Tuesday, January 28, 2014

கோப தருணங்கள்..

சமயங்களில்
நாசுக்கு கைவருவதில்லை
எனக்கு..
இங்கிதம் கூட
பிசகி விடுகிற
அசந்தர்ப்பங்களும்
வாய்த்து விடுகின்றன.. !

நிகழ்ந்த
பிழைகள் மனசுள்
ஓர் தாங்கொணா
சங்கடம் கொடுத்தாலும்
மேற்கொண்டு
அவ்விதம் நிகழாது
தவிர்க்க உதவுகின்றன..!!

கோபங்களில்
கத்திக் கதறுதலும்
குத்திக் குதறுதலும்
மிக நியாயங்களாகப்
புரிபட்டாலும்
பிற்பாடாக அதன்
சுவடுகள் ஒருவகைக்
கேவலத்தை விதைத்து
விட்டுப் போகின்றன..

மயிறுபிடி சண்டைகளை
சுவாரஸ்யமாக வேடிக்கை
பார்த்த பிராயங்கள் மிகக்
குதூகலமானவை..
இன்றெல்லாம் ரெண்டு பேர்
குரலை உயர்த்திப்
பேசினாலும் கூட
சமாதானப் படுத்துகிற
முஸ்தீபு தயாரில்
இருப்பது பெருமை எனிலும்...

நானே கூட
பொண்டாட்டியை
பொது இடத்தில்
கூச்சலிட்டுத் திட்டும்
அபத்தம் நேராமலில்லை ..!
அதில் தலையிடுகிற
அடுத்தவர்களைக் கூட
அடித்துதைக்கிற
அநாகரிகம் என்னுள்
மூள்வதை யாது சொல்ல??

Friday, January 24, 2014

காதலற்ற காதல்..

எந்த வரையறைக்குள்ளும் வருவதற்கு சாத்தியப் படாத ஓர் தன்மையுடன் மனசை உடும்பாய்ப் பிடித்து ஆக்ரமிக்கின்றன உம்மைக் குறித்த ஞாபகங்கள்..

உமக்கும் எமக்குமான இடைவெளி நூலிழையாக இருந்த நாட்கள் உண்டு.. இன்றெல்லாம் ஏழு மலைகள் தாண்டிய விதமாக.....

-- என்னவோ நம் பந்தம் நிகழ்ந்தது சென்ற பிறவியில் போலும்,..
 -என்ற போதிலும் அதென்னவோ  இப்பிறப்பில் ஓர் திடமான ஞாபகக் கீற்றாக ஒளிர்வது போலும் ஓர் மாயை ..,
 ஓர் மறக்கவியலா ஆச்சர்ய அதிசயம்.. அதிசய ஆச்சர்யம்.. !!

நீ என்னை என்றோ மறந்திருக்கக் கூடுமென்று மட்டுமே என்னால் எப்போதுமே அனுமானிக்க முடிவது எந்த வகை நியாயம் என்பது ஓர் மர்மப் புதிரே..!!

என்ன காரணத்தாலோ அன்றெல்லாம் உமது முகம் எனக்கு அடிக்கடி மறந்து, அதனை மறுபடி எனது ஞாபகத்துக்குக் கொணர்வது என்பது சுவாரஸ்யமான பேராவஸ்தை என்பதை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்.. !

இத்தனைக்கும் ஒரே நாளில் ஆயிரம் முறைகள் உம்மை தரிசிக்கிற சுலப வாய்ப்பினை  நான் பெற்றிருந்தேன்..

இன்று உமது முகம் ஆணி அறைந்தாற்போல மனசில்... பிடுங்கி வீசும் சாத்யமே அறவே இல்லை போன்று.. அப்படி ஒருக்கால் பிடுங்கி வீசப் படுகிற பட்சத்தில் இதயமும் ஒருங்கே பெயர்ந்து வந்து விடும் போன்று.. அப்படி இழைந்து கிடக்கின்றன உன் நினைவும் என்னிதயமும்.. 

இத்தனைக்கும் உம்மைப் பார்க்கிற அதிர்ஷ்டம் இந்நாட்களில் இல்லை என்பதோடு, இனி வாழ்நாளில் உம்மை எங்கேனும் பார்க்கிற தருவாய் வாய்ப்பதற்கும் அனுக்ரஹம் இல்லை என்பது  எமது அதிதீவிர [அவ]நம்பிக்கை.. !!

எனக்கு உனது நிமித்தம் நேர்ந்தது "காதல்" என்று காதலைக் கேவலப் படுத்துகிற என் மீது எனக்கே காறியுமிழ ஓர் வெறி புறப்படுகிறது.. !

ஆனபோதிலும் ஒவ்வொரு தருவாயிலும் உம்மை மையப் படுத்தி நான் ஏதேனும் எழுத நேர்கையில் எல்லாம் அதனை 'காதல்' என்கிற தன்மையிலேயே  சித்தரிக்க முற்படுகிற நான் நிஜக் காதலர்களின் வன்மையான கண்டனத்துக்கு  ஆளாக நேர இருப்பதை என்னால் தீர்க்க தரிசனம் செய்ய முடிகிறது.. 

ஆனபோதிலும் தலைப்பாக ஓர் அடையாள வார்த்தையை நானும் பல விதங்களில் யோசித்து விட்டு கடைசியில் இந்த இளிச்ச வாய் வார்த்தை "காதல்" என்பது மட்டுமே சிட்டுக் குருவி போல சிக்கி எல்லாரிடமும் சின்னாபின்னமாகிக் கொள்ள விழைகிறது.. 

மிக ஜாக்கிரதையாக நீயும் என்னை சகோதர அந்தஸ்த்தில் தான் நிறுத்தி இருந்தாய் என்ற போதிலும், ஒருக்கால் என்மீது காதல் என்கிற அஸ்திரத்தை எய்தி இருந்திருப்பாயே ஆயினும் அதனின்று விலகி உம்மை ஓர் "அடையவியலா" தன்மையிலேயே தான் நான் கற்பிதம் செய்யத் துணிந்திருப்பேன்... அதன் நிமித்தம் தான் என்னில் கவிதைகள் பூக்கிற சாத்யங்கள் உண்டே தவிர உம்மை காதலியாக மடியில் சாய்த்துக் கொண்டு எவ்விதப் புனைதல்களும் என்னில் நிகழும் வாய்ப்பே இல்லை ..

 மாறாக உன்னில் முயங்குகிற, உன்னைப் புணர்கிற காம ரசாயனங்களை மட்டுமே பிதற்றுகிற காமுகனாக இங்கே பிரசன்னமாகி இருக்கக் கூடும்.. என்ன, ஒரே ஆதாயம் படிக்கிற நபர்கள் அதிகம் குழுமி இருப்பார்கள்.., மற்றும் வலதுகைப் பெருவிரலைத் தூக்கி லைக்ஸ் சொல்லி என்னை சிலிர்க்கச் செய்திருப்பார்கள்.. இப்போது அது மிஸ்ஸிங்...

ஆனால் காதல் என்கிற ஓர் உயர்ந்த தன்மையை கற்பனைக் கிரமமாக வாவது  எனது வாழ்வில் நிகழ்ந்தது போல நான் திணிக்க முற்படுவேனே அன்றி ... எனது நிஜத்தில் அனுபவத்துக்கு வராத அந்தப் புனித உணர்வினை உள்ளது  உள்ளவாறே எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.. 

ஆமாம்.., இவ்வகை உணர்வுகள் எல்லாம் எந்த வகையில் சேர்த்தி??

என்றேனும் நானே தெளியக் கூடிய ஓர் தருணம் வாய்க்கும்.. அப்போது மறுபடி நான் இவைகளை அலசி ஆராய்ந்து எழுதப் பிரயத்தனிக்கிறேன் ..
நன்றி.. 

Sunday, January 19, 2014

யாரையோ என்னவோ சொல்ல வர்றேன்???



எதற்கேனும்
நெகிழ்தலும்
கண்ணீர் மல்குவதும் 
பேரானந்தத்தின்
முகவரிகள் ! ...

இறுகிக் கிடப்பதும் 
ரௌத்ரம் காண்பிப்பதுமே 
சுவை எனத் 
தவறுதலாகச் 
சித்தரித்து வாழ்பவர் 
வாழ்க்கை பாலை..!!

யாதொரு சூழலையும் 
ரம்மியமாய் மாற்றும் 
திறனற்றோர் 
ஈனர்கள்.. ஊனப் பிறவிகள்.. 

களேபரம் மூள்கிற 
வாய்ப்புள்ள சூழலைக் 
கூட சுவாரஸ்யப் 
படுத்துகிற சாத்யமுள்ளவர்களே 
இப்பிரபஞ்சத்தின் 
பிரதிநிதிகள்.. 

கடவுள்களை 
தங்களின் அடையாளமாக 
தம்பட்டமடித்துக் கொள்கிற 
சில அரசியல் கட்சிகள் 
பனியனுக்குள் வீச்சரிவாளைப் 
புதைத்து வைத்திருப்பதை 
எவர் தான் அறியாமலில்லை?

ரத்தம் சொட்ட சொட்ட 
கத்தி போடுபவர்கள் கூட 
கடவுள் பக்தியின் 
தாத்பர்யம் புரிந்தவர்களே..!

வன்முறைகளுக்கான 
அடையாளமாக 
விபூதியும் குங்குமமும் 
என்றென்றும் அடையாளப் 
பட்டுவிடக் கூடாதென்பதே 
ஒவ்வொரு உண்மையான 
ஆத்திகனின் பிரார்த்தனையுமாகும்..!!

Friday, January 17, 2014

சென்னிமலை தேர்..

நேற்று சென்னிமலை தேர்... அடேங்கப்பா.. என்னா ஒரு தேஜஸ் ஊர் பூரா.. இப்டி ஒரு செ.மலையை முன்னாடி பார்த்ததில்ல.. கல கட்டிடிச்சு ன்னு சொல்றாங்களே.. அதான் இது.. 
ஜன சமுத்ரத்துல நானும் ஐக்கியம்.. முன்னுக்கும் பின்னுக்கும் வலதுக்கும் இடதுக்குமா மக்கள் அலைகள் அலேக்கா தூக்கித் தூக்கி வீச .. ஆனந்த அலையில் சிக்குண்ட பேரானந்தத்தில் எனது பொழுது புதுப்பொலிவு  பெற்றது....!

அதன் பிரத்யேக நிலையை தேர் அடைந்ததும் அதன் மீதாக ஆளாளுக்கு உப்பை வாங்கி அள்ளித் தெளித்தனர்.. எனது மண்டை எங்கிலும் உப்புச் சிதறல்கள்.. என்ன தட்டியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உப்புப் பிசிர்கள்.. வீடு வந்தும் கூட விரல்களில் நெருடிய உப்பினை மெல்ல உருவி எடுத்து சுவைத்தேன்.. அந்தக் கரிப்பில் ஓர் சிலிர்ப்பை உணர்ந்தேன்.. 

சிலர் சில்லறையை அள்ளி தேர் மீது தெளித்தனர்.. ஓர் சுவாரசிய ஐதீகம்.. நானும் ஓர் தேர்ந்த பொறுக்கி போல சில்லறை வீசப் படும் போதெல்லாம் குனிந்து அகப்படுமா என மெனக்கெட்டு மெனக்கெட்டு நான்காவது ஐந்தாவது முறை தான் நான்கு ரூபா கெடச்சது.. ஹிஹி.. 

அரிசியைக் கோழி கொத்தக் கூட சற்றே நேரம் பிடிக்கும்.. ஆனால், சில்லறைக் காசு வீசி முடித்த அடுத்த ஷணமே ஒற்றைக் காசைக் கூட நிலத்தில் விடவில்லை  யாரும்.. பொறுக்கறதுல என்ன ஒரு பிரம்மாத வேகம்.. நானும் கூட காசை கீழே போட்டு போட்டு பொறுக்கிப் பழக வேண்டும் இனி .. 

தெருவெங்கும் தேர் பவனி வருகையில் அதனூடே ஜனப் பிரளயம்... காணக் கண் கோடி வேணும்.. ஒவ்வொரு நிலை கடக்கையிலும் சட சட வென பூ உதிர்வது போன்ற கைதட்டல்கள்.. 

எங்க ஊரு தேருக்கு வந்தே தீரணும்னு , சென்னையிலிருந்து.. வெளி மாநிலங்களில் இருந்து எவ்வளவோ சென்னிமலைக் காரப் பசங்களும் பொண்ணுகளும் .. ஐ.டி ..யிலும் இன்னபிற துறைகளிலும் பணியாற்றுகிற யாவரும் அந்தக் கும்பலில் இருந்தனர் என்பதை அவர்களது பரிமாற்றங்களின் போது என்னால் சுலபத்தில் அனுமானிக்க முடிந்தது.... பொறந்த ஊரின் பாசமே பாசம்.. தாய்வீடு வருவது போலவே ஓர் சுகந்த உணர்வு.. 

அந்த லட்சோப லட்ச மனிதர்களிடையே எனக்குள் நிகழ்ந்த ஓர் அனுபவத்தை வார்த்தைப் படுத்த என்ன முயன்றாலும் .. அந்த அனுபவத்தின்  முன்னிலையில் வார்த்தைகள் மிகவும் பலவீனமானவை தான்.. 

அடுத்த ஓர் தேர் நாளை இப்பிருந்தே எதிர்பாக்குற அளவுக்கு ஆசைய வெதச்சிடுச்சு சென்னிமல... அடடே..

Saturday, January 11, 2014

ஜில்லா ...

ஜில்லா பார்த்தேன்..
ஜில்லா இருக்கும்னு பார்த்தா பழைய சோறு மாதிரி ஆறிக் கெடக்குது.. ஆறிக் கெடந்தாலும் பரவாயில்லே.. சளிச்சுக் கெடக்குது..
சும்மா சண்டைக்கு மாத்திரம் இம்பார்டன்ஸ் கொடுத்திருக்காங்க.. திரைக்கதை இம்பொட்டண்ட் ஆக இருக்கு..

அப்பனும் மகனும் அடாவடிகளாக பவனி வருகையில் கூட ஒரு கிக் இருந்தது.. பய்யன் இனுஸ்பெட்டர் ஆனாரு.. படம் சீரியஸா மாறி நம்மளை போட்டு முடிஞ்ச வரைக்கும் வறுத்து எடுத்துட்டாங்க..

எந்தக் கதாபாத்திரங்களுமே மனசுக்கு ஒட்டவே இல்லை.. . சும்மா ஜோக் பண்றதா நெனச்சு பரோட்டா சூரி பண்றது ஒரு டுபாக்கூரு.. அதுக்கு அப்பப்ப விஜய் அனத்தறது கூட கொஞ்சூண்டு கிச்சு கிச்சு மூட்டுது..

ஹீரோயினை டம்மி பீஸ் பண்ணிட்டாங்க.. இந்த லட்சணத்துல ஒரு சுமார் ரக டூயட்டுக்கு ஜப்பான் போயி கிழிச்சுட்டாங்க..

முன்ன ஒரு காலத்துல தரமான படங்களை எடுத்து ஜெயிச்ச ஆர்.பி.சௌத்திரிக்கு இன்னும் பல கோடிகள் புரளும் போல.... ஜெயிச்சு வந்த இதே சினிமா குதிரை கிட்டவே  தோத்துடலாம்னு ஒரு முடிவோட இருப்பாரு போல.. கவலையே படாதீங்க தலைவா.. அழகா முடிசுக் கட்டிடுவாங்க எல்லாருமா சேர்ந்து.. !!

ஒரு பாட்டுக் கூட மனசுல ஒட்டவே இல்லை.. இமான்.. கமான் , டோண்ட் பி லைக் திஸ்.. கும்கி , பாண்டியநாடு இதுல எல்லாம் செஞ்ச பாதி மெனக்கெடல் கூட ஜில்லால இல்லா..

சும்மா காமெரா மாத்திரம் கம்பீரமா ஒழச்சு கொட்டி என்ன பயன்??..
விஜய் , மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி, .. மற்ற பெயர் தெரியாத வில்லன்கள்.. எல்லாருமே ஒட்டுமொத்தமாக வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள் ..

ஜில்லா.. இருக்கு ரொம்ப டல்லா..

Friday, January 10, 2014

டேமிழ் ... டேமிழ் ...


எல்லா மொழிகளுமே இருபத்தி சொச்சங்களில் முடிந்து விடுகையில் .. தமிழ் மட்டும் 247 எழுத்துக்கள் .. ரொம்ப அதிகப் பிரசங்கி போல .. கிட்டத் தட்ட பத்துப் பன்னிரண்டு மடங்குகள் படர்ந்து கிடக்கின்றன.. 
இவ்ளோ பெரிசா இருந்துமே கூட, தமிழ்நாட்டிலேயே தமிழ் என்கிற மொழி காண்வெண்டுகளில் குழந்தைகளிடம் அன்னியப் பட்டுக் கிடக்கிறது.. kg மிஸ்கள் கூட தமிழில் யதார்த்தமாகப் பேசினால் --அந்த ஸ்கூலின் பிரின்ஸிபாலால் கண்டிக்கப் படுகிறார்.. 
அமெரிக்காவில் எந்தப் பள்ளியிலும் சத்தியமாக ஆங்கிலம் அன்னியப் பட்டிருக்காது.. 
சும்மா பேருக்கு மாத்திரம் தமிழ் வாழ்க.. வளர்க தமிழின் புகழ் என்றெல்லாம் சூளுரைக்கிற நம்மால் தமிழைப் பேசி பெருமை கொள்ள முடியவில்லை.. மாறாக ஆங்கிலம் பிதற்றுவதில் தான் நமது அந்தஸ்த்து ஒசருவதாக பீற்றிக் கொள்கிறோம்.. 
மிக வீரிய வரலாறு கொண்ட தமிழ்... தொன்மை இலக்கியங்களை பேணி பாதுகாத்தும்.. பயனேதுமற்ற களர் நிலம் போல பிளந்து பிளந்து கிடக்கிறது.. 
இதற்கு செவ்வனே நீர் பாய்ச்ச வேண்டுமென்கிற ஸ்மரணை .. தமிழ் மீது கருணை கொண்ட சிலரிடம் ரகசியமாக் அவ்வப்போது பீரிட்டு எழுந்தாலும் நடைமுறை சாத்யமாகாத துரதிர்ஷ்டம் ... அந்த மாண்பு மிகு மொழிக்கும், அதனை சார்ந்த தமிழர்களுக்கும் தொடர் துயராக நிகழ்ந்த வண்ணமே உள்ளது..
எழுத்துகள்; தமிழ் மொழி 247 எழுத்துகள் கொண்டது என்பது நமக்கு தெரியும் அதேபோல பிற மொழிகளும் எத்தனை எழுத்துகள் உள்ளன என்பதை பார்ப்போம். ஆங்கிலம் - 26 எழுத்துகள் ஸ்பெயின் - 27 எழுத்துகள் இத்தாலி - 20 எழுத்துகள் அரபு - 28 எழுத்துகள் லத்தின் - 22 எழுத்துகள் துருக்கி - 28 எழுத்துகள் கிரேக்கம் - 24 எழுத்துகள் பாரசீகம் - 31 எழுத்துகள் ஜெர்மனி - 26 எழுத்துகள் சமஸ்கிருதம் - 48 எழுத்துகள் பிரெஞ்சு - 26 எழுத்துகள் சீனா - 214 எழுத்துகள்
Like ·  ·  · 6 hours ago ·

பேஸ் புக்கில் எமது ஆதங்கத்தை இவ்வாறு சொல்ல நேர்ந்தது.. அதனை பிளாகிலும் தெரியப் படுத்துகிறேன்..

Saturday, January 4, 2014

அமிலம் வீசும் காதலன்..



 உன் மீது
அமிலம் வீசுகிற
உத்தேசத்தில் உள்ளேன்..

என்னைக் காதலிக்கிற
உத்தேசம் உனக்கில்லை
என்ற போதிலும்
எனது காதலை
வரவேற்கிற நாகரீகம்
உமக்கில்லாதது
பெருந்துயர் எனக்கு..!

அந்த வலி
என்னை இப்படி
ஓர் தீர்மானத்தில்
வைத்துவிடத்
துணிந்து விட்டது.. !!

செய்தித் தாள்கள்
என்னைக் கிழிக்கக்
கூடும்..
சமுதாயம் என்
மீது மிதியடி வீசும்..
சட்டம் காறியுமிழும்..
தகாத தண்டனை
கொடுத்து என்னை
சிறையினுள் தள்ளும்..!

உன்னால் நான்
படுகிற உதாசீனத்தைக்
காட்டிலும் இவை எல்லாம்
ஒன்றும் பெரிய தண்டனை
அல்ல எனக்கு..

உமது நிராகரிப்பென்கிற
மறுதலிப்பென்கிற
அமிலங்களைக் காட்டிலும்
அப்படி ஒன்றும்
வீரியமானவைகள் அல்ல
உன் முகத்தின் மீது
நான் வீச இருப்பது..!!

நீ வீசிய அமிலங்களில்
உருக்குலைந்து காணாமற்
போன எனது இதயம்..
அதே விதமாக
உன்னையும் காணாமற்
போகச் செய்யவே துடிக்கிறது
இன்னும்..

அடுத்த நாள்
நான் காவல் நிலையத்தில்
சரணடைந்து விட்டேன்..
"வெளியே இருந்தால் 
நான் ஓர் அழகிய பெண்ணை 
ரணகளப் படுத்திவிடுவேன்.. 
அந்தப் பூ முகத்தை 
என்னிடம் இல்லாத அந்த 
இதயம் காயப் படுத்தக் கூடும்..
ஆகவே முன்னெச்சரிக்கையாக 
கைது செய்து விடுங்கள் !"
என்கிற ஓர் விண்ணப்பத்தோடு..!!

ஈ பீ கோ .. ஏதோ ஓர் எண்
கொண்ட செக்க்ஷனில்
இதுவும் ஓர் குற்றமாகக்
கருதியே  விசாரிக்கப் படலாம்..!

என்ன வேண்டுமானாலும்
ஆகட்டும்..

எனக்கு .......

உனது முகம் எப்படியோ
என்னிடமிருந்து
காப்பாற்றப் படவேண்டும்.. !!!


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...