விஷுவலாக நாம் இந்தப் புகைப் படத்தை ரசிக்கிற நமது ரசனை பாராட்டத் தக்கது தான்... இதன் வாயிலாக மனசைத் தொடுகிற ஓர் கவிதையைப் புனைந்து அப்ளாஸ் வாங்கிவிடுவதும் கவிஞர்களுக்கு மிக சுலபம் தான்...
ஆனால் அவர்கள் அனுபவிக்கிற அவஸ்தையை நாம் சற்று கற்பனை செய்யவேண்டும்...
பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டிய குழந்தைகள் வீட்டில் இருப்பர்..
கணவன் நனையாமல் இருக்க அலுவல் வரை இந்த மிதிவண்டியில் அமர்ந்தவாறு குடையைப் பிடித்துக்கொண்டு செல்லவேண்டும்... பிறகு தலைவர் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அலுவலிலே நிறுத்திவிடுவார்... அந்தப் பெண்மணி குடையைப் பிடித்தவாறு திரும்பி நடந்து வீடுவந்து குழந்தைகள் பள்ளி செல்ல துரிதப் படுத்தவேண்டும்...
பக்கத்து வீட்டுப் பார்வதி அக்காவை கொஞ்ச நேரம் குழந்தைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு வந்திருப்பாள் இவள்... பார்வதியக்காவோ , "இதென்னடா சனியன் போனது இன்னும் திரும்பி வரலை?.. இதுக வேற நொய் நொய் ன்னு அனத்துதுக...நமக்கு வேற ஆபீஸ்க்கு நேரமாச்சு.." என்று வெள்ளம் போகிற சாலை மீது கண்களை மேயவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்..
தரக்கன் புறக்கான் என்று வெள்ளத்தில் கால்கள் இழுபட இந்தப் பெண் வருவதைப் பார்த்த பார்வதிக்கு "அப்பாடா" என்றிருக்கும்...
அவசர அவசரமாக யாவற்றையும் ஒப்பேற்றி பள்ளிக்கு அனுப்பக் காத்திருக்கையில் சுரேஷின் குரல் ஒலிக்கிறது.."இன்னைக்கு ஸ்கூல் லீவக்கா" ..
பொடிசுக ரெண்டுக்கும் ஒரே கொண்டாட்டம், கும்மாளம்..
"இந்த ஈரத்துல இனி இதுகளை வச்சு மேய்க்கனுமே சாமி" என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது அம்மாவுக்கு...
புகைப்படம்: THE HINDU வில்..