Sunday, September 22, 2013

சத்தியம் என்கிற மாயை..

அவ்வப்போதைய
கிஞ்சிற்றுத் தருணங்கள்
இந்த "வாழ்வின் சாஸ்வதமின்மை"யை
சிற்சில சம்பவங்கள்
உணர்த்த நேர்ந்தாலும்...
-பெரும்பாலான
தருணங்கள்
"மாயைகள் குறித்த"
எவ்வித பிரக்ஞைகளுமே
எவர்க்கும் எழுவது
போன்ற சுவடுகளே
தென்படவில்லை..!!

ஆயுட்காலத்தை
புதுப்பித்துக் கொள்வதற்கான
புதிய முறை 
அறிமுகமாகி விட்டது
போல...
இந்த வாழ்வு குறித்து 
அதீத நம்பிக்கைகளையும் 
தீர்மானங்களையும் 
சேகரிக்கத் துணிகிறார்கள்..!

இத்தனை ஆழங்களை 
சுலபமாக சிந்திக்கிற 
ஆற்றல் உள்ளவர்களே கூட.. 
பின்னாடி வந்தவன் 
தனது பைக்கை 
சன்னமாக இடித்து 
விட நேர்கையில் 
பின்பக்கம் முகத்தைத் 
திருப்பி ஓர் 
ரௌத்திரத்தை 
பதிவிறக்கம் செய்து 
வண்டியை ஓரங்கட்டி 
சற்றே விழுந்த 
கீச்சலுக்கு ஆகிற 
செலவுக் காசை 
வசூலிக்கிற புத்தி...
அருவருக்கிற விதமாகப் 
புரிபடுகிறது ஏனோ..!!

Saturday, September 21, 2013

நம் எல்லாருடைய அனுபவங்கள்..

நம்முடைய நெடுநாளைய இலட்சியங்கள் என்ற பட்டியலோடு பிறந்த காலம் தொட்டு, நமக்கு அறிவென்ற ஒன்று பிறந்த நாள் தொட்டு நம்மோடு ஊடாடிக் கொண்டிருக்கிற பல இலட்சியங்கள்.. ரெண்டொன்று நிறைவேறியும், சிலவற்றை என்ன திணறியும் சாத்யப் படாத வகையிலும் .. சரி நம்ம தலைல இவ்வளவு தான் எழுதி இருக்கு என்கிற ஓர் சமாதானத்தோடு பலரும் தங்களின் அன்றாட வாழ்வினை அனுசரிக்கையில்...

என்றோ நம்முடன் பழகிய நண்பன் திடீரென்று நம் இல்லம் தேடி வந்து தனது புதிதாகக் கட்டிய வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு அழைக்கிறான்.. தனது திருமணத்துக்கு அழைப்பு விடுக்கிறான்..
நம்மோடு நட்புப் பாராட்டிய காலங்களில் அவன் மிகவும் சராசரியாக அல்லது நம்மை விட மக்காக இருந்திருப்பான்.. இவன் என்னத்தை கல்யாணம் பிரம்மாதமாக நடத்தப் போகிறான்.. இவன் என்ன வீடு கட்டிக் கிழித்திருக்கப் போகிறான் .. என்று நமது மனது எகத்தாளமாக ஓர் அவசர அனுமானத்தை மெளனமாக முன்வைக்கும்..

ஆனால் அவனது அழைப்பினை மதித்து அவனது விஷேசங்களுக்கு செல்ல நேர்ந்தாலோ... அடக் கடவுளே.. நாம் நமது  இன்னும் நிறைவேறாத பட்டியலில் இடம் பெற்றிருக்கிற மகா பிரம்மாண்ட விஷயங்களை அந்தப் பனாதி நண்பன் அனாயாசமாக சாதித்திருப்பான்.. !

'எப்டி ராசா இம்புட்டு முன்னேறினே?'.. 'அப்பெல்லாம் அடிபட்ட தெருநாய் மாதிரி கெடப்பியே! '.. 'நெசம்மாலுமே இதெல்லாம் நீதானாடா ராசா?" என்றெல்லாம் பலவாறாக மனசுள் குவெஸ்ட்டீன்ஸ் பின்னிப் பெடலெடுக்கும் .. ஆனாப் பாருங்க.., ஒன்னும் கேட்க முடியாது.. கம்னு வந்தமா பார்த்தமா வயித்துக்கு வக்கனையா ரெண்டைக் கொட்னமா.. ன்னு நழுவிடறது தான் உத்தமம்..

வீட்டாண்ட வந்ததும் பல கேள்விகள் மனசுக்குள்ள ஓடும்.. " இவன் தான் ஒழச்சு சம்பாதிசிருப்பானா.. அல்லது இவனோட அப்பன் பாட்டன் வச்சிருந்த சொத்துப் பத்தா இருக்குமோ.. ??

எவனோ எக்கேடு கெட்டா என்ன.. ஒழச்சா என்ன.., தின்னுட்டுத் தூங்குனா என்ன.. அப்பன் சொத்தை அனுபவிச்சா என்ன.. அவனே கஷ்டப்பட்டு சம்பாதிச்சா தான் என்ன..

நம்ம பொழப்பு இங்க நாறுது .. இத எதனாச்சும் தெளிவா கழுவி சாய்க்க முடியுமான்னு பார்க்கணுமே ஒழிய  மத்தவுக மவுசப் பார்த்து பொச்சரிப்பா பேசறது நாதாரிக வேல.. !!

Sunday, September 1, 2013

கா கா கா....

சற்று முன்னரோ
நெடிய நேரம் ஆயிற்றோ
தெரியவில்லை..
செத்துக் கிடந்தது
காகமொன்று..

சற்று முன்னரெனில்
குழாமாக சூழ்ந்து
இந்நேரம் அந்த
சூழலையே களேபரப்
படுத்துகிற விதமாகக்
கரைந்திருக்கும்..

நெடிய நேரமாயிற்று
போலும்..
கரிக்கட்டையாக
கேட்பாரற்றுப் பொசுங்கிக்
கிடந்தது காகம்.. காக உடல்..!

நேற்றைக்கின்னேரம்
அந்தக் காகம்
சுள்ளி பொறுக்கிக்
கூடுகட்டுகிற முஸ்த்தீபில்
அலைந்திருக்கும்..
குஞ்சுகளுக்கான
பசியைத் தீர்க்கிற அவகாசத்தில்
புழுப் பூச்சியையோ
திதிக்கு எவரேனும் படைத்த
படையலில் வடையையோ
கவ்விக்கொண்டு பறந்திருக்கும்..

அபரிமிதப் பசியில்
அலகுகளைத் திறந்த வண்ணம்
கூட்டில் குவிந்திருக்கிற
அனைத்து  குஞ்சுகளுக்கும்
சரிசம விநியோகம் நடந்திருக்கும்..

இன்றைக்கும் 
வாய்களைத் திறந்த 
வண்ணமாகவே அலறக் கூடும் 
அந்தப் பொன்குஞ்சுகள்.. 

ஆனால் நிச்சயம் 
எவையும் மரித்துப் 
போவதாக எந்த 
ஆய்வறிக்கைகைகளும் 
இதுவரைக்கும் இல்லை.. 

அல்லது 
பறவை கவனிப்பாளர்கள் 
இதனை இன்னும் 
கவனிக்கவே இல்லையோ??

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...