பிரார்த்திப்போம்.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...