Tuesday, December 17, 2013

ஆண்மை .............[2 பக்கக் கதை ]

அந்த வீட்டின் முன் திருவிழா கும்பல் சூழ்ந்திருந்தது..
கத்துவதும் கதறுவதுமாக அல்லோல கல்லோலமாய் இருந்தது..
எனக்கும் இன்று சற்று ஓய்வு என்பதால் அந்தக் குழாமில் இணைந்து பட்டும் படாமலும் குசலம் விசாரிக்க ஓர் சபலம் குடையத் துவங்கிற்று..
அடுத்த ஷணம், அதனை செவ்வனே நிறைவேற்றி அந்த நாராசாரத்தினுள் நானிருந்தேன்..

"பிரச்னை என்ன?" என்று நான் தொடுத்த அறிவுப் பூர்வமான கேள்விக் கணைக்கு எந்தப் பண்ணாடைக்கும்  ஓர் தெளிந்த பதிலை சொல்கிற ஆற்றல் இல்லாதது கண்டு நான் கடுப்பானேன்..

"என்னமோ நைனா... கும்பலா கீதுன்னு நானும் வந்து இருபது நிமிஷத்துக்கு மேல ஆகுது.. பிரச்னை இன்னான்னு புடிபடவே இல்ல... "
இந்த பதில் கூட சற்று நேர்த்தியாகப் பட்டது..
புதிதாக நுழைந்தவர்கள் என்னிடம் "என்னா ஸார் ?" என்று வினவத் துவங்கிய போது தான் அந்தக் கேள்வியின் எரிச்சல் எனக்குப் புரிபட்டது..

சில நாறப் பயல்களின் வியர்வை நாற்றங்களும், பல்துலக்காத வாய் நாற்றங்களும் அந்தப் பிராந்தியத்தினின்று கழன்று வெளி வருவது தான் சாலச் சிறந்தது  என்கிற மகோன்னத சிந்தனை துளிர்த்த மாத்திரத்தில் தெறித்துப் போய்  விழுந்தேன் வெளியே..

இன்று ஓய்வு என்கிற சாவகாசத்தோடு சற்று முன்னர் தான் அற்புதமான ஓர் ஷாம்பூ  குளியல் எடுத்திருந்தேன்... இனி மறுபடி குளிக்க வேண்டும் போலுள்ளது..

அந்த சாயங்காலமே அந்த கும்பலின் பிரச்னைகளும் காரணங்களும் எனக்கு வந்தன.. அதாகப் பட்டது..
--தேசிங்கு ராஜன் மனைவி சிந்தாமணியை எவனோ அவளது நம்பரைத் தெரிந்து செல்போனில் கசுமாலமாகப் பேசி இருக்கிறான்.. இந்தப் பத்தினியோ, அதனை அவளது  வீர புருஷனிடம் பறைசாற்ற, அந்த புஜம் திரண்ட காளை ஒரு செமத்தியான ஐடியா கொடுத்திருக்கிறான்..
"அப்டியே ஜொள்ளு விடுற மாதிரி பேசி, நம்ம ஏரியாவுக்கு பயலை வர வச்சுடு.. அப்புறம் வந்ததும் டவுசரை கழட்டிடுவோம் .. இன்னான்ற ?" என்றதும் அவளும் ஆமோதித்து  பயலை வரவைத்து போட்டு பொரட்டி எடுத்திருக்கிறார்கள்..

பாவம் அவன் கெட்ட நேரம் .. இதென்னவோ ஊர்ல ஒலகத்துல நடக்காத சமாசாரம் மாதிரி போட்டு அந்த வாங்கு வாங்கிட்டாங்க.. அவனை அடிச்ச பசங்க அதுக்கு மேல  தப்பு தண்டா பண்றவங்க தான்னாலும் , என்னவோ ரொம்ப யோகியணுக  போல அந்த அப்ராணிய கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு, 108 ஐ வர வச்சு கொண்டு போற அளவுக்கு தாட்டிப் புட்டாக தாட்டி..

"நம்ம சிந்தாமணி கிட்ட எவனாச்சும் இனி வச்சுக்கிட்டேகன்னா பிச்சுப் போடுவான் இந்த தேசிங்கு.. ஆமா ன்னு மீசையை நெரவிக்கிட்டே  அவன் பேசுனதப் பார்த்தா  சும்மா ராஜ்கிரண் கணக்கா இருந்துச்சு "ன்னு சொன்னான் என்னோட எதிர் வீட்டு கணபதிசுப்பிரமணியம்..

'அடங்கொய்யாலே.. சான்சு கெடச்சா சிந்தாமணிய நானே கூட ஒரு கூட்டமில்லாத டுபாக்கூரு படத்துக்குகூட்டிட்டுப் போலாம்னு பிளான் போட்டிருந்தனே!' எனது  ஆண்மை அங்கலாய்த்தது...

                                                               [2]

அந்த சம்பவம் நடந்து முடிந்து ரெண்டல்லது மூன்று மாதங்கள் இருக்குமோ?..
அவ்வப்போது சிந்தாமணி கண்களால் என்னை வெட்டுகிறாள் என்றாலும், அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு பிற்பாடு, முன்னர் போல ஓர் நமட்டுச் சிரிப்பை நான் இப்போதெல்லாம் உதிர்ப்பதில்லை... 'எங்காவது நம்மையும் சிக்க விட்டு சிதிலப் படுத்திவிட்டால்?' என்கிற ஓர் அச்சுறுத்தல் மனதின் ஆழத்தில் வேரூன்றி விட்டது.. ஆகவே, எனது அற்ப சபலத்தை அவளிடம் விநியோகிக்கிற உத்தேசத்தை உதறித் தள்ளிவிட்டேன்..

இவ்ளோ பெரிய உலகத்தில் சிந்தாமணியை விட்டால் எத்தனை மணிகள் ஆட்டிக் கொண்டு கிடக்கிறதுகள் ??.. அதை டிங் டாங் என்று அடித்துவிட்டுப் போக வேண்டியது தானே..
நான் உதிர்க்காத சிரிப்பை அவள் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்ததாக எனக்கோர் அனுமானம், அவளது முகம் கண்டு.. ஆனால், நிச்சயம் ரகசியமாக எனது அந்த சிரிப்பை அவள் விரும்புகிறாள் என்பது ஊர்ஜிதமானால் சத்தியமாக சிரித்து வைத்து விட எனக்கொன்றும்  பிரச்னை இல்லை.. ஆனால் அதனை எப்படி ஊர்ஜிதப் படுத்துவது?..

டியூஷன் எடுக்கிற எனது மனைவியிடம் அவளது பையனோ பெண்ணோ படிக்க வருகிற சாக்கிலாவது எதையாவது அவளிடம் பேசிப் பார்க்கலாம். அதற்கும் வகையில்லாமல் அவளது குழந்தைகள் அவளது தாயினிடத்தில் வளர்வதாக தகவல்..
இதென்ன முறை என்று புரியவில்லை.. தான் பெற்ற குழந்தைகளோடு ஆனந்தமாக அளவாவிக்  கொண்டு இருக்காமல், எங்கேயோ எவரோ மேற்பார்வையில் வளர விட்டு, .... இப்படியும் சிலர் எதற்கோ இருக்கத்தான் செய்கிறார்கள்..

இப்படி சிந்தாமணி புராணம் பாடுகிற அளவு அவள் அப்டி ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால், அந்த சரும மடிப்புகளும் நெளிவு சுளிவுகளும் ஓர் இனம்புரியா வகையறா ரசாயனத்தை ராமனிலும் கூட பாய்ச்சக் கூடுமென்றே கூடுமானவரைக்கும் சொல்லிவிட முடியும்..

பிறகு...
அந்த முதல் பத்தியின் துவக்க சம்பவம் நடைபெற்று இன்று ஆறேழு மாதங்கள் ஆகி இருக்குமோ?.. இருக்கலாம்..

மறுபடி ஒரு சனிக்கிழமையின்  காலை பத்துமணி வாக்கில் அதே விதமான திருவிழா கூட்டத்தை அங்கே கண்டு அதிர்ந்தேன்..
'இப்ப எந்த மடையன்டா மாட்டினான்?' என்று குடைய ஆரம்பித்தது மண்டை..
'இவுளுக்கும் புருஷனுக்கும் வேற பொழப்பே இல்லையா?.. பாவம், அப்பாவிங்களைப் போட்டு இந்தத் தெராட்டு வாங்கறாங்களே?.. என்று என்னையும் அறியாமல் எனது உதடுகள் பிதற்றத் துவங்கிவிட்டன..

'இந்த விஷயத்தை இப்படி தூண்டில் போட்டு போட்டு ஒவ்வொரு மனுஷனையும் தர்மடி கொடுக்கறதுக்குப் பதிலா, ஒரு ஓரமா சைடு லாக் பண்ணாத மொபெட்டை நிறுத்தி  மறஞ்சிருந்து கவனிச்சு .. அதை திருட வர்றவனை லபக்குன்னு புடிச்சு ஒரு பொது மாத்து போட்டு சாவகாசமா  போலீஸ் கைல ஒப்படச்சா கூட அதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா, எல்லாருக்கும் இயல்பான இந்த விஷயத்தை மையமா வச்சு அவனுக மானம் மரியாதையை வாங்கறது  இல்லாம கை கால் ஒடஞ்சு போற மாதிரி அடிக்கறதுங்கறது.., வன்மையாகக் கண்டிக்க வேண்டிய தந்திரம்..  !

சரி, இதையும் தான் பக்கம் போயி பார்த்துட்டு வருவோம்னு போனாக்கா..

அடங்கொய்யாலே.. விஷயமே வேற..
மூக்கச் சிந்திப் போட்டுட்டு அண்டர்வேரு தெரியற மாதிரி லுங்கிய ஒரு டப்பா கட்டு கட்டிக்கிட்டு மூலையில ஒக்காந்து பொட்டச்சி மாதிரி ஒப்பாரி வச்சுட்டு இருந்தான் தேசிங்கு..
"நா என்னடி கொற வச்சேன் சிந்தா.. இப்டி தனியா மச்சான  தவிக்க வுட்டுட்டு போயிட்டியே!"
ஒப்பாரியப் பார்த்தா என்னவோ பொண்டாட்டி செத்து நடு வீட்ல படுக்க வச்சிருக்கற மாதிரி தெரிஞ்சிது..

அப்பால தான் விஷயம் புரிஞ்சுது, நம்ம கோதண்டராமனோட பையன் லட்சுமிகாந்தன் சொல்லி..
"போன வாரம் எதுக்கால ஒருத்தன் பாச்சலர்னு சொல்லி குடி வந்திருக்கான். பயல் ஏதோ தனியார் வங்கியில அக்கவுண்டண்டு ன்னு புருடா விட்டுருக்கான்.. நம்ம தேசிங்கும் வெள்ளந்தியா பொண்டாட்டிய வுட்டே சோறு பரிமாறச் சொல்லி அனுப்பி இருக்காரு.. ஒரே வாரத்துல அவன் என்ன மருந்து  வச்சானோ, லபக்குன்னு அள்ளிக்கினு எங்க போனாங்கன்னே தெரியலை.. ''

என்னுடைய ஆண்மை மீது எனக்கு ஓர் கேவலமான பார்வை விழத் துவங்கிற்று ஏனோ உடனடியாக.. !!


                                                                 

4 comments:

 1. பலரும் எனது இடுகைகளைப் படிக்கிறார்கள்.. ஆனால் மெனக்கெட்டு தங்களைப் போல எவரும் பின்னூட்டம் போடுவதில்லை..அதற்காக எப்போதும் என் நன்றி உரித்தாகும் திரு தனபால் அவர்களே..

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா கீது வாத்தியாரே... அதென்ன சிறுகதை (முயற்சி?)...????

  ReplyDelete
 3. DEAR ARUNA..
  இவ்ளோ நாள் கழிச்சு தலைவர் எட்டிப் பார்த்ததற்கு மிக்க நன்றி.. நாம 95 வயசுல கூட வாழறதுக்கு முயற்சி தான் செஞ்சுக்கிட்டு இருப்போம்.. எதையுமே ஒரு பக்கா அனுபவ ரீதியா உணர்ந்துட்டதா சொல்றதுக்கே எப்பவுமே வெக்கம் .. அதென்னவோ அப்டி ஒரு BREED நானு.. ஹிஹி..

  ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...