Wednesday, November 2, 2016

பென்ஸில் - ரப்பர் - மெஷின்...

நாம் காதலர்களாக இருந்திருக்கும் பட்சத்தில் எனது இப்பிறப்பு நிச்சயம் மேன்மை பெற்றதாக என்னால் உணர்ந்திருக்க முடியும்..
அந்தப் பொன்னான காதலிக்கிற காலங்களை பூங்காக்களிலும் கடற்கரை மணலிலும், சினிமா கொட்டகைகளிலும் இவை போக இன்னபிற பிராந்தியங்களிலும்.. நமது அற்புத காதலின் வீச்சு பரஸ்பரம் நமது ரசனைகளையும் உடல் ரசாயனங்களையும் பிரம்மாதப் படுத்தி இருக்கக் கூடும்..  
Image result for modern arts of love failure
அந்த முதல் ஸ்பரிசமும், பிற்பாடான ஆலிங்கணங்களும் , நீண்டு .. நீண்டு இத்யாதி இத்யாதி என்று படர்ந்து .. ஒருகட்டத்தில் அந்த நறுமணம் கமழும் திருமண பந்தத்தில் காலடி எடுத்துவைத்து .. குழந்தைகள் .. சிற்சிறு சர்ச்சைகள், சற்றே மனஸ்தாபங்கள், மறுபடி இளகி .. பழைய விதமாக இணக்கப் படுவது .. என்கிற ஸ்தாயியில் யாவற்றையும் வரிசைக் கிரமமாக காலமோ கடவுளோ வாரி வழங்கி இருக்கும் பட்சத்தில்.... நினைத்தாலே இனிக்கிறதே..

ஆனால், துரதிர்ஷ்ட உச்சத்தில் எனது நிலை.. எம்மை சகோதர ஸ்தானத்தில் ஏற்கின்ற யோக்கியதையை கூட நான் இழந்து விட்டிருப்பதாக ஏனோ நீ ஒரு முறை என்னிடம் சொல்லித் தீர்த்தாய்..!
இத்தனை உமது வன்மத்திற்கான பிரத்யேக காரணி எதுவாக இருக்கமுடியும் என்று என்னால் யோசிக்கிற திராணி அறவே இழந்து கிடக்கிறேன்..

மேற்கொண்டு எதனையும் சிந்திக்கிற வல்லமை  இழந்து .. இன்று நான் எனது எளிய வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
Image result for modern arts of love failure
சிறப்பாக இன்று நீ வாழ்கிற வாழ்வினை கேள்வி ப் பட்டு பெருமை கொள்கிறேன் என்பது போக, ஒருக்கால் நான் உன்னை அடைய ப் பெற்றிருக்கும் தருவாயில் ... நிச்சயம் என்னால் இந்த அற்புத சூழலை உமக்கு உருவாக்கித் தந்திருக்க சாத்தியமில்லை என்பதை சொல்லியாக வேண்டும்.. !
உன்னுடைய தீர்க்க தரிசனம் எமக்குள் . ஆச்சர்யமூட்டுகின்றன.

 என்னுடைய அன்றைய அதே வெற்றுக் காதல் இன்றும் எமக்கு  இம்ஸை கொடுத்து .. கவிதை என்பதாக கண்டதையும் கிறுக்கி, என்னை மகத்தான கவிஞன் என்கிற அநியாயக் கற்பனைகளோடு உலா வருவது ஒருவித வலி தந்தாலும்., மேம்பட்டு நிற்கிற உமது இன்றைய வாழ்வு குறித்த நிறைவான நிம்மதி ஒன்று எனக்குள் சுரந்தவாறே சுகமளிப்பதை எனக்கு நானே யாவது பெருமை ததும்ப சொல்லிக் கொள்கிறேன்.. 

மொபெட்டுக்கே மாதத் தவணை கட்டத் தவறியதன் நிமித்தம் பைனான்சுக் காரன் வந்து அந்த வாகனத்தை அலேக்காக அள்ளிக் கொண்டு போய் விட்டான் முன்னாள் நேற்று வந்து.. 
என்ன சொல்லியும் எடுபடாத எந்தன் வாக்குவாதங்கள் சண்டை போன்று தொனிக்கவே , அண்டை மனிதர்களின் வேடிக்கைக்கு உதவிற்று சிறு நாழிகை.. 
பழகிப் போயிருந்த மானக்கேடுகள், மேற்கொண்டு நடந்து செல்வதற்கு துணை வந்தன.. ! மிக நான் வருந்துவேன் என்கிற அனுமானங்கள் வீதியில் குண்டு பம்பரம் விளையாடும் சிறார்களுக்குக் கூட இருந்திருக்கும் போலும்.. நான் கடக்கையில் சிரிக்கக் கூட எவருக்கும் வாய் வரவில்லை.. 

எதன் பொருட்டும் வலியுணரும் தன்மை இழந்து மரத்துக் கிடக்கிறேன் என்பதனை நான் விளக்கியும் தான் ஆகவேண்டுமா?.. அதற்கென எமது ப்ரத்யேகப் புலம்பல் வார்த்தைகளைக் கோர்த்து அந்த நாறுகிற பூக்களைக் கட்டியும் தான்  தீர்த்தாக  வேண்டுமா?? 

ஒரு சமீபத்திய புது வகையறா மகிழுந்தில் அந்த மந்தகாசக் கண்ணாடி தாண்டி ஊடுருவும் உமது புன்னகைத்த முகம் கடைவீதி ஒன்றில் நடந்து கடக்கிற என் கண்களுக்குப் படுகிறது.. என்ன ஹாஸ்யம் சொன்னானோ உமது காரோட்டுகிற அற்புதக் கணவன்.... !!

அனர்த்தமாக நானும் ஓர் புன்முறுவலைச் செருகிக் கொள்கிறேன் எமது காய்ந்த  உதடுகளில்.. 
திரும்ப வருகையில், பென்ஸில் ரப்பர் மெஷின் மூன்றும் வாங்கிவர வேண்டுமென்பது என் தேர்டு ஸ்டேண்டர்டு மகனின் கட்டளை.. 
நிறைவேற்றத்  தவறும் பட்சத்தில் வீட்டிற்குள் வரக்கூடாது என்பது அவனது தண்டனை.. 

துழாவிய  சட்டை ஜோப்பில் பதினைந்து ரூபாய் தேறியது பரம சுகமாயிருந்தது.. !!

              ==================***************===================


2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...