Tuesday, November 24, 2009

எதையேனும் எழுதுகிறவன்..

எழுத முடியாத மனநிலைகளையும் தாண்டி எழுதுகிறவன் தான் உண்மையான எழுத்தாளன்.
எழுதுகிற நேரம் இருந்தும் அதற்கான மனம் அற்று வெறுமே சற்று இடைவெளி விழுந்து விட்டது.. மீண்டும் எழுத ப்லோகை திறந்தால் ஏனோ ஓர் சுரத்தே அற்று எதை எழுத வேண்டும் என்கிற விவஸ்தைகள் கூட கழன்று .. என்னவோ கிறுக்க விழைகிறேன்.
மீண்டும் களத்தில் இறங்கி விட்டான் என்று சமுதாயம் எனக்காக இடுகிற கூப்பாடுகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தாலும்.. எழுதியே பிரபலம் அடைந்தும் , பணம் காசு சம்பாதித்தும் எவ்வளவோ எழுத்தாளர்கள் சாதித்த இந்த களத்திலே நம்மால் வெறும் ஜம்பம் மாத்திரமே அடிக்க முடிகிறது என்கிற கவலை வந்து .... மீண்டும் எழுத சோம்பிப்போய்.... பார்ப்போம். தெளிவாய் மறுபடி..

நன்றி.. சுந்தரவடிவேலு

Monday, November 16, 2009

குழந்தையின் வருகை..

உன் ரௌத்திரம்
என்னை குதூகலப்படுத்தும்..
என் முடியை
நீ பொசுக்குகிற சுகம்
என் தலைவலிகளைக்கூட
சொஸ்தமாக்கும்...

பசியில் நீ வீறிடுவதை
சற்று ரசிப்பேன்...
கையில் பால்புட்டியை
வைத்துக்கொண்டே...
உன்னை அழ வைப்பது
நோக்கமன்று.,
உன் சாரீரம் வலுவடைய
வேண்டும் என்கிற உத்தி அது...

உன் மௌனமான புன்னகை
ஓர் அழகென்றால் - உன்
முணகல் நிறைந்த
புன்முறுவல் ஓர் நேர்த்தியான
சங்கீதம்...

-செத்துக்கிடந்த
என் வாழ்க்கை.. இன்று
உயிர்த்தீயில் ஜொலிக்கிறது!
இற்றுக்கிடந்த என் கனவுகள்..
இன்று இறுகிப்போய்
வடிவம் பெற்றிருக்கின்றன..!!

வீடு வரவே சலிப்புணர்ந்தேன்
அன்று..
இன்று வெளியேற சலிப்புணர்கிறேன்
வீட்டை விட்டு..!
உன் வருகை-
எனக்குள் நிகழ்த்திய இந்த
மாற்றங்களை ...
நீர்வீழ்ச்சியில் குளிப்பதாக
உணர வைக்கின்றன..!!


சுந்தரவடிவேலு...

Tuesday, November 10, 2009

தேய்பிறை ரசிகன்...

என் கனவுகள்
தொலைவதற்காகக் காத்திருக்கின்றன..

நனவாக்கி விடலாம்
என்கிற என் நம்பிக்கைகளையும்
முயற்சிகளையும்
என்ன சமாதானப்படுத்தியும்
என் வசமாக்க சாத்யப்படவில்லை...

அவநம்பிக்கைகளின்
ஆளுமையில் என்
எழுச்சிகளுக்கு ஆயுள் தண்டனை...
அது மரண தண்டனையாகவே
மாறக்கூடும்....

தோற்கடிப்பதற்கு என்றே
லட்சியங்களை வைத்திருந்தேன்...
கனவுகளாகவும் கற்பனைகளாகவும்
அவைகளை வகைப் படுத்தி...


சுந்தரவடிவேலு.








Friday, November 6, 2009

என் அபிப்பிராயம் சரியா தவறா?.. அறியேன்...

வாழ்க்கை சிலருக்கு அவர்கள் கனவிலும் எதிர்பார்க்காத வனப்புகளை அறிமுகப்படுத்தி விடுகிறது...
சொற்ப ரசனைகளுடன் வாழ்க்கையை அனுசரித்து வந்தவர்களுக்கு காலம் கைக்கு அடங்காத கணிசமான பரிசை விநியோகித்து விழி பிதுங்க வைத்து விடுகிறது... இவை அனைத்தையும் எவ்விதம் அடைந்தோம் என்கிற ப்ரக்ஞை கூட அற்று இவைகளை எப்படி அனுபவித்துத்தீர்ப்பது என்கிற சுகமான குழப்பங்களில் லயித்து விடுகின்றனர்...
வித விதமான கார்கள்... உயர் ரக ஆடை அணிகலன்கள்... இன்னபிற இத்யாதி லக்சூரி சமாச்சாரங்கள்... அவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அப்படிப்போட்டு ஆட்டுகிறது..

சிலருக்கோ... அவஸ்தைகளை சொல்லி மாளாது... துரதிர்ஷ்டம் மாத்திரம் எப்போதும் துணை வரும்... மருந்துக்குக்கூட உற்சாகம் நிகழாது... தப்பித்தவறி என்றேனும் ஏதாவது சந்தோஷங்கள் தலை காட்டுமேயானால் .. உடனடியாக ஓடி விடக்கூடிய சுடுதண்ணி அவசரத்தில் பயமுறுத்திக்கொண்டே இருக்கும்... பஞ்சரான சைக்கிள் மூலையில் முடங்கிக்கிடக்கும்., நோய்வாய் பட்ட மொபெட்டு ஒன்று பெட்ரோல் தாகத்தில் வறண்டு கிடக்கும்... நடந்தே போய்விட்டு வரலாம் என்றால், போய்வர வேண்டிய இடம் வெகு தூரத்தில் இருக்கும்.. நம் சவுகரியத்திற்கு டவுன் பஸ் கூட இருக்காது... ஆனாலும் போயாக வேண்டும்.. போனால் வந்தும் ஆகவேண்டும்..!

இப்படி முரண் களுடன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கொடுமைகள்... இதற்கெல்லாம் இறைவனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவா முடியும்.. நாம் சொன்னாலும் தான் கடவுள் நிற்பாரா என்ன...

வசதி படைத்தவர்களிடத்தில் கடவுள் ஓர் பணியாள் போல பவ்யமாக கைகளைக்கட்டிக்கொண்டு நிற்பது போல தோன்றுகிறது எனக்கு... அதே கடவுள் வரியவர்களிடத்து எஜமானன் போல அதட்டிக்கொண்டு இருக்கிறார் என்றே அனுமானிக்கிறேன்...!!

இவ்விதமாக கடவுளை கீழ்த்தரமாக ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை.. நம்மையெல்லாம் ஸ்ருஷ்டித்த கடவுளுக்கு , இந்த சுண்ணாம்பு --- வெண்ணை பாகுபாடுகள் எதற்கு என்கிற ஆதங்கமான கேள்வியைத்தான் முன்வைக்கிறேன்... எளியவர்கள் நிரம்பிய இந்த சமூகத்திற்காக.... அவர்களுடைய பிரதிநிதியாக..


சுந்தரவடிவேலு...


Thursday, November 5, 2009

ஸ்ருதி பிசகல்கள்...

எனக்குள்ளாக நீ
பிரவேசித்த நாள் ..
என் நினைவில் இல்லை...!
ஓர் மழலை
உருவானதற்குரிய காரணம்
புணர்தல் என்றாலும்
அது எந்தப் புணர்தல்
என்று வகைப்படுத்துவது
சாத்யமில்லை போலவே
நீ என்னுள் நினைவாகவும்
அதற்கு முன்னர்
கண்களுக்கு தரிசனம்
ஆனதும்...
எந்தத்தருணம் என்பது
புதிர் தான்..!!

ஆனால் உன்னை
காண்பதற்கு முன்பே
உன்னை என்றேனும் காண்பேன்
என்கிற ஓர் அசரீரி என்னுள்
ஒலித்துக்கொண்டே இருந்ததை
சொன்னால் எனக்கே நான்
நம்பத்தகாதவன் போலவே தான்
தெரியும்...

இவ்வளவையும் ஓர் ஞானி போல,
ஓர் தீர்க்கதரிசி போல..
தெரிந்து வைத்திருந்த நான்....

-இன்னொருவனை நீ
காதலிக்க என்னையே
தூதனுப்பக்கூடும்
என்பதை அனுமானிக்க
தவறிய வினோதம்....

என் ஞானத்தையே
நான் கேவலமாக
உணர வேண்டிய ஓர்
சூழலை உருவாக்கிற்று..!!


சுந்தரவடிவேலு..

Wednesday, November 4, 2009

ஒ..மனிதா...

மனது மூட நம்பிக்கைகளுக்கு சுலபத்தில் ஆட்கொள்கிறது. ஓர் ஜோலிக்கு மேற்கே போக வேண்டியிருக்கிறது என்றால் கூட கிழக்கே போய் சுற்றி வந்தால் தான் அது உருப்படும் என்பதாக சுலபமாக சென்டிமென்டை உள்வாங்கிக்கொள்கிறது மனது..
இந்த மாதிரியான போக்குகள் அறிவிப்பூர்வமானவர்களிடமும் கூட மையம் கொண்டு விடுவது தான் கொடுமை.. இப்படி detailed ஆக ஒவ்வொன்றிலும் வாழ்ந்து அப்படி என்ன சாதிக்கிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல் .. இதையெல்லாம் கவனிக்கிற பகுத்தறிவாளிகளுக்கு..
இதெல்லாம் ஒரு புறமிருக்க, வாஸ்து என்கிற ஓர் நாகரிகமான தவிர்க்க முடியாத பேய், பிச்சைக்காரன் வீடுகளில் துவங்கி குபேரர்கள் வசிக்கிற வீடுகள் வரை உள்ளே புகுந்து ஊடுருவிக்கிடக்கிறது...
அங்கலாய்ப்புகளும் ஆசைகளும் மனிதப்பிறவிக்கு மாத்திரம் மற்ற உயிரினங்களுக்குக்காட்டிலும் சற்று அபரிமிதமாக திணித்து விட்டார் கடவுள் என்றே தோன்றுகிறது...
6 அறிவு வைத்தவன் இன்னும் கொஞ்சம் முட்டாள்தனங்களை தவிர்த்தே படைத்திருக்கலாம். அதற்குள்ளாக இனி கடவுளுக்கு என்ன அவசரமோ?


சுந்தரவடிவேலு..

Monday, November 2, 2009

பகுத்தறிவாளியின் சிந்தனை...

உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.

----ஜகி வாசுதேவ் ------ஈஷா யோகா மைய ஞானி-------

Sunday, November 1, 2009

திருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...

வருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி...
சொன்னது சொன்னது போலவே நடக்கிறது.. பிரச்சினை என்னவானாலும் அதற்கு அற்புதமான தீர்வுகளை அள்ளி வழங்குகிறார் அந்தக்கருப்பராயன் கோவில் பூசாரி..
நினைத்த காரியம் பலித்து விட்டால் மீண்டும் அதே கோவில் சென்று நாம் விரும்பிய காணிக்கைகளை பரிசளித்து விட்டு வரலாம்...
மேற்சொன்ன யாவும் செவி வழி செய்திகள்.. நாமும் தான் பிறந்த நாள் தொட்டு பிரச்சினைகளுடன் தானே இருக்கிறோம்.. ஒரு முறை போய்விட்டு வருவோமே என்கிற விதமாக ரெண்டொரு நாட்கள் முன்னர் சென்று வந்தேன்...

சில இடங்களில் ஆன்மிகம் எவ்வளவு கேவலப்பட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு பெரிய உதாரணமாய் இருந்தது அந்த இடமும் அங்கு நிகழ்கிற கூத்துக்களும்..

குறி சொல்கிற அந்தப்பூசாரி சரமாரியாக பீர் பிராந்தி ஒயின் ரம் என்று நம் முன்னாடியே ஊற்றி ஊற்றி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே ராவாக அடிக்கிறார்.. போதையில் பிதற்ற ஆரம்பிக்கிறார்... குறி சொல்ல அவர் தேர்ந்தெடுக்கிற நபர் படுகிற அனைத்த துன்பங்களையும் சொல்கிறார்.. அவைகள் கூடிய விரைவில் கருப்பராயனால் தீர்த்து வைக்கப்படும் என்கிறார். குறி கேட்ட அந்த நபர் அப்படியே புல்லரித்துப்போய் விடுகிறார்.
அங்கே வருகிற முக்கால்வாசி பக்தர்கள் நேர்த்திக்கடனாக அனைத்து வகை மதுபானங்களையும் பரிசாக அளிக்கின்றனர்.. அந்தப்பூசாரியும் யாவற்றையும் பாக் செய்து மீண்டும் ஒயின் கடைகளுக்கே சப்ளை செய்வதாகக்கேள்வி... அது போக பணம் .. தங்கம் வெள்ளி என்று வேறு பரிசளிக்கிறார்கள் மக்கள்...

ஒரு வேளை சோற்றை உலையில் கொதிக்க வைக்கவே எவ்வளவோ பேர்கள் படாத பாடு படுகிற இந்தக்கால கட்டங்களில் இப்படி மிதப்பாக சுலபத்தில் லட்சங்களும் கோடிகளும் குவிக்கிற புத்திசாலிகள் புற்றீசல்கள் போல முளைத்த வண்ணம் தான் உள்ளனர்...

இந்தத் திறன்கள் நம் போன்ற எளிய மக்களுக்கு கை கூடுவதில்லை... ஆனால், இப்படியான பித்தலாட்ட நபர்களிடம் ஏமாந்து நாசமாய் போவதற்கு மட்டும் கை கூடுகிறது..

மாடாக உழைக்கத்தெரிந்தவர்கள் கூட இந்த மாதிரியான சோம்பேறிகளிடம் சிக்கி சீரழிகிற கொடுமை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இங்கு சென்று திரும்பியது நரத்திலிருந்து மீண்டது போல உள்ளது.. நாம் வந்து வாழ்கிற இடம் சொர்க்கம் இல்லை என்றாலுமே கூட .. இந்த மாதிரியான அனாசாரமான இடங்களிலிருந்து திரும்பி வருகையில் நம் இடம் கூட சொர்க்கமாகத்தான் தெரிகிறது...



சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...