Friday, November 25, 2011

முற்றுப் பெறுகின்றன முரண்கள்..

முரண்களினூடே
இயங்கப் பெறுகிறது
வாழ்க்கை..
மிகவும் தெளிவிலிருப்பதாக
நினைத்துக் கொண்டே 
குழப்பங்களைப் 
பற்றிக் கொண்டு 
நீள்கிறது காலம்...


பற்றற்று இருப்பதாக
நினைத்துக் கொண்டு
புதிய உத்திகளோடு
சந்தையில் அறிமுகமாகிற்
பொருள்களைக் 
கையகப் படுத்துகிற
தாகம்... வெட்கமேயற்று
வியாபிக்கிறது மனசுள்...


மௌனத்தை 
மையப் படுத்த
முனைகயிலேயே,
எதையேனும் முணுமுணுக்கப்
பிரயத்தனிக்கிறது வாய்...


வேசி வீட்டு
பூஜையறையில் 
பிரசன்னமான  பக்தி--
கோவிலில் 
அவளை தரிசித்த
போது காணாமற்
போயிருந்தது..


மரணத்திற்கு
எதிர்மறையான 
இந்த வாழ்க்கை...
--மரணத்துடன்
ஒப்பிடுகிற தகுதியையே
இழந்து நிற்கிறது...

மரணம் தெளிவானது
எவ்வித முரண்களுமற்றது...!!


புதைப்பதா எரிப்பதா
என்கிற சர்ச்சைகள் யாவும்
மரணித்திருப்பவனுக்கு
சம்பந்தப் படாதது..!!!



Tuesday, November 22, 2011

அனுமானம்..



என் அலுவலகப்
பணியாளனிடம்
பவ்யமாக வாலாட்டி
அவன் வருடுவதற்காகத்
தலையைத் தலையைக்
கொண்டுபோகிறது                
அவன் வீட்டு நாய்...

கடந்த இரண்டு நாட்களாக
அலுவலுக்கு ஏன்
வரவில்லை என்று
சற்றுக் கடுப்பாகிக்
கேட்ட என்னைப்
பார்த்து---குரைக்கிறது
அவனுடைய நாய்..

பழி வாங்க நினைத்தானோ
என்னவோ .. குரைக்கிற
நாயை வேண்டாமென்று
கூட அடக்கவில்லை...
மாறாக...மௌனமானதோர்
ரகசியப் புன்னகையை
என்னால் அடையாளம்
காணமுடிந்தது
அவன் முகத்தில்...!!

மறுநாள்
அலுவல் வந்தவனிடம்
என் தேக்கமாகியிருந்த
காட்டம் அனைத்தையும்
காண்பிக்க நேர்ந்தது...

மாலை திரும்ப
வீடு வந்தபோதும்
வழக்கமான என் கடுப்பில்
உறைந்து காணப்
படுவர் மனைவியும்
குழந்தைகளும்...

நாய் ஒன்று மட்டுமே
எதிர்க்கத் துணிந்திருக்கிறது
என்னை...
அலுவலிலும் சரி
வீட்டிலும் சரி,
எல்லாருமே மிரண்டுதான்
காணப் படுகிறார்கள்
என்னைக் கண்டு...எப்போதும்..!!


அந்த நாய்
என்னைக் குரைத்ததைப்
பார்த்திருந்தால்
என் மனைவி குழந்தைகள்
முகங்களிலும்
என் பணியாளின் அதே
ரகசியப் புன்னகை
தவழ்ந்திருக்கக் கூடும்
என்று எனக்கேனோ 
தோன்றிக் கொண்டே 
இருக்கிறது...!!!


Saturday, November 19, 2011

கவிதைச் சிதறல்கள்..





உயிர்த் திரவம்
உடற்கோப்பையை
விட்டு சிந்தி விடுகையில்
எல்லா நாமதேயங்களும்
அனர்த்தமாகி விடுகிற
சம்பவம் அன்றாடம்
எங்கெங்கிலும்
நிகழ்ந்த வண்ணமே
உள்ளபோதிலும்
--ஏனோ இந்த
வாழ்க்கை மென்மேலும்
சுவாரஸ்யப்பட்டுக் கொண்டே
தானிருக்கிறது
எல்லாருக்கும்...

புதிய உத்திகளில்
நாளொரு மேனியுமாய்
குவிகிற மின்சாதன
உபகரணங்கள்..
"இது தான் உள்ளதிலேயே
மிகவும் உன்னதமானது"
என்கிற பெருமிதம்
நிறைவுறும் முன்னரே
மற்றொரு மகத்தானது
முளைத்துவிடுகிறது
அதே சந்தையில்...

அப்பாவின் ரத்தக் கொதிப்பு
குறித்தோ, அம்மாவின்
சர்க்கரை அளவு குறித்தோ
எந்தப் பிரக்ஞையும்
அற்றவனுக்கு ..
கைபேசியில் பாட்டரி சார்ஜ்
குறைவது கவலையளிக்கிறது..
எதிர்முனையில் காதலி
குரல்வளை நசுக்கப்
படுவது போல பீதி உணர்கிறான்..

சார்ஜ் தீர்ந்த மறுகணம்
பிஸி க்கலாக சந்திக்க
அவசரப்படுகிறான் ...
ஆசுப்பத்திரிக்கு பெற்றோரை
ஆட்டோவில் அனுப்பிவிட்டு..!!

நோய் ஒருவிதமாகத்
தாக்குகிறதெனில், மகன்
வேறுவிதமாகத் தாக்குகிறான்
பெற்றவர்களை...

பெற்றோரை கவனிக்காத
சுரணை கூட அவனுக்கில்லை...
காதலி பேசுவதை
பக்கமிருந்து கவனித்தாகவேண்டும்.!!!

காதலியின் காய்ச்சல்
அவனை பாதித்த அளவுகூட
அப்பாவின் மரணம்
பாதிக்கவில்லை...

பின்னொரு நாளில்
அப்பாவின் இல்லாமை
அவனை பெரும் வெறுமையில்
செலுத்த உள்ளது..
--அதைவிட இப்போதைய
அவனது அசட்டையான
போக்கிற்காக வருந்தி
தனிமையில் போய்
தேம்பியழப் போகிறான்...!  

Friday, November 18, 2011

7 ஆம் அறிவு.... படவிமரிசனம்..

ஏழாம் அறிவு .. திரையரங்கு சென்று பார்த்தேன்... சினிமாவை
டிவி யில் பார்ப்பதையும், டிவிடி யில் பார்ப்பதையும் நான் விரும்புவதில்லை.., வருடத்திருக்கு ரெண்டு படங்கள் பார்த்தாலும் திரையரங்கு சென்று தான் பார்ப்பேன்... படம் எடுத்தவர்களுக்கும்  திரையரங்கு உரிமையாளர்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்கிற பத்தாம்பசலித் தனமெல்லாம் எனக்கில்லை...
 அந்த விசாலமான காலரி மனசுக்கு ஓர் சுகந்த உணர்வை , ஓர் வகைபுரியா உவகையை ப்ரவஹிக்க வைக்கிறது...
ரெண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஓர் தவம் போல குண்டியமர்ந்து உட்கார முடிகிறது... மலரும் நினைவுகளைப் பரப்பி ஓர் ரம்மிய சூழலை த்வனிக்க செய்கிறது..
இதே அரங்கிற்கு இளம் பிராயங்களில் கால்நடையாக , கால்களில் செருப்பு கூட அற்று , வேகிற வெய்யில் குறித்த பொருட்டற்று, சிட்டாகப் பறந்து வந்து தரை டிக்கட் எடுத்து முன்வரிசையில் இடம் பிடித்து பார்த்து ரசித்த படங்களின் பட்டியல்கள் நிழலாடும்...
இன்று உயர்ந்த வகுப்பில் மிக சாவகாசமாக உட்கார்ந்த வண்ணம் இடைவேளையில் தூரம் தெரிகிற தரை டிக்கட் ரசிகர்களை கவனிப்பது கூட அலாதி ...

உண்மையிலேயே ஏழாம் அறிவு பிரம்மிக்க வைக்கிறது... சூர்யாவின் தேர்ந்த நடிப்பும், ஸ்ருதிஹாசனின் சமூகப் பிரக்ஞை நடிப்பும், சிலிர்க்க செய்கிறது... இவைகளைக் காட்டிலும், முருகதாஸ் குறித்து வியப்பு மிக விரிகிறது... அந்தக் கொத்தவரங்காய் சைசில் இருந்துகொண்டு இத்தனை விஷயங்களை மிக அழகாக விஷுவல் செய்திருக்கிற பாங்கு ஆச்சர்யமூட்டுகிறது..

திரைக்கதையை ஆதிகால வரலாற்றோடும் தற்கால விஷயங்களோடும் இணைத்திருக்கிற திறமை பாராட்டுக்குரியது..

தமிழ்படங்கள் இப்படி ரசனைவீரியத்தோடு பிரவேசிக்கத் துவங்கி விட்டதை நினைக்கையில் ஆரோக்யமாக உள்ளது...
தாமதமாகப் போகாமல் சற்று முன்னராகவே சென்று துவக்கம் முதல் பாருங்கள்..அந்த ஆரம்ப கட்ட சம்பவங்கள் மிகவும் பிரயத்தனத்தோடு ஷூட் செய்யப் பட்டிருக்கிறது...
இடைச் செருகலாக வருகிற சர்க்கஸ் ஆகட்டும், ஸ்ருதியின் அந்த டி என் எ ஆராய்ச்சியாகட்டும் , சீனாவிலிருந்து நோய் பரப்ப வருகிற அந்த வில்லனாகட்டும், அவனுடைய ஹிப்னாட்டிஸத்தில் சிக்குண்டு தவிக்கிற நபர்களாகட்டும்... மிகவும் நேர்த்தியாக செதுக்கப் பட்டுள்ளனர் அனைவரும்..

இவை போக ஹாரிஸ் ஜெயராஜின் கூலான பின்னணி இசை, முன் அந்திப் பாடல், காதல் தோற்றதில் சூர்யா புலம்பிப் பாடுகிற பாடல், ரெண்டொரு பாப் ராப் என்று அனைத்தும் ஜில்லென்று இருந்தது..

நன்றி..

Wednesday, November 16, 2011

கனவுகளைத் தின்பவன்...


 


கனவுகளின் 
சம்பவக் கோர்வை
எப்போதும் எனக்கு
பிரம்மிப்பு..
ஓர் தேர்ந்த
திரைக்கதை போல.,
காட்சியமைப்பின்
யதார்த்தம் குலையாமல்
நிதர்சனத்தைக் காட்டிலும்
தெளிவும் பொலிவும்
இழைந்தன கனவுகள்..

யதார்த்த வாழ்க்கை
இங்கே நைந்த சேலையாய்
இருக்க, கனவுகள்
ஆயத்தப் பட்டாடையாய்
ஜ்வலிக்கிறது..

நிஜங்கள் இங்கே 
சுரணை இழந்து கிடக்கையில்
நிழல்கள் தொடு
 உணர்வில் நெளிகிறது...!

சினிமாவில் ஓர் சோகக்
காட்சிக்காக விசும்பிவிசும்பி
கைக் குட்டையை நனைத்தவன்
அப்பா செத்ததுக்கு
கண்ணீருக்குப் பதில்
எச்சிலைத் துப்பி --
கன்னத்தில் இழுக்க வேண்டியாயிற்று...

கற்பனைகளுள்
சுலபமாக அடியாழம் 
சென்று விடமுடிகிற என்னால்
உண்மைகளின் சமதளத்தில்
காலூன்றி நிற்கக் கூட
அனுமதி கிடைக்காத உணர்வு...

வெட்கப்படவும் 
ஒளிந்துகொள்ளவுமே 
அதிகம் பழகியிருக்கிறேன்...
யதார்த்தங்களோடு கைகுலுக்கவோ
புன்னகைத்து வரவேற்கவோ
பால்யம் தொட்டே
அன்னியப்பட்டு நிற்கிறேன்..

எல்லா நண்பர்களின்
வீடுகளுக்கும் அவர்களது
அனுமதியில்லாமலே கூட
சுலபத்தில் பிரவேசிக்க 
முடிகிற என்னால் ---
"நீ இருக்கிறாயா? 
உன் வீடு வரட்டுமா?"
என்று உரிமையில் கேட்கிற
நண்பனிடம் கூட 
வெளியே இருப்பதாக
சொல்லிவிட்டு
மல்லாந்து
படுத்துக் கிடப்பேன் 
என் அறையில்..!!
                                                               
சுந்தரவடிவேலு 

Monday, November 14, 2011

இது கதையல்ல நிஜம்..

சாந்த சொரூபமாகத் தான் வீட்டினுள் நுழைந்தேன்... மகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்... வழக்கம் போல பரஸ்பரம் நானும் என் மனைவியும் புன்னகைத்துக் கொண்டோம்... இது அனிச்சையாக அன்றாடம் வழக்கமாக நிகழ்கிற விஷயம்..
மகள் விழித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், என் வருகையை மிக ஆர்ப்பாட்டமாக வரவேற்பதோடு நான் அவளுக்காக என்னென்ன வாங்கி வந்திருக்கிறேன் என்கிற ரெய்டு நடக்கும்...
கடைசிக்கு ஓர் அஞ்சு ரூபா ஜெம்ஸ் மிட்டாயாவது இருக்கவேண்டும்.., இல்லையெனில் கேவலமாகப் பார்க்கும் என்னை அந்தப் பிஞ்சு...

வெளியே சுற்றி விட்டு வீட்டினுள் வருகையில் கைகால் முகம் எல்லாம் நன்கு அலம்பி விட்டு சொட்டுகிற ஈரத்தை ஈரிழைத்துண்டால் துடைத்து விட்டு அதன் பிறகே என் மகளை எடுத்து ஆசை தீர முத்தங்கள் பரிமாறிக் கொஞ்சுவது எனது வழக்கம்...
சமயங்களில் இந்த சுகாதாரம் குறித்த பிரக்ஞையை  மறக்க வைத்து விடும் அவளது வரவேற்பு... வேர்வையிநூடே அவளைத் தூக்கிக் கசக்கி அந்த சின்னக் கன்னங்களை எனது மூக்கு போட்டுப் புரட்டி எடுத்துவிடும்..அப்போதைய அவளது சிரிப்பின் வீச்சு என் கொஞ்சுகிற வெறியை இன்னும் மேம்படுத்தும்..

சட்டையை அவிழ்த்து ஹாங்கரில் மாட்ட மறந்து ... மகளிடம் மாட்டிக்கொள்வேன் பல சமயங்களில்... சட்டைப் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டாள் என்றால் அவ்வளவு தான்... என் லைசென்சு, என்
ஏ டிஎம் கார்டு, இன்னபிற என் காகித சமாச்சாரங்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு ... கடைசியில் ரூபாய் நோட்டுக்களுக்கு வருவாள்..
போட்டுக் கசக்குவாள்.. எனக்கு டென்ஷன் ஆகிவிடும்... சாமான்யத்தில் வாங்கிவிடவும் முடியாது.. கிழித்து விடமாட்டாள்.., பயக்கவேண்டாம் என்று மனைவி வேறு அட்வைஸ்... அதை டைவெர்ட் செய்ய மாற்று சம்பவம் ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்... இப்படி என் மகளின் நிமித்தம் பல innovation நடக்கும் அன்றாடம்..

பசியில் சாப்பிட உட்காருகையில் ருசி குறைபாடு கண்டு என் ஆண்மை பொங்கி எழும்... பசி ருசியறியாது என்பது எதிர்காலத்தில் நான் பிச்சைக்காரன் ஆன பிறகு வேண்டுமானால் ஒத்து வரும்... இப்போதைய அவகாசத்தில், கருவேப்பிலையும் கடுகையும் கூட அனுபவித்து ரசித்து ருசிக்கிற மனோபாவத்தில் நானிருக்கிறேன்...
இன்றும் அப்படித்தான் நிகழ்ந்து விட்டது... சாந்த சொரூபமாக உள்ளே வந்தேனா, மகள் தூங்கிக்கொண்டிருந்தாளா, .. கைகால் முகம் அலம்பி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேனா, சரியான பசி... சாப்பிட ஆரம்பித்தாலோ, சாம்பார் சரியில்லை, ரசத்தில் தூக்கலாகப் புளி... நாறுகிற மோர்... பிள்ளையைப் பார்த்துக்கொண்டு பொரியல் செய்ய நேரமில்லையாம்..

கன்னாபின்னாவென்று திட்டியாயிற்று...பாப்பா தூங்குகிற ஸ்மரணை கூட அறுந்து கத்தியாயிற்று...
ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள், என் கதறலில் துணுக்குற்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது எனக்குள் ஓர் லஜ்ஜையை ஏற்படுத்திற்று., என் நடத்தை மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயையை கிளறவைத்தது..

தூங்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த குழந்தையை மிக மெனக்கெட்டு சற்று முன்னர் தான் தூங்க வைத்தவளுக்கு மீண்டும் அவஸ்தையைக் கொடுத்து விட்டேன்... இனி அது சாமான்யத்தில் தூங்காது... நை நை என்று அரற்றி  எடுத்து விடும்..
என் கோபங்கள் யாவும் வடிந்ததோடு, அழும் என் மகளைக் கொஞ்சுவதற்கான முஸ்தீபில் நான் இறங்க நேர்ந்தது...

என் மகள் மீதான என் மனைவியின் ஒருங்கிணைப்பும் ஐக்கியமும் என்னுள் பிரம்மிப்பை ஏற்படுத்துபவை... என்ன பசியிலும் குழந்தை சாப்பிடாமல் அவள் சாப்பிட்டதில்லை... யதார்த்தமாக ஒரு தும்மல் போட்டாலும் கூட அது குறித்து கவலை கொண்டு , அதற்கான மருந்தை தயார் செய்கிற துரிதம் அவளிடம்...

 அங்கும் இங்கும் வெளியே சுற்றித் திரிந்து விட்டு உள்ளே வந்து குழம்பு ரசம் சரியில்லை என்று மனைவியைத் திட்டுகிற சம்பவம் புதிதல்ல... ஆனாலும் ஒவ்வொரு முறையும் அது ஓர் குற்ற உணர்வையும், மேற்கொண்டு அப்படி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது என்கிற தீர்மானத்தையும் ... சுமந்தவாறே தான் திட்டித் தீர்க்க வேண்டியுள்ளது...

 என் ரௌத்ரத்தை சமாளித்தாக வேண்டும், குழந்தையின் அடத்தை சரிக் கட்டியாக வேண்டும்... இப்படி அவஸ்தையான பொறுப்புகள் கூடிக்கொண்டே தான் போகின்றன என் மனைவிக்கு...

 குழந்தையைக் காட்டிலும் பிரத்யேகமாகக் கொஞ்சத் தோன்றும் என் மனைவியை... சமயங்களில்..! அதற்காக அவள் வெட்கப் படுவாள் என்றெல்லாம் யோசிப்பதில்லை..

. இன்னும் என்ன, கொஞ்ச நேரத்தில் சாம்பாருக்காக கத்தித் தீர்க்கப் போகிறோம்..அதற்குள்ளாக எதற்கு கொஞ்சவேண்டும்? என்கிற காரணத்தாலேயே அந்தத் திட்டம் இன்னும் தள்ளித் தள்ளிப்  போய்க்கொண்டிருக்கிறது..!!

Sunday, November 13, 2011

டெலிவிஷனும் குழந்தைகளும்...

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை brilliant box ஆக அறிமுகப் படுத்துங்கள்...
நம்முடைய தப்பித்துக் கொள்கிற தந்திரங்களுக்காக எந்நேரமும் குழந்தைகளுக்கு கார்ட்டூன் நெட் வொர்கயும் போகோ வையும் திணித்துக் கொண்டிருக்காதீர்கள்... டிஸ்கவரியை, அனிமல் பிலாநெட்டை, செய்தி சானல்களை பழக்கப் படுத்துங்கள்..
அப்போது தான் அவசரத்துக்கு நாம் ஏதாவது செய்தி கவனிக்க வேண்டுமானால், தப்பிக்க முடியும்... அவர்கள் போக்கிலேயே அவர்களின் ரசனைக்கு மட்டும் விருந்து படைத்துக் கொண்டிருந்தோமேயானால், நம்மை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் குழந்தைகள்...

குழந்தைகளுக்கு டெலிவிஷனை வேடிக்கை பார்க்கிற ஜன்னலாகப் பயன்படுத்தப் பழக்காதீர்கள்.., மாறாக, அதனை ஒரு emergency exit ஆக உபயோகித்துப் பழக்குங்கள்...
கண்கள், மனது, கல்வி, விளையாட்டு, இவை அனைத்தையும் பாழ் செய்கிறது டிவி..

நாமும் மடத்தனமாக அந்தக் குப்பை நாடகங்களில் ஒன்றுவோமேயானால் , அது குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும்... நாம் அந்த நாடக நேரங்களை மறந்தாலும் கூட அதுகள் அலாரமடிக்கத் துவங்கிவிடும் அந்த நேரம் வருகையில்...

ஆகவே பெரிசுகளும் கொஞ்சம் சிறுசுகளை மனசில் வைத்து செயல்படுவது சாலச் சிறந்தது...
நம் காலத்தில், அதாவது நாம் படிக்கிற காலத்தில், கரகரப்பான வானொலி அலைவரிசைகள் தவிர வேறு நாதியில்லை... அந்த அரைமணிநேர பாடல்களுக்காக விவசாய நிகழ்ச்சிகளை சகித்துக் கொண்டிருப்போம்... இன்னபிற அனத்தல்களைக் கூட அலட்சியம் செய்யாமல் கவனித்துக் கிடப்போம்.. விட்டால் அந்த அரைமணிநேர சினிமா பாடல்கள் பறிபோய்விடுமே..!..
ஆனால் இன்றோ... எம் பி த்ரீ என்ன, ப்ளூ டூத் என்ன, ... இன்னும் இத்யாதி என்னக்கள்..
வெள்ளிக்கிழமை ஏழரை டூ எட்டு ஒரு நான்கைந்து பாடல்கள் ஒளியும் ஒலியுமில் வைப்பார்கள்... அது சில  சமயங்களில், அதரப் பழசாக வந்து மண்டை காய்ச்சும்...மற்றொரு வெள்ளியில்  சற்றும் எதிர்பாராமல் புத்தம் புதுசாக அன்று ரிலீஸ் ஆன படப் பாடல்கள்... பாடல்களுக்கு முன்னர் அந்தப் படத்தின் ஸ்டில் நம் டிவி திரையில் விழுவதே பெருமையாக இருக்கும்...

இப்படி எல்லாம் ஓர் கட்டுப்பாடோடு நாம் வாழ்ந்து வளர்ந்து வந்தோம் என்று சொல்வது தவறு... டெக்னாலஜி அந்த அளவு மட்டுமே வளர்ந்திருந்தது.... அன்றைக்கும் இன்று மாதிரியே எல்லாம் பிரம்மாண்டமாக இருந்திருந்தால் வேண்டாம் போ என்றா சொல்லி இருப்போம்?...

நாற்பது தாண்டியும் மூக்குக் கண்ணாடியின் தேவை நம் அநேகம் பேர்களுக்கு இல்லை.. ஆனால் இன்றைய வாண்டுகள் முக்கால் வாசிக்கு கிழங்கள் போல சோடாப்புட்டி அவசியமாகி விடுவது வேதனையாகவும் விபரீதமாகவும் இருக்கிறது...
                                      ..
நாம தான் கஷ்டப் பட்டுட்டோம்..நம்ம குழந்தைகளாவது ஜாலியாக வளரட்டும் என்கிற போக்கு, நம்மில் பலருக்கு ஓர் நேரத்தில் முளைத்து விடுகிறது...
இருக்கட்டும்.., அதில் தவறில்லை..
ஆனால் அந்த சுதந்திரத்தில் - சில நாசுக்கான கட்டுப் பாடுகளைத் திணிப்பதும் மிக அவசியம்...
நன்றி..

சுந்தரவடிவேலு..

Wednesday, November 9, 2011

திருடனின் நேர்மை...

நகைக்
கடையில் 
ஒன்றரைப் பவுனை
ஒழுங்காகத் 
திருடியவன்
--பெட்டிக்
கடையில்
எள்ளுருண்டை 
திருடி 
பிடிபட்டு
அடி வாங்கினான்...

இதற்கு முன்னர்
என்னென்ன 
திருடி இருக்கிறாய்
என்கிற விசாரணைக்
கேள்வியில்...
நல்ல வேலையாக
"கடலை மிட்டாய்"
என்று மட்டும் சொல்லி
டபாய்த்து விட்டான்...

"ஓடிப் போடா
அற்பத்திருடா "
என்று விரட்டியடிக்கப்
பட்டான்...
அடுத்தநாள் மறுபடி
நகைக் கடையில்
தன் கைவரிசையைக்
காட்டினான் 
நாலு சவரனில் 
சங்கிலி திருடி...

இந்த முறை
எள்ளுருண்டைக்கு 
ரெண்டு ரூபாய் 
கொடுத்துச் சாப்பிட்டான்
அவன்..!!

Sunday, November 6, 2011

ஜீவா இளையராஜா..

இசைஞானி இளையராஜா அவர்களுடைய துணைவியார் ஜீவா அவர்கள் மாரடைப்பு நிமித்தம் சமீபத்தில் காலமானது குறித்து கவலை உணர்கிறோம்...

ஜீவா என்கிற பெண்மணி இளையராஜாவின் மனைவி என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் இல்லாத ஓர் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக இருக்கக்கூடும் என்றே அனுமானிக்கிறோம்...
--ஓர் ஆணின் ஆளுமைக்கும் அவனது திறன்களுக்கும் மௌனமான பின்புலமாக இருந்து க்ரியா ஊக்கிகளாக செயல்படுவது பெண்கள் என்று பொதுவாக ஓர் கருத்து உண்டு...
அந்த வகையில் இளையராஜாவின் வீரிய இசை ஞானத்துக்கு ஒருகால் ஜீவா என்ற பெண்மணி பின்புலமாக இயங்கியிருக்கக் கூடும்... 
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான துணை, இனி இந்த உலகில் இல்லை என்கிற சோகம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல.., அவரது இசையிலும் பாடல்களிலும் அயராமல் லயிக்கிற நம் அனைவருக்குமே...!!

அன்னக்கிளி முதற்கொண்டு ஆரம்பித்த அவரது இசைப் பயணம், இன்றும் மெருகோடும் அழகோடும் விளங்கி வருகிறதென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை... 
தமிழ் பாடல்களின் அழகியலுக்கு ராஜாவின் இசையே அடிநாதமாய் விளங்குகிறது... மற்ற பாடல்கள் பல இருப்பினும், அவை கூட இளையராஜாவின் இசை வருடியிருக்கக் கூடாதோ என்கிற ஏக்கத்தைப் பரப்புகிற விதமாகவே அவரது இசை நமக்குள் ஓர் கிறக்கத்தைப் பரப்பியிருக்கிறது என்பதில் மிகையோ அய்யப்பாடோ இல்லை...!!


ஒரு துறையில் வல்லுனராக பெயரெடுத்த ஓர் நபரை பொதுவாக நாம் வியந்து கூறுகிற ஓர் வாசகம் யாதெனில் : ''இவுரு மாதிரி ஒருத்தன் இனி தான் பொறந்து வரணும்"..  என்பது..
அப்படிப் பார்க்கையில், இளையராஜா மாதிரி ஓர் இசை வல்லுநர் முன்பு பிறக்கவுமில்லை, அவருக்கே பிறந்த கார்த்திக்கோ, யுவனோ கூட இல்லை..


பீதொவனும் பாக்கும் மொஜார்டும் ஓர் குறிப்பிட்ட இசைக் கோர்வையில் மட்டுமே வல்லுனர்களாக விளங்கி , அந்த ஓர் பிரத்யேகமான சொனாட்டக்களை மட்டுமே அபிவிருத்தி செய்து அவைகளில் புதுமை புகுத்தி பெயர் வாங்கினார்கள்... ஆனால் இளையராஜா, எல்லா பரிமாணங்களையும் மிக யதார்த்தமாக, மிக வீச்சாக , மிக வசீகரமாகக் கையாண்டார் என்றால் அது மிகையன்று... அவர் கையாண்ட அனைத்த வகை இசையுமே குறிப்பிட்ட அந்த சூழல்களின் வெளிப்பாடாகவும்,  மனித மனங்களின் வார்த்தைகளால் விளக்கவொண்ணா கடின உணர்வுகளை தன் இசையால் வெளிக் கொணர்ந்ததாகவுமே கொள்ளலாம்... 
அத்தனை வகையறா இசை முறைகளையுமே மிக லாவகமாக மிக நேர்த்தியாக மிக ரசிக்கிற வகையிலே ராஜா பிரசவித்தார்... 


பி ஜி எம் . என்று சொல்லப் படுகிற பின்னணி இசை உலகில் இளையராஜா தவிர வேறெந்தத் திரைப்பட இசை அமைப்பாளர்களுக்கும் இடமில்லை... 


இப்போது ஒலிக்கிற புதுப் பாடல்களை கேட்பதே சாபம் போல உணர வைக்கின்றனர் இன்றைய இசை மேதைகள்... ஒரு முறை கேட்டு மறுமுறை கேட்கவே காதுகள், மனசு எல்லாம் சலிப்புணர்கின்றன... ஆனால் இன்றும் இளையராஜாவின் எத்தனையோ பாடல்களை, எத்தனை முறை திரும்பக் கேட்டாலும் அதே பரவசம் மேலும் மேலும் அடர்த்தி தான் காண்கின்றன...


ராமராஜன் படங்களுக்கும் டப்பாங்குத்து நடக்கிறது...சங்கீதத்துவம் ததும்பும் சலங்கை ஒலி போன்ற கர்னாடக பாணி படங்களுக்கும் மிருதங்கம் மிரள்கிறது.. . 
இப்படியாக எல்லா கலவையான ரசனைகளிலும் தன்னை தன் இசையை மாற்றி அமைக்கிற வல்லன்மை இளையராஜாவுக்கு அமையப்பெற்ற வரம்... 


திருமதி ஜீவா இளையராஜா ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்... மேற்கொண்டும் அவரது ஆத்மா , ராஜாவின் திறன்களுக்கு பின்புலமாக நின்று செயல்படட்டும்..

சுந்தரவடிவேலு..

Thursday, November 3, 2011

காதல் கேன்சர்

சரிந்து விடக்கூடிய
சாத்தியமுள்ள 
விளிம்புகளில் கூட
மிக சாதுர்யமாக
உன்னுடன் 
நடந்து விட முடிகிற
என்னால் --
தெளிவான 
தேசிய நெடுஞ்சாலையில்
தடுமாற நேர்கிறது
நீ என்னைப் 
புறக்கணிக்கையில்...!

தங்கத்திரவமாக
ஊற்றெடுக்கிற 
காதல் ரசாயனம்
உடலின் மற்ற
நோய்க்கிருமிகள்
அனைத்தையும்
அழிக்கிற வல்லன்மை
கொண்டுள்ளது...

--ஆனால்
காதல் என்கிற
நோய்க்கிருமி
நம்மைத் 
தின்று தீர்ப்பதை
நம்மாலேயே 
உணர முடிவதில்லை
என்பதை விட
உணரவே பிடிப்பதில்லை...??

சுந்தரவடிவேலு 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...