எந்த நண்பனையும்
முழுமையாக திருப்தி
கொள்ள முடியவில்லை...
-என் நண்பர்களுக்கு
நானும் இதே போல தான்
அதிருப்தியானவனாகவே
புரிபடுவேன்...?
-ஒருக்கால்
என் போல மற்ற என்
நண்பர்கள் இப்படி
ஏடாகூடமாகவெல்லாம்
அனுமானிக்க மாட்டார்கள்
என்றே தோன்றுகிறது...
எது எவ்வாறாயினும்
என் அனுமானங்களை
கொட்டியாக வேண்டிய
நிர்ப்பந்தம் எனக்கு...!
-இவ்விதம் ஓர் சிந்தனை
வந்தான பிற்பாடு
இதனை ஓரங்கட்டிவிட்டு
மாற்று சிந்தனைகளை
கவிதையாக்கினேனே யானால்
இந்த சிந்தனை
அனாமதேயமாக என்னுள்
அரற்றிக்கொண்டே கிடக்கும்...
தவறோ சரியோ
சிந்தித்தவற்றை
எழுதித்தீர்க்கவில்லை என்றால்
குப்பை தொட்டி போல
நாறத்துவங்கி விடும் மனசு...
என் ரசனைகள் புரியாமல்
தடுமாறுகிற நண்பர்கள்,
புரிந்து பாராட்டுகிற நண்பர்கள்
புரிந்தும் பாராட்ட மனமற்ற நண்பர்கள்
புரியாமலே கூட பாராட்டி விடுகிற நண்பர்கள்...
இவ்வளவு வகையறா
நண்பர்கள் எனக்கு இருப்பதே
என் அதிர்ஷ்டம் என்கிற
சந்தோஷம் ஒரு புறம்...
அவர்களது தன்மைகளை
விமரிசிக்க நேர்கிற சங்கடம்
மறுபுறம்...
முதற்கண் எனக்கே
என் ரசனைகள் குறித்த
தெளிவான பார்வை இல்லை
என்கிற பரம ரகசியத்தை{?}
உடைபட செய்கிறேன்...
இந்த லட்சணத்தில்
நண்பர்களை எதற்கு
வம்புக்கு இழுக்க வேண்டும்
என்பது தான்
இந்தக்கவிதையின்
கேனத்தனம்...
No comments:
Post a Comment