Friday, February 7, 2014

ஓ மை டெத்.... ஐ லவ் யூ...ஹிஹி

சிலருக்கு  ஓர் பிரம்மாத சூழல் அமைந்து நமக்கது வாய்க்காத போது, காலத்தின் நயவஞ்சகம் பெரிதாகப் புரிந்த மாதிரி ஓர் காழ்ப்பு..
நமது பலவீனங்களுக்கு, நமது நோய்வாய்ப் பட்ட தன்மைகளுக்கு .. சற்றும் சம்பந்தப் படாத காலத்தினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற அவசரம் அநியாய அனாவசியம்...

காலமென்கிற மாயையிடம் நமக்கோர் பக்தி இருக்க வேண்டுமேயன்றி, அதனை ஓர் பரமவைரி போல சித்தரித்துப் பார்க்கிற அசிங்கம் நேர்ந்து விடக் கூடாது..

எத்தனைப் பெருந்துன்பம் நேர்கையிலும் காலம் அதைப் புரிந்து விட்டதாக அனுமானிக்கிற போக்கு நம்மில் விலக வேண்டும்.. நமது ஆளுமையில் காலத்தினை வசீகரமான அடையாளமாக வைத்திருக்க வேண்டுமேயல்லாது,  மசை பிடித்த நாயைப் போல கருதி கல்லடிக்கக் கையோங்கக் கூடாது.

எல்லாருக்குமான அற்புதங்களும் அசிங்கங்களும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து.. அற்புதம் நிகழ்ந்தவருக்கு அந்த நேரம் நல்ல நேரமாகி, அசிங்கம் நிகழ்ந்தவருக்கு அதே நேரம் கெட்டு விடுகிறது... இந்த யதார்த்தம் எல்லாருக்குமான அன்றாட நிகழ்வு. 

தொன்று தொட்டு நாமெல்லாம் தரிசித்து வருகிற மரணம்.. மரணங்கள்... நமது பிரக்ஞையில் குறிப்பிட்ட ஷணங்கள் மட்டுமே ஓர் அதிர்ச்சியையும் சோகத்தையும் விளைவித்து விட்டு பிற்பாடு ஓர் சகஜ ஸ்தாயிக்கு சுலபத்தில் திரும்பி விடுகிறோம்.. செத்தது அப்பனுக்கு பிள்ளை ஆகட்டும், பிள்ளைக்கு அப்பன் ஆகட்டும்..., எல்லா உறவு வகை துயர நிகழ்வுகளும் அதே தகுதியோடும்  அதே கால அளவுகளோடும் தான் ...!  

மற்றொரு நாள்---, பிற்பாடு---- , எதிர்காலத்தில்-----, நம்மையும் அந்த மரணம் வந்து ஆறத் தழுவிக் கொள்ளும் என்கிற நிதரிசன உண்மை ஓர் வதந்தி போலவும் ஓர் கிசுகிசு போலவும் தான் நம் எல்லோரிலும் ஊடுருவிக் கிடக்கிறது.. அது ஒரு வகையில் உண்மையும் கூட.. ஏனெனில், அப்படி ஆறத் தழுவுகிற அந்த மரணத்தை நாமுமே ஆலிங்கனம் செய்து.. பிரபஞ்சத்தை விட்டுப்  பெயர்ந்த ஸ்மரணையே அற்று அண்ட வெளியில் மேலெழும்பிப்  போய்க் கொண்டிருப்போம்...

மேற்கொண்டு உயிருடன் உலவுபவர்கள் தான் நமது இல்லாமையைப் போஸ்டர் ஒட்டியும் பொரி தூவியும் குதூகலிப்பர்..!!?




1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...