Wednesday, April 13, 2011

தேர்தல் குறித்து.....

வரலாறு காணாத மாற்றங்களுடன் இந்த முறை தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கிறது.... சுவற்றில் கிறுக்கி , மற்றும் சுவரொட்டிகளை நிரப்பி பொது மக்களின் சுவர்களை நாசப்படுத்துகிற எந்த வேலைகளும் அற்று மிகவும் நாகரீகமாகவும் , நாசுக்காகவும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது..

இனி வரவிருக்கிற எதிர்காலத்தேர்தல்களும் இதே முறைகளை பின்பற்றி பொது மக்களையும், அவர்களின் சுவர்களையும் சேதப்படுத்தாத வகையிலேயே இருக்கும் என்பது திண்ணம்...

எந்தக்கட்சி சின்னங்களையும் வெளிக்கொணராமல் , வேட்பாளர்களே கூட மெளனமாக வந்து போக வேண்டிய சூழல்களை உருவாக்கி சாதித்திருக்கிற தேர்தல் கமிஷனுக்கு பெரிய பாராட்டு...

முந்தைய தேர்தல்கள் நடந்த விதங்களையும் இன்றைய நடைமுறைகளையும் ஒப்பிடுகையில் பெருவாரியான ப்ரம்மிப்புகளும் ஆச்சர்யங்களும் மேலோங்குகின்றன... எந்த வாய் வார்த்தைகளும் கூட அற்று மௌனமான , மென்மையான முறையிலே நடந்து முடிந்திருக்கிற இந்தத்தேர்தல் , ஓர் இலக்கியத்தரம் வாய்ந்த கவிதை போல எல்லாரது மனசுகளிலும் பதிந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை...

இதே மாதிரியாக எந்த பந்தாக்களும் அற்று , மாநிலத்தை ஆளுகிற அரசாங்கமும் நாகரீகங்களையும் நாசுக்குகளையும் கையாண்டால் , மக்களிடம் பெரும் பாராட்டை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை...ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடனே அதிகார தோரணைகளை காட்டுவதிலும் , எதிர் கட்சிகளைப்பழி வாங்குவதிலுமே குறிக்கோளுடன் செயல்படுகிற கேவலமான போக்குகள் தொலைந்து , நாட்டு மக்களுக்கு அவசியமானவற்றை செயல்படுத்துகிற திராணி மட்டும் கொண்டிருந்தால் அது ஓர் ஆரோக்ய மான போக்காகும்.. சென்ற ஆட்சியின் அசிங்கங்களை பறை சாற்றிக்கொண்டு , நடக்க வேண்டிய நல்லவைகளை தள்ளிப்போடுகிற தன்மைகளை விட்டொழித்து விட்டு , மக்களுக்கு நன்மை பயக்கிற விஷயங்களை பிரதானமாக மேற்கொண்டு செயல்படுவதே உயர்ந்த தன்மையாகும்....

எந்தக்கட்சி ஆட்சி அமைத்தாலும் இதே போக்கில் செயல்பட்டால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர்...எதிர் கட்சிகள் அநாகரீகமாக பேசியும், சண்டையிட்டும் வம்புக்கு இழுத்தாலும் கூட , ஆளுகிற கட்சி அதனை அலட்சியம் செய்து மக்கள் நலன்களில் மாத்திரமே முழு அக்கறைகளை செலுத்தும் பட்சத்தில் , எதிர் கட்சிகளே கூட வாயடைத்துப்போகும் என்பதில் ஐயமில்லை...


வி. சுந்தரவடிவேலு....                 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...