கம்ப்யூட்டர் எனது உபயோகத்திற்கு வந்து நான்காவது வருடம் ஆகிறது என்ற போதிலும், இன்னும் அதன் நுண்ணிய மற்றும் அதன் அடர்த்திகள் எனக்கு இன்னும் ஓர் அந்நியத் தன்மையோடு இருந்து வருவது வியப்பா வியப்பில்லையா என்பதே புரியவில்லை...
வாழ்க்கை நெடுக பல விஷயங்கள் இவ்வாறு தான் நம்மோடு இருந்தவாறு இல்லாமலும் ,இல்லாமல் இருந்தவாறும் ஓர் வினோதமான முரணோடு சமப்பட்டவாறு பயணித்து வந்து கொண்டிருக்கிறது...
உடனிருக்கிற மனைவி கூட இப்படித்தான் புரிந்தும் புரியாமல் எனது வாழ்வில் ஓர் பங்களிப்பாக இருக்கிறாள் என்றாலும்... இந்த கணினி என்கிற உபகரணம் புரிபடாமல் வருகிற ஓர் தவிப்போ ஓர் குழப்பமோ ஓர் கவலையோ கூட மனைவியைப் புரியாமல் வாழ்ந்து வருகிற இந்த வாழ்வு மீது இல்லாதது ஓர் வரப்பிரசாதமா அல்லது சபிக்கப் பட்ட ஓர் தன்மையா என்பதே கேள்வியாக உள்ளது...
இப்படித்தான் சுட்டுவிரலைக் காட்டி எதுவும் புரிபடவில்லை என்கிற குற்றச்சாட்டினை முன்வைக்க மாத்திரம் நாம் எல்லாரும் எதிலும் அவசரப்பட்டு விடுகிறோமே யன்றி .. நாம் நமக்கு எந்த அளவுக்குப் புரிபட்டிருக்கிறோம் என்கிற ஓர் மிகப் பெரிய கேள்வியினைக் கேட்க நமக்கெல்லாம் தோன்றுவதேயில்லை என்பது பெருவியப்பு... இல்லையா??
சரி விடுங்கள்.. இந்தப் புரியாத விஷயங்களை அலசுவோமேயானால் தீர்வற்று போய்க்கொண்டே இருக்கும்...
கணினியைக் கண்டுபிடித்தவர்களும், அதுபோக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்கிற பிரஜைகளும் நம் போன்ற மனிதர்கள் தானே?... ஒவ்வொரு உபகரணமும், அது சார்ந்த ஒவ்வொரு அன்றாட புதுப்பிப்புகளும் , i mean updates .. நிகழ்ந்த வண்ணமே தானே உள்ளது?..
இவர்களெல்லாம் என்ன ரகம் ?.. புரியவில்லை என்கிற சங்கதி புரியாதவர்களா??.. தெரியவில்லை என்கிற வார்த்தையை அகராதியில் இருந்து அகற்றியவர்களா?
தெரியாமல் இருப்பதும், , உடனே மறந்து விடுவதும் மிகவும் யதார்த்தமான மிகவும் பெரும்பான்மையான ஓர் மனோபாவமாகப் படிந்து விட்டது இங்கே... கண்டுபிடிப்பதும் கவனம் பிசகாமல் சம்பவங்களைக் கையாள்வதும் செயற்கை தன்மை போலவும் பொழுதைப் போக்க வேடிக்கை பார்க்கிற விஷயங்களாகவும் இங்கே இருப்பது ஓர் "இசிவடைந்த சமுதாயத்தை" மட்டுமே அடையாளப் படுத்துகிற விதமாக உணரத் தோன்றுகிறது...
இந்தத் தன்மை ஓர் தளத்திலாவது வெட்கமாக வேதனையாக உணரப்பட வேண்டும்... நாமும் இந்த சமுதாயத்திற்கு முடிந்த வரை ஓர் பிரத்யேகமான சேவையை ஆற்ற வேண்டும் என்கிற தாகம் இயற்கையாகவே தொனிக்கவேண்டும்...
முதற்கண் இயற்கையை நேசிக்கக் கற்க வேண்டும்... வீட்டில் மாத்திரம் அல்லாது வீதியிலும் சுகாதாரம் குறித்த பிரக்ஞை மேலோங்க வேண்டும்... எல்லா அசிங்கங்களையும் முடிந்த வரை நாமே செய்து விட்டு அவை அகலவேண்டும், அவைகளை அகற்ற அரசாங்கம் மெனக்கெட வேண்டும் என்று போராட முனைகிறோம்...
மனைவியோ கணினியோ புரியாமல் போவது கேவலமல்ல... இந்த சமுதாய மேம்பாட்டிற்காக ஓர் சிறு அடியைக் கூட எடுத்துவைக்காத ஓர் தன்மை தான் மிகவும் கேவலமாகும்...