எல்லா பலவீனங்களோடும்
கை குலுக்க வேண்டிய
நிர்ப்பந்தம்..
"நான் பலவான்களின்
உற்ற சிநேகிதன்...உங்கள்
கைகளைக் குலுக்குவதே
எனக்குத் தேவையில்லாத வேலை.."
என்று பலவீனங்களிடம்
சொல்ல நினைக்கிறேன்...
"நீ நினைப்பதையே நாங்கள்
புரிந்து கொள்வோம் "
என்கிற தோரணையில்
என்னில் ஊடுருவி
என்னை ஆக்கிரமிக்கின்றன
பலவீனங்கள்...
என் பலங்களையும் தைரியங்களையும்
உடனடியாக காலி செய்யச்சொல்லி
நாலாந்தரமாக நடக்கின்றன....
"கவலைப்படாதே ராசா...
இப்போதைக்கு நாங்க போறோம்..
கண்டிப்பா இந்த பலவீன சனியன்கள்
தொலையும்.. அப்ப திரும்ப வருவோம்"
--இப்படி என்னை
இருக்க வைத்துவிட்டுப்
போயிருக்கின்றன பலங்களும்
தைரியங்களும்..
சுலபத்தில் எல்லா
நல்லவைகளும் காத்திருக்க
சொல்லி விட்டு அதோகதியாக
நிறுத்தி விட்டுப் போய் விடுகின்றன..
மறுபடி பலங்களையும் தைரியங்களையும்
களவாடுகிற
திறன்களை பயங்களிடமும்
கவலைகளிடமும் இருந்தே
கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது....!!