Tuesday, July 29, 2014

மு க ம்

உமது 
பிரயோகத்திலுள்ள
அக்றிணைகளின் 
தகுதியில் பாதி கூட 
எமது உயர்திணை 
பெற்றிராதது 
மாபெரும் துரதிர்ஷ்டமே..!

என் உள்ளுணர்வுகள் 
மழலைமை 
ததும்புபவை எனிலும் 
என் வெளிமுகம் 
அதனைப் பிரதிபலிக்கிற 
வல்லமையை 
இழந்துள்ளமைக்காக 
நான் மிக வருந்துகிறேன் 
மற்றும் எனது 
முகத்தினைக் கோபிக்கிறேன்..!!

அகத்தின் பேரழகைக் 
காண்பிக்கத் தவறுகிற 
எனது முகத்தினை --
மலத்தினை மிதித்துவிட்ட 
இம்சையாக அசூயை 
கொள்ள நேர்கிறது..... !

பிய்த்தெறிந்து விட்டுப் 
புதிதாய்ப் பொருத்திக் கொள்கிற 
சட்டையாய் முகமில்லையே 
என்கிற வெறியும் வேதனையும் 
எனக்கு...!

உன்னால் மட்டும் அதே 
முகத்தை வைத்துக் கொண்டு 
எப்படி எப்பொழுதும் 
அதே அழகில் வீற்றிருப்பது 
சாத்யமாகிறது??

வேறு வேறு நினைவுகளை 
ஒவ்வொரு கணமும் 
மாற்றி செயல்படுகிற 
இதயத்தின் வசதி 
முகத்திற்கு இல்லாமற்போனது 
என்போன்றவர்களின் குறைபாடு... 
இதற்கெங்கே செய்வதாம் 
முறையீடு??

ஒவ்வொரு பிராயத்திலும் 
காலங்கள் செருகுகிற 
பாவனைகளை 
--என்னுடையவை போன்ற 
சில முகங்கள்--
சரிவர உள்வாங்கிக் கொள்ளாமல் 
தாறுமாறாகத் தடம்புரண்டவாறு 
தரிசிப்பவர்களை 
மிரளச் செய்கின்றன..!

அவ்விதம் மிரண்டவர்களில் 
நீயும் ஒருத்தி என்பதே 
என்னில் அடர்ந்து கிடக்கிற 
கவலையே அன்றி... ---

எமது அசிங்கமான 
முகம் குறித்தோ 
அது கண்டு மிரள்கிற 
இன்னபிறர் குறித்தோ 
அன்று..!!

Thursday, July 24, 2014

காதல் கதை.. [?]

முன்னரெல்லாம் உமது முகவரி தெரிந்து உமக்கு நான் கடிதங்கள் இடுவேன்.. நீயும் அதற்கு ரெண்டொரு நாட்களில் பதிலனுப்பி என்னிலொரு தாங்கொணா சுகந்தத்தினை மலரச் செய்வாய். அதனை வர்ணிக்கிற பொருட்டு வார்த்தைகளைத் தேடி ஊமையாயின .விரல்கள். 

பரஸ்பரம் நமது ஸ்நேகிதம் மிக அமைதியான தளமொன்றில் எவ்வித ஆர்ப்பாட்டமோ அலட்டலோ அற்று வெறுமே நிகழ்ந்து கொண்டிருந்தது.. நாம் பகிர்ந்து கொள்ள நேர்ந்த விஷயங்கள் பற்பல.... 
 சில அறிவுப் பூர்வமாக.... , சில உணர்வுப் பூர்வமாக....  சில "எதையேனும் நிரப்பியாக வேண்டுமே" என்கிற அற்பத் தன்மையோடு.. ஆனால், அவை கூட அலாதியாக நம்மால் கையாளப் பட்டதென்றே எனக்குத் தோன்றுகிறது.. 

நம்மைக் காதலர்கள் என்று பற்பலரும் தவறாக அடையாளம் கொண்டது நமக்குள் ஒரு ஹாஸ்யமாக எப்போதும் பகிர்ந்து கொள்ளப் படும்.. 
அந்தக் கற்பனை எனக்குக் கூட வந்து போகும் தான்.. ஆனால், நீ?.. 
உமது தீர்க்கமும் செயலாற்றலும் இன்றளவும் எமக்கு ஆச்சர்ய நிகழ்வுகளே...!!
நாளடைவில் நட்பு காதலாக மாறுகிற யதார்த்தம் உமக்கு உடன்பாடில்லாத சுபாவமாக உம்மில் படிந்துள்ளதை நல்லவேளையாக நான் கண்டு வைத்திருந்தேன்.. அல்லவெனில், அனாவசியத்துக்குப் பிரச்சினைகள் மூண்டிருக்க நேர்ந்திருக்கும்...!!

எம்மை நீ வைத்திருந்த தூரம், எனக்கு மிகுந்த சௌகர்யமாக இருந்தது.. மற்றும் ஒரு இனம் புரியா ஏக்கமாகவும் இருந்தது என்பதை சொல்லிக் கொள்ள விழைகிறேன்.. 
நான் அருந்த தண்ணீர் கேட்கிற போது , ஒரு அழகான சில்வர் செம்பில் கொண்டு வருவாய்.... எமது விரல்களை ஸ்பரிசிப்பதை நாசுக்காக நீ தவிர்த்து விடுகிறாயா, அல்லது நான் எமது தூய்மையை நிலைநிறுத்த உன் விரலைத் தொடுவதைத்  தவிர்க்க நேர்ந்ததா என்பது இனம் புரியாத மர்மத் தருணங்கள் அவை.... 

இன்னும் சில சந்தர்ப்பங்கள் அவ்விதம் வாய்க்க நேர்ந்திருக்கும் பட்சத்தில் நான்  நிச்சயம் உமது நகக் கண்களையாவது தொட்டிருக்கத் தான் நேர்ந்திருக்கும் என்று உத்தரவாதமாக எனக்குத் தோன்றுகிறது.. ஆனால், அதற்குள்ளாக காலம் நமக்குள் ஒரு பிரிவினையை மிகத் துரிதமாக உருவாக்க நேர்ந்தது  என்வாழ்வில் நடைபெற்ற, நடந்து கொண்டிருக்கிற சாபக் கேடென்றே உறுதியாக அபிப்ராயம் தெரிவிக்க முடியும்.. 

இன்னும் சொல்லப் போனால், உன்னை நாளடைவில் தவிர்ப்பதற்கான எந்த யோசனைகளுமே என்னிடமிருந்ததில்லை.. மாறாக, சிநேகிதத்தை, காதல் தளத்தில் பயணிக்க வழி  வகுக்கும் சராசரி சித்தாந்தம் தான் என்னுடையது.. உன்போன்று  இறுகிய ஓர் மனவெளி என்வசம் எப்போதும் வீற்றிருந்ததில்லை.. அந்த எனது சாதுர்யம் உமக்குப் பிடிபட்டதன் நிமித்தமோ என்னவோ, மேற்கொண்டு இந்த நட்புக் களேபரத்தை நீடிக்க விட்டால் கதை கந்தலாகி விடுகிற விபரீதம் தவிர்க்கமுடியாத கருமாந்திரம் ஆகிவிடும் என்கிற தீர்க்க தரிசனம் உன்னிடம் இருந்ததை நானறிந்தேன்.. 

பரஸ்பரம் நமது முகங்கள் இருவராலும் சுலபத்தில் கண்டுணரப் பட்டன.. ??அந்தத் திறன் நம்வசம்  இருந்தமையால் தான், இருவரும் நட்பென்கிற ஒரு தளத்தில் ஒரு குறிப்பிட்ட பிராயங்களுக்கேனும் பழகிட நேர்ந்ததோ??.. அந்த இழை எக்காரணம் கொண்டும் அழிந்து விடக் கூடாது என்கிற அனுமானம் உமக்கு. அதனை அழித்து, மாற்றுப் பிராந்தியத்தில் சஞ்சாரம் செய்வோம் என்பது  என்னுடைய... 

இப்படியான நமது சூழல், அறுபட்டு .. தகவல்கள் எதுவுமற்று.. அடர்த்தி கண்டு மாதங்கள் சில தான் ஆகியிருக்கக்  கூடுமென்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்... அவை வருடங்கள் பல ....!!

நீ எங்கிருப்பாய் எப்படி இருப்பாய் , இன்றைய காலகட்டத்தில் உமது வாழ்வு எவ்விதம் பயணிக்கிறது, உமது கணவன் உமது குழந்தைகள், ... 
எப்போதுமே என்மன வெளியில் சலிக்காமல் ஊடாடுகிற பிரலாபங்கள்....

ஆனால் நீ என்னை மறுபடி ஒருமுறையாவது நினைத்திருக்கக் கூடும் என்று என்னால் நம்பவே முடிந்ததில்லை.. என்னைப் பற்றியோ, என் மனைவி குழந்தைகள் பற்றியோ  உம்மிடம் எவ்வித அனுமானங்களும் தோன்றியிருக்கக்  கூடுமென்று கிஞ்சிற்றும் என்னால் ஊகிக்க சாத்யப் பட்டதில்லை... இப்படி அநியாயமாகவும் உன்னை நான் நினைக்கக் கூடாது தான்.. 

ஒருக்கால் உனக்கும் என்மீது ஒரு இனம்புரியாத உணர்வு மலர்ந்திருக்கக் கூடும்? "அடடே.. அவனை அப்படி மண்டை காய வைத்துவிட்டோமே!" என்றொரு மண்டைக்  குடைச்சல் வந்திருக்கும்??

ஆண்கள் மட்டுமே அவ்விதம் ஆசைகொண்டால் அது நிறைவேறாத விஷயமோ என்னவோ.. ஆனால், பெண்கள் அப்படி மட்டும் நினைக்கிற பட்சத்தில் நிச்சயம் மறுபடி சந்திப்பதற்கான ஓர் சூழலை அமைத்துவிடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.. 

ஒரே முறையாவது அப்படி நினையேன் .... சந்தித்துத்தான் பார்ப்போம்... இந்த முறை உமது கால்களை என் கண்களில் ஒற்றிக் கொள்கிற கற்பனை கூட ஓடுகிறது  என்னில்.. 

அதில் மெட்டி இருக்கலாம்.. குதிகால் வெடிப்பிருக்கலாம்.. பரவாயில்லை.. ப்ளீஸ்டி.. 

Monday, July 14, 2014

தமிழ் மொழி என்கிற நோயாளி..

"தமிழினி மெல்லச் சாகும்.. வேறு யாராலும் அல்ல.., தமிழர்களாலேயே, அவர்களது அலட்சியத்தினாலேயே.."

சமீபத்தில் கோவை கொடிசியாவில் நடந்த கவிஞர் வைரமுத்துவின் அறுபதாம் ஆண்டு பிறந்த விழா நிகழ்வுகள் நடந்தேறின.... அப்போது அவர் ஆற்றிய உரையில் பிறந்த இந்தக் கருத்து நாமெல்லாம் மிகவும் கவனித்து அதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோமெனில் அது மிகையன்று..

முதற்கண் இந்தக் "கான்வெண்ட் " மோகம் எல்லாரது வசமும் தொலைய வேண்டும்.. குறைந்த பட்சம், குறைய வேண்டும்.. இப்போதைக்கு...! பின்னொரு நாளில் முழுதுமாகத் தொலைந்து.. தமிழ் கற்க பெற்றோர் தமது தங்கக் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்...

வயிறாற  ஒருவேளை சோறுண்ணும் சூழல் கூட கனவாக இருக்கையில், தனது குழந்தையை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பதற்காக அண்டை வீடுகளில் கடனாகப் பெறுகிற அவலத்தினை யாதெனச் சொல்ல??

தமிழில் பேசுவது, படிப்பது, எழுதவது .. என்கிற எல்லா தன்மைகளுமே பெரிய வரவேற்பினைப் பெறாதது மிகப் பெரும் துரதிர்ஷ்டமே.. நமது நாட்டின் பிற மாநிலங்கள் யாவும் அவர்களது தாய்மொழியை இவ்வளவு துஷ்ப்ரயோகம் செய்வதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.. நாம் மாத்திரம் தான், தமிழை அதன் வழக்குகளை புறந்தள்ளப் பிரயத்தனிக்கிறோம் ... ஆங்கிலத்தை வெட்கமே அற்று வரவேற்கிறோம்..

ஒரு தமிழ் சொற்றொடரில், ஒரு பத்தியில் முழுதுமாக தமிழ் இருப்பதைக் காட்டிலும் அதனூடே ஆங்கிலத்தினை சேர்த்துப் புனைகிற சபலம் அறிவுப் பூர்வமான  தமிழ் எழுத்தாளர்கள் வசம் கூட இயல்பாக மாறியிருப்பது மிகப் பெரும் அனாச்சாரம் ..

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றெல்லாம் வேண்டாம்.. நாம் எழுதுகிற தமிழில் உருப்படியாக தமிழை வீற்றிருக்கச் செய்வதே தமிழுக்கு நாமாற்றும் மிகப் பெரும் தொண்டு.. அதனை விடுத்து, தமிழுக்காகப் போராடுவது என்பதும், தமிழை வாழவைக்க உண்ணாவிரதம் இருப்பது என்பதும் அனாவசியப் போர்கள்..

எந்த மொழி நம்முட் புக நேர்ந்தாலும், தமிழுக்கென்று ஒரு பிரத்யேக தளத்தினை  அமைக்க வேண்டிய மாண்பு தமிழன் என்கிற முறையில் நமக்கெல்லாம்  மிகவும் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டியது  இன்றியமையாத விஷயமாகும்..

"குத்துயிரும் குலையுயிருமாக குருதிப் புனலில் தத்தளித்துக் கொண்டிருக்கிற  நமது தமிழை " நாமெல்லாம் ஒருங்கிழைந்து பெரியாஸ்பத்திரியிலாவது சேர்ப்பது  அவசியம்.. பிறகு பார்ப்போம்.. பிரைவேட்  ஹாஸ்பிடலில்  சேர்க்க..!!

Tuesday, July 8, 2014

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி??...

 


விவசாயி கண்ணீர் 
துடைக்க விழுகிறேன்.... 
குழந்தைகளின் 
சிரிப்பிற்காக 
அழுகிறேன்.. 

அந்தப் பிஞ்சுக் கைகள் 

விடுகிற காகிதக் 
கப்பல்களை 
கடலில் விடுகிறேன்.. 

என்னில் மூழ்கி 

நனைய ஆசை கொள்கிற 
எல்லா குழந்தைகளையுமே 
ஏனோ அம்மாக்கள் 
அடித்திழுத்து 
அழவைக்கிறார்கள்...

வீடு வரமுடியாமல் 

எனக்கென ஒதுங்கி 
நிற்பவர்கள் 
நான் நின்று விட்டேனா 
என்று கைநீட்டிப் பார்க்கிறார்கள்.. 
இன்னும் பெய்கிறேன் என்றால் 
அலுத்துக் கொள்கிறார்கள். 

வீட்டு ஜன்னல்களில் 

கைகளை நீட்டுபவர்கள்.. 
பெய்கிறேன் என்றால் 
குதூகலிக்கிறார்கள்.. 
குழந்தைக்கு வேடிக்கை 
காண்பித்து சோறூட்டுகிறார்கள்.. 

நிம்மதிப் பெருமூச்சு 

விடுகிறான் விவசாயி.. 
பொருமுகிறான் பொரி விற்பவன்.. 
இருமுகிறான் சளி பிடித்தவன்.. 

எத்தனை கால இடைவெளி விட்டுப் 

பெய்தாலும் 
"இந்த நாசமா போன மழை வேற!"
என்று திட்டுவதற்கு சிலர் 
இருக்கத்தான் செய்கிறார்கள்.. 

தீக்கங்கை மேல கொட்ற மாதிரி 

வெயில் அடிக்கிற போது மட்டும் 
"இந்த நாசமாப் போன மழை 
வருதான்னு பாரேன்!" என்று 
அலுத்துக் கொண்டவர்கள் தான் 
அவர்கள்...!!

Saturday, July 5, 2014

குடியிருந்த வீடு..

முப்பது முப்பத்தைந்து வருடங்கள் முன்னர், அதாகப் பட்டது எனக்கு எட்டு பத்து வயது இருந்த போது நாங்கள் குடியிருந்த வாடகை வீடு இப்போது வசிக்கிற சொந்த வீடிருக்கிற அடுத்த தெருவில் தான் இருக்கிறது.

நாங்கள் வசித்த அந்த வாடகை வீடிருக்கிற தெரு வழியாக எமது விஜயம் எதன் நிமித்தமோ அன்றாடம் இருக்கும்.. அனிச்சையாகக் கூட அந்த வீட்டை நான் மறந்தது கிடையாது.. ஒரு லேசான பார்வையை மேய விட்டுத் தான் கடப்பது வழக்கம்..

நாங்கள் இருந்த காரணத்தாலோ என்னவோ அந்த வீடு மேற்கொண்டு எவ்விதப் புணரமைப்பும் அற்று அதே கதியில் ஓர் ஞாபகச் சின்னம் போன்று வீற்றிருந்தது..

எமது இளம்பிராயத்தில் அந்த வீட்டினுள் நான் எண்ணிலடங்கா விளையாட்டுக்களை அரங்கேற்றி சுகம் கண்டிருக்கிறேன்.. பக்கத்து வீட்டு வாண்டுகளை அழைத்து வந்து கண்ணாமூச்சி துவங்கி விறகுக் கட்டை வைத்து கிரிக்கட் ஆட்டம் வரைக்கும் பிய்த்தெறிந்திருக்கிறோம் .. எங்களது சேட்டைகள் எங்கனம் எமது வீட்டாரால் பொறுத்துக் கொள்ளப் பட்டது என்பது இன்றளவும் எமக்கு ஆச்சர்யம்.. எனது அம்மா ஆகட்டும் அப்பா ஆகட்டும் "வெளிய போயி வெளயாடுங்கடா வாண்டுகளா" என்று செல்லமாக அதட்டுவார்களே அன்றி அதில் ஒரு காட்டமோ நொந்து கொள்கிற தன்மையோ இராது.. ஆகவே அதனை மதிக்கிற பெருந்தன்மை எங்கள் அனைவரிடமும் இழந்தே போயிருந்தது என்று சொல்லலாம்..

இன்றைக்கு எனது குழந்தையோடு  தனது மற்ற சிநேகிதக் குழந்தைகள் என்றேனும் அளவளாவ  வருகை புரிகையில் நான் என்னையும் அறியாமல் சிடுசிடுக்க  நேர்கிறது... அதிலே அவைகள் மிரண்டு, மேற்கொண்டு எமது வீடு வரவே யோசிக்கின்றன..

அந்த வீட்டின் இண்டு  இடுக்கு என்று ஒவ்வொரு பிராந்தியமும் எனக்கு அத்துப்படி....

யாராரோ குடி வருகிறார்கள், போகிறார்கள்.. நமக்கு அறிமுகமான யாராச்சும் வந்தால்  ஒரு முறையாவது அந்த மலரும் நினைவுகளை உணர்ந்து ஒருவகை  வார்த்தைப் படுத்த முடியாத ஓர் லாகிரியை உணரவேண்டும் என்கிற அவா  எப்போதும் எனக்குண்டு.. !!

அறிமுகம் ஆகாத நபர்களாக இருந்தால் தான் என்ன?.. இப்போது போய் அறிமுகப் படுத்திவிட்டு கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டு வந்தால் வேண்டாமென்றா  மறுத்து விடப் போகிறார்கள்?.. ஆன போதிலும் அவ்விதம் அனுமதி பெறுவதற்கான  மனநிலை வருவது இல்லை..

பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது, அப்பாவிடம் ஐம்பது காசு திருடி தர்மடி வாங்கியது, பாட்டி சுருக்குப் பையை அவள் தூங்கிய சமயத்தில் உருவி உள்ளே எவ்வளவு இருக்கிறது என்று கூட எண்ணிப் பார்க்காமல் எதிர் திசையில்  இருந்த நாடார் கடையில் பம்பரம் குண்டு பலூன் எல்லாம் வாங்கியது போக  தேன் மிட்டாய், கடுக்காய் மிட்டாய் .. எல்லாம் பாக்-அப் பண்ணி வீடு வந்து மொத்துவாங்கி, சின்ன வலிக்கே உசுர் போனது போல கத்திக் கதறி  ரகளை பண்ணி...
'இனி இப்டி செய்ய மாட்டேன்' என்று சத்தியம் செய்து , செய்த தவறுக்காக தோப்புக் கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டு ..
அப்புறம் அடுத்தவாட்டி உருவிய சுருக்குப் பையில் கொஞ்சம் மட்டும் காசுகளை ஒரு குத்து அள்ளிக் கொண்டு பிற்பாடு கிழவி இடுப்பிலேயே திறமையாக செருகி .... அம்மாதிரி பற்பல முறைகள் நடந்துள்ளன.. ஏனெனில் அது எந்தப் புகாரையும் கொண்டுவரவில்லை கடைசி வரைக்கும்..
எங்க பாட்டி இறந்த பிறகு, முதலில் எனக்குத் தோன்றியது அந்த சு.பை தான்.. ஓடி சென்று அதை எடுத்து உள்ளே துழாவிப் பார்த்த போது 18 ரூ. இருந்தது.. ஏனோ எனக்கு அதை எடுக்கத் தோன்றவில்லை. மாறாக தேம்பித் தேம்பி அழுதேன் வெகு நேரம்.  பொன்முட்டை இட்டுக் கொண்டிருந்த வாத்தை கழுத்து நெரித்து  கொன்று போட்டது போன்று எனக்கொரு எண்ணம்..

என்ன ஆச்சர்யம்..
வியாபாரம் நிமித்தம் 2 மாதங்கள் சென்னை சென்று விட்டுத் திரும்பி வருகையில் அந்த வீடு அவசர அவசர கதியில் புணரமைக்கப் பட்டுக் கொண்டிருந்தது..

"அடடே. ஒரு முறையாவது சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாமே" என்றோர் அங்கலாய்ப்பு  எனக்குள்..

சரி, இந்தத் தருவாயிலாவது ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று அந்த மேஸ்திரியின் அனுமதி வாங்கி, உட்புகுந்தேன்..

அந்த சமையலறையின் ஓரத்தில் ஒரு சின்ன மேடை உண்டு.. அங்கே அமரவைத்துத் தான் எனக்கு, எனது தங்கைக்கு என் அம்மா பருப்பு சாதம் உருட்டி உருட்டி  கதை சொல்லிக் கொண்டு ஊட்டுவாள்..

அந்த மேடை இடிக்கப் பெறுவதற்கான ஆயத்தத்தில் இருந்தது..
'உங்க காலைப் பிடித்து கேட்டுக்கறேன் .. அந்த மேடையை அப்டியே விட்டு வையுங்கள் ' என்று கேட்கத் தோன்றியது.. ஆனால் அப்படிக் கேட்டிருந்தால், நானே எனக்கு  லூஸாகப்  புரிபட்டிருப்பேன்.. !!?

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...