Friday, January 24, 2014

காதலற்ற காதல்..

எந்த வரையறைக்குள்ளும் வருவதற்கு சாத்தியப் படாத ஓர் தன்மையுடன் மனசை உடும்பாய்ப் பிடித்து ஆக்ரமிக்கின்றன உம்மைக் குறித்த ஞாபகங்கள்..

உமக்கும் எமக்குமான இடைவெளி நூலிழையாக இருந்த நாட்கள் உண்டு.. இன்றெல்லாம் ஏழு மலைகள் தாண்டிய விதமாக.....

-- என்னவோ நம் பந்தம் நிகழ்ந்தது சென்ற பிறவியில் போலும்,..
 -என்ற போதிலும் அதென்னவோ  இப்பிறப்பில் ஓர் திடமான ஞாபகக் கீற்றாக ஒளிர்வது போலும் ஓர் மாயை ..,
 ஓர் மறக்கவியலா ஆச்சர்ய அதிசயம்.. அதிசய ஆச்சர்யம்.. !!

நீ என்னை என்றோ மறந்திருக்கக் கூடுமென்று மட்டுமே என்னால் எப்போதுமே அனுமானிக்க முடிவது எந்த வகை நியாயம் என்பது ஓர் மர்மப் புதிரே..!!

என்ன காரணத்தாலோ அன்றெல்லாம் உமது முகம் எனக்கு அடிக்கடி மறந்து, அதனை மறுபடி எனது ஞாபகத்துக்குக் கொணர்வது என்பது சுவாரஸ்யமான பேராவஸ்தை என்பதை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்.. !

இத்தனைக்கும் ஒரே நாளில் ஆயிரம் முறைகள் உம்மை தரிசிக்கிற சுலப வாய்ப்பினை  நான் பெற்றிருந்தேன்..

இன்று உமது முகம் ஆணி அறைந்தாற்போல மனசில்... பிடுங்கி வீசும் சாத்யமே அறவே இல்லை போன்று.. அப்படி ஒருக்கால் பிடுங்கி வீசப் படுகிற பட்சத்தில் இதயமும் ஒருங்கே பெயர்ந்து வந்து விடும் போன்று.. அப்படி இழைந்து கிடக்கின்றன உன் நினைவும் என்னிதயமும்.. 

இத்தனைக்கும் உம்மைப் பார்க்கிற அதிர்ஷ்டம் இந்நாட்களில் இல்லை என்பதோடு, இனி வாழ்நாளில் உம்மை எங்கேனும் பார்க்கிற தருவாய் வாய்ப்பதற்கும் அனுக்ரஹம் இல்லை என்பது  எமது அதிதீவிர [அவ]நம்பிக்கை.. !!

எனக்கு உனது நிமித்தம் நேர்ந்தது "காதல்" என்று காதலைக் கேவலப் படுத்துகிற என் மீது எனக்கே காறியுமிழ ஓர் வெறி புறப்படுகிறது.. !

ஆனபோதிலும் ஒவ்வொரு தருவாயிலும் உம்மை மையப் படுத்தி நான் ஏதேனும் எழுத நேர்கையில் எல்லாம் அதனை 'காதல்' என்கிற தன்மையிலேயே  சித்தரிக்க முற்படுகிற நான் நிஜக் காதலர்களின் வன்மையான கண்டனத்துக்கு  ஆளாக நேர இருப்பதை என்னால் தீர்க்க தரிசனம் செய்ய முடிகிறது.. 

ஆனபோதிலும் தலைப்பாக ஓர் அடையாள வார்த்தையை நானும் பல விதங்களில் யோசித்து விட்டு கடைசியில் இந்த இளிச்ச வாய் வார்த்தை "காதல்" என்பது மட்டுமே சிட்டுக் குருவி போல சிக்கி எல்லாரிடமும் சின்னாபின்னமாகிக் கொள்ள விழைகிறது.. 

மிக ஜாக்கிரதையாக நீயும் என்னை சகோதர அந்தஸ்த்தில் தான் நிறுத்தி இருந்தாய் என்ற போதிலும், ஒருக்கால் என்மீது காதல் என்கிற அஸ்திரத்தை எய்தி இருந்திருப்பாயே ஆயினும் அதனின்று விலகி உம்மை ஓர் "அடையவியலா" தன்மையிலேயே தான் நான் கற்பிதம் செய்யத் துணிந்திருப்பேன்... அதன் நிமித்தம் தான் என்னில் கவிதைகள் பூக்கிற சாத்யங்கள் உண்டே தவிர உம்மை காதலியாக மடியில் சாய்த்துக் கொண்டு எவ்விதப் புனைதல்களும் என்னில் நிகழும் வாய்ப்பே இல்லை ..

 மாறாக உன்னில் முயங்குகிற, உன்னைப் புணர்கிற காம ரசாயனங்களை மட்டுமே பிதற்றுகிற காமுகனாக இங்கே பிரசன்னமாகி இருக்கக் கூடும்.. என்ன, ஒரே ஆதாயம் படிக்கிற நபர்கள் அதிகம் குழுமி இருப்பார்கள்.., மற்றும் வலதுகைப் பெருவிரலைத் தூக்கி லைக்ஸ் சொல்லி என்னை சிலிர்க்கச் செய்திருப்பார்கள்.. இப்போது அது மிஸ்ஸிங்...

ஆனால் காதல் என்கிற ஓர் உயர்ந்த தன்மையை கற்பனைக் கிரமமாக வாவது  எனது வாழ்வில் நிகழ்ந்தது போல நான் திணிக்க முற்படுவேனே அன்றி ... எனது நிஜத்தில் அனுபவத்துக்கு வராத அந்தப் புனித உணர்வினை உள்ளது  உள்ளவாறே எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.. 

ஆமாம்.., இவ்வகை உணர்வுகள் எல்லாம் எந்த வகையில் சேர்த்தி??

என்றேனும் நானே தெளியக் கூடிய ஓர் தருணம் வாய்க்கும்.. அப்போது மறுபடி நான் இவைகளை அலசி ஆராய்ந்து எழுதப் பிரயத்தனிக்கிறேன் ..
நன்றி.. 

3 comments:

  1. வித்தியாசமான எண்ணங்கள்... இப்போதே ஒரு தெளிவு உள்ளது...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. காதல் குறித்த வித்தியாசமான பார்வை! நன்றி!

    ReplyDelete
  3. thanks for yr kind comments mr.dpal and mr.suresh.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...