Friday, June 7, 2013

சகிக்கமுடியாத சைக்காலஜி..?

எதிர்பாரா தருணங்களில் மிக மிக நல்ல கவிதைகள் மனசில் தோன்ற, அதனை பதிவிறக்கம் செய்கிற ஓர் சூழல் வாய்க்காத அவஸ்தை அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே தான் உள்ளது..

அப்படி நான் இழந்த கவிதைகள்  ஏராளம்.. ஆனால், பேனா நோட்டோடு எழுத அமர்கையில் மண்டையைப் பிய்த்தது போக முளைப்பது, சில அற்ப கற்பனைகளே...

அதனை எழுதாமல் விட்டுத் தொலைந்தால் தான் என்ன என்று தோன்றினாலும், சரி இதையாவது எழுதித் தொலைக்கலாம் என்று நான் தொலைப்பதையே, அநேகமாக நீங்களனைவரும் கண்டு பிடிக்கிறீர்கள் என்று என்னால் தீர்மானமாக சொல்ல முடியும்..

வாழ்க்கை நெடுகவே இப்படித்தான்.. நல்ல கவிதைகளைப் போலவே எல்லா நல்லவைகளையும் அடைகிற இலக்கோடு பிரயத்தனப்பட்டு, அடைந்து விட்ட மாயையுள் சிக்குண்டு... பிடிபட்ட சிட்டுக் குருவி சர்ர்ர்ர் என்று விட்டு நழுவித் தப்பிப்பது போல ஓர் இழப்புணர்ச்சியிலே நாமெல்லாம் மூர்ச்சையாகி ஆசுவாசத்திற்கு அலை பாய்கிறோம்..!!?

பொதுவாகவே பிடிபடாதவை சிறந்ததென்கிற அவசர முடிவை நாம் யாவரும் எடுக்கிறவர்கள்.. பிடிபட்டவை நம்முள் ஓர் லயிப்பற்று-- ஓர் அனாமதேய தன்மையில் ஊடாடுவதை ஒப்புக் கொள்கிற நாகரீகம் நமக்கு இருந்தாலே அது பெரிய விஷயம்..

வீட்டில் தயார் செய்து சுவையாக எலுமிச்சை சாதம் தயிர் சாதம் பொட்டலம் கட்டிக் கோவிலுக்கு நாம் கொண்டு சென்றிருந்தாலும், அங்கே எவரோ ஏனோ தானோ வென்று விநியோகிக்கிற இனிப்பே பற்றாமல் இருக்கிற சர்க்கரைப் பொங்கலுக்கு அடிதடி போடுவதில் ஓர் அநியாய சுவாரசியம் குவிந்து கிடப்பதை  இல்லை என்று சொல்ல எவரும் தயாரிலில்லை..!!


2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...