Friday, May 31, 2013

நாய்கள்..

ல்லா ஊர்களிலும் 
எல்லா கறிக் கடைகளிலும் 
நாக்குகளைத் தொங்கப் 
போட்டுக் கொண்டு 
நாய்கள் உண்டு... 

பிரத்யேகமான அந்த 

நாய்கள் கொழுத்துக் 
கிடக்கும் சினைப்
பன்றிகள் போல..!!

கறிக்கடைக் காரன் 

எதை சொன்னாலும் 
செய்கிற நன்றியில் 
ஓர் பவ்யமான பாவனை.. 
வாலாட்டம்...!

எலும்புகள் வீசப் படுகையில் 
பகிர்ந்துண்கிற பண்பற்று 
எனக்கே எனக்கென்கிற 
சுயநலப் பண்புகள் 
நாய்களுக்கே உரித்தாவன..!!

உண்ட மதர்ப்பில் 

சாலைகளில் 
சவம் போல கிடக்கும்..

"நாய் படாத பாடு"

"இந்த நாய்ப் பொழப்பு எதுக்கு?"
"மானம் கெட்ட நாய்"
"சனியன் புடிச்ச நாய்"

மனிதர்களுக்கு மனிதர்கள் 

ஏவிக் கொள்கிற 
நாராசாரக் கணைகளாக 
வலம்  வருகின்றன 
நாய்கள் எப்போதும் 
நமக்குள்ளாக..!!

Sunday, May 26, 2013

சூது கவ்வும் ........................விமரிசனம்

சூது கவ்வும் ... பார்த்தேன்..
சில ஊசிகள் டாக்டர் குத்துகிற போது  வலி தெரியாது.. பிற்பாடு நிதானமாக வீடு வந்து வலிக்க ஆரம்பிக்கும்..

அந்த மாதிரி, பார்க்கும் போது சூது கவ்வும் என்னவோ ஓர் சுமாரான ஹியூமர் சென்ஸ் கொண்டதாகப் புரிபட்டது.. ஆனால் படம் விட்டு வீடு வந்த பிற்பாடு அந்தக் காட்சிகளை நினைத்து நினைத்து ஓர் லூஸு மாதிரி சிரிப்பதைக் கண்டு அம்மாவும் மனைவியும் என்னை விபரீதமாக கவனித்தது எனக்கே ஓர் பயத்தை ஏற்படுத்தியது.. எங்காவது கீழ்பாக்கம் விஜயம் செய்ய வேண்டுமோ என்று.. ஹிஹிஹி..

சும்மா கன்னாபின்னாவென்று யோசனை செய்து சகட்டுமேனிக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.. ஆனால், அந்த சிருஷ்டியில் ஓர் அதிமேதாவித் தன்மை ஒளிந்திருப்பதை ஓர் முட்டாள் கூட உணர முடியுமென்றே எனக்கு அனுமானிக்க முடிகிறது..

எப்போதுமே சிரிக்காத ஓர் சீரியசோடு விஜய் சேதுபதி திட்டங்கள் போடுவதும் ஆட்களைக் கடத்துவதும், அதன் ரீதியாக பெறப்படுகிற பணத்தை உடனிருப்பவர்களுக்கு ... கடத்தப் படுகிறவர்கள் உட்பட ..... பங்கிட்டு விநியோகிப்பதிலாகட்டும், மற்றவர்களுக்குப் புலப்படாத தனது மாய பிம்பக் காதலியை மடியில் கட்டிக் கொண்டு அவளுக்காக மெனக்கெடுவதிலாகட்டும்
.. ஒருகட்டத்தில் கடத்தல் வேன் கவிழ்ந்து அந்த மாயபிம்பக் காதலி இறந்ததும் அதற்காக  அழுது புலம்புவதிலாகட்டும் ... எக்ஸ்க்ளூஸீவான ஓர் ஹாஸ்யரசமும்  சோகரசமும் பரஸ்பரம் நம்மில் பின்னிப் பினைவதை இல்லை என சொல்வதற்கில்லை....

இதையெல்லாம் விட டைரக்டரின் இன்னொரு கற்பனை திறனை இங்கே சுட்டிக் காண்பிக்க வேண்டும்.... அந்தக் கற்பனைக் காதலியாக நடித்துள்ள அந்தப் பெண்ணின்  முகபாவனைகளும், காதலனின் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து அவள் ஓர் நக்கல் சிரிப்பை உதிர்ப்பதும், கடத்தலில் அவ்வப்போது சொதப்பி விடுவதைக் கண்டு  அவள் மழுப்பலாக அவனை சிலாகிப்பதையும்.. ஓர் தேர்ந்த  கவிதை மாதிரி ரசிக்க முடிகிறது.. !!

நேர்மையான அமைச்சராக பவனி வருகிற பாஸ்கர்... அவரது அப்பாவிக் கிரிமினல் மகனாக நடித்திருக்கிற ஒருவர்.. அடேங்கப்பா.. என்ன ஒரு பேஸ் எக்ஸ்ப்ரஷன்... பாஸ்கரின் வெள்ளந்தி மனைவியாக வருபவர்.. மகன் மீதான ஓர் சராசரி பாசத்தைப்  பொழிந்து புருஷனிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிற அந்த யதார்த்தம்...

பிரம்மாவாக வருகிற அந்த சைக்கோ போலீஸ் அதிகாரி..
விஜய் சேதுபதியோடு கூட்டு சேருகிற அந்த மூவர்... ரியல்லி ப்ரில்லியன்ட்..
கதையை உல்டாவாக மாற்றி விடுகிற ராதாரவி..
இதற்கெல்லாம் பொருத்தமாக பவனி வருகிற பின்னணி இசை..
படத்தில் பாடல்களுக்கு முக்கியத் துவம் இல்லை.. பாடல்கள் இருக்கிறதா இல்லையா என்றே புரியாத  விதத்தில் படம் முழுக்க ஹாசியம் ஆக்கிரமித்து விட்டதென்றே சொல்லவேண்டும்..

நீண்ட நாட்கள் கழித்து ... ஓர் சிறு இடைவெளிக்குப் பிறகு... இன்னொருவாட்டி பார்க்கலாமோ என்று எல்லாரையும் தோன்ற வைக்கும்??.. 

Sunday, May 19, 2013

அதிமுக .. ஜெயலலிதா.. சில அபிப்ராயங்கள்..

நீண்ட நாட்களாக இதனை எழுதி விடவேண்டும் என்கிற அவா பீறிட காத்திருந்தேன்.. ஆனால் இதற்காக நான் சில கட்சி அபிமானிகளின் சங்கடங்களுக்கும் கோபங்களுக்கும் ஆளாக நேருமோ  என்பதால் இந்த எனது கருத்து சுதந்திரத்தை சிறைப் படுத்தி வந்தேன்...

ஆனால் எத்தனை நாட்கள் தான் சிறைப் படுத்தி வைப்பது.. அதுவும் சுதந்திரத்தை..!!

நமது தமிழக முதலமைச்சர் .. அம்மா .. தாய்.. புரட்சித் தலைவி.. என்கிற பல அடைமொழிகளை பெற்று உலா வருகிற ஜெயலலிதா குறித்து தான் சிலவற்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. அதன் நிமித்தமாக ஆட்சேபங்கள் இருக்கும் பட்சத்தில் பின்னூட்டம் இட வேண்டுகிறேன்..

புதிதாக நான் ஒன்றும் சொல்லி விடப் போவதில்லை.. எல்லாரும் அறிந்த ஓர் சாதாரண விஷயத்தை தான் இங்கே உங்களிடத்து focus செய்யவிழைகிறேன்..

அன்றாடம் நாமெல்லாம் அதிமுக வின் சானல்களை கண்டு களித்து வருகிறோம்.. அவைகளில் எல்லாம் ஜெ .வின் துதியைக் கேட்டுக் கேட்டு நம் காதுகள் புளித்துப் போய் விட்டன..

அதுவும் அந்த சட்டமன்றத்தில் அந்த அதிமுக கட்சி அமைச்சர்கள் கூடி அந்த மர டெஸ்க்கை கைகளால் ஓங்கி ஓங்கிக் குத்து விடுவதைப் பார்க்கையில் வருகிற எரிச்சலுக்கு அளவு கோல் ஏதேனும் உண்டா?

அம்மாவை வர்ணித்துப் பேசுகிற அமைச்சர்கள்.. பிற கட்சித் தலைவர்களை மிகக் கேவலமாக சாடுவதும், அம்மாவிற்கு மாத்திரம் சகட்டு மேனிக்குப் புகழாரம்  சூட்டுவதும்.. அதையெல்லாம் கேட்டுக் கேட்டு முகத்தில் ஓர் புன்னகையை  சந்தோஷத்தை ஜெ அவர்கள் வெளிக் காண்பிக்கையில்.. ஒரு நபருக்கு இவ்வளவு வர்ணனைகள் மற்றும் பாராட்டுக்கள் தேவைப் படுகின்றனவா.. இதிலெல்லாம் இப்படி எந்நேரமும் சிலிர்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பது  சாத்யப் படுகிறதா? என்றெல்லாம் வியக்க வேண்டி உள்ளது..

வாழ்வாதாரமே வெடிவைத்துத் தகர்த்தது போல இங்கே மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.. சின்னவெங்காயம் தக்காளி வாங்க தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்..

அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிற நபர்களுக்கு மாத்திரம் எட்டு சதவிகிதம் பதினாறு  சதவிகிதம் பஞ்சப்படி , டியர்னஸ் அலவன்ஸ் என்றெல்லாம் கொடுத்து மேலும் மேலும்  கொட்டிக் கொடுத்து.. பிற மக்களை சொத்தைக் கத்தரி  வாங்கக் கூட காசில்லாமல் செய்வது என்ன நியாயம்?

இதனைப் படிக்கிற அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமானால் எனது அபிப்ராயம்  "போடா புண்ணாக்கு" என்பதாக இருக்கலாம்.. ஆனால், அரைவயிறு சோற்றுக்கே  அன்றாடம் போராட வேண்டிய ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இதன் நியாயங்களும் வலிகளும் நன்கு புரியக் கூடும்..

சும்மா டெஸ்க்கை தட்டுவதை நிறுத்தி விட்டு ..இல்லாதவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி ஏதேனும் அவர்களுக்கு ஓர் நல்வழியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மிகத் தாழ்மையோடு  வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..

மற்றபடி நான் அதிமுக கட்சியின் எதிர்ப்பாளனும் அல்ல.. திமுகவின் அபிமானியும் அல்ல.. தவறுகளை எனது வீட்டு நபர்கள் செய்தாலும் உடனே சுட்டிக்  காட்ட நான் அவசரப் படுகிறவன்.. நாம் அனைவருமே அப்படித்தானே??

Tuesday, May 14, 2013

இடம் மாறுகையில்..

காற்றில் பறக்கிற 
உனது கூந்தல் 
நீ சூடி இருக்கிற 
பூக்களைக் காட்டிலும் 
வசீகரிக்கிறது...

ஆனால் அதே 
கூந்தல் 
ரச சாதத்தில் 
தென்பட நேர்கையில் 
முன்னர் சாப்பிட்ட 
சாம்பார் சாதம் 
குமட்டுகிறதடி 
பெண்ணே..!!

Saturday, May 4, 2013

[வக்கிர......[மனிதர்கள்...

வழக்கமான அன்றாட செய்திகள் ஆகி விட்டன -- ஐந்தாறு வயது நிரம்பிய குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதும, ஜன சந்தடி நிறைந்த பேருந்து நிறுத்தங்களில் அழகிய பெண்மணிகளின் முகங்களில் திராவகம் வீசப் படுவதும்..

"ஐயோ" என்று பதறுகிற பிரக்ஞை கூட அற்று சர்வ சாதாரண நிகழ்வுகள் போல படித்துவிட்டு செய்தித் தாள்களை வீசிவிட்டுப் போகிறோம்..

விபரீதங்கள் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நேர்கிற வரைக்கும் அதன் வீரியம் நமக்குப் புரிவதாயில்லை... எங்கோ எவர்க்கோ நேர்ந்து செய்திகளாக வருகையில் அவை மனசை சற்றே ஆக்கிரமித்து"இச்சு"கொட்ட வைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறது.  

இதென்ன இப்படி வக்கிரம் போட்டு ஆட்டுவிக்கிறது?.. அல்லது இவையெல்லாம் தொன்று தொட்டே அன்றாடம் நடந்து வருகிற விஷயங்களா...?. மீடியாக்கள் பெருத்துவிட்ட இன்றைய காலகட்டங்களில்--இம்மாதிரி சம்பவங்கள் சற்றே பிரம்மாண்டப் படுத்தப் படுகிறதோ??.. 

இதையெல்லாம் வைத்துப் பார்க்கிற போது .... இம்மாதிரி பல சம்பவங்கள் தினசரி நிகழ்கிறதென்றும் ... ஏதோ ரெண்டொன்று மாத்திரம் செய்திகளாக வந்து கொண்டிருப்பதாக அனுமானிக்க வேண்டியுள்ளது..

இந்த சமூகத்தில் நிகழ்கிற எல்லா நல்ல கெட்ட  விஷயங்களுமே இதே விதமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ...

இம்மாதிரிக் குற்றங்களைப் புரிகிற நபர்களை நய்யப் புடைய வேண்டுமென்கிற ரௌத்திரம் ... ஓர் பயித்தியகாரனுக்குக் கூட உண்டு.. கண்டதுண்டமாக வெட்டி  நாய்க்கு நரிக்குப் போடவேண்டும் அவனுகளை என்கிற பரமவெறி ஓர் கூர் தீட்டிய கத்தி போல மனசில் கிடக்கிறது..

என்ன மனித ஜென்மங்கள் இவர்கள்?
இந்தக் கேள்வி என்ன அவ்வளவு சாதாரணமாகக் கேட்கப் பட வேண்டிய கேள்வியா என்ன??

Thursday, May 2, 2013

என்னாங்கறீங்க??

எதுவும் எழுதாமல் இருக்கிறோமே என்கிற உறுத்தல் ஓர் சொறி மாதிரி மனசை அரித்துக் கொண்டே இருக்கும், எதுவும் எழுதாத எல்லா தருவாய்களிலும்..
இந்த உறுத்தல் காகிதங்களில் எதையேனும் கிறுக்கிக் கொண்டிருந்த ப்ராயந்தொட்டு..
அனர்த்தமாகவேனும் எதையேனும் பிதற்றியாக வேண்டும்.. அல்லவெனில், கடமையினின்று வழுவிய ஓர் குற்ற உணர்வு..

"இவுரு பெரிய ரைட்டரு.. எழுதாட்டி என்னவோ ராயல்டி மிஸ் ஆயிடப்போற மாதிரி.." --- உங்களது நக்கலான முணகல்களை எனது செவிகள் நன்கு உணர்கின்றன...
..
அந்தந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் மாத்திரமே அந்தக் குறிப்பிட்ட காரியங்களை செவ்வனே செய்யவேண்டும் என்பது எழுதப் படாத விதி போலும்.. சம்பந்தமற்றவர்கள் அவர்கள் அந்தக் காரியங்களை விரும்பினாலும் அதனைத் தவிர்த்து விடவேண்டுமோ?.. அப்படி எல்லாம் என்னால் முடியாது.. ஒரு காரியத்தில் நான் பக்கா அமெச்சூராக இருந்தாலுமே கூட எனக்கது இஷ்டமென்கிற போது ஓர் பிரபல நபர் போல அதனை செய்து முடிப்பதில் ஓர் ஆத்மதிருப்தி... புறமிருந்து காண்பவர்களுக்கு வேண்டுமானால் அது அற்பத்தனமாகப் புரிபடலாம்..

இதே விதமாகத் தான் எல்லா துறைகளுமே...
எந்தத் துறையாயினும் அதன் மீதாக ஓர் பிரேமம் உண்டாயின் அதை செஞ்சுட்டுப் போய்க்கோடா ... சும்மா அவன் அப்டி நெனப்பான், இவன் இப்டி நெனப்பான்னு ஒவ்வொன்னுக்கும்  யோசிசுக்கினு கெடந்தோம்னா ஜல்தியா கீழ்ப்பாக்கம் தான் போவனும்..

சாப்பிடறது கூட அப்டித்தான். ஒரு அயிட்டத்து மேல ஆச வந்திடிச்சின்னு வச்சிக்குவோம்.. அது நம்ம ஒடம்புக்கே ஆவாட்டிக் கூட வாங்கி சாப்பிட்டுடனும்.. இல்லாங்காட்டி எம்புட்டு நாளு தான் ஜொள்ள விட்டுக்கினு சட்டையை நனச்சிக்கிட்டு.. அடச்சீ..

ஆனா பொம்பளைங்க மேட்டர்ல அப்டி இருக்காதீங்க ராசாக்களே.. ஏன்னா ரொம்பப் பேருக்கு அவுங்கவுங்க சம்சாரத்தைக் காட்டிலும் அடுத்தவன் சம்சாரம்  ரெம்ப வசீகரமா தெரியறது ஒரு கேவலமான யதார்த்தம்..
ஆறறிவு படைச்ச மனுஷப் பிறவியா இல்லாம அஞ்சறிவுப் பிராணியா ஜனிச்சிருந்தா இந்தப் பிரச்சினை இல்லை..

ஆனா மானமுள்ள மனுஷனா பொறந்துட்டு..??.. மனசுல ஆசையும் ஒடம்புல தெனவும் இருந்தா  கூட அடக்கி வாசிச்சொம்னா தான் சொச்ச காலத்தை சொதப்பலில்லாம ஓட்டமுடியும் .. என்னாங்கறீங்க??

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...