Saturday, May 30, 2015

நாசமாய் ப் போன விழிப்பு..

னது 
கனவுத் தோழியின் 
சிநேகிதம் 
என் உறக்கங்களை 
இனிய அனுபவங்களாக 
மாற்றும் வல்லன்மை 
கொண்டிருந்தன... 

என்றைக்கும் வராமல் 
என்றேனும் எதிர்பாரா 
தருவாயில் தான் 
வருகிறாள்.. 
கனவுகள் கூட 
நாம் எதிர்பார்ப்பன 
வருவதில்லை.. !!

சரிவர நான் 
உறங்குவதில்லை 
என்கிற புகாரை 
என் மனைவி 
அவளிடம் 
தெரிவித்திருப்பாள் 
போலும்..
'ஏன் நீங்கள் 
தூங்குவதே இல்லையாம்?'
என வினவினாள்..
"உறக்கம்.. பசி.. 
எதுவானாலும் 
அவை வரும்போது 
மாத்திரமே அணுகப் 
பிடிக்கிறது எனக்கு"

இந்த எனது பதில் 
அவளுக்குப் பிடித்திருந்தது.. 

'உங்கள் மொபைல் எண் 
கொடுங்கள்.. நான் 
நேரம் கிடைக்கையில் 
பேசுகிறேன்" என்று 
அவள் கேட்ட மாத்திரத்தில் 
இந்த நாசமாய்ப் போன 
விழிப்பு வந்து 
அவளைத் தொலைக்க 
நேர்ந்தது.. 

அவள் வருகிற 
ஒவ்வொரு எதிர்பாரா 
கனவுகளிலும் 
"கனவில் மட்டுமே 
நீ வந்து செல்கிறாய்.. 
நிஜத்தில் உன்னை 
நான் எங்கே 
தரிசிப்பதாம்?"
என்கிற கேள்வியை...
கேட்க மறப்பதற்கென்றே 
குறித்து வைத்திருக்கிறேன் 
போலும்.. !
கனவில் அவளை 
தரிசித்ததும் அந்தக் 
கேள்வியே மறந்து 
போகிறது.. 
ஆனால் நான் 
தூங்காத புகாரை 
ஒவ்வொரு கனவிலும் 
அவள் சொல்வதற்கு 
மறப்பதில்லை.. 

நிச்சயம் அடுத்த 
கனவுச் சந்திப்பில் 
அவளிடம் சொல்லியாக 
வேண்டும்.. 
"உன் மடியில் 
என்னை சாய்த்துக் கொண்டு 
சற்றே உன் விரல்களில் 
என் தலை கோதிப் பாரேன்..
தூக்கம் என்ன தூக்கம்.. 
செத்தே போவேன் !"

அதனை ஏற்று 
என் தலைபிடித்து 
அவளது மடியில் 
சாய்க்கையில் 
மறுபடி 
வந்துவிடக் கூடாது 
இந்த 'நாசமாய்ப் போன'
விழிப்பு.. 
என்பதே இப்போதைய 
எனது 
'விழிப்பு நிலையிலான'
பிரார்த்தனை.. !!


Friday, May 29, 2015

பூங்கா நாற்காலி...........

ந்தப் பூங்கா 
நாற்காலியிடம் 
நீண்ட பட்டியல் உண்டு.. 

காதலன் காத்திருக்க 
ஐந்து பத்து நிமிடங்கள் 
கழிந்து காதலி 
வந்து சேர்வதும்.. 
சமயங்களில் 
காதலி காத்திருக்க 
அதே மாதிரி 
காதலன் வருவதும்.. 

அந்தக் 
காத்திருப்பின் 
லாகிரி 
பரஸ்பரம் அவர்கள் 
மாத்திரமே 
உண்கிற சுவாரஸ்யம்.. 

நிமிடங்கள் கழிந்து  
சற்றே அடர்த்தி கண்டு 
மணிகளாகி விடுகிற 
காத்திருப்புக்களும்  
அவ்வப்போது இருவருக்குமே  
நிகழும் தான் .. 
அப்போதெல்லாம் 
மன்னிப்பு எப்படி  
கேட்பதென்கிற ஒத்திகையோடு  
சந்தித்தாக வேண்டும்.. 

ஒத்திகை அரங்கேற்றம் ஆகையில் 
ஒத்துப் போவதும் உண்டு 
எடுபடாமல் ஊடல் அங்கே 
ஊடுருவுவதும் உண்டு.. 

பிற்பாடு ஊடல் 
கூடலாகும் வித்தை 
எல்லா காதலர்க்கும் கைவந்தகலை.. !!

சமயங்களில் இருவருமே 
வராமற் போகிற 
அதிர்ஷ்டமற்ற 
சாயங்காலங்களும்  அந்த 
நாற்காலிக்கு அமைவதுண்டு...

காதலில் வெற்றி தோல்வி காண்கிற 
அனுபவங்கள் காதலர்க்கு மாத்திரமே.. 

நாற்காலிக்குக் கிடைப்பதெல்லாம் 
காதலர்கள் மாத்திரமே... 

தண்ணி அடித்துக் கொண்டு வந்து 
நீட்டிப் படுத்துக் கொள்கிற நாதாரி 
ஒருவன் வருவதற்குள்ளாக  
புதியதாய் ஒரு காதல் 
ஜோடி வந்தமரக் காத்துக்  
கிடக்கிறது பூங்கா நாற்காலி.. !!

Monday, May 25, 2015

நானும் அசிங்கங்களும்..

அசிங்கங்களினின்று
தூரம் விலகி இருந்தேன்..
பிறகு அவைகளின்
அருகாமை தவிர்க்க
சாத்தியமற்றுப் போயிற்று..

அதன்பிறகு
அசிங்கங்கள் என்னுள்
ஐக்கியமாகின.. அல்லது
அவைகளுள் நான்..

எனக்கும் அசிங்கங்களுக்குமான
அத்யந்த பந்தம்
அறுபடும் சாத்தியக் கூறுகளே அற்று
நங்கூரப் பாய்ச்சலாய்
பிடிபட்டுக் கிடக்கின்றன..

அருவருத்து முகம் சுழித்து
காறியுமிழும் தரத்தில்
அசிங்கங்கள் ஒரு பிராயத்தில்
தென்பட்டன எனக்கு..

ஆரத் தழுவி ஆலிங்கணம்
நிகழ்கிற  இந்த சூழல்
எனக்கே பிரம்மிப்பு..

பிற்பாடான ஒரு தருவாயில் ..
அதே அனாச்சாரமாக
அசிங்கங்கள் புலனாகத் துவங்கிற்று..

மறுபடி அதனைப்
பிய்த்தெறிகிற முஸ்த்தீபு என்னிடம்..
ஆனால் பெயர்க்க அடம்பிடிக்கிற
சக்களத்தி போல ..
அசிங்கங்கள் என்னில்
கோலோச்சவே
பிரயத்தனித்தன .. !!

முடி நகம் போன்று
சுலபத்தில் கத்தரித்து விட்டு
விடுபடலாம் என்கிற எனது
தப்புக் கணக்கை ..
கேலியாகப் புன்னகைத்தன
அசிங்கங்கள்..
எனது அடியாழ வேராக
ஊடுருவிக் கிடந்தன அவைகள்..


Sunday, May 17, 2015

சிதறல்கள்..

சலனமில்லா மொட்டைமாடி மழைநீர்.. 
கவிழ்த்துவைத்த கண்ணாடி போன்று.. !

சற்றே வீசிய மென்காற்று நிகழ்த்திய சலனத்தில்..... 
குட்டை ஒன்று மொட்டை மாடி ஏறி வந்தது போன்று..!!

மேற்கை சில நாழிகை கிழக்காய்  பாவித்து 
அஸ்தமனத்தை அதே நாழிகையில் உதயமாய் பாவிக்கையில் 
அவசர அவசரமாய் இருள் வந்து நம் கற்பனையை விரட்டுகிறது...!

நிலவுதிக்கும் என்று கீழ்வானில் கண்கள் பதித்தது தவறாயிற்று..
இன்றைக்கு முழு அமாவாசை.. !!


Thursday, May 14, 2015

ஓய்வெடுக்கிற கவிதைகள்..

இயல்பாக என்னில் பூக்கிற கவிதைகளை மாத்திரமே காகிதங்களில் உதிர்க்கிற ஸ்பாவம் எனது.. 
ஆனால் இன்றேனோ என்னுள்ளில் பூத்திடாத கவிதைகளை இங்கே குவித்துக் காண்பிக்க எனது விரல்கள் நர்த்தனிக்கின்றன....

"ஹே விரல்களே. எதற்கிந்த துடுக்குத் தனம் உங்களுக்கு?"

"பின்னே என்னவாம்.. வெறுமே எதுவுமற்று எத்தனை நாட்கள் நீ உட்கார்ந்திருப்பாயாம்.. நாங்கள் கதைகள் கட்டுரைகள் என்று மட்டும்  பிதற்றுவதாம்.. கவிதைகளை விநியோகிக்கிற உத்தேசமே இல்லையா?"

"எதற்கு இத்தனை அவசரம்?.. வைத்துக் கொண்டா வெளியிடாமல் வஞ்சிக்கிறேன் ?.. என்னவோ சரக்குத் தீர்ந்தது போன்று ஒரு வெறுமை.. பட்டுப் போன மரம் போன்று காய்ந்து கிடக்கிறேன்.. என்னிடமிருந்து பிய்த்து எதனை "கவிதை" என்று பிரசுரிக்கப் போகிறீர்கள்?.. வறண்டு உதிரக் கிடக்கிற பட்டைகளும், சருகென சுணங்கிப் போயிருக்கிற கிளைகளும் இருக்கிற என்னிடம் பச்சை பூரிப்பில் எந்தக் கவிதை உங்களுக்குப் புலனாகிறது?"

"மறுபடி கிளர்ந்தெழ உன்னால் சாத்தியப் படும்.. எதற்கிந்த மருட்சி?.. எதற்கிந்த குற்ற உணர்ச்சி?.. பட்டமரம் பூப்பூக்கும் என்கிற வினோத வாசனையை   நிச்சயம் உனது கவிதைப் பூக்கள் பரப்பும்.. உன் கவிதைகளை எழுதிப் பழகிய எங்களுக்குத் தான் தெரியும் உன்னுடைய சாத்யக் கூறுகள்.. ஆகவே உமது 'துவளல்'  நிரந்தரமற்றது.. இப்போதைக்கு சற்றே ஓய்வெடு .. மறுபடி வரும் ஒரு புதுவசந்தம்.. அதன்பிறகு துவங்கும் எங்களின்  இலையுதிர்காலம்....!!"


Sunday, May 10, 2015

உதைபடுகிற லாஜிக் ..

திடீரென்று அன்னையர் தினம் என்று ஒரு நாள் வருகிறது.. கான்செர் நாள், டயாபட்டீஸ் நாள், கைகளை சுத்தமாக அலம்பி விட்டு சாப்பிட என்றொரு நாள்.. 
இப்படி யாரினி வரையறுத்து நாட்களை புதுப்பிக்கிறார்களோ புரியவில்லை.. ஆனால் அவர்கள் தெரிவிக்கிற இம்மாதிரியான பிரத்யேக நாட்களில் அது சம்பந்தமான வாழ்த்துக்கள் ஃபேஸ் புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் மின்னஞ்சல்களிலும் குவிந்து விடுகின்றன.. சம்பந்தப் பட்டவர்கள் வாய் மூடி மவுனிகளாக இருக்க, கொஞ்சமும் அறிமுகமற்ற அவர்களும் இவர்களும் அந்த நாட்களின் சாராம்சத்தை நம்மிடம் உதிர்த்து அதற்கான ஒரு வாழ்த்து மடலை அனுப்பி விடுகின்றனர்.. நாம் பதிலுக்கு நன்றி ஏதும் அவர்களுக்கு சொல்வதில்லை.. அவர்களும் அதனை எதிர்பார்ப்பது போன்று தெரியவில்லை.. 
Image result for MOTHERS DAY
அன்னை நம்மோடு இருக்கிற அத்தனை நாட்களும் அன்னையர் தினமே, எனிலும் அந்த அவர்கள் அனுஷ்டித்துள்ள தினம் என்னவோ அன்னைக்கான ஒரு விழா நாள் போன்ற ஓர் மாயையை ஏற்படுத்தி நம்முள் ஒரு புத்துணர்ச்சியை பாய்ச்சி விடுகிறது தான்.. 
இவ்விதமே யாதொரு நாளும்  அதனதன் வீரியத்தை  நமக்குள் உணர்த்தி சைக்காலஜிக்கலாக ஒரு ஜாலி பண்ணத்தான் பண்ணுகிறது.. 

ஒருக்கால் அம்மாவை நினைத்தே பார்த்திராதவர்கள், கூட இருந்தும் கூட அவளை ஒரு மனுஷியாக மதிக்காதவர்கள், ரகளை செய்து அவள் வைத்திருக்கிற காசு பணத்தைப் பிடுங்குகிற ஊதாரிப் பசங்கள், கொஞ்சமும் ஈவிரக்கமற்று அம்மாவை அடிக்கிற உதைக்கிற ஈனப் பிறவிகள்.. 
இவர்கள் மாதிரியான  நபர்களுக்காக இந்த மாதிரியான நாட்களைத் திணித்தனரோ என்னவோ.. 
இஸ்கூலுக்குப் போறவனுக்குத்தான் சனிக்கிழமை அரைநாள் லீவ் என்பதும் ஞாயிற்றுக்  கிழமை முழுசா லீவ் என்பதும் பரமானந்தமான விஷயம்.. 
அன்றாடம் ஞாயிறு போன்று வெட்டியாக  ஊர் சுற்றித் திரிகிற பனாதிகளுக்கு சனிஞாயிறு  எவ்வித தனிப்பட்ட அடையாளங்களைக் கொணர்ந்தும் சேர்த்து விடப் போவதில்லை..  
அதாகப் பட்டது நைனா, ரவுடிப் பசங்களை இஸ்கூலுக்குப் போறவுகன்னு வச்சுக்குவோம்.. அன்னையர் தினத்தை சனி ஞாயிறா வச்சுக்குவோம்.. 
அதேமாதிரி எப்பவுமே அம்மாவை மதிக்கிற பசங்களை, வெட்டியா ஊர் சுற்றுகிற பசங்களா வச்சுக்குவோம்.. 
ஹிஹி.. எங்கியோ பயங்கரமா "லாஜிக்" எட்டி எட்டி ஒதைக்குதல்ல?? 

Friday, May 8, 2015

'நிழல் வெறியன்'

'நிழல் வெறியன்'
என்கிற ஒரு தலைப்பின்
மீது எனக்கொரு பிரேமை..

அந்தத் தலைப்பில்
கவிதை யோசித்தேன்..

"வெய்யில் அவனுக்கு 
நிழல் தந்தது.. 
அவனது நிழலைத் 
தொலைக்கிற உத்தேசம் 
அவனுக்கில்லை ஆதலால் 
வெயிலையும் தொலைக்காமல் 
பார்த்துக் கொண்டான்.. "
"எல்லோரும் வரவேற்ற 
பொன்னந்தி மாலைப்பொழுதை 
தூரம் வீசி எறிந்து 
நிலவை இழுத்து வந்தான் 
மறுபடி நிழலுக்காக.. 
நிழலின் வெறியன் அவன்.. "

அப்படி ஒன்றும்  அப்ளாஸ்
வாங்காததால் அந்தக்
கவிதையை விடுத்து
கதைக் களம் அமைத்துச்
சமைத்தேன்..

"அவனுடைய நிழலை மிதிக்கவே பயந்தனர் அனைவரும்...!
ஆம், அதனை அவமரியாதையாக நினைத்தான் அவன்..
ஆகவே, அவனை அணுக முற்பட்டவர்கள் வெளிச்சமில்லாத
சூழலைத் தேர்ந்தெடுக்கவே முயன்றனர்..
அவனுடைய நிஜம் ஒருவனுக்கு ஏற்படுத்திய அதீத கோபத்தின்
நிமித்தம் அவனது முதுகை உதைத்துக் குப்புறத்தள்ளி, பிறகு மல்லாந்து திருப்பிப் போட்டு விலாவையும் நெஞ்சையும் சாணம் போன்று மிதித்தான்..
அதற்கு அவன் சொன்னான்:
"உன்னுடைய நல்ல நேரம், என்னை உதைத்ததால் தப்பினாய்.. எமது நிழலை இப்படி கால்களில் த்வம்சம் செய்ய நினைத்திருந்தாலோ, உன்னை சீவி இருப்பேன்"
நிழல் வெறியனின் இந்த எச்சரிக்கை அவனுக்கு இன்னும் சூட்டை ஏற்றிற்று..
அடுத்த நாள் வெயிலுக்காக அவன் காத்திருந்தான்..

சாகித்ய அகடெமிக்குப் பரிந்துரைக்கப் பட்டு பரிசீலனையில் இருந்து வருகிறது இந்தக் கதை..


Wednesday, May 6, 2015

உத்தம வில்லன் .........

வ்வித அதீத கற்பனைகளும் களேபரங்களும் தமிழ் சினிமாவில் இப்போது வழக்கமாகி விட்ட ஒன்று..
தமிழில் எவர் படம் எடுத்தாலும் ஏதேனும் மாற்றங்களையும் புதுமைகளையும் சேர்ந்தாற்போன்று படைத்து சாதித்துக் காண்பிக்க வேண்டும் என்கிற அபரிமித வெறி ஆளாளுக்குப் போட்டு இம்சிக்கிறது என்றே தோன்றுகிறது..

இந்த வெறிக்கு கமல்ஹாசனுக்கு சொல்லித் தரவும் வேண்டுமா?.. இத்தனை காலங்கள் திரையுலகில் நீடித்து வீற்றிருப்பதே அரும்பெரும் சாதனையாக கொள்ள வேண்டுமென்றிருக்க , அதுவும் போக எக்ஸ்ட்ரா லார்ஜ் செய்து தனது கலை தாகத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியது தமது தலையாய கடமைகளில் ஒன்றாக கமல் அனுமானித்திருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை.. !

நிஜவாழ்க்கைக்கும் சினிமா வாழ்க்கைக்கும் மிகப் பெரிய முரண் ஒன்றை மையமாக வைத்தே இந்தப் படத்தின் திரைக்கதை நெடுக ..

60 களைக் கடந்தும் கூட காதலியை பைக்கிற்கு முன்னாடி அதுவும் ஓட்டுகிற தன்னை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கச் சொல்லி அந்தக் கமல் பிராண்ட் கிஸ் அடிப்பதும், அந்த அடுக்கிவைக்கப் பட்டுள்ள மரக் குவியல்கள் நடுவே ஸ்டெப் போட்டு நடனம் ஆடுவதும் கொஞ்சூண்டு மாத்திரமே ரசிக்க முடிகிறது.... 

தனக்குரிய முதிர்ச்சிக்கு ஏற்பவே தன்னுடன் இருக்கும் நாயகிகளையும், அதாவது பார்த்தாலே 'முதிர்கன்னி' என்று முத்திரை இடத் தோன்றும் அளவுக்கு உள்ள நடிகைகளை தமக்கு ஜோடியாக்கிக் கொண்ட கமலின் கலையுலக முதிர்ச்சி  பாராட்டப் படவேண்டிய ஒன்றே.. 

பாலச்சந்தரைப் பார்க்கையில், அவருடைய அந்தப் பேசுகிற தொனியை அப்படியே கிரகித்துக் கொண்டு நடித்தவர் நாகேஷ் மட்டுமே என்று தோன்றிற்று.. அல்லது நாகேஷின் அந்தத் தொனியில் பாலசந்தர் பேசினாரோ என்னவோ.. 

ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.. 
இந்த மாதிரி வரலாற்றுப் பின்னணிகளோடு சொல்லப் படுகிற உண்மை சம்பவங்கள்  ஆகட்டும் கற்பனைகளாகட்டும், கமல் காண்பிக்கிற அந்த நேர்த்தி  உண்மையில் நம்மை எல்லாம் மெய் சிலிர்க்கத் தான் வைக்கிறது.. 

அந்த அரண்மனைகளின் பிரம்மாண்டம், அந்தப் பணிப் பெண்டிர்களின் மற்றும் ஆடவர்களின் அலங்காரத் தேஜஸ்கள், அவர்களுடைய நடவடிக்கையில் உள்ள மெருகு.. 
கிராஃபிக்ஸின் பங்கீடு அதிக பட்சம் உள்ளதென்பதை  நாம் அனைவரும் சுலபத்தில் உணர்ந்து கொள்கிறோம் என்ற போதிலும், அதனையும் தாண்டி அதனை ஏற்றுக் கொண்டு சுவாரஸ்யமாக கவனிக்கிற ஒரு தன்மையினை நம்மில் திணித்திருக்கிற கமலின், இன்னபிற பின்னணிக் கலைஞர்களின் திறனை எத்தனை மெச்சினாலும் தகும்.. 

இ.ராஜா பி.ஜி.எம் போன்று சொல்லிக் கொள்கிற  வகையிலே கிப்ரானின் இசைக் கோர்வை இல்லை தான்.. வெறுமே ஒரு அமெச்சூர் இசைக் கலைஞனின் சிதறல்கள் தான் அங்கங்கே ஒலித்தன.. இம்மாதிரி படங்களுக்கு  ராஜாவை அணுகி இருந்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்.. ஏனெனில், இப்படியான  கதைகளுக்கு இசையின் ஆதிக்கம் மிகத் தேவை.. அவர் மிகப் பெரிய  இசை யாகமே நிகழ்த்தி இருப்பார்.. இதனை கமல் என்ன அறிந்திராமலா இருந்திருப்பார்?  .. என்னவோ அது ஒரு சினிமா அரசியல்.. [திருமணம் என்கிற நிக்காஹ் படத்தில் "சில்லென்ற சில்லென்ற" பாடலைக் கேட்டு கமல் மயங்கி விட்டாரோ என்னவோ]

நிறைய கிளோஸ்-அப் ஷாட்கள்.. எல்லாமே எல்லாருமே டீடெயில் நிரம்பித் தெரிந்தனர்.. 

வெறும் ஜெயராமைக் காண்பித்து ஒரு பின்புலக் கதை ஒன்றைக் கோர்த்து  அது நமது  மனதை வருடுகிற வித்தை எல்லாம் கமலுக்கு மட்டுமே சாத்தியம்.. அந்த மகளோடு உரையாடுகிற அந்தக் காட்சி அற்புதம்.. 
மகனுடைய அந்த விட்டேற்றித் தனங்களும் பின்னர் தனது தந்தை நிலை அறிந்து அவன் உடைந்து போவதும் அதற்கு கமல் அவனது தலையை கக்கத்தில் திணித்து ஆறுதல் உதிர்ப்பதும் .. "சோகக் கவிதை".. 

நிதரிசன உண்மை பிரைன் டியூமரில் .. அதன் நிழல் இங்கே சாகாவரத்தில்.. 

உயிருடனே போஸ்ட்-மார்டம் செய்வது போன்ற உணர்வுகளும் வலிகளும் நம்மை ஆக்கிரமித்து.. கைக்குட்டையை ஈரப் படுத்திக் கொண்டே வெளியேறுகிறோம்.. 

மனசைத் தொடுகிற கமலின் அந்தப் பாட்டின் வரிகள்.. : 
"சாகாவரத்தை யார் தான் ரசிப்பர் ?
தீரா கதையை யார் தான் படிப்பர் ??"


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...